இஸ்லாம் முன்வைக்கும் இறைவன் – ஹமீது ஜாஃபருக்கு சில கேள்விகள்

This entry is part [part not set] of 57 in the series 20050106_Issue

நேச குமார்


‘கயமை வேண்டாம் ‘ என்று டிசம்பர் 23 திண்ணையில்[01] எழுதியிருக்கும் ஹமீது ஜாஃபர் பல விஷயங்களை முன்வைத்துள்ளார். அவர் விடுத்துள்ள மிரட்டல்களை ஒதுக்கிவைத்துவிட்டு ஏனைய வாத ங்களை பார்த்தோமானால், அதன் சாராம்சம் இந்து மதத்தில் இத்தனை குறைகளிருக்கின்றன என்று பட்டியலிட்டிருப்பதாகும்.

இந்து மதத்தின் குறைகளாக தமக்குத் தெரிந்தவற்றை ஹமீது ஜாஃபர் அவர்கள் முன்வைத்திருப்பது குறித்து மகிழ்சியே. ஒரு மதத்துக்கு வெளியிலிருந்து அல்லது அம்மதத்தின் மீது தீவிர பிடிப்பு இல்லாமல் பார்க்கும்போது ஒரு நம்பிக்கையாளனுக்குத் தென்படாத பல குறைகள்,அவநம்பிக்கையாளனுக்குத் தென்படுவது இயல்பே. அம்மட்டில் ஹமீது ஜாஃபர் சிந்தனைக்குரிய பல கருத்துக்களை, தீவிர விமர்சனங்களை இந்து மத வழக்குகளின் மீது வைத்துள்ளார். இம்மாதிரியான வெளிப்படையான விமர்சனங்கள், கருத்துப் பகிர்தல்கள் மதங்களுக்கிடையேயான தவறான புரிதல்களையும், வன்முறைகளையும் களைந்து நம் அனைவரையும் மார்க்க பேதங்களின்றி அன்பு செலுத்தி, ஒருவர்க்கொருவர் உதவி வாழும் சமுதாயமாக மாற்றும் என்றே தோன்றுகிறது.

சுனாமியின் பேரழிவிற்குப் பின், மத வித்தியாசங்களைப் புறந்தள்ளி, மனித நேயத்தை மட்டுமே முன்வைக்கும் சமுதாயமாக நம் சமுதாயத்தை மாற்ற வேண்டிய அவசியத்தின் நியாயம் நம் அனைவருக்குமே புரிந்திருக்கும். வித்தியாசங்கள் வன்முறையாக உருவெடுக்காமல், விவாதங்களாகப் பரிணமிக்கும்போதுதான், நமது வேறுபாடுகளை பின்னுக்குத் தள்ளி சரியான புரிதலை அனைவர் மனதினுள்ளும் ஏற்படுத்த இயலும் என்றே எனக்குத் தோன்றுகிறது. மாறாக விவாதங்கள் சச்சரவுகளை அதிகரிக்கச் செய்துவிடும் என்று அவற்றிலிருந்து பின்வாங்கினால், என்றோ ஒருநாள் அடக்கிவைக்கப் பட்ட இவை வன்முறைகளாக வெடித்துவிட வழிவகுத்துவிடும்.

இதனாலேயே ஹமீது ஜாஃபர் விடுத்துள்ள பாசக்கயிறு விழும் என்ற மிரட்டலை புறந்தள்ளி, அவரது கருத்துக்களின் மீதான எனது சிந்தனைகளை முன்வைத்துள்ளேன். மேலும் ஒன்று, என்னிடம் உமது கூட்டத்தாரை சீர்செய்து விட்டு பின்வந்து நேசக்கரம் நீட்டுங்கள் என்று கூறும் போது, இதே தர்க்கத்தை நபிகள் நாயகமும் பின்பற்றியிருந்தால் இஸ்லாம் எனும் மார்க்கமே உலகில் தோன்றியிருக்காது என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். நபிகள் நாயகத்தின் தந்தை இறந்துவிட்ட நிலையில் அவரை தனது மகனெனக் கருதி, அவரது கருத்துக்களை முடக்க மறுத்து தமது உயிர் மூச்சு உள்ளவரை அவருக்குப் பாதுகாப்பும் அளித்த அவரது தந்தையின் சகோதரர் அபு தாலிப் அவர்களையே நபிகள் நாயகத்தினால் கடைசி வரை ‘சீர் திருத்த ‘ முடியவில்லை. தமது சொந்த கூட்டத்தாரை மாற்ற முடியவில்லை, மதீனாக்காரர்களையே மாற்ற[02] முடிந்தது முதலில். பின்பும், வாளின் துணைகொண்டே அவரால் குறைஷிகளை மனம் மாறவைக்க முடிந்தது என்பதையும் ஹமீது சற்றே எண்ணிப் பார்க்க வேண்டுகிறேன்.

இவை ஒரு புறமிருக்க, ஹமீது ஜாஃபரின் கருத்துக்களுள் என்னை மிகவும் ஆச்சர்யப்படுத்திய ஒன்று, வள்ளலார் அவர்களின் கருத்துக்களை மேற்கோள் காட்டி, அருட்பிரகாச வள்ளலாரை, ‘ மெய் நிலை கண்ட ஞானி வள்ளலார் ‘ என்றும் விளித்துள்ளதே. இஸ்லாத்தைப் பின்பற்றாத ஒருவரை ஞானி என்றும் அவர் மெய் நிலை கண்டவர் என்றும் அழைக்கும் ஹமீது ஜாஃபர், தம்மையும் அறியாமலேயே இஸ்லாமிய அடிப்படைவாதத்துக்கு சாவுமணி அடித்துள்ளார். ஏனெனில், அடிப்படை வாத இஸ்லாத்தின் மிகமுக்கியமான கூற்று, இஸ்லாத்துக்கு வெளியே இறைஞானியர் (நபிகள் நாயகத்துக்குப் பிறகு) இருக்க வாய்ப்பில்லை, மெய்நிலை காண வழியே இல்லை என்பதே. எனவே, இக்கருத்தைப் பிரதிபலித்துள்ளதற்காக ஹமீது ஜாஃபர் அவர்களுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவர் இந்து மதத்தின் மீது வைத்துள்ள குற்றச்சாட்டுகள் பலவற்றை அருட்பிரகாச வள்ளலார் அவர்களும், அவருக்கு முன்பே புத்தர் போன்ற மாஞானியரும், பல சித்தர்களும், ஞானியரும் வைத்து, அவ்வப்போது தத்தமது நோக்கில் மெய்யெனக் கண்ட கோட்பாடுகளை அன்பு வழியில் போதித்துச் சென்றிருக்கின்றார்கள் என்பதை ஹமீது ஜாஃபர் போன்றோர் அறிந்திருக்கலாம். மதக் கோட்பாடுகளை அவ்வப் போது உரைத்துப் பார்க்கும் இத்தகைய இறைஞானியரின் செய்கையே ஆன்மீக நதியை தேக்கமில்லாமல் ஓட வைத்துக் கொண்டுள்ளது, சகிப்புத் தன்மையை இந்திய மண்ணில் நிலவச் செய்துள்ளது. பல்வேறு மதங்களைச் சார்ந்தவர்களையும் இணைக்கும் ஆன்மீகப் பாலமாக இத்தகைய சுயவிமர்சனமுடைய ஞானியர் இருந்து வருகின்றனர்.

இத்தகைய ஞானியர் சிலர் இஸ்லாத்திலும் தோன்றியிருக்கின்றனர் என்பதும் உண்மையே. நபிகள் நாயகமே கூட, தொடர்ந்து தமது மார்க்கத்தில் பலவித மாற்றங்களை ஏற்படுத்தியே வந்திருக்கிறார். வரலாற்றினூடே நபியவர்களைப் பார்க்கும் போது, விஷமிட்டு அவர் கொலையுண்டிருக்காவிடில்[03], அவர் காட்டிச் சென்ற இஸ்லாத்தில் பலவித மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும், அதை அவரே செய்திருப்பார் என்றே தோன்றுகிறது.

ஆயினும் எல்லா மார்க்கங்களிலும் பின்புலமறியாது, வெறும் வார்த்தைகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு சிந்திக்காமல், மூர்க்கமாய் ஒரே விதப் பார்வையையே காலம் காலமாக கொள்ள வேண்டும் அதுவே உண்மையான மதக்கோட்பாடு என்று எண்ணுபவர்கள் தொடர்ந்து தோன்றி வந்திருக்கின்றனர். இவர்களை சாமான்ய மக்கள் எதிர்கொண்டு பின்னடைய வைப்பது சமுதாயத்தில் அன்பும், நல்லிணக்கமும், மனித நேயமும் நிலவிட வழிவகுக்கும். மற்ற மார்க்கங்கள் காட்டும் கடவுள்கள் போலியானவை, பொய்யானவை, தனது மார்க்கம் அல்லது தோற்றுவித்த மகான் காட்டிவிட்டுச் சென்ற கடவுள் மட்டுமே உண்மையானவர், அவரை எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டும், அதற்காக எவ்வித பாதகத்தையும் செய்யலாம், அப்படிச் செய்தால் கடவுள் மகிழ்வார் என்ற இத்தகைய மதவெறியர்களின் பிரச்சாரத்தையும் கண்டனம் செய்ய வேண்டும்.

இப்பிரச்சாரம் அனைத்து மதத்தினராலும் எதோவொரு காலகட்டத்தில் செய்யப் பட்டே வந்திருக்கிறது என்றாலும், இன்று இஸ்லாமிய பயங்கரவாதிகள் மட்டுமே பெரிய அளவில் தம் இறைவனை முன்வைத்து புனிதப் போரிட்டு வருகின்றனர். இந்நிலையில் ஹமீது ஜாஃபர் இந்து மதம் சம்பந்தமாக முன்வைத்திருக்கும் விமர்சனங்கள் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் ஏற்றுக் கொண்டிருக்கும் இறைவனுக்கும் பொருந்துகின்றன என்றே எனக்குத் தோன்றுகிறது. இதனடிப்படையிலேயே கீழே கண்ட கருத்துக்களை முன்வைக்க விழைகிறேன். இதன் நோக்கம் ஒரு கடவுளுடன் மற்றொரு கடவுளை ஒப்பிட்டு, ஒன்று மட்டுமே உண்மை அல்லது உயர்ந்தது என்று நிறுவுவதல்ல. மாறாக, அனைத்து இறைக் கோட்பாடுகளுமே குறைகளையும், நிறைகளையும் கொண்டவைதான் என்ற புரிதலை ஏற்படுத்துவதற்கே.

இஸ்லாம் காட்டும் இறைவன்

திருக்குரான் மற்றும் ஹதீதுகள் வழியே இஸ்லாம் காட்டும் இறைவனையும் வள்ளலார் போன்ற மெய்நிலை கண்ட ஞானிகள் காட்டும் இறைவனையும் காணும் போது இஸ்லாம் காட்டும் இறைக் கோட்பாடு வள்ளலாரின் இறைக் கோட்பாட்டுக்கு நேர்மாறாக இருப்பதாகவே தோன்றுகிறது. ஹமீது ஜாஃபர் கூறும் குற்றச் சாட்டுகள் அனைத்துமே இஸ்லாத்தின் இறைவனுக்கும் பொருந்துமென்றே தோன்றுகிறது. இந்து மதம் பற்றி இப்படிப் பட்ட விமர்சனங்கள் தொடர்ந்து பலராலும் செய்யப் பட்டு, அவை பற்றிய அநேக விவாதங்கள் நிகழ்ந்துள்ள அதே நேரத்தில், இஸ்லாத்தைப் பற்றிய விமர்சனங்களையும் முன்வைத்து, அவற்றுக்கான பதில்களை எதிர்நோக்குவதில் தவறில்லை என்றே கருதுகிறேன். இவற்றை வெறும் கேள்விகளாகவோ, காழ்ப்புணர்வில் கூறும் குற்றச்சாட்டுகளாகப் பார்க்காமல், இஸ்லாத்தின் வட்டத்திற்கு வெளியில் நின்றுகொண்டிருக்கும் ஒரு சகோதரனின் சுயசிந்தனையின் வெளிப்பாடாகவே காணவும் கோருகிறேன்.

விண்கல் (ஹஜருல் அஸ்வத்) வழிபாடு:

உலகெங்கும் உள்ள இஸ்லாமியர்கள், சவுதி அரேபியா நாட்டில் உள்ள மக்கா எனும் புனித நகரில் அமைந்துள்ள கஃபத்துல்லா எனும் சதுர வடிவிலான அல்லாஹ்வின் ஆலயத்தை நோக்கியே தொழுகின்றனர். அவ்வாலயத்தின் உள்ளே ஹஜரத்துல் அஸ்வத் எனும் புனிதவிண்கல் (divine meteorite) தென்கிழக்கு மூலையில் வைக்கப் பட்டுள்ளது[04]. முகமது நபியவர்களின் காலத்துக்கு முன்பு அரபி பாகன்களால், அல்லாஹ்வைத்தவிர அல்லாத், அல் மன்னத் போன்ற தெய்வங்கள் வழிபாட்டில் இருந்த காலத்தில் வழிபாட்டு உருவாக இந்தக் கல் இருந்திருக்கிறது. ஹஜருல் அஸ்வத் எனும் இவ்விண்கல்லைப் போன்றே சதுரமான ஒரு கல் ‘அல்லாத் ‘ எனும் பெண் தெய்வத்தைக் குறிக்கும் வழிபாட்டுப் திருவுருவாகவும் இருந்துள்ளது.

அல்லாஹ்வைத் தவிர ஏனைய கடவுள்களை வணங்கக் கூடாது என்று அறிவித்த நபிகள் நாயகம், இவ்வொரு திருவுருவைத் தவிர ஏனைய வழிபாட்டு உருக்களையெல்லாம் உடைத்துவிட்டார் என இஸ்லாமிய வரலாறு தெரிவிக்கிறது. ஹஜருல் அஸ்வத்தை மட்டுமே ஆலயத்தில் நிலவச் செய்துள்ளார். அவர் ஏழுமுறை அதை சுற்றி வந்ததைப் போலவே(தவாஃப்) இன்று ஹஜ் செய்யும் இஸ்லாமியச் சகோதரர்கள் அனைவரும் செய்கின்றனர்.

அல்லாஹ்வுக்காக மிருகங்களை பலியிடுவது(குர்பானி) :

பலியிடுவது இன்றும் இஸ்லாத்தில் அனுமதிக்கப் படுவதாகவே உள்ளது. நபிகள் நாயகம் அரசுரிமையும், செல்வங்களையும் பெற்று ஹஜ் செய்த போது 100 ஒட்டகங்களை பலியிடுவதாக அல்லாஹ்வுக்கு நேர்ந்து கொண்டு அவற்றில் 63ஐ தம் கைகளாலேயே வெட்டிப் பலி கொடுத்தார் என்று இஸ்லாமிய வரலாறு காட்டுகிறது[05].எங்கும் நிறைந்த ஏக இறைவனுக்கு சாப்பாடு போடவேண்டும் என்பது முரண்பாடாக உள்ளது.

சாத்தானை மினாவில் கல்லால் அடிப்பது :

புனித மக்காவுக்கு ஹஜ் செய்த நபிகள் நாயகம், ஒரு சில இடங்களில் நின்று சாத்தானைக் கல்லால் அடித்ததாக ஹதீதுகள் அறிவிக்கின்றன[06]. இன்றும் இஸ்லாமியர்கள் அதையே பின்பற்றுகின்றனர்.

குறிப்பிட்ட இடத்தில் இருப்பிடத்தை(கிப்லா) உடைய இறைவன்:

மிஃராஜ் எனும் விண்ணுலகப் பயணத்தை ‘புராக் ‘ எனும் கோவேறு கழுதையின்(அதைவிட சற்றே பெரிதான, குதிரையை விட சிறிய ஜீவன் என்கிறது இஸ்லாம்) மீது ஏறி காப்ரியல் துணையுடன் மேற்கொண்ட நபிகள் நாயகம், ஃபைத்துல் முகத்தஸ்(அல் அக்ஸா) மசூதிக்கு காபாவிலிருந்து சென்றடைந்து, அங்கிருந்து நேர்மேலே ஏழு வானங்களுக்கு அப்பால் உள்ள இறையில்லத்தை அடைந்தார் என்று இஸ்லாம் அறிவிக்கிறது. இந்நிகழ்வு நடந்தேறியபோது நபிகள் நாயகம் தம்மைப் பின்பற்றியவர்களை ஜெருசலேம் நகரில் உள்ள இந்த இறைவனை நோக்கி தொழச் செய்தார். யூதர்களின் இறையிடமான இப்பகுதியை நோக்கியே ஆரம்பக் கால முஸ்லீம்கள் தொழுதும் வந்தனர்.

பின் மதீனாவுக்கு நபிகள் நாயகம் இடம் பெயர்ந்து, யூதர்கள் இஸ்லாத்தை ஏளனம் செய்வதால் , ஏற்க மறுத்ததால் கோபமடைந்த காலத்தில், அல்லாஹ் கிப்லாவை கஃபத்துலாஹ்வை நோக்கி மாற்றிக் கொண்டார்[07]. எங்கும் நிறைந்த இறைவன் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே உள்ளார் என்பதும், அவர் தனது இருப்பிடத்தை மாற்றிக் கொள்வதும்,எந்த வணக்க வழிபாட்டு முறைகளையே பின்பற்றி இருக்கிறது ?

வர்ணாசிரமத்தை வலியுறுத்தும் இறைவன்:

இந்து மதத்தில் மனிதர்களை நான்கு வர்ணங்களாகப் பிரித்து எம்போன்றவர்களை சூத்திரர்கள் என்று கடவுளின் பெயரால் இழிவு படுத்தியதைப் போன்றே, மனிதர்களை மூன்று வர்ணங்களாகப் பிரித்து, அதில் மூஃமீன்கள் எனப்படும் முகமது நபியவர்களை நபியென நம்புவோர்களுக்கு மட்டுமே உலகில் உன்னத இடம் கொடுத்து, காஃபிர்கள் எனும் நபிகள் நாயகத்தை ஏற்றுக் கொள்ளாதோரை அழிக்க வேண்டும் என்றும், திம்மிக்கள் எனும் வேதமுடையவர்களை(கிறிஸ்துவர்கள், யூதர்கள் போன்றோர்) இழிவு படுத்தி, இரண்டாம் தரக்குடிமக்களாக நடத்தவேண்டும் என்றும் அல்லாஹ் தமது திருக்குரான் கட்டளைகளில் அறிவிக்கிறார். இதுவும் உருவ வழிபாட்டின் கூறாகவே தென்படுகிறது. எம்மை சூத்திரன் என்று இழிவு படுத்திய இறைக் கொள்கை குறைபாடுடையதாகத் தோன்றுவது போன்றே, எம்மை காஃபிர், திம்மி என்று இழிவு படுத்தும் இறைக் கொட்பாடும் குறைபாடுள்ள, கொடூரமான அரபு வர்ணாசிரமாகவே காட்சியளிக்கிறது.

எல்லாம் வல்ல, கருணையுள்ள இறைவன் தாம் அனுப்பிய தூதரை நம்புபவர்களைத் தவிர மற்ற எல்லோரையும் காஃபிர் என்று புறம் தள்ளுவான் அல்லது திம்மிக்கள் என்று பிரித்துவைத்து கொஞ்சம் வாழ்வுரிமை மட்டுமே அளிப்பான் என்பது போன்ற கருத்துக்கள் கருணையுள்ள இறைவன் என்ற கூற்றுக்கு முரணாகவே தென்படுகிறது.

இறைக் கொள்ளையை(கனீமாஹ்) நியாயப் படுத்தும் இறைவன்:

அல்லாஹ் தம் அடியார்களுக்கு மாற்று மதத்தவர்களின் உடமைகளை பறித்துக் கொள்வதைப் பரித்துரைக்கிறார். திருக்குரானின் மூலமாக, அப்படி மற்ற மதத்தவரிடமிருந்து கொள்ளையடிக்கப் படும் பொருட்கள் புனிதமானவை என்கிறார்[08]. மற்ற கடவுள்களை வழிபடுபவர்களின் பெண்களும், குழந்தைகளும் கனீமாவாகக் கருதப் படுகின்றனர்(litimate, divine booty).

அனைவர்க்குமான ஒரு இறைவன் எப்படி இப்படிப்பட்ட ஒரு செயலைச் செய்யத் தூண்டமுடியும் என்று புரியவில்லை.

மாற்று மதப் பெண்டிரை விபச்சாரிகள் என்று திட்டும் இறைவன் :

ஆயிஷாவின் மீது அவதூறுகள் பரப்பப் பட்ட போது, முதலில் அமைதி காத்த அல்லாஹ், பின்பு மாற்று மதப் பெண்கள் மட்டுமே விபச்சாரிகளாக இருக்க முடியும் என்று ஆவேசமாக வஹி மூலம் நபிகள் நாயகத்துக்கு அறிவித்தார்[09]. இப்படி வேற்று மதத்தைச் சார்ந்தவர்களை திட்டும் கடவுள் நிச்சயமாக வள்ளலார் கண்ட அருட்பெருஞ்சோதியாக இருக்க முடியாது என்றே தோன்றுகிறது.

இறை ஆவேசம் மூலம் பேசும் இறைவன்:

கிராம தெய்வங்கள் பூசாரியின் மீது ஆவேசம் வந்து குறி சொல்வது, நேர்த்திக் கடன் செய்யச் சொல்வது போலவே , அல்லாஹ் எனும் கஃபாவின் கடவுள் முகமது நபியவர்கள் மேல் வந்து அடிக்கடி கட்டளைகளைப் பிறப்பித்துள்ளார். இன்றைய திருக்குரான் எனும் இஸ்லாமிய இறைமறை இத்தகைய கட்டளைகளை பிற்காலத்தில்(நபிகளாரின் மறைவுக்குப் பின்னர்) ஒன்று திரட்டி ஒரு புத்தகமாக்கிய வடிவமே. இத்தகைய இறை ஆவேசம் வரும்போதெல்லாம் நபிகள் நாயகத்துக்கு வேர்த்துக் கொட்டும், அவரது பாவம் மாறும், அவரது உடல் கனமாகிவிடும், ஆவேசம் அடங்கியபின் அவருக்கு தமக்கு நிகழ்ந்தது எதுவுமே நினைவில் இருக்காது என்றெல்லாம் ஹதீதுகள் அறிவிக்கின்றன[10]. இம்மாதிரியான இறை ஆவேசம் தொடர்ந்து பலருக்கும் நிகழ்ந்திருக்கிறது. செங்கிஸ் கானுக்கும் ஏற்பட்டிருக்கிறது.நாகூர் ஆண்டவருக்கு இது மாதிரி வஹி வந்த பொது, அவர் நின்றிருந்த இடத்தில் பள்ளமே விழுந்து விட்டதாம்[11].

இவ்வாவேசங்களை அவற்றின் வெளிப்பாடுகளைப் பார்க்கும் போது, உயர் தெய்வக் கோட்பாடுகளின் அகமுக தரிசனங்களை தெரிவிப்பதாகத் தோன்றவில்லை.

தாம் சொல்லியதை நீக்கும் இறைவன்:

திருக்குரானை அல்லாஹ் அருளும் போது, பல சமயங்களில் தாம் ஏற்கெனவே தெரிவித்தவற்றை மாற்றி விடுகிறார். இத்தகையான திருக்குரான் வசனங்கள் அல்-நசிக் ஆகும். இவை சாத்தானின் தூண்டுதலால் ஏற்பட்டவை எனவும் நம்பப் படுகின்றன[12]. இவற்றைப் பார்க்கும் போது அருட்பிரகாச வள்ளலார் அவர்கள் எல்லா மத நூல்களிலும் பிழைகள் மலிந்துள்ளன என்றும், அதற்குக் காரணம் அவற்றை இயற்றியவர்கள் மாயையின் சம்பந்தத்தை அடைந்திருக்கிறார்கள் என்று சொன்னதும் நினைவுக்கு வருகிறது. ஆகவே, வள்ளலார் அவர்கள் தெரிவித்திருக்கும் கருத்தின் அடிப்படையில் பார்க்கும் போது இஸ்லாமும் மற்ற மதங்களைப் போலவே நிறை-குறை இரண்டும் நிறைந்த ஒரு மார்க்கமே என்ற கருத்தே மேலோங்குகிறது.

கொலை செய்யத் தூண்டும் இறைவன்:

அரபி பாகன்கள் புனிதமெனக் கருதும் மாதங்கள் முடிந்தவுடன், அவர்களையெல்லாம் காணுமிடத்திலெல்லாம் கொலை செய்யக் கட்டளையிடுகிறார் இறைவன்[13] , தமது புனித நூலான திருக்குரானில்.

நம்பாதவர்களை நரகத்தீயில் தள்ளும் இறைவன்

முகமது நபியவர்கள், இறைவனின் தூதர் என்பதை நம்பாதவர்கள், நபிகள் நாயகத்துக்கு முழுமையாக கீழ்ப்படிந்து நடக்காதவர்கள் நரகத்தீயில் தள்ளப் படுவர் என்று அல்லாஹ் அறிவிக்கிறார். நபிகள் நாயகத்தை தம் கடைசி மூச்சிருக்கும் வரை பாதுகாத்து ஆனால் அவர் ஒரு நபி என்பதை நம்ப மறுத்த அவரது பெரிய தந்தை அபூ தாலிப் கூட நரகத்தில் தான் தள்ளப்பட்டார் என்று நபிகள் நாயகம் தமது ஆதரவாளர்களிடம் அறிவித்துள்ளார்[02].

இப்படிப் பட்ட திருக்குரான் வசனங்களைப் படிக்கும் போது, கருணையுள்ள கடவுள் இப்படியான கட்டளைகளை பிறப்பிப்பாரா என்ற கேள்வி எம்போன்றோரின் மனதில் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை.

ஒட்டு மொத்தமாகப் பார்க்கையில், பரந்து பட்ட ஏக இறைவனையோ, கருணையுள்ள ஓர் உயர் தெய்வக் கோட்பாட்டையோ நடைமுறையில் காண இயலவில்லை. வள்ளலார் குறிப்பிட்டதைப் போன்று, ‘சர்வ சித்தியுடைய கடவுள் ‘ கோட்பாடாக இது தென்படவில்லை.

– நேச குமார் –

[01] – http://www.thinnai.com/le12230410.html

[02] ‘ஒரு முறை நபி(ஸல்) அவர்களிடம் ‘நீங்கள் உங்களது பெரிய தந்தை அபூதாலிபிற்கு என்ன பயனளிப்பீர்கள். அவர் உங்களைப் பாதுகாத்தார். உங்களுக்காகக் கோபம் கொண்டார் ‘ என்று அப்பாஸ்(ரழி) கேட்டபோது, ‘ அவர் நரகத்தில் குறைந்த ஆழமுள்ள பகுதியில் இருப்பார். நான் இல்லை என்றால் நரகத்தின் அடித்தளத்தில் சென்றிருப்பார் ‘ என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். – புகாரி.(பக்கம் 152 – ரஹீக் நபிகளாரின் ஆதாரபூர்வ வாழ்க்கை வரலாறு எழுதும் போட்டியில் முதல் பரிசு பெற்ற நூல் இது)

[03] ‘ஆயிஷாவே! கைபர் தினத்தில் நான் உண்ட உணவின் வேதனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். இந்த நேரத்தில் அந்த விஷத்தினால் எனது நரம்புகள் துண்டாவதை நான் உணர்கிறேன் ‘ என்று நபி(ஸல்) கூறினார்கள். – புகாரி( பக்கம் 571 – ஸஃபிய்யுர் ரஹ்மான் எழுதிய ‘ரஹீக் ‘.)

[04] ‘கஃபாவின் ஒரு மூலையில் ‘ஹஜருல் அஸ்வத் ‘ எனும் கறுப்புக்கல் பதிக்கப் பட்டுள்ளது. தவாஃப் செய்யும்போது ஹஜருல் அஸ்வத் அமைந்துள்ள மூலையிலிருந்து துவக்க வேண்டும். நபி(ஸல்) அவர்கள் ஹஜருல் அஸ்வத்திலிருந்து ஹஜருல் அஸ்வத் வரை மூன்று சுற்றுக்கள் ஓடியும் நான்கு சுற்றுக்கள் நடந்தும் தவாஃப் செய்தார்கள். அறிவிப்பவர் ஜாபிர்(ரலி). நூல்கள்: முஸ்லீம், திர்மிதி. ‘

‘நபி(ஸல்) அவர்கள் அதை(ஹஜரதுல் அஸ்வத்)த் தொட்டு முத்தமிட்டதை நான் பார்த்துள்ளேன். அறிவிப்பவர் : இப்னு உமர்(ரலி). நூல்: புகாரி ‘

(பக்கம் 27 – P.ஜைனுல் ஆபிதீன் எழுதிய நபி வழியில் நம் ஹஜ்)

[05] பக்கங்கள் 561-562 : ஸஃபிய்யுர் ரஹ்மானின் ‘ரஹீக் ‘.

[06] ‘நபி(ஸல்) அவர்கள் மினாவுக்கு வந்து ஜம்ரதுல் அகபாவில் கல்லெறிந்தார்கள். அறிவிப்பாளர் : அனஸ்(ரலி). நூல்கள்: முஸ்லீம், அஹ்மத், அபூதாவுத். ‘ (பக்கம் 42 – P.ஜைனுல் ஆபிதீன் எழுதிய நபி வழியில் நம் ஹஜ்).

[07] – திருக்குரான் 2:142,143

[08] – திருக்குரான் அத்தியாயம் 48 (அல் ஃபாத்-வெற்றி).

[09] – திருக்குரான் 24:02

[10] – ‘நபி(ஸல்) அவர்களை வானவர் தம்முடன் இணைத்துக் கொள்வார்.கடுங்குளிரிலும் நபி(ஸல்) அவர்களுக்கு வியர்வை பெருக்கெடுத்து ஓடும். ‘ (பக்கம் 94 – ரஹீக்).

[11] – ‘மெளனமாய் மென்று கொண்டிருந்த நாகூர் வள்ளலின் புனித நிலையில் நேரம் செல்லச் செல்ல மாறுதல்கள் தோன்றத்தலைப்பட்டன. கண்கள் செக்கச் சிவந்துவிட்டன. வேர்வை ஆறாய்ப் பெருகிற்று. உடம்பு முறுக்கிக் கொண்டு திணறிற்று. சட்டென்று தம் திருக்கரங்களைப் பின்னால் ஊன்றிக் கொண்டார்கள். உடலிலே தோன்றிய கனத்தைத் தாளமுடியாது கரங்கள் நொடிந்தன. தரையில் சிறு பள்ளமே உண்டாகிவிட்டது ‘ (பக்கம் 75 . எஸ்.எஸ்.அலி எழுதிய ‘ஞானப் பேரொளி நாகூர் வள்ளல் ‘).

[12] – திருக்குரான் 2:105

[13] – திருக்குரான் 9:4

http://islaam.blogdrive.com

http://islaamicinfo.blogspot.com

(சில நீக்கங்கள் செய்யப்பட்டுள்ளன : திண்ணை குழு)

Series Navigation

நேச குமார்

நேச குமார்