ஜோதிர்லதா கிரிஜா: தியாகு: ஜெயேந்திரர்: ஆதி சங்கரர்

This entry is part [part not set] of 52 in the series 20041216_Issue

சோதிப் பிரகாசம்


திண்ணையின் ஆசிரியருக்கு, வணக்கம்!

சாதி இழிவுகளைக் கற்பித்துக் கொண்டும் தீண்டாமைக் கொடுமைகளைக் கடை பிடித்துக் கொண்டும் பெண்களின் அடிமைப் பாட்டினைப் பறை சாற்றிக் கொண்டும் வந்து இருக்கின்ற சங்கர மடத்திற்கு எதிராக ஜோதிர்லதா கிரிஜா வெளிப் படுத்தி இருக்கின்ற சாடல்கள் அவரது மனித நேயத்தின் இயல்பான எழுச்சியாகத் தோன்றுகின்றன.

அதே நேரத்தில், ஒரே ஒரு சாதிக் காரர்களுக்கு மட்டுமான ஒரு மடமாகச் சங்கர மடம் செயல் பட்டுக் கொண்டு வந்து இருக்கிறதே, எப்படி ? இந்து மதத்தின் வளர்ச்சிக்கு எந்த வகையில் உறு துணையாக இது இருந்திட முடியும் ? என்பவைதாம் அடிப்படையான கேள்விகள் என்பதையும் ஜோதிர்லதா கிரிஜா மறுத்திட மாட்டார் எனலாம்.

இது குறித்தும் அவரது கருத்துகளை நம்பிக்கையுடன் நாம் எதிர் பார்க்கலாம் என்றே தோன்றுகிறது.

‘ஹிந்து ‘ மதம் என்று இந்து மதத்தைக் குறிப்பிடுவதற்கும் ‘இந்து ‘ மதம் என்று அதனைக் குறிப்பிடுவதற்கும் இடையே அடங்கிக் கிடக்கின்ற வேறுபாடுகள் கொஞ்சம்-நஞ்சம் அல்ல! ஒரு சாதியின் தலைமையிலான மதமாக ‘ஹிந்து ‘ மதமும் அனைவருக்கும் உரிய ஒரு மதமாக ‘இந்து ‘ மதமும் கருதப் பட்டு வந்து இருக்கின்றன என்பதுதான் இதன் உட்பொதிவும் ஆகும்.

இது குறித்தும் எழுதி நமக்கு ஜோதிர்லதா கிரிஜா உதவிடலாம்.

தியாகு

காஞ்சி மடம், குடந்தை மடம், எனவும் மூல மடங்கள் நான்கு எனவும் சங்கர மடத்தின் வரலாற்றினை மிகவும் தெளிவாக எழுதிப் பல புதிய செய்திகளைச் சுருக்கமாக நமக்குத் தந்து இருக்கிறார் தியாகு! அவருக்கு நன்றி!

இது போல, சங்கர மடத்தின் அமைப்பு விதிகளையும் அதனை இயக்குகின்ற பிற அறக் கட்டளைகளின் விதிகளையும் பற்றி அவர் எழுதிட வேண்டும் என்று அவரை நாம் கேட்டுக் கொள்ளலாம்.

ஒரே ஒரு சாதியைச் சேர்ந்தவர் மட்டும்தான் சங்கர மடத்தின் பீடத்தில் அமர்ந்திட நேர்ந்து இருந்தது எப்படி ? என்பதுதான் முக்கியமான கேள்வி என்பதைத் தியாகு அறியாதவர் அல்லர்!

இந்த வகையில், மறுப்பு வாதத்தைக் கடந்து வந்து இருக்கின்ற ஒரு மார்க்சிய வாதியான தியாகுவிடம் இருந்து நிறையவே நாம் எதிர் பார்க்கிறோம். கார்ல் மார்க்சினது ‘முதலின் ‘ மூன்று தொகுதிகளையும் தமிழாக்கம் செய்து இருப்பவர் தியாகு என்பது ஈண்டு குறிப்பிடத் தக்கது!

ஜெயேந்திரர்

குற்றம் சாட்டப் பட்டுக் கூண்டில் நிறுத்தப் பட்டு இருக்கிறார் ஜெயேந்திரர்! குற்றம் சாட்டப் படுவதனால் மட்டும் யாரையும் ஒரு குற்ற வாளியாக நாம் கருதி விட முடியாது; யாருக்கும் தெரியாத ஒரு கரசியமும் இது வல்ல!

எனினும், ஒரு குற்ற வாளியைப் போல ஜெயேந்திரரைச் சித்தரித்து அவர் மேல் தீர்ப்புக் கூறிக் கொண்டு வருகின்றன நம் நாட்டுப் பத்தரிகைகள்!

கொஞ்ச நாட்களுக்கு முன்னர் ஜெய லட்சுமி; பின்னர் வீரப்பன்; இப் பொழுது ஜெயேந்திரர்; என்று பர-பரப்புகளை ஊட்டுவதுதான் பத்தரிகைகளின் பணி போலும்!

சிற்றுடைமைப் பண்பாடு ஆதிக்கம் செலுத்திக் கொண்டு வருகின்ற இந்த நாட்டு மக்களுக்கு வதந்திகள் இல்லாமல் வாழ்க்கையே இல்லை என்றும் நாம் சொல்லி விடலாம்!

ஆனால், ஜெயேந்திரர் ஒரு குடி மகன்; அவருக்கும் தனி மனித உரிமைகள் உண்டு!

என்னவாகத் தம்மை அவர் கருதிக் கொண்டு வந்து இருக்கிறார் ? எப்படிப் பட்டவராக அவரை மக்கள் பார்த்துக் கொண்டு வந்து இருக்கிறார்கள் ? என்பவை எல்லாம் சட்டத்திற்கு முக்கியம் அல்ல!

அவர் குற்ற வாளியா ? இல்லையா ? என்பதை நீதி மன்றமே தீர்மானித்துக் கொள்ளட்டுமே!

மாட்டிக் கொண்டால் மட்டும்தான் அரசியல் காரர்களின் ஊழல்களைப் பற்றிப் பத்தரிகைகள் பேசுகின்றன. மாட்டிக் கொள்ளாத வரை உத்தமர்களாக அவர்களைச் சித்தரிப்பதற்கும் பத்தரிகைகள் தவறுவது இல்லை.

இவர்களுக்கு ஊழல் முக்கியம் இல்லை; ஊழல் காரர்களும் முக்கியம் இல்லை; அவர்கள் மாட்டிக் கொள்கின்ற கதைகள் மட்டும்தான் முக்கியம்!

சமுதாயத்திற்குத் துறவிகள் தேவைப் படுவது வரை துறவிகளின் அந்தப் புரங்களும் நீடித்துக் கொண்டுதான் இருக்கும்!

ஆதி சங்கரர்

நான்கு வேதங்களுக்கும் ஏற்ப நான்கு மடங்களை மட்டும்தான் ஆதி சங்கரர் நிறுவி இருந்தார் என்று வழங்கிக் கொண்டு வருகின்ற ஒரு கருத்தினைத் தியாகு சுட்டிக் காட்டி இருக்கிறார்.

ஆனால், மடத் தலைவர்கள் இடையே நிலவிக் கொண்டு வந்து இருக்கின்ற இந்த நம்பிக்கைக்கு எந்த ஆதாரமும் இருப்பதாக நமக்குத் தெரிய வில்லை; நான்கிற்கு மேற்பட்ட மடங்களை நிறுவி விடுவதால், வேதங்களுக்கு எந்தக் கெடுதலும் ஏற்பட்டு விடப் போவதும் இல்லை.

ஆதி சங்கரரைப் பொறுத்த வரை, ‘மாதவீய சங்கர விஜயம் ‘ என்னும் நூலின் மூலமாகத்தான் அவரது வரலாறு நமக்குத் தெரிய வந்து இருக்கிறது என்று டி.எம்.பி. மகா தேவன் கூறுகிறார். (பார்க்க: சங்கரர் (1968), பக்.11.) கி.பி. 876 வாக்கில் வாழ்ந்து கொண்டு வந்து இருந்தவர் என்றும் ஆதி சங்கரரின் காலத்தை அவர் குறிப்பிடுகிறார்.

தமது ஒன்றாவது வயதில் மலையாள மொழியை ஆதி சங்கரர் கற்றார் என்று ‘மாதவீய சங்கர விஜயம் ‘ குறிப்பிடுவதால், கி.பி. 12-ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர்தான் அந் நூல் எழுதப் பட்டு இருக்க வேண்டும் என்று நாம் எடுத்துக் கொள்ளலாம்.

ஏனென்றால், ஆதி சங்கரரின் காலத்தில் காலடியில் வழங்கிக் கொண்டு வந்து இருந்தது தமிழ் மொழிதான் என்பதில் ஐயம் இல்லை. எனவே, ஆதி சங்கரரின் பிறப்புப் பற்றிய அனைத்துக் கதைகளையும் நாம் புறந் தள்ளியும் விடலாம்.

பார்ப்பனச் சாதியைச் சேர்ந்தவர் என்று தொல் காப்பியரைப் பற்றிக் கூறப் பட்டு வந்து இருப்பது போன்ற ஒரு கதைதான், ஆதி சங்கரரைப் பார்ப்பனச் சாதிக் காரர் என்று கூறுகின்ற கதையும் ஆகும்.

எப்படியும், ஒரு சாதிக் காரராகத் தம்மை ஆதி சங்கரர் கருதிக் கொண்டு இருந்ததற்கு அவரது சிந்தனையில் எந்த வாய்ப்பும் இல்லை; ‘வேதங்களை ‘ முக்கியமாக அவர் கருதியதும் இல்லை.

ஏனென்றால், முக்கியமாக அவர் கருதி இருந்தது ‘வேதாந்தங்களை ‘த்தாம், அதாவது, உப நிஷத்துகளைத்தாம்! இவற்றையும் விட முக்கியமாக அவர் கருதி இருந்ததோ ‘காரண முறையான அறிவினை ‘! தமது :ப்ரஹ்மச் சூத்திர உரையின் தொடக்கத்திலேயே இதனை அவர் தெளிவு படுத்தியும் விடுகிறார்.

‘ ‘இது வல்ல! ‘, ‘இது வல்ல! ‘, என்றுதான் பரம் பொருளை மறை நூல்கள் சித்தரிக்கின்றன. இந்த வகையில், ‘பரம் பொருள் ‘ பற்றிய நமது அறியாமையை அவை அகற்றி விடுகின்றன. ‘இதுதான் அது! ‘, ‘இதுதான் அது ‘!, என்று எங்கும் நேர்முறையாகப் பரம் பொருள் சித்தரிக்கப் பட்டு இருக்க வில்லை. ‘

என்பதுதான் ஆதி சங்கரரின் கருத்து.

பின்னர், ‘மத முறையான கடமை ‘ என்பது வேறு; பரம் பொருள் பற்றிய ‘ஆய்வு ‘ என்பது வேறு! என்று கூறுகின்ற ஆதி சங்கரர், மறை நூல்களின் மீது உள்ள நம்பிக்கையுடன், ‘காரண முறையான சிந்தனை ‘க்கும் வேதாந்தத்தில் இடம் உண்டு என்று கூறி முடிக்கிறார்.

வேதாந்தத்தைப் பற்றி இங்கு அவர் குறிப்பிடுவது கூட, அந்தக் காலத்து ஆதிக்கச் சிந்தனைகளை ஒட்டி நின்று அவற்றை வெட்டி எறிந்து விடுகின்ற ஒரு உத்திதான் என்றால் அது பிழை ஆகாது.

ஆதி சங்கரருக்கும் சங்கர மடங்கள் நிறுவப் பட்டதற்கும் இடையே உறுதியான ஒரு தொடர்பு இருந்து இருப்பதற்கு எந்த வாய்ப்பும் இல்லை என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.

எப்படியும், சாதி-மதப் பிடிப்புகளுக்கு அப்பால் ஆய்ந்திடப் பட வேண்டியவர் ஆதி சங்கரர் என்பது மட்டும் உறுதி!

அன்புடன்,

சோதிப் பிரகாசம்

11-12-2004

sothipiragasam@yahoo.co.in

Series Navigation

சோதிப் பிரகாசம்

சோதிப் பிரகாசம்