கடிதம் டிசம்பர் 9,2004

This entry is part of 57 in the series 20041209_Issue

பாவண்ணன்


அன்புள்ள ஆசிரியருக்கு,

வணக்கம். கடந்த இரண்டு மாதங்களாக எதிர்பாராமல் குவிந்துவிட்ட கடுமையான அலுவலக வேலை நெருக்கடிகளால் இணையதளங்களின் பக்கமே செல்லவியலாத நிலையில் இருந்தேன். களைப்பில் விடுப்பெடுக்கவேண்டிய அளவுக்கு வேலைகள். தவறவிட்ட எல்லா இதழ்களின் கட்டுரைகளையும் மற்ற படைப்புகளையும் படித்துக்கொண்டிருக்கிறேன். அறிவியல் புனைகதை வரிசையில் ஜெயமோகன் புதிதாக எழுதியுள்ள சிறுகதைகளை மிகவும் விரும்பிப் படித்தேன். கண்பிசவும் கைபிசகவுமே பெரிதும் வாய்ப்புள்ள மிகச்சிறிய ஒரு புள்ளியிலிருந்து கதையின் மையத்தை அவர் கண்டடைவதும் பிறகு அதை மெல்லமெல்ல வளர்த்தெடுப்பதும் அதற்கப்புறம் ஒரு சூத்திரப்பாவையை ஆட்டிவைக்கும் திறமையுடன் தன் பார்வைக்குத் தோதாக வளைப்பதும் மிகச்சிறந்த கலையாக அவருக்குக் கைவந்துள்ளது. எல்லாக் கதைகளுமே படிக்க மகிழ்ச்சியாக இருந்தன. அவருக்கு என் வாழ்த்துகள். பி.கே.சிவக்குமாரின் கட்டுரைவரிசையும் படிக்க ஆர்வமூட்டுவதாக இருந்தது. குறிப்பிட்டுச் சொல்லப்படவேண்டிய இன்னொரு அம்சம் இரா.முருகன் மொழிபெயர்த்தளித்திருக்கும் கொட்லேகர் கவிதைகள். தினசரிக் காட்சிகள் சார்ந்தும் சாதாரண மானுடர்களின் செயல்பாடுகள்சார்ந்தும் வாழ்வின் சாரமான புள்ளியைநோக்கி மீண்டும்மீண்டும் குவியும் அவர் கவி தை வரிகள் நல்ல அனுபவத்தைக் கொடுக்கின்றன. இரா.முருகனுக்குத் தமிழ்க்கவிதை உலகம் கடமைப்பட்டுள்ளது. அவருக்கும் என் வாழ்த்துகள்

அன்புடன்

பாவண்ணன்

04.12.04

பெங்களூர்

Series Navigation