கடிதம் ஜனவரி 13,2005

This entry is part of 64 in the series 20050113_Issue

ராதா


திண்ணை ஆசிரியர் குழுவினருக்கு

சுனாமியினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவி செய்யவும்,நிதி திரட்டி இந்தியாவிற்கு அனுப்பவும்,

மற்றும் தேவையான உதவிகளைச் செய்யவும் பல அமைப்புகள் முனைந்துள்ளன. இவற்றில் சில அமைப்புகள் மிகப் பெருமளவு பல்கலைகழக மற்றும் கல்வித்துறை சார்ந்தவை.ஏற்கனவே இந்தியாவின் பல மாநிலங்களில் குறிப்பிட்ட திட்டங்களுக்கு உதவி செய்து வருகின்றன. அவற்றின் மீது ?ிந்த்துவ அமைப்புகள் காட்டும் காழ்ப்பும்,குரோதமும் எல்லை கடந்தவை. ஒரு உதாரணம்

http://p081.ezboard.com/fhinduunityhinduismhottopics.showMessage ?topicID=22496.topic

AID அமைப்பில் நான் உறுப்பினர் அல்ல.ஆனால் AID எப்படி செயல்படுகிறது, எப்படி நிதி திரட்டுகிறார்கள்

என்பதை கவனித்திருக்கிறேன். போபால் பிரச்சினையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் இவ்வமைப்பு பெரு முயற்சிகள் மேற்கொண்டது. இதன் உறுப்பினர்கள் பெரும்பான்மையாக மாணவர்கள். ASHA என்ற அமைப்பும் இது போல் சமூக அக்கறை கொண்ட அமைப்பு. இவ்வமைப்புகளில் உள்ள பலர் வெறும் நிதி திரட்டிக் கொடுத்தால் போதும் என்று கருதுவதில்லை. தொடர்ந்து படிப்பது,விவாதிப்பது போன்றவையும் முக்கியம் என்று கருதுபவர்கள், வெகு ?ன மக்கள் இயக்கங்களுடன் தொடர்பு கொண்டு இந்தியாவில் நடப்பது என்ன என்பதை அறிந்து கொள்வதில் அக்கறை காட்டுபவர்கள். மகாசே விருது பெற்ற சந்தீப் பாண்டே ASHA அமைப்பினை தோற்றுவித்ததில் முக்கிய பங்காற்றியவர்.அவரும் ஹிந்த்துவ அமைப்புகளினால் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளார்.இந்திய அரசின் அணு ஆயுதக் கொள்கையை விமர்சித்தற்காக அவரை ஹிந்த்துவ அமைப்புகள் வசைபாடின. இயற்கைச் சீற்றத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிடும் மதம்சாரா அமைப்புகள்,கிறிஸ்துவ அமைப்புகள் மீது அவதூறு பரப்புவதன் மூல ஹிந்த்துவ அமைப்புகள் தங்கள் கண்ணோட்டம் எத்தகையது என்பதை மீண்டும் நிரூபித்து வருகின்றன.

ஜெயமோகன் கட்டுரையிலிருந்து அவரது விருப்பு வெறுப்புகள், மற்றும் பிரச்சாரத் திறன் குறித்து அறிந்து கொள்ள முடிகிறது. ஆன்மிக அமைப்புகள் எங்கு உதவும், எப்படி உதவும், எங்கு உதவாது என்பதை தெரிந்து வைத்திருப்பவர்களுக்கு அவரது பிரச்சாரத்தின் நோக்கத்தினை இனம் காண்பது கடினமல்ல. வாழ்வாதார பிரச்சினைகளின் போது மக்களுக்கு பெருமளவு துணை நிற்கும் இயக்கங்கள் எவை என்ற கேள்விக்கு

விடை காண்பது கடினமல்ல.கடந்த சிலபல ஆண்டுகளில் பல நூற்றுக்கணக்கான விவசாயிகள் தற்கொலை

செய்து கொண்டுள்ளனர். கைத்தறித் தொழிலாளர்கள் தொழில் செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டனர்.

அவர்களுக்கு எந்த ஆன்மிக அமைப்பு உதவியது, குரல் கொடுத்தது என்பதை நான் அறிய விரும்புகிறேன்.

கேரளாவில் ஒரு ஆறே தொழிற்சாலை வெளியிடும் கழிவால் பாழாக்கப்பட்ட போதும், நர்மதை அணைத்திட்டத்தினால் ஆயிரணக்கானோர் பாதிக்கப்பட்ட போதும் எத்தனை ஆன்மிகவாதிகள் குரல் கொடுத்தனர்.

எங்கே போனது அவர்களது கருணை. ஆன்மிகவாதிகள் வாயே திறக்காத,அக்கறையே காட்டாத ஆயிரம் பிரச்சினைகளை, விஷயங்களை காட்ட முடியும். இன்று மீனவர்களுக்கு அமிர்தானந்தா மாயியின் அமைப்பு வீடு கட்டிக் கொடுக்கலாம். ஆனால் வாழ்வாதாரப் பிரச்சினைகளின் போது குரல் கொடுப்பது தாமஸ் கொச்சேரி போன்றவர்களும், மீனவர்கள் கூட்டமைப்பும்தான் அல்லது அது போன்ற அமைப்புகள்தான். அரசியல்வாதிகளை மிஞ்சும் வகையில் ஆன்மிகவாதிகள் சுயப் பிரச்சாரத்தில் திளைப்பவர்கள். எர்ணாக்குளத்தில் அமிர்தானந்தா மாயின் பிறந்த நாள் கொண்டாட்டங்களுக்கு செலவு எத்தனை கோடி. ஒவ்வொரு சாமியாரும்,சாமியாரினிகளும் விஜயம் செய்யும் போது பெரிய சுவரொட்டிகள், அலங்கார வளைவுகள் வைக்கப்படுவதில்லையா.கனகாபிஷேகங்கள், பாதபூஜைகள், மலர்க்கீரிடங்கள் இவையெல்லாம் எந்த ஆன்மிகத்தின் வெளிப்பாடு. ரவி ?ங்கர் உட்பட இன்றுள்ள பல ஆன்மிகவாதிகள், மடாதிபதிகள் ஹிந்த்துவத்தின் நேரடி, மறைமுக ஆதரளவார்களாக உள்ளனர். இதையெல்லாம் மறந்துவிட்டு அல்லது மறைத்துவிட்டு ஆன்மிக வாதிகளுக்கு மிகவும் ஆதரவாக பேச ஜெயமோகன் போன்றவர்களால் முடியும். இங்கு இன்னொரு கேள்வியையும் எழுப்பலாம் – விடுதலை இறையியல் போன்ற ஒன்று ஏன் ஹிந்து மதத்தில் உருவாகவில்லை. விதிவிலக்காக இது போன்ற கண்ணோட்டம் உள்ள ஒரு துறவி அக்னிவேஷ். ஆன்மிகவாதிகளின் உதவி என்பது விக்ஸ் போன்றது. விக்ஸை சர்வரோக நிவாரணி என்றா கொள்ள முடியும். மேலும் விக்ஸிற்கும் மாற்றுகள் உண்டு. ஆன்மிக இயக்கங்களை விட மீட்பு பணிகளில் இன்னும் தீவிரமாகவும், தொடர்ந்து ஈடுபடுவது மட்டுமின்றி வளர்ச்சிக் கொள்கை, கடன் சுமை உட்பட பலவற்றில் அக்கறை காட்டுபவை ஆக் ?பாம் (oxfam),ஆக்ஷன் எய்ட் (action aid), மெடிசன் சான்ஸ் பிராண்டியர்ஸ்(MSF) போன்றவை. வெறும் கஞ்சியை ஊற்றுவதே கருணை, அது போதும் என்று அவை நினைப்பதில்லை. மேம்போக்கான, பகட்டு ஆன்மிகத்திற்கு ஆதரவு தெரிவிப்பவர்களுக்கும், அத்தகைய ஆன்மிகத்தினை ஏதோ பெரிய நம்பிக்கைத் தரும் விஷயமாக முன் வைப்பவர்களுக்கும் இவற்றின் செயல்பாடு உவப்பாக இராது.

வணக்கத்துடன்

ராதா

radha100@rediffmail.com

Series Navigation