• Home »
  • »
  • கடிதம் பிப்ரவரி 25,2005

கடிதம் பிப்ரவரி 25,2005

This entry is part of 49 in the series 20050225_Issue

எஸ்.அரவிந்தன் நீலகண்டன்


உண்மையில் ராதா ராமசாமியுடனான வாக்குவாதத்தைத் தொடர விரும்பவில்லை. குழாயடிச்சண்டைக்கு இருக்கும் அடிப்படை நியாயம் கூட இல்லாமல் அந்த வசையாடலை விட கீழ்த்தரமானவொன்றை வாதம் என்கிற பெயரில் முன்வைக்கும் அம்மையாரிடம் கூற என்ன உள்ளது. எங்கள் ஊர் மீன்சந்தையில் இதைவிடத் தரமான மொழியாடலை கேட்கலாம் என்பதுதான் உண்மை. ரவி ஸ்ரீனிவாஸை நியோமனுவாதி என்றால் அம்மையாருக்கு ஆராசனை வருகிறது. அது சரி. ஒருத்தரை சொன்னால் இன்னொருத்தருக்கு ஆத்திரம் வரக்கூடாதா என்ன ? அதை வைத்துக் கொண்டு இருவரும் ஒன்று என்றோ அல்லது அம்மையாரின் பெயரில் வரும் கடிதங்களின் உண்மை நிழல் எழுத்தாளி இன்னொருவர் என்றோ சொல்லவா முடியும். அல்லது மேற்கத்திய மேதமை உரைகல்லில் தேய்த்தே அனைத்தையும் தரம் பார்க்கும் போக்கு – தவறு : இங்கே உரைத்து பார்ப்பதெல்லாம் கிடையாது சும்மா பேரை சொன்னாலே போதும் – url ஐ அடுக்கினாலே போதும் – இதெல்லாம் இரண்டு பேருக்கு ஒரே மாதிரி வாய்க்கப்பெற்றுள்ளமையால் அவர்கள் இரண்டுபேரும் ஒரே நபர் என்றாகிவிடுமா ? இல்லைதான். ஆனால் here we do have a deserving case for ESP – CSICOP take note!

ஒரு தகவல்பிழையை ஊதிப் பெரிதாக்குகிறதைத் தவிர வேறெவ்விதத்திலும் நான் கேட்ட கேள்விகளுக்கு, முன்வைத்த வாதங்களுக்கு அம்மையார் கூறும் பதிலென்ன ? குறைந்த பட்ச கருத்தொழுக்கம் இருக்கும் பட்சத்தில் மூலக்கூறு மைய சித்தாந்தத்திற்கும் ஏங்கல்ஸ் முதல் லைசென்கோ வரையாக ‘வளர்த்தெடுத்த ‘ மார்க்ஸீய சித்தாந்தத்திற்கும் இடையேயான மோதல் குறித்து ஒரு வாக்கியமேனும் பகர அம்மையாருக்கு முத்துதிர்க்க முடியவில்லை. அங்கே அந்த ‘ஃபோரத்திலே இதெல்லாம் சொல்லிட்டாங்களே ‘ என்று பரிதாபகரமாக கையைக்காட்டி சொதப்புகிறார் அம்மையார். நான் விளக்கமாக எழுதிய விஷயங்கள் மார்க்ஸிய சித்தாந்திகள் ஜகா வாங்கிய விஷயங்கள். 1940 இல் மார்க்ஸிய சித்தாந்திகள் நின்ற நிலைக்கும் ஆடிய ஆட்டத்திற்கும் இன்றைக்கு அவர்கள் போடுகிற ‘அது ஸ்டாலினிய திரிபு ‘ என்கிற நாடகத்துக்கும் அப்பால் அவர்கள் மெளனிக்கும் இடம் அது. 2000க்கு பின்னரும் இந்த மார்க்ஸிய-நியோடார்வினிய ஒவ்வாமை குறித்து முன்னணி பரிணாம உயிரியலாளர் கூறியவற்றை நான் மேற்கோள் காட்டமுடியும். இதற்கெல்லாம் அம்மையாரிடமிருந்தோ அல்லது இன்னபிற url-piling cerebral tragedies இடமிருந்தோ எவ்விதப்பதிலும் வராது என்பது தெரியும் – பொய்யன் புளுகன் என்கிற வசை மொழியைத் தவிர. இத்தகைய மொழிவளம் குழாயடிச்சண்டைகளில் நல்ல பலன்களை தரும் கருவிதான் ஆனால் இங்கல்ல என்பதை அம்மையார் புரிந்துகொள்ள வேண்டும் – அதற்கான உபகரணங்கள் அம்மையாரிடம் இருக்கும் பட்சத்தில். 1970களில் பொய்யென தெரிந்த ஒரு விஷயத்தை இங்கிலாந்தில் உள்ள முன்னணி அறிவியல்-தத்துவம் குறித்து ஆராயும் மார்க்ஸீய அறிவுஜீவி அதன் பிரச்சார தொனியுடன் பயன்படுத்தியுள்ளது 1999 இல். இதனை டாவ்கின்ஸ் வெளிகாட்டியுள்ளார். ஆனால் அதற்காக அந்த மார்க்ஸீய அறிவுஜீவியை வசைபாடவில்லை. இதற்கு பெயர் பண்பாடு. ஆனால் அம்மையாரின் பண்பாடென்ன ? இந்த தவறை சுட்டிக்காட்டியமைக்காக அம்மையாருக்கு நன்றி தெரிவித்த பின்னரும் அம்மையார் வசைபாடும் தரம் எந்த அளவில் உள்ளது ? ஏதோ ‘தெறமை ‘ என்றெல்லாம் அல்கா மொழியில் அடுக்கும் அம்மையாரின் வண்டவாளம் இன்றைக்கும் சுலேகாவில் காணக் கிடைக்கும். அதில் தெரியும் பண்பாட்டு வளமை மார்க்ஸியர்களுக்கே உரியது.

சங்கர மடத்தின் சட்டதிட்டங்கள் ஹிந்து தர்மத்தை முழுமையாக கட்டுப்படுத்துபவை அல்ல. ஹிந்து சமுதாயத்தின் முழுமையான ஏற்பினை சங்கர மடாதிபதிகள் கோரியதும் அல்ல. ‘நான் சொல்லுவதை முழுசா நீங்க கேட்க மாட்டாங்க என்று தெரியும். ஏத்துக்கிறதும் ஏத்துகிடாததும் உங்க இஷ்டம் ‘ என்கிற பரமாச்சாரியாரின் தெய்வத்தின் குரல் ஜனநாயகத்தின் ஆதார அடிசுருதி. எனவே அத்தகையதோர் தெய்வத்தின் பாதத்தின் தூசியையும் சிரத்தில் தாங்குவதில் நான் பெருமையும் புண்ணியமும் அடைவேன். அத்தகையதோர் மகானின் பல்லக்கினைத் தூக்குவதாக என்னைக் கூறியதற்கு அம்மையாருக்கு ஈரேழு ஜென்மங்களிலும் நன்றியுடையவனானேன். அதற்கு பொருள் நான் மனுவாதத்தையோ அல்லது பரமாச்சாரியார் கூறும் சமுதாய கருத்துக்களையோ ஏற்கிறேன் என்பதோ அல்ல. அம்மையாருக்கோ அல்லது திண்ணையில் முற்போக்கு ஆவேசம் வந்து ஆடும் அம்மணிகளில் வேறு எவருக்குமோ வேதம் கற்க வேண்டுமென உண்மையிலேயே ஆர்வம் இருக்கும் பட்சத்தில் தயை செய்து ராஷ்ட்ரீய ஸேவிகா சமிதியை அணுகுமாறு கோருகிறேன். பெண்களுக்கு வேதம் கற்றுத்தருவதுடன் வைதீக சடங்குகளை செய்யவும் அவர்கள் கற்பித்து வருகின்றனர். சங்கர மடத்தின் சட்டதிட்டங்கள் இதனை ஏற்காமல் இருக்கலாம், ஆனால் எந்த சங்கராச்சாரியாரும் ராஷ்ட்ரீய ஸேவிகா சமிதியினரை ஹிந்து மதத்திலிருந்து வெளியேற்றிவிடவில்லை. எந்த மனுவாதியும் சங்க அலுவலகத்தின் மீது பெட்ரோல் பாம் எரிந்துவிடவில்லை. எனவே அம்மையாருக்கோ அல்லது வேறெந்த பெண்மணிக்குமோ எவருக்குமோ வேதம் கற்க வேண்டும்; ஓத வேண்டும் என்கிற மாதிரி எண்ணங்கள் இருந்தால் தாராளமாக சங்கத்தை அணுகலாம்.

அடுத்த பதிலில் அம்மையாரோ என்ன கூறுவார் என்பதையும் ஊகிக்க முடியும். ‘நீ டார்வின்-மார்க்ஸை பற்றி சொன்னதற்கு என்ன பதில் ‘ என்று அதே பல்லவியை பாடி தமது மூளையின் வளமையை காட்டுவதை தவிர வேறென்ன செய்யமுடியும் இவரால் ?

—-

hindoo_humanist@lycos.com

Series Navigation

அரவிந்தன் நீலகண்டன்