கடிதம்

This entry is part of 22 in the series 20051006_Issue

மு. சுந்தரமூர்த்தி


ஆசிரியருக்கு,

‘திண்ணை’ எழுத்தாளர் சின்னக்கருப்பன் ஒரு அபூர்வமான சிந்தனையாளர். நகைச்சுவை மதிப்பு கருதி இவருடைய எழுத்துக்களை படிக்கத் தவறுவதில்லை. சென்றவாரம் எழுதியிருந்த கட்டுரையில் (“கலாச்சார புரட்சியாளர்களும் கலாச்சார காவலர்களும்”) அரசியல், சமூகவியல், பரிணாமவியல், மரபணுவியல் என்று எல்லாவற்றையும் கலந்து அசத்திவிட்டார். இவருடைய கட்டுரைகளை ஏன் “நகைச்சுவையும் வித்தியாசமானவையும்” பகுதியில் போடாமல் “அரசியலும் சமூகமும்” பகுதியில் போடுகிறீர்கள் என்ற சந்தேகம் அடிக்கடி எழுந்தாலும், பரிணாமம், ஜீன் போன்ற முக்கிய சொற்களைப் பார்த்து “அறிவியலும் தொழில்நுட்பமும்” பகுதியில் போடாமல் விட்டார்களே அதுவரை அறிவியல் தப்பித்தது என்று ஆறுதலடையலாம்.

சின்னக்கருப்பன் நகைச்சுவையோடு எழுதுபவர் மட்டுமல்ல, சுவாரசியமான இந்து கலாச்சார சனாதானியும் கூட. இந்துத்துவ கருத்தியலோடு ஜீன், பரிணாமம் போன்ற அறிவியல் வார்த்தைகளை கலந்து பிசைந்து உருட்டிய சாணி உருண்டைகளை திராவிட/விளிம்பு நிலை அரசியல் மீது எறிவதே இக்கட்டுரையின் நோக்கம். இந்த விவகாரத்தில் அடித்துக்கொண்ட இரு சாராரையும் ஒரே சாணியுருண்டையில் அடித்து வீழ்த்தும் சாகசமும் கவனிக்கத்தக்கது. இந்த அபூர்வமான வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளும் அவசரத்தில் இதே விவகாரத்தில் கலாச்சார முத்துக்களை உதிர்த்த பாஜகவினரை மறந்துவிட்டதும் தற்செயலானதல்ல.

சின்னக்கருப்பனின் மரபணுவியல், பரிணாமவியல் அறிவும், புரிதலும் எவ்வளவு ஆழமானது என்பதை அறிவியல் பயிற்சியுடையவர்கள் எளிதில் புரிந்துகொள்ளக்கூடும். ஆனால் இதில் சராசரி வாசகன் மிரண்டுபோய் ‘இதுல ஏதோ விஷயம் இருக்கும்போல ‘ என்று வாய்பிளக்கக்கூடும். இதுவும் தமிழ் அறிவுச் சூழலின் இன்னொரு அவலம்.

ஒரு உதாரணம், புலிக்கும்-மனிதனுக்கும் உள்ள மரபணு/பரிணாமத் தொடர்பு குறித்தது:

‘மற்றொரு ஆண் புலியோடு செல்லும் ஒரு பெண்புலியை விரும்பும் மற்றொரு ஆண்புலி அந்த ஆண்புலியோடு மோதுகிறது. அந்த மோதலின் விளைவில் அந்த ஆண்புலி இறந்து விட்டால், அந்த பெண்புலியின் முந்தைய குட்டிகளை வெற்றி பெற்ற ஆண்புலி கொன்றுவிடுகிறது.

“இது நம்மிடம் இன்னும் இல்லை ? மாற்றாந்தாய்கள் ஏன் முந்தைய மனைவியரின் குழந்தைகளை கொடுமை செய்து விரட்டுகிறார்கள் ? நம்மிடம் உள்ள ஜீன்கள் காலம் காலமாக இவ்வாறு தேர்வு செய்யப்பட்டு நம்மிடம் வந்திருக்கின்றன. ஆனால், இன்று சமூகம் அவ்வாறு மாற்றாந்தாய்கள் குழந்தைகளை கொடுமைப்படுத்துவதை ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால் ஜீன்கள் செய் என்று சொல்கின்றன ‘.

சண்டை போட்டுக்கொள்ளும் இரண்டு புலிகளுமே “மற்றொரு ஆண் புலி” ஆக இருப்பதைப் படித்தபோது கவுண்டமணி-செந்தில் இரட்டையரின் “இன்னொரு வாழப்பழம்” ஜோக் நினைவுக்கு வந்ததைத் தவிர்த்துவிட்டு யோசித்துப் பார்த்தாலும் இதில் உள்ள மரபணுவியல்/பரிணாமவியல் உண்மைகள் பிடிபடவில்லை. அதாவது புலிகளில் இந்த ஜீன் ஆணிடம் உள்ளது, மனிதரில் பெண்ணிடம் உள்ளது என்கிறார். ‘ஜீன் நம்மிடம் வருவது விலங்குகள் காலத்திலிருந்து ‘ என்று தொடர்ந்து அழுத்தம்திருத்தமாக சொல்கிறார். இந்த கொடுமைக்கார ஜீன் புலிகளிடமிருந்து மனிதனுக்கு வந்ததா அல்லது புலிகளும், மனிதர்களும் வேறொரு பொது மூதாதை உயிரினத்திடமிருந்து பெற்றுக்கொண்டார்களா ? ஏன் இந்த ஜீன் புலிகளில் ஆணுக்கும், மனிதரில் பெண்ணுக்கும் போகவேண்டும் ? சில நாயினங்களில் தாய் நாய் தன் குட்டிகளையே சாப்பிட்டுவிடும். நல்ல வேளையாக இதைச் செய்யச் சொல்லும் ஜீன் நாயிலிருந்து மனிதனுக்குப் போகும் பரிணாமப் பாதையில் எங்கோ தொலைந்துவிட்டிருக்கிறது.

சின்னக்கருப்பனின் கட்டுரையைப் படித்துவிட்டு பி.கே. சிவகுமார் எழுதியிருந்த பி. ஏ. கிருஷ்ணனுடனான கலந்துரையாடலைப் படித்தபோது கொஞ்சம் அச்சம் கூடியது (பிகேஎஸ், இதை எழுதியமைக்கு நன்றி). புதிதாக எழுத வருபவர்கள் 20-30% சரியாக எழுதினால் போதும் என்ற அளித்த சலுகையைத் தொடர்ந்து,

“இளைஞரான அரவிந்தன் நீலகண்டன் ஆர்.எஸ்.எஸ். சார்ந்தவராக இருந்தாலும், நிறைய படிக்கிறார். அறிவியல் பற்றி எழுதுகிற சிலரில் ஒருவராக இருக்கிறார். ஒரு மார்க்ஸியவாதியாக அவரிடம் குற்றம் குறை கண்டுபிடிப்பதைவிட, அவரைப் போன்றவர்கள் என்ன எழுதினாலும் இப்போதைக்கு அவர்களை கோட்பாடுகளின் அடிப்படையில் ஒதுக்கி விடாமல், அவர்கள் எழுத்தின் மூலம் வளர்வதற்கும், சரியான கொள்கைகளை அடைவதற்கும் வழி செய்கிற மாதிரி நடந்து கொள்ள வேண்டும்”

என்று சொல்வதைப் பார்த்தால் அறிவியல் பற்றி எழுதுபவர்களுக்கும் இந்த சலுகையை அளிக்கலாம் என்பதாகத் தெரிகிறது. இந்த 20-30% சரியாக எழுதியது போக மீதி 70-80% எதைப் போட்டு நிரப்புகிறார்கள் என்பது தான் பிரச்சினையே. ஒரு மார்க்சியவாதியாக மதவாதி எழுதும் அறிவியலில் குறை கண்டுபிடிப்பதோ, மதவாதியாக மார்க்சியர் எழுதும் அறிவியலில் ஓட்டையைக் கண்டுபிடிப்பதோ இரண்டுமே ஒன்றுதான். ஏனென்றால் கறாரான அறிவியலில் மதத்துக்கும், மார்க்சியத்திற்கும் வேலையில்லை. உண்மையான அறிவியலில் அறிவியல் மட்டுமே இருக்கமுடியும். இருக்கவேண்டும். அதற்காக மார்க்சியவாதிகளோ, மதவாதிகளோ அறிவியல் பற்றி எழுதக்கூடாது என்று சொல்லவில்லை. அப்படி எழுதும்போது மார்க்சியத்தையும், மதத்தையும் மூட்டைகட்டி ஓரமாக வைத்துவிட்டு அறிவியலை மட்டுமே எழுதவேண்டும்.

சின்னக்கருப்பனின் இந்த கட்டுரையில் 0% மட்டுமே அறிவியலைப் இருப்பதை பற்றி பி. ஏ.கே. என்ன சொல்வார் என்று கற்பனை செய்யமுயன்றேன். முடியவில்லை.

சின்னக்கருப்பனின் கட்டுரை வலைப்பதிவுகளில் சுவாரசியமான விவாதங்களை கிளப்பியிருக்கிறது. நான் பார்த்தவை/பங்கு பெற்றவை இங்கே:

http://arvindneela.blogspot.com/2005/10/blog-post.html

http://kuzhali.blogspot.com/2005/10/blog-post.html

http://karthikraamas.net/pathivu/ ?p=95

மு. சுந்தரமூர்த்தி

msundaramoorthy@bellsouth.net

Series Navigation