அஞ்சலி -பிரபல எழுத்தாளரும் மருத்துவத்துறை பேராசிரியருமான அமரர் செல்லத்துரை சிவஞானசுந்தரம் (நந்தி)

This entry is part [part not set] of 30 in the series 20050616_Issue

Sivapalu master


மூதறிஞர், வாழ்நாள் பேராசிரியர், வைத்தியக் கலாநிதி செல்லத்துரை சிவஞானசுந்தரம் (நந்தி) அவர்கள் கடந்த 4.06.2005 யாழ் மண்ணில் காலமாகிய செய்தி கேட்டு எழுத்தாளர் இணையம் தனது ஆழ்ந்த கவலையைத் தெரியத்தருகின்றது. தமிழையும் தன் மண்ணையும் நேசித்த ஆற்றல் மிகு சேவையாளனாகத் தன்னை ஆக்கிக்கொண்டு மக்கள் பணியே மகேசன் பணியெனத் தன் வாழ்நாள் முழுமையும் மக்களுக்காக வைத்திய சேவையோடு இலக்கியச் சேவையும் புரிந்த மாமனிதராகத் திகழ்ந்த எழுத்தாளர் நந்தியவர்கள் படைப்பிலக்கியத் துறையில் கால்பதித்து தான் வாழ்ந்த பிரதேசத்தையும், மக்களையும் மனதிருத்தி இலக்கிகர்த்தாவாக கதை, கவிதை, கட்டுரைகள் என பல பரிமாணங்களில் தனது எழுத்தாற்றலைப் படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மலையகத்தில் வைத்தியக் கலாநிதியாக பணியாற்றியபோது மலையக மக்களின் மாண்புறு தெய்வமாகப் போற்றப்டத்தக்கவகையில் அவர்களை நேசித்து சேவை நல்கியதோடு மட்டுமன்றி மருக்கொழுந்து எனும் படைப்பிலக்கியத்துறையில் தனது காலை வேரூன்ற வைத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தன்னலங்கருதாத சேவை, மக்கள்மீது ஈடுபாடு கொண்ட அவர் பாலருக்கான கவிதை நூல்களை எழுதி வெளியிட்டதோடு, வைத்தியச் சார்ந்த நோய் நாடி நோய் குறிநாடி அதற்கேற்ப செய்யும் நெறியில் மக்கள் அவை பற்றி அறிந்துகொள்ளவேண்டும் என்னும் துடிப்பில் மருத்துவ நூல்களையும் தமிழில் எழுதிவெளியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. டொமினிக் ஜீவாவுடன் நெருக்கமாகத் தன்னைப் பிணைத்துக்கொண்ட அவர் மல்லிகை மலரில் பல சிறுகதைகள், கட்டுரைகளை தமது ஆக்கங்களாகத் தந்துள்ளமையோடு மல்லிகையால் பெருமைப்படத்தக்கவகையில் தன்னையும் தன்னால் மல்லிகை பெருமைப்படவும் வைத்தவர் அமரர் செல்லத்துரை சிவஞானசுந்தரம் அவர்கள் எனலாம். எம்மவர் தானுண்டு தன்வேலை உண்டு என்றில்லாமல் மக்களுக்கு பணிசெய்யவேண்டும் என வாழ்ந்தவர். அவரின் இழப்பு தமிழ் பேசும் மக்களுக்கும் மண்ணுக்கும் பேரிழப்பாகும். அன்னாரின் பிரிவால் துயருறும் துணைவி, மக்கள், மருமக்கள் பேரப்பிள்ளை உற்றார் உறவினர் நண்பர்களுக்கு எமது ஆழந்த அனுதாபத்தினைத் தெரியத்தருகின்றோம்.

மேன்மையுறு இலக்கியவாதியை, படைப்பாளியை, மக்கள் அன்பனைக், கல்விமானை இழந்து துயரில் ஆழ்ந்துள்ள தமிழ்கூறும் நல்லுகின் துயரில் நாமும் பங்குகொள்கின்றோம்.

ஆன்னாரின் ஆத்மா சாந்தியடையவதாக ஒம் சாந்தி!

கனடா தமிழ் எழுத்தாளர் இணையம்

பிரபல எழுத்தாளரும் மருத்துவத்துறை வாழ்நாள் பேராசிரியருமான செல்லத்துரை சிவஞானசுந்தரம் (நந்தி) அவர்களினதும்

எழுத்தாளர் இராஜகோபால் (செம்பியன் செல்வன்) அவர்களினதும் மறைவையொட்டிய

இரங்கற் கூட்டம்

காலம்: 25.07.2005 பி.ப. 5.45 மணி

இடம்: நல்லூர் கந்தசுவாமி ஆலய மண்டபம் (20 Nugget Ave.#01 McCowan& Sheppard)

மேற்படி இலக்கியப் படைப்பாளிகளின் மறைவை ஒட்டிய நினைவுப் பேருரைகள் இடம் பெறும், அனைவரும் அன்புடன் அழைக்கப் படுகின்றனர். நிகழ்ச்சிகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

thangarsivapal@yahoo.ca

Series Navigation

Sivapalu master

Sivapalu master