விஸ்வாமித்ராவுக்குப் பதில்

This entry is part [part not set] of 25 in the series 20050429_Issue

பரிமளம்


[அண்ணாவுக்கும், ஈவெராவுக்கும் பரிந்து, அப்படியே ஈவெராவின் அவமரியாதைத் திருமணத்துக்கும் சப்பைக்கட்டு கட்டி நண்பர் பரிமளம் எழுதியுள்ள மடலைக் கண்டு சிரிப்புத்தான் வருகிறது]

ஒரு கருத்தை முன்வைக்க வேண்டியது; அதற்கு மற்றவர் எதிர்வினையாற்றினால், எதிர்வினைக்குப் பதில் கூறாமல் வேறொன்றுக்குத் தாவுவது. இப்படிப்பட்டவர்களுடன் விவாதிப்பது எப்படி என்று தெரியாமல் எனக்கு அழுகைதான் வருகிறது.

1. யாருக்காவும் பரிந்து பேசுவது என் நோக்கமல்ல. 2. மணமொத்த இருவர் செய்துகொள்ளும் திருமணத்தை அவமரியாதைத் திருமணம் என்று சொல்வது அநாகரிகமானது, வன்மையான கண்டனத்துக்குரியது. (‘விஸ்வாமித்ராவின் கட்டுரைக்கு வசைகளே பதிலாக வரும்’ என்று ஆரூடம் கூறிய அ.நீ. வசைகள் எங்கிருந்து வருகின்றன என்பதைக் கவனிக்கவும்) 3. இந்தத் திருமணத்துக்குச் சப்பைக் கட்டு கட்டுவதும் என் நோக்கமல்ல. அதற்குத் தேவையுமில்லை.

முதலாவது, குழந்தைத் திருமணத்தைப் பற்றி ஈவெரா கூறிய ஒரு கருத்தை, அவருடைய சொந்தத் திருமணத்தோடு ஒப்பிட்டு ராமசாமியின் ‘முரண்பாடு’ என்று எழுதியது தவறு என்பது என் வாதம். இதற்கு விஸ்வாமித்ரா எந்தப் பதிலையும் கூறவில்லை.

(அண்ணா உட்பட) இந்தத் திருமணத்தை எதிர்த்தவர்கள், திருமணத்துக்கு முன்பு ‘சட்டபூர்மாக வயதுக்கு வந்த ஒரு இளம்பெண் ஒரு முதியவரை மணந்துகொள்ள விரும்புவது தவறு’ என்று கூறியதேயில்லை என்பது என் இரண்டாவது வாதம். இதற்கும் விஸ்வாமித்ரா எந்தப் பதிலையும் கூறவில்லை.

இந்த இரண்டுக்கும் பதில் இல்லாதபோது ‘ஈவெராவின் முரண்பாடு’ என்று ஒரு மட்டையடி அடிக்கமுடியாது என்பது என் நிலை.

***

மற்றவர்களுக்கெல்லாம் சுயமரியாதைத் திருமணம் செய்தார், தனக்கு மட்டும் சுயமரியாதையற்ற பதிவுத் திருமணம் செய்துகொண்டார். இது ஏமாற்று, தில்லுமுல்லு, இதற்கென்ன பதில் என்று குழாயடிச் சண்டை பாணியில் கேள்வி கேட்டால் எப்படிப் பதில் கூறுவது ? (பதிவுத் திருமணமும் சுயமரியாதைத் திருமணத்தின் ஒரு பகுதிதான் என்பது விஸ்வாமித்ராவுக்குத் தெரியாமல் இருப்பதில் வியப்பில்லை) சொத்துகளைக் காப்பாற்றிக்கொள்ளத்தான் (ராமசாமி பணம் சேர்ப்பதில் குறியாக இருந்தார் என்பது ஊரறிந்த செய்தி. கையெழுத்து வேண்டும் என்று குழந்தைகள் வந்து நின்றால்கூடக் காசு வாங்கிக்கொண்டுதான் கையெழுத்து போடுவார்) அப்படிச் செய்தார் என்று விஸ்வாமித்ரா ஒரு காரணத்தை முன்வைத்தால், திருமணத்தை எதிர்த்து அண்ணாவின் தலைமையில் பிரிந்து சென்ற திமுக வினர் தேர்தலில் நின்று பதவியைப் பிடிக்க வேண்டும் என்னும் ஆவலில்தான் அவ்வாறு செய்தனர் என்று நானும் (விஸ்வாமித்ராவைத் தவிர மற்ற எல்லாருக்கும் தெரிந்த) ஒரு காரணத்தை முன்வைக்கலாம்.

இவையெல்லாம் ஊகங்களே. ஊகங்களுக்கு இடம் உண்டு என்று நானும் என் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறேன். இருந்தாலும் மீண்டும் மீண்டும் ஊகங்கள் மீதுதான் வாதங்களை அடுக்குவேன் என்பது விஸ்வாமித்ராவின் கொள்கையாக இருந்தால் என் தோல்வியை ஒத்துக்கொண்டு இந்த விவாத்திலிருந்து விலகிக்கொள்வதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை.

***

சில பின் குறிப்புகள்:

***

[சுயமரியாதைத் திருமணம் அரசால் அங்கீகரிக்கப்பட்டது 1968’ல்] என்று எழுதும் விஸ்வாமித்ரா எந்த அரசால் அங்கீகரிக்கப்பட்டது என்ற உண்மையைத் தெரிந்தே மறைக்கிறாரா, தெரியாமல் மறைக்கிறாரா அல்லது தேவையில்லை என்று கூறாமல் விட்டாரா என்பது குழப்பமாக இருக்கிறது. பல திடுக்கிடும் உண்மைகளை அள்ளி வீசும் விஸ்வாமித்ரா இங்கேயும் உண்மையைச் சொல்லியிருக்கலாமே!

***

ஈவெராாமசாமியின் திருமணத்தைப் பற்றிய சொல்லாடல்களில் மணியம்மை என்ற ஒரு பெண்ணின் விருப்பு வெறுப்புகளைப் பற்றி ஒன்றும் கூறாமல் இருட்டடிப்பு செய்வது எவ்வளவு பெரிய பெண்ணடிமைத்தனம் என்பதை விஸ்வாமித்ரா குழுவினர் என்றேனும் உணர்வார்களா ?

***

திருமணம் என்பது ஒரு ஆண், ஒரு பெண் என்ற இரு மனிதர்களின் தனிப்பட்ட விவகாரம் என்ற நிலையைத் தாண்டி, ஏதோ இரு மனிதர்களின் தனிப்பட்ட விவகாரம் என்னும் நிலையை வந்தடைந்துவிட்ட ஒரு காலகட்டத்தில் பத்தாம்பசலித்தனமான அளவுகோல்களைச் சுமந்து திரியும் மனிதர்களைப் பார்த்துப் பரிதாபப்படுவதைத் தவிர வேறு வழியில்லை.

janaparimalam@yahoo.com

Series Navigation

பரிமளம்

பரிமளம்