அமரர் தேவன் நினைவு நகைச்சுவைக் கட்டுரைப் போட்டி

This entry is part [part not set] of 23 in the series 20050805_Issue

அறிவிப்பு


அமுதசுரபியும் அப்புசாமி-சீதாப்பாட்டி நகைச்சுவை அறக்கட்டளையும் இணைந்து நடத்துகின்றன.

ஆர். மகாதேவன் ( ‘தேவன் ‘), கும்பகோணத்தை அடுத்த திருவிடைமருதூரில், செப்டம்பர் 8, 1913 அன்று பிறந்தார். கும்பகோணம் அரசினர் கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்றார்.

சிறிது காலம் பள்ளியொன்றில் ஆசிரியராகப் பணியாற்றியபின் ‘ஆனந்தவிகடன் ‘ வார இதழில், துணை ஆசிரியராகச் சேர்ந்தார். 1942 முதல் 1957 வரை நிர்வாக ஆசிரியராக இருந்தார். அவர் துணை ஆசிரியராகச் சேர்ந்தபோது அவர் வயது 21 தான். 29 ஆவது வயதில் ‘ஆனந்தவிகடன் ‘ நிர்வாக ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். 23 ஆண்டுக் காலம் ‘விகடனில் ‘ ஐந்நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், நூற்றுக்கணக்கான நகைச்சுவைக் கட்டுரைகள், இருபதுக்கும் மேற்பட்ட நாவல்கள் எழுதினார்.

‘துப்பறியும் சாம்பு ‘ இவரது பிரபலமான பாத்திரப் படைப்பு. ‘கோமதியின் காதலன் ‘ திரைப்படமாக வெளியாயிற்று. இவர் எழுதிய மிஸ் ஜானகி, மிஸ்டர் வேதாந்தம், ஜஸ்டிஸ் ஜகந்நாதன், கல்யாணி, மைதிலி, துப்பறியும் சாம்பு முதலிய நாவல்கள், மேடை நாடகங்களாகவும் பல இடங்களில் நடிக்கப் பட்டன. மிஸ்டர் வேதாந்தம், ஸ்ரீமான் சுதர்சனம் இரண்டு நாவல்களும் இயக்குநர் ஸ்ரீதர் தயாரித்து, சின்னத்திரையிலும் வழங்கப்பட்டன.

ஐம்பதுகளில் இவர் அயல்நாட்டுச் சுற்றுப் பயணங்கள் மேற்கொண்ட போது எழுதிய ‘ஐந்து நாடுகளில் அறுபது நாள் ‘ சமீபத்தில் புத்தகமாக வெளியானது. ‘தேவன் ‘ சென்னை தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக இரு முறை பதவி வகித்திருக்கிறார்

‘ஜஸ்டிஸ் ஜகந்நாதன் ‘ நாவல், முழுக்க முழுக்க நீதிமன்றத்தில் நடைபெறும் ஒரு கொலை வழக்கை அடிப்படையாகக் கொண்டது. சென்ற ஆண்டு அதன் ஆங்கில மொழிபெயர்ப்பு வெளியாகி, மகத்தான வரவேற்பைப் பெற்றது. ‘தேவன் ‘ எழுத்தில் பாத்திரப் படைப்பு குறிப்பிடத்தக்க அம்சம். தம் 44-ஆவது வயதில், 1957 மே மாதம் 5 ஆம் தேதி அன்று ‘தேவன் ‘ மறைந்தார்.

அமரர் தேவன் நினைவு நகைச்சுவைக் கட்டுரைப் போட்டி

தம் சிறந்த படைப்புகளால் மக்கள் மனம் கவர்ந்த அமரர் தேவன் நினைவாக, அமுதசுரபியும் அப்புசாமி-சீதாப்பாட்டி நகைச்சுவை அறக்கட்டளையும் இணைந்து, நகைச்சுவைக் கட்டுரைப் போட்டியை நடத்துகின்றன.

முதல் பரிசு : ரூ.3,000

இரண்டாம் பரிசு : ரூ.2,000

மூன்றாம் பரிசு : ரூ.1,000

கட்டுரைகள், எப்பொருளிலும் இருக்கலாம். தரமான நகைச்சுவையுடன் இருக்கவேண்டும். அமுதசுரபியில் மூன்று பக்க அளவிற்குள் அமைதல் நல்லது. கட்டுரை, தம் சொந்தப் படைப்பே; மொழிபெயர்ப்போ, தழுவலோ கிடையாது; வேறு எங்கும் வெளியான படைப்பு அன்று என்ற உறுதிமொழிக் கடிதம் அளிக்கவேண்டும். ஒருவர், ஒன்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளை அனுப்பலாம். தேர்வு பெறாதவற்றைத் திருப்பி அனுப்ப இயலாது. அஞ்சல் தலைகள் இணைக்கவேண்டாம்.

கட்டுரைகள், ஆகஸ்டு 10ஆம் தேதிக்குள் எமக்குக் கிடைக்குமாறு அனுப்பவேண்டும். முடிவுகள், செப்டம்பர் இதழில் வெளியாகும். நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது

அனுப்பவேண்டிய முகவரி : அமரர் தேவன் நினைவு நகைச்சுவைக் கட்டுரைப் போட்டி, அமுதசுரபி, ஏ-7, இரண்டாம் அவென்யு, அண்ணா நகர் கிழக்கு, சென்னை – 600102.

மின்னஞ்சலில் அனுப்புவோர், amudhasurabi@shriram.com / amudhasurabi@gmail.com என்ற முகவரிகளுக்கு அனுப்பலாம்.

– அண்ணாகண்ணன்.

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு