கடிதம் ஜனவரி 6,2005

This entry is part of 57 in the series 20050106_Issue

நேச குமார்


சலாஹுதீன் அவர்கள் எனக்குப் பதிலளிக்குமுகமாக டிசம்பர் 23 திகதியிட்ட மடலில்[1] பல விஷயங்களை முன்வைத்துள்ளார்.

அவரது வாதங்கள், வேண்டுகோள்கள் ஒரு புறமிருக்க, அவர் குறிப்பாக என்னிடம் வைத்துள்ள ஓர் வேண்டுகோளுக்கு மட்டும் இங்கே பதிலளிக்க கடமைப் பட்டுள்ளேன். அவர் குறிப்பிட்டுள்ளதன் சாராம்சம், நபிகள் நாயகம் அன்னை ஜைனப்பை மணந்து கொண்டபோது நிகழ்ந்த சம்பவங்கள் பற்றி நான் ஆதாரம் ஏதும் முன்வைக்கவில்லை, எனது ஊகங்களையே முன்வைத்துள்ளேன் என்பது.

இது சம்பந்தமாக எனது டிசம்பர் 2 கட்டுரையை[2] சற்றே திருப்பிப் பார்க்க வேண்டுகிறேன். அதில், நான் குறிப்பிட்டுள்ள சம்பவத்திற்கு ஆதாரமாக அபு அப்துல்லாஹ் இப்னு சாஅத் பதிவு செய்துள்ள நிகழ்வையே குறிப்பிட்டுள்ளேன். அதை அடிக்குறிப்பாகவும் முன்வைத்து, அவ்வறிஞரை இப்னு ஹஜார், அத்-தஹாபி,இப்னு கால்லிகான் போன்றவர்கள் ஆய்ந்து எழுதுபவர் என்று சான்று பகர்வதையும் குறிப்பிட்டிருந்தேன்.

மேலும், நபிகள் நாயகத்தின் வளர்ப்பு மகன், தம் மனைவியான ஜைனப்பிடம் இந்த தகவலைச் சொல்லத் தயங்கியதைக் குறிப்பிட்டுள்ள ஷாஹி முஸ்லீமின் ஹதீஸையும் சுட்டியுடன் குறிப்பிட்டிருந்தேன்.

இது இவ்வாறிருக்க, நான் ஆதாரம் எதையும் தரவில்லை என்று சலாஹுதீன் சொல்வது தவறு.

மேலும், நான் ஒரே சம்பவத்தை இருவிதமாக குறிப்பிட்டிருப்பதாக சலாஹுதீன் குறிப்பிட்டிருக்கிறார். நபிகள் நாயகத்தின் வாழ்வை வரலாற்றின் வழியே பார்க்கும் போது இவ்வகையான சிறிய மாறுபாடுகள் தெரிவது சகஜமே. காரணம், ஒவ்வொரு வரலாற்றாய்வாளர்களும் தாங்கள் கேட்டறிந்தவற்றை பதிவு செய்யும் போது மாற்றங்கள் ஏற்படுகின்றன.

இதாவது சிறிய மாற்றமே. நபிகள் நாயகத்தின் வாழ்வு சம்பந்தமாக பல இடைவெளிகள், பெரிய வித்தியாசங்கள் இருக்கின்றன. எப்படி திருக்குரான் விஷயத்தில் முன்பு குழப்பம் நிலவியதோ, பல விதமான திருக்குரான்கள் முஸ்லீம்களிடையே நிலுவையில் இருந்ததோ, அதே போன்று நபிகள் நாயகத்தின் வாழ்வு குறித்து பலவித வர்ணனைகள்,தர்க்கங்கள் இஸ்லாமிய அறிஞர்களிடையே பல விஷயங்களில் இன்றளவுக்கும் உள்ளன. இன்றளவுக்கும் நபிகள் நாயகத்தின் மனைவியரின், ஆசை நாயகிகளின், அவர் விவாகரத்து செய்து அனுப்பிய பெண்களின் பட்டியல் விஷயத்தில் இஸ்லாமிய அறிஞர்களிடையே ஒத்த கருத்து கிடையாது என்பதை சலாஹுதீன் அறிந்திருக்கலாம்.

இச்சம்பவமும் அதன்படியே பலவிதமாய் புத்தகங்களில் காணப்படுகின்றது. நான் கூறியது தவிர சற்றே வித்தியாசங்களுடன் இதே சம்பவம் வேறு சில புத்தகங்களில் காணப்படுகிறது. ஆகவே, இம்மாதிரி விஷயத்தில், சாராம்சத்தை மட்டுமே பார்க்க வேண்டும். அக்கால அரபி கலாச்சாரத்தில், ஜைனப்பின் வீட்டுடை எப்படி இருந்தது என்று யாருக்கும் தெரியாது. வீட்டுடையே விலகிய, சற்றே சுதந்திரமான ஆடையாக இருந்திருக்கவும் வாய்ப்புள்ளது. ஆகவே, இப்படிப்பட்ட யூகங்களுக்கும், நுணுக்கமான விளக்கங்களுக்குள்ளும் செல்வோமேயானால், பல இஸ்லாமிய அறிஞர்களைப் போன்று வாழ்நாளெல்லாம் செலவு செய்தாலும் ஒரே வரலாறு கிடைக்காது என்பதே உண்மை. ஆகவே இவ்வகையான மெல்லிய வித்தியாசங்களுக்குள் போகாமல், சாராம்சத்தை இவ்விஷயத்தில் கவனிப்போம்.

சாராம்சம் என்னவென்றால், ஜைனப்பை அவரது கணவன் வெளியே சென்றிருக்கும் போது, சரியான படி ஆடை அணியாத நிலையில் பார்த்த நபிகள் நாயகத்தின் இதயம் சஞ்சலமுற்றது என்பதே. இதையறிந்த அவரது (வளர்ப்பு) மகன், தாமே முன்வந்து மனைவியை விட்டுக் கொடுத்துவிடுகிறேன் என்று சொன்னார் என்பது. ஹதீஸ்கள் மற்றும் தஃப்ஸீர் புத்தகங்களிலேயே இச்சம்பவம் காணக்கிடைக்கிறது என்பதே. இதைத்தான் நான் குறிப்பிட்டிருந்தேன்.

சலாஹுதீன் அவர்கள் இது சம்பந்தமாக இஸ்லாமிய மார்க்க அறிஞர்களிடம் கேட்டறிந்துகொள்ள வேண்டுகிறேன். ஏனெனில், இஸ்லாமிய வரலாற்றை ஆய்ந்த மதப்பிடிப்புள்ள முஸ்லீம் அறிஞர்கள் கூட, இச்சம்பவமே குறிப்பிடப் படவில்லை என்று கூறவில்லை. தமது மதப்பிடிப்பின் காரணமாக இதை ஒரு ‘கட்டுக்கதை ‘ என்று பலரும் கூறினாலும், இச்சம்பவம் இஸ்லாமிய வரலாற்றாய்வாளர்களால் பதிவு செய்யப் பட்டுள்ளது என்பதை நேர்மையோடு ஒப்புக்கொள்கின்றனர். இவ்விஷயத்தைப் பதிவு செய்த ஆரம்பக் கால இஸ்லாமிய அறிஞர்கள் கடுமையாக சோதித்து உண்மையென்று தம்மில் தெளிந்த பின்னரே பதிவு செய்து வைத்துவிட்டுச் சென்றிருக்கும் நிலையில், இதை கட்டுக்கதை என்று சொல்லும் மெளதூதியோ மற்றவர்களோ அம்முடிவை, தம்முடைய மதநம்பிக்கையின் அடிப்படையில் மட்டுமே முன்மொழியும்போது, அதற்கு வேறு ஏதும் சான்று பகராதபோது, இதை எம்போன்றவர்களால் ஒப்புக் கொள்ள முடிவதில்லை .

சமீபத்தில் தமிழில் நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றை ‘ரஹீக் ‘ என்ற தலைப்பில் தாருல் ஹூதா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இஸ்லாமியப் பேரறிஞர் ஸஃபிய்யுர் ரஹ்மான் எழுதிய ‘அர்ரஹீக்குல் மக்தூம் ‘ என்ற உலகளாவிய போட்டியில் முதல் பரிசு பெற்ற நூலின் தமிழாக்கம் இது. அந் நூலில் ஸஃபிய்யுர் ரஹ்மான் அவர்களே, இச்சம்பவம் இஸ்லாமிய நூல்களில் குறிப்பிடப் பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்[3].

இச்சம்பவம் குறிப்பிடப்பட்டுள்ளது என்று இது போன்ற இஸ்லாமிய அறிஞர்களே தெரிவிக்கும் வேளையில், இவ்விஷயத்தில் நான் நடக்காத ஒன்றைச் சொல்கிறேன் என்று குற்றம் சாட்ட வேண்டாம் என்று சலாஹூதீனிடம் வேண்டிக் கொள்கிறேன்.

– நேச குமார் –

[1] http://www.thinnai.com/le12230412.html

http://www.thinnai.com/le1223046.html

[2] http://www.thinnai.com/le1202042.html

[3] ‘ரஹீக் ‘ – ஆசிரியர் ஸஃபிய்யுர் ரஹ்மான். பக்கம் 400.( மக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் ராபிததுல் ஆலமில் இஸ்லாமி நிறுவனம் நடத்திய உலகலாவிய போட்டியில் முதல் பரிசு பெற்ற நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்று நூல்.)

Published by :

Darul Huda,

New No.211, Lingi Chetty Street, Mannadi, Chennai -1.

http://islaam.blogdrive.com

http://islaamicinfo.blogspot.com

Series Navigation