‘அந்நியன் ‘- சங்கருக்கு என்ன தண்டணை தருவான்… ?

This entry is part [part not set] of 32 in the series 20050623_Issue

வரதன்


அந்தக்காலத்தில் கார்வண்ணன் என்ற ஒரு இயக்குனர், நடிகர் முரளியை வைத்து ஒரு பட்ஜெட் படம் எடுத்தார். அதில் லஞ்சம் வாங்குபவர்களை கொலை செய்யும் கதை. பின்னாளில் அதுவே பிரமாண்ட காட்சி மற்றும் நடிகை மதுபாலாவின் திறந்த மார்புகளுடன், இட ஒதுக்கீட்டால் உயர்ஜாதினர் படும் அவஸ்தையைச் சொல்லும் ‘ஜென்டில் மேன் ‘ ஆயிற்று.

பின் அனுபவம் வர வர , ‘முதல்வன் ‘ என்ற ஒரு அருமையான படம் ஷங்கர் தந்தார்.

பின். பாய்ஸ் தொடர்ந்து தற்போது வந்துள்ளது – அந்நியன்.

விஷயங்களைச் சில பகுதிகளாகப் பார்ப்போம்.

இதுவரை அரசியல்வாதிகள் , அதிகாரிகளை கொன்றால் தீர்வு வரும் என்று சிந்தித்த ஷங்கர் இம்முறை, இயலாமையால் ஊமையாகி ஊரோடு ஒத்துப் போன சாமான்ய மனிதனைக் கொல்கிறார்.

இதில் சில வேடிக்கைப் பார்ப்போம்….

– ரோடோரத்தில் அடிபட்டுக் கிடக்கப்பவரை ஹாஸ்பிட்டல் எடுத்துச் செல்ல வண்டிகளை நிறுத்தச் சொல்கிறார். ஆனால் ஒருவருமே நிறுத்தாமல் போகிறார்கள். அதுவும் மவுண்ட் ரோட் போன்ற இடத்தில்.

இவர் குறுக்கே வந்து மறிப்பதால் மோதிவிடாமல் தடுக்க பிரேக் போட்டு நிறுத்திய, புதுகார் டெலிவரி எடுத்துவருபவர் பின் போய் விடுகிறார்.

அந்த ரோட் ஓர ஜீவன் இறந்து போகிறார்.

அதனால், நிறுத்தாமல் போன ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகள் விட்டு, இவர் மீது மோதாமல் கட் அடித்து ஓட்டாமல் நிறுத்தி இவரிம் பேசி தன் இயலாமையைச் சொன்னவரை எருமைமாடு கொண்டு மிதித்து சாக அடிக்கிறார்…

என்ன சிந்தனையோ….

– தற்போது தமிழகத்தில் ஆம்புலன்ஸ் முறை நன்றாக செயல்பட்டு வருகிறது. சும்மா காட்சியமைப்பிற்காக இதுமாதிரி பண்ணுவது அபத்தம்.

– பத்திர அலுவலகத்தில் ஏஜெண்டாக செயல்படுபவரை கொலை செய்வது விட்டு, வேறு வழியின்றி பதிவு பண்ண பணம் தர முடிவு பண்ணிய அப்பாவி கதாநாயகியைக் கொலை செய்யத் துரத்துகிறார்….

அட ராமா…

– திண்டிவனம் ரயில்வே காண்டின் காண்ட்ராக்டரை கொலை செய்யகிறார். கொப்பரையில் வறுத்து…

இப்படியாக சிலரை கொலை செய்தால் இந்தியா சுபிட்சமாக ஆகும் என்ற சிந்தனையுடன் ஒரு கதை.

இதில் உச்சகட்டமாக ஒரு வீடியோ பிரசன்டேஷன்: பெங்களூரை விட சின்னதாக இருக்கும் சிங்கப்பூர் 25ஆண்டுகளில் வளர்ந்த வளர்ச்சி பற்றி.

அய்யா ஷங்கரே.. ஏ.சி ரூமில் கூடி கதை பண்ணும் நிலை விட்டு வெளிவாருங்கள். கடந்த 3 வருடங்களில் பெங்களூர் வளர்ச்சிப் பாருங்கள். இதே நிலை தொடர்ந்தால் இன்னும் 5 வருடத்தில் சிங்கப்பூரை பின்னுக்குத் தள்ளிவிடும் பெங்களூர்.

ஜென்டில் மேன் காலகட்டம் வேறு. இப்போது இந்தியா டாப்கியரில் இருக்கிறது. அதை சுஜாதா கூட ஷங்கரிடம் சொல்லாதது ஏனோ… ? இல்லை, பாய்ஸ் போல் இதிலும் சுஜாதா சொல்லி ஷங்கர் கேட்கலியோ என்னவோ… ?

‘தனிமனித ஒழுக்கம் ‘ இல்லாதவர்களை தண்டிப்பது பற்றியும் பேசுகிறார்…

ஆனால் இவரின் ஒழுக்கம் பற்றிப் பார்ப்போம்.

** ஆறு வருடம் முன் சன் டிவி-யில் வந்த, மர்மதேசம் ‘விடாது கருப்பு ‘ -வின் அப்பட்ட திரை வடிவ உல்டாவே ‘அந்நியன் ‘.

அதில், ‘கருப்பு ‘சாமி பற்றிய பாட்டியின் கதையால் மிகவும் ஆழ்மன நம்பிக்கைக்கு உள்ளான கதாநாயகன் (நடிகர். சேத்தன்) கருப்பு சாமியாக கொலை செய்வார்.

‘Multi Personality Disorder ‘ கொண்டவராக அவரின் பாத்திரப் படைப்பு இருக்கும்.

அதைத் தான் சங்கர் உல்டா பண்ணியுள்ளார்.

அதன் ஒரிஜினல் கதாசாரியர், ‘இந்திரா செளந்தர ராஜன் ‘ தனது ‘கருப்பு ‘-ஐ அனுப்பித்தான் சங்கரை தண்டிக்கனுமோ என்னவோ.. ?

இப்படி அடுத்தவன் படைப்பைத் திருடி பிழைப்பது கூட மிக மிக தண்டிக்க வேண்டிய செயலே….

** சமூகத்தை நாசம் செய்யும் விதமாக திறந்த மார்புகளுடன் குத்தாட்ட காட்சி வைப்பது தண்டிக்கப்பட வேண்டியதே.

அதிலும் சமூக அவலங்கலைத் தட்டிக் கேட்பதாக கதை பண்ணி அதில் சமூக நாசம் செய்யும் விஷயம் வைப்பது கடைந்தெடுத்த அயோக்கியம்.

சினிமாவில் உண்மை மற்றும் சமூக விஷயங்களை காசுபண்ணுவதற்கு கேவலமாக உபயோகிக்கும் இந்த ஷங்கரீயத்திற்கு , ‘அந்நியன் ‘ கொலை தண்டனை கட்டாயம் தருவான்.

மேலும் சுஜாதா ஒரு பேட்டியில் நான் ஒரு வரியில், கதாநாயகி ஒரு கராத்தே மையத்திற்குள் ஓடுவாள் என்று எழுதியதை ஷங்கர் பிரமாதமாக எடுத்தார் என்று சொல்லியிருந்தார்.

அப்படி சுஜாதா கொடுத்த கதையெனில் ஏன், கதை ஷங்கர் என்று போட வேண்டும்… ? ஹிட் ஆனால் சுஜாதாவிற்கு மறு மொழிகளுக்கு விற்கும் போது 33% தரணும் என்றா… ?

ஷங்கரே ‘அந்நியன் ‘ கதாபாத்திரம் செய்யும் முறை தான் தேசம் வளர் தீர்வு என்றால், குத்தாட்ட கும்தலக்கா காட்சிகள் வைத்து கலாச்சார திரைச் சீரழிவு செய்பதற்கு ‘அந்நியன் ‘ உடனே கண்ணை நோண்டி தண்டிக்கும் ‘நேத்ர ஹாரம் ‘ முறையில் கொலை செய்ய வேண்டியது உங்களைத்தான். காட்சியின் மூலம் சீரழிவு செய்வதால் கண்ணை நோண்டுதல் முறையை அந்நியன் செய்வான்.

திரைவிரும்பிகளே, இம்மாதிரி மிக சீரியஸ் சமூகபிரச்சனைகளை அரை வேக்காட்டு சிந்தனைகளுடன் காசுபார்க்கத் துடிக்கும் ‘கலாச்சாரக் குப்பை ‘களை ஓரம் கட்டுங்கள்.

பி.கு: ஷஙகர் அவர்களுக்கு , உண்மையில் உங்களுக்கு சமூகஅக்கறை கொண்ட திரைவடிவம் தர வேண்டுமெனில், ‘Swades ‘ படம் பாருங்கள். SWADES ‘ விவரம் அறிய http://www.imdb.com/title/tt0367110/

அதை விட்டு மனநோய் முத்தி, திறந்த மார்பிலும். தொப்புள் ஓட்டையிலும் இந்தியா முன்னேறாததன் காரணங்களைத் தேடாதீர்கள்.

பலரையும் கவர்ந்த பிரான்சு எழுத்தாளர் ஆல்பர் காம்யூவின் கதையின் தமிழ்பதிவு ‘ அந்நியன் ‘ கதையின் தலைப்பை இப்படியொரு பொறுப்பற்ற சிந்தனைப் படத்திற்கு நீங்கள் உபயோகித்தது வெட்கக்கேடானது. அதற்கு அந்நியன் உங்களைத் தண்டிக்கலாம்….

varathan_rv@yahoo.com

Series Navigation

வரதன்

வரதன்