• Home »
  • »
  • கடிதம் ஜனவரி 13,2005

கடிதம் ஜனவரி 13,2005

This entry is part of 64 in the series 20050113_Issue

கோவிந்த்


அன்புள்ள மீனவர்களுக்கு,

கோவிந்த் ( கோச்சா ) எழுதுவது.

தொலைக்காட்சியில் உங்கள் பேட்டிக் கண்டேன். அதில் கடல் மேல் நீ கொண்டுள்ள பயத்தையும் , இதுவரை கடல் எங்களுக்கு தாயாகத் தெரிந்தாள், ஆனால் இனி அவள் எங்கள் எதிரி என்று சொன்னது கண்டே இக்கடிதம்.

ஒரு வேளை இதை நீ படிக்காவிட்டாலும், உன்னருகே வந்து பேச வாய்ப்பு உள்ள ஜெயமோகன் போன்றவர்கள், என் கடிதக் கருத்தை இன்னும் வலிமையாக எடுத்துச் சொல்வார்கள் எனும் நம்பிக்கையுடன் எழுதுகிறேன்.

ஏன் கடலை எதிரி என்று சொன்னாய்.. ?

சுனாமி தந்த அழிவிலா.. ?

அப்படியெனில், உன்னை விட இந்தோனேஷியாக்காரன் தான் அதிகக் கோபம் கொண்டிருக்க வேண்டும்.

ஏன் … ?

இந்திய வாழ் உனக்கு ஒன்றரை மணிநேரம் தப்பிக்க வாய்ப்பிருந்தது.

ஆனால், அவர்களுக்கோ, சுனாமி சுதாரிப்பு நேரம் இன்றித் தாக்கியது.

அழிவும் நம்மைவிட அவனுக்கு அதிகம்.

ஆனால், அங்கு நடந்தது நீ கண்டாயா.. ?

முதலில் அவர்தம் சீரமைப்புப் பணிபற்றிக் காண்:

– சேதமடைந்த நிமிடம் முதல் அரசும் , இராணுவமும் சீரமைப்பு பணி தொடங்கியது.

– இறந்தவர்கள் உடல்களைத் தங்கள் உற்றார் உறவினர் உடல் போல் கருதி மரியாதை காட்டி அடக்கம் செய்தனர்.

– எந்த மொழி வல்லுனரும் கேவலமாக கடலைத் திட்டி கவிதை வடிக்கவில்லை.

– பின் ஒருபக்கம் சீரமைப்புப் பணி தொடர, சுற்றலா பயணிகள் மீண்டும் கடற்கரையோரம் சூரியக் குளியல் தொடர ஏற்பாடுகளும் செய்தனர்.

– அரசும் , மனிதர்களும் உலகளாவிய முறையில் வந்த உதவியை தம் மக்களுக்கு சேர்ப்பது மற்றும் கருத்தரங்கம், எதிர்கால சுனாமித் தடுப்புத் திட்டமென வேலைத் தொடர்ந்தார்கள்.

ஆனால், உன் பகுதியில் நடந்தது என்ன… ?

– அந்தமான் நிக்கோபார் தீவுகள் பாதிக்கப்பட்டவுடனே, உனது நாட்டின் அமைச்சருக்கு உதவி போய் உள்ளது. அவரோ, டில்லி அன்னை களைப்புடன் உறங்கும் நேரம் என்று தூங்கிப்போனார்.

இது தெரிந்தும் அரசிலிருந்து அவர் ராஜினாமா செய்யவில்லை. அன்னையும் அவரை தண்டிக்கவில்லை.

நீயோ அன்னை உன்னைப் பார்க்க வந்த போது யாசகம் செய்தாயே தவிர கேள்வி கேட்கவில்லை.

– சரி, இறந்தவர் நிலை. கொத்துக் கொத்தாய் குப்பைகள் போல் குழியில் தூக்கியெறிப்பட்டு…. நினைக்கவே நெஞ்சு துடிக்கவில்லை.. ? உனக்கு… ?

இதற்கு முன்னர் இந்த மாதிரி பிணக்குவியல் குழி தோண்டிப் புதைக்கப்பட்ட காட்சி, ஹிட்லர் காலப் புகைப்படத்தில் தான் உண்டு.

ஜெர்மனியின் ஒரு ஹிட்லர், ஆனால் காந்தி தேசமான உன் ஊரிலோ, பல ஹிட்லர்கள்.

ஹிட்லருக்கு ஏற்பட்ட கதி தானே அவர்களுக்கு ஏற்பட வேண்டும். பின் நீ ஏன்.. புலம்பிக் கொண்டு.

– சரி, எத்தனை பேர் வாய்ச்சவடால் விட்டு உன்னை சுரண்டி கொழுத்தனர். அவர்கள் யாராவது உன்னுடன் தங்கி உனக்காய் பாடுபடுகிறார்களா.. ?

உன்னச் சுற்றி நடப்பது பற்றி நீ கவலைப்படாமல், கடலைக் கோபித்தால் என்ன அர்த்தம்.

– இதில், இந்தக் கவிஞர்கள் எனும் ஒரு கோஷ்டி வேறு. உன் மனோ தைரியத்தைச் சிதைத்து, கடலில் மேலான உன் பார்வையை நாசம் செய்து கொண்டு.

நேற்று தீயைத் திட்டி கவிதை என்று கதற்றியவர்கள், இன்று கடலை, ‘நாசமாய்ப் போய்.. கடலா பேயா.. ? ‘ என்று சகட்டு மேனிக்கு பாடியவாறு. இதில் சாகத்ய அகாடம்மி கவிஞர் முதற்கொண்டு, படிக்கவிதை புனைவோர் வரை. தமிழ் தெரிந்த யாரும் மிச்சமில்லை எனும் படி.

இந்தக் கருப்புக் கவிஞர்கள், சாவே உனக்கொரு நாள் சாவு வராதா.. என்று கவிதை பாடுபவர்கள். இவர்களுக்குத் தேவை கைத்தட்டு. தனக்கு விருப்பமான தலைவர்களுக்கு கூட அஞ்சலிக் கவிதை ரெடி பண்ணி வைத்து விட்டே, அவர்தம் பிறந்த நாளுக்கு வருடா வருடம் போபவர்கள்.

அரம் பாடி அழித்தல் போல், இந்த மாதிரி கவிதை எழுதினாலே …. ‘

இந்தக் ‘கருப்புக் கவிஞர்கள் ‘ தான் உன் எதிரிகளில் தலையானவர்கள்.

உனக்கு விழுந்த அடி பலமானது தான். நீ உயிருடன் இருப்பதே பெரிது தான். அதற்காக நீ உடைந்து போனால், யாருக்கு லாபம். கருப்புக் கவிஞர்களுக்கும், செய்தி போடுபவர்களுக்கும் வேண்டுமானல் வியாபாரம் நடக்கும். ஆனால் உனக்கு.

அது மட்டுமல்ல, உள் புகுந்த கடல் மீனவர்கள் எங்கே என்று தேடவில்லை. எந்த வித்தியாசமும் பாராமல் தான் சேதம் நிகழ்ந்தது.

இது இயற்கையின் நிகழ்வு. யாருக்கும் வரும்.

அதனால் மனம் தளராதே.

உனக்கு மீண்டு வர சிந்தனைகள் ,யோசனைகள்:

– ஜப்பானில் எரிமலையும், சுனாமியும் எப்போதும் ஆபத்து விளைவிக்கும் என்று தெரிந்தும் அதனுடன் வாழக்கற்று கொண்டவர்கள். அது எப்படி என அறிய வேண்டும்.

– அமெரிக்காவில், WTC , விபத்திற்குப் பின் யாரும் அடுக்கு மாடியில் வேலை பார்க்க மாட்டேன் என்று சொல்லவில்லை.

– குஜராத்தில் யாரும் நிலத்தில் நடக்க மாட்டேன் என்று சொல்லவில்லை.

– பல விமானம் விபத்து பார்த்த பின்னும் பயணிகள் யாரும் விமானத்தில் போவதில்லை என்று முடிவெடுக்கவில்லை.

– அரியலூர் ரயில் விபத்துக்குப் பின், திருச்சிக்காரர்கள், ரயில் பயணம் நிறுத்தி விட வில்லை.

இன்று, கடலை விரோதி என்று மனநிலை கொண்டால், நாளை பூகம்பம் வந்து நம்மில் பலரை நிலம் விழுங்கினால், கடல் நிலம் இரண்டும் விடுத்து எங்கு நாம் போவது.

அதனால், சற்று நிதானி,

1. தற்போது உனக்குத் தேவை மாற்று சிந்தனை வேண்டிய ஒரு முகாம்.

2. மூன்று மாதங்களுக்கு உன்னைத் தயார்படுத்த , நல்லவர்கள் தரும் உதவியை பயன் படுத்து.

3. உன்னைப் பார்க்க வரும் படித்த மற்றும் அனுபவம் உள்ளவர்களிடமிருந்து, வெளிநாடுகளில் கரைகளை சுனாமித் தாக்கி உள்ளதா எனக் கேள்

4. சுனாமித் தடுப்பிற்ற்கு என்ன முன் ஏற்பாடு அங்கெல்லாம் செய்யப்பட்டுள்ளது என்று கேள்.. ?

5. சுனாமி உணரல் குழுவில் நாம் ஏன் பங்கெடுக்கவில்லை இதுவரை எனக் கேட்டு, இனியாவது பங்கெடுப்பார்களா எனக் கேள்..

6. வெளிநாடுகளில், மீனவர்கள் இப்படிதான் வேட்டி மட்டும் கட்டி கட்டுமரத்துடன் கடலுக்குச் செல்கிறார்களா எனக் கேள்.

7. மேலும், பெரிய தவறு, சாமான்ய மக்கள் பலரும் தாங்கள் வாழும் முறை மற்றும் சுழலின் மேம்பாட்டுக்கு உலகில் மற்றப் பகுதிகளின் கண்டுபிடிப்புக்கள் பற்றிய செய்திகளை பற்றிக் கண்டு கொள்ளாததே.

மெட்டி ஒலி பார்த்து ஒப்பாரி வைக்கத் தயாராக இருக்கும் பலரில் எத்தனை பேர், சன் டிவி-யில் வரும் ‘உடலே நலமா ‘ ‘சன்ற வார உலகம் ‘ போன்ற தொடர் பார்க்கிறீர்கள்.. ?

இனியாவது நாளுக்கு ஒரு மணிநேரம் உங்கள் வாழ்வு மேம்பாடு காண உதவும் செய்திகள் அறிய முயலுங்கள்.

இது மாதிரி நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் தந்தால், தொலைக்காட்சி நிறுவனத்தினரும் இது போன்ற தொடர்களைக் கூட்டுவார்கள்.

மேலும் நீ உருப்படியான நிகழ்ச்சியையும் பார்த்தால், உதவும் கரங்கள், ஆர்.எஸ்.எஸ், சேவா மையம், இராமகிருஷ்ண மடம், எய்ட் இந்தியா, எம்ஸ் இந்தியா சார்ந்தவர்கள் தோன்றாமல், குஷ்பூ, விஜய், விவேக் தோன்றி, சுனாமி நிதி பற்றி ஏன் பேசப் போகிறார்கள்.

இதுவும் ஏன் என்று சிந்தி.

8. நீ கோஷமிட்டு கொடி பிடித்தவர்கள் மாத்திரம் அல்ல, மன்றம் வைத்து ‘நாளைய முதல்வர் ‘ என்று சொன்னவர்கள் கூட காணமல் போய்விட எங்கிருந்தோ வந்த விவேக் ஓபராய் களமிரங்கினார்.

தொண்டுள்ளங்களும், சேவை அமைப்புகளும் தானே உன் வாழ்வு சீர் செய்ய போராடுகின்றன.

இது ஒருசில கேள்விகள் தான். உன் மனதில் இதை விட பல கேள்விகள் இருக்கும்.

ஆனால், நீ தான் கேட்காமலே, உனக்கு வாழ்வாய் இருந்த கடலை ஒரு நிமிடத்தில் எதிரி என்று சொல்லி விட்டாய்.

கடலை, நீ அம்மாவாகவும் பார்க்க வேண்டாம், தெய்வமாகவும் பார்க்க வேண்டாம் . கடலை கடலாகப் பார்.

நீ நீயாகத் தெரிவாய்.

கடலை நீ வெறுப்பாகப் பார்க்க வேண்டாம். உனக்கு மன தைரியமின்றி போய் விட்டால் அரசிடம் வேறு மாற்று வழிக்கு உதவி கேள்.

பல வருடம் முன்னர், குற்றப் பரம்பரை என்று கூறப்பட்டவரும், தீண்டத்தகாதவர் என்று கூறப்பட்டவரும் இன்று அரசின் உதவியுடன் காவலராகவும், ஆள்பவராகவும் மாறிவிட்டனர்.

உன் வாரிசுகள் படிக்க முழு உதவியை அரசிடம் கேள். மனோதைரியத்துடன் முனைப்பாக முயற்சி.

பிரதிபலன் பாராமல், உலகின் பல பகுதிகளிலிருந்தும் வரும் உதவிகளை நீ சரியாக பயன்படுத்தி இந்த சிக்கலில் இருந்து மீண்டு வா…

சிந்தித்தால் கடலை நீ வெல்வாய். இல்லை, கடலில் உப்பு போல் நீ வாழ்வில் கரைந்து போய் விடுவாய்.

கடலை ஜெயித்து நீ கரை சேர வேண்டுமா, இல்லை கருப்புக் கவிஞர்களுக்கு நான்கு வரியாக வேண்டுமா என முடிவு செய்.

சரியான கேள்விகளும் , கோரிக்கைகளும் தான் உன்னை உன்னிடமிருந்துக் காப்பாற்றும்

கோவிந்த்

—-

gocha2004@yahoo.com

Series Navigation