நபிகள் நாயகத்தின் வாழ்வு – அன்னை ஜைனப்பின் மணம் – இறுதி நபி : சில விளக்கங்கள்

This entry is part [part not set] of 52 in the series 20041216_Issue

நேச குமார்


கடந்த டிசம்பர் 2 திண்ணையில் வெளியாயிருந்த நபிகள் நாயகத்தின் வாழ்வு – அன்னை ஜைனப்பின் திருமணம் பற்றிய கட்டுரையைத் தொடர்ந்து , சில கேள்விகளை சிலர் மடல்கள் மூலமாகவும் வலைப்பதிவுகளிலும் கேட்டுள்ளனர். அதில், இதன் நோக்கம் என்ன,இஸ்லாத்தைத் தாக்குவதுதான் உங்கள் நோக்கமா என்றெல்லாம் கேட்டுள்ளனர். இதற்கு விளக்கமளிக்கக் கடமைப்பட்டுள்ளேன்.

முதலாவதாக, பர்தா பற்றிய எனது கட்டுரையில்(நவம்பர் 12), இஸ்லாத்தில் பர்தா உருவானதன் பின்னனியை விளக்கும் போது, அது நபிகள் நாயகம் அவர்களின் மனைவியர் விஷயத்தில் ஏற்பட்ட சில சம்பவங்களின் அடிப்படையில் ஏற்பட்டது என்ற எனது கருத்தைத் தெரிவித்திருந்தேன். அப்போது அதில், நபிகள் நாயகம் தனது வளர்ப்பு மகனின் மனைவியான ஜைனப்பை மணந்து கொண்டபோது எழுந்த பிரச்சினைகள், அது தொடர்பாக அல்லாஹ்விடமிருந்து , வஹி எனப்படும் இறை ஆவேசம் மூலம் நபிகள் நாயகத்திற்கு வந்திறங்கிய அல்லாஹ்வின் கட்டளைகள் ஆகியவற்றைப் பற்றியும் குறிப்பிட்டிருந்தேன். அவ்வாறு குறிப்பிடும் போது மிகவும் கண்ணியத்துடனேயே எழுதியிருந்தேன். அப்பிரச்சினையை ஒரு முஸ்லீமின் பார்வையிலேயே பார்த்து, அதை ‘அவதூறுப் பிரச்சாரம் ‘ என்றே எழுதியும் இருந்தேன்.[ 01 ]

ஆனால், நான் குறிப்பிட்டதே தவறு, கண்ணியக் குறைவு என்றாற்போல் சலாஹுதீன் என்பவர் எழுதியிருந்தார். மேலும் அன்னை ஜைனப் பற்றிய விவரத்தை நீங்கள் எந்த ஆதாரத்தின் அடிப்படையில் எழுதினீர்கள் என்று தெரிவிக்க முடியுமா என்று என்னிடம் ஒரு கேள்வியையும் அவரது திண்ணைக் கடிதத்தில்(நவம்பர் 18 ) முன்வைத்திருந்தார். அக்கடிதத்தில், நபிகளாரின் மனைவிகள் இஸ்லாமியர்களுக்கு அன்னையர் என்றும் தெரிவித்திருந்தார்[02].

அவர் இம்மாதிரி கேட்டவுடன் தான், நபிகள் நாயகம் அவர்கள் ஜைனப்பை மணந்து கொண்டது குறித்து ஆரம்பக் கால இஸ்லாமிய ஆவணங்களிலேயே குறிப்பிட்டுள்ள விஷயங்களை கவனத்துக்குக் கொண்டு வந்தேன்[03]. நான் குறிப்பிட்டுள்ளவை அனைத்தும் இஸ்லாத்தை மிகவும் சிரத்தையாக பின்பற்றி, இச்சம்பவங்களை ஆய்ந்து, உண்மையென்று தம்நோக்கில் தெளிந்தவர்கள் பதிந்து வைத்துள்ளவைதாம். எதுவும், இஸ்லாத்தின் விரோதிகள் எழுதிவைத்து விட்டுச் சென்றிருப்பவை அல்ல. நபிகள் நாயகம், மானுடத் தன்மையுடன் வாழ்ந்தமைக்கு எடுத்துக் காட்டாகவே, அவர் ஜைனப்பை மணந்து கொண்டபோது அல்லாஹ்வினால் அருளப் பட்ட பர்தா பற்றிய வசனங்கள் இறங்கிய பின்னரும் ஏனைய பெண்கள் அதைக் கடைப்பிடிக்கவில்லை என்பதை எடுத்துக் காட்டவுமே ஷாஹி முஸ்லீம் ஹதீஸில் காணப் படும் சம்பவமான அவர் வெளியில் சென்றிருந்த போது ஒரு பெண்ணைப் பார்த்து விட்டு உணர்ச்சி வயப்பட்டு, வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த ஜைனப்போடு உறவு வைத்துக் கொண்டார் என்பதை குறிப்பிட்டேன். நான் இதைக் குறிப்பிட்டது கண்ணியமற்ற தன்மை என்றால், அப்படிப் பட்ட ஹதீதுகள் காலம் காலமாக முஸ்லீம்களினால் உலகெங்கும் படிக்கப் பட்டு வருகின்றன என்பதையும், அவற்றை பதிவு செய்த மார்க்க அறிஞரின் மதப் பற்றி எந்த முஸ்லீம் இத்தனை நூற்றாண்டுகளாக சந்தேகிக்க வில்லை என்பதையும் இஸ்லாமிய சகோதரர்களின் கவனத்துக்கு கொண்டு வர விழைகிறேன்.

ஆகவே, இத்தகைய எழுத்துக்களுக்கு எவ்வித உள்நோக்கமும் கற்பிக்காமல், விவாதத்தைத் தொடர்வோம் என்பதே எனது வேண்டுகோள்.

*-*-*

இறுதி நபி

பா.சோதிப்ரகாசம் இறுதி நபி குறித்து நிறைய சொல்லியிருக்கிறார்[04]. அதில் காணப்படும் இறைத் தத்துவ விளக்கங்கள் என் புரிதலுக்கு அப்பாற்பட்டவையாகவே இருக்கின்றன. நான் புரிந்து கொண்ட வகையில் அதன் சாராம்சம், அவதாரங்கள், நபிகள் ஆகியோரின் டைம் முடிந்து விட்டது, இனிமேல் யாரும் வரமாட்டார்கள், எனவே இஸ்லாமியர்களின் இறுதி நபி நம்பிக்கை சரியே என்பதே என்பது என நினைக்கிறேன்.

எனது எழுத்துக்களை மீண்டும் கவனிக்க வேண்டுகிறேன். எந்த ஒரு நம்பிக்கையையும் தம்முள்ளத்தே கொண்டிருப்பதற்கும், பின்பற்றுவதற்கும், அதை மற்றவர்கள் மீது திணிப்பதற்கும் நிறையவே வித்தியாசம் இருக்கிறது. ஒரு விஷயத்தை நம்புவதற்கு நம் எல்லோர்க்கும் முழு உரிமை உள்ளது. பின்பற்றும் போது யாருக்கும் தொந்தரவு இல்லாமல் நம் நம்பிக்கைகளைப் பின்பற்றுவதற்கும் உரிமை இருக்கிறது. ஆனால், எவ்வித மத நம்பிக்கையையும் மற்றவர்கள் மீது திணிப்பதற்கு யாருக்கும் உரிமை கிடையாது, அதனால் விளைவது வன்முறையும், அழிவுமே. இதைத்தான் நான் அங்கே குறிப்பிட்டிருந்தேன். நான் சொல்லவந்ததை சரியாக விளக்காததாலேயே இதை சோதிப்பிரகாசம் தவறு என்று சொல்லியிருக்கிறார் என்று நினைக்கிறேன்.

இறுதி நபி நம்பிக்கையை வலுக்கட்டாயமாக திணிப்பதால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சோதிப்பிரகாசம் அறிந்திருக்க வாய்ப்பில்லை. உதாரணமாக, அகமதி முஸ்லீம்களின் நம்பிக்கை,ஹஜ்ரத் மிர்ஜா குலாம் முகம்மது அவர்கள் ஒரு இறைத் தூதர் என்பது. முகமது நபிகள் தாம் இறுதித் தூதர் என்ற நம்பிக்கையை ஏனைய முஸ்லீம்கள் அவர்கள் மீது திணித்ததன் காரணமாக அச்சமூகம் சொல்லொண்ணா துயரத்தை பாகிஸ்தானில் அனுபவித்து வருகிறது. அவர்கள் மசூதிகளில் நுழைந்து ஏனையோருடன் ஏக இறைவனைத் தொழுவதும் தடை செய்யப் பட்டுள்ளது. அடிப்படைவாதிகளின் தூண்டுதலின் பேரில் அவர்களை முஸ்லீம்களே இல்லையென்று அறிவித்து ஒடுக்கி வருகின்றனர். இப்போது பங்களாதேஷிலும் இஸ்லாமிய அடிப்படைவாதம் வளர்ந்து வரும் நேரத்தில், அகமதிக்களை அவமதிப்பது அங்கும் தினசரி நிகழ்வாகவே உள்ளது.

பஹாய்கள் ஈரானில் துன்புறுத்தப் பட்டது, பாகிஸ்தானில் சிக்ரிக்களின் நிலைமை இவற்றின் பிண்ணனியில் இந்த இறுதி நபி பற்றிய நம்பிக்கை இருப்பது , அதை வலுக்கட்டாயமாக திணிக்க முயல்வது ஆகியவை இருப்பதை நான் எனது கட்டுரையில் ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தேன்.

இங்கேயும் நான் இஸ்லாத்தை தாக்க வேண்டும் என்ற நோக்கில் இறுதி நபி பற்றிக் குறிப்பிடவில்லை. நாகூர் ரூமியின் கருத்துத் திரிப்புக்கு எடுத்துக் காட்டாகவே இதை எடுத்துக் கூறியிருந்தேன்[05]. இதைத் தொடர்ந்து, நாகூர் ரூமி அதை தொடர்ந்து மறுக்கவே, இறுதி நபி பற்றி திருக்குரானில் சொல்லியிருக்கிறது என்பது ஒருவித அர்த்தப் படுத்திக்கொள்ளல் தான், மாற்றுக் கருத்துகளும் உண்டு என்பதை விளக்கி மீண்டும் எனது வாதங்களை எடுத்து வைத்தேன் [06]. அதைத் தொடர்ந்து நாகூர் ரூமியை இந்தப் பக்கம் காணவில்லை. அவரை நியாயப் படுத்தும் விதமாக சிலர், இஸ்லாத்தைப் பற்றி அறிமுகப் படுத்த வந்த புத்தகத்தில் இதையெல்லாம் விரிவாக விளக்குவார் என்று எதிர்பார்க்கக் கூடாது என்று தெரிவித்துள்ளனர். புத்தகத்தில் சொல்லாமல் விட்டது வேண்டுமானால் சரியாக இருக்கலாம். ஆனால், இதை நான் சுட்டிக் காட்டிய பின்பும் மறுத்துவிட்டு, நான் என் கூற்றுக்கு ஆதாரங்களை முன்வைத்தவுடன் காணாமல் போய்விட்டது எந்த வகையில் நியாயம் என்று தெரியவில்லை.

மேலும், என்னை எதிர்கொண்டதாலேயே அதை முன்வைத்தேனே தவிர, அந்த இறுதி நபி என்ற நம்பிக்கையை மற்றவர்கள் மீது திணிக்காமலிருக்கும் வரை எனக்கு அதில் எவ்வித அபிப்ராயமும் கிடையாது என்பதையே எனது கடந்த கட்டுரையில் சொல்லியிருந்தேன்.

ஆன்மீக இஸ்லாத்தின் அடிநாதமாய் விளங்குவது உருவமிலா-ஓரிறைக்கொள்கை என்றால், அரசியல் இஸ்லாத்தின் அடிநாதமாய் விளங்குவது முஹம்மது அவர்களின் நபித்துவம்தான். இந்த அரசியல் இஸ்லாத்தின் நீட்சியான ஷுன்னி இஸ்லாம், இறுதி நபித்துவத்தையே தனது அடிப்படை நம்பிக்கையாக கொண்டிருக்கிறது.

நபிகளாரின் காலத்திலேயே, ஆன்மீக இஸ்லாம் பின் சென்று அரசியல் இஸ்லாம் முன்னிலைப் படுத்தப் பட்டு, சிலை வழிபாட்டையும் ஏனைய பாகன்களின் பழக்க வழக்கங்களையும் கூட வைத்துக் கொள்ளுங்கள், ஆனால் முஹம்மது அவர்களின் நபித்துவத்தை மட்டும் மறுதளிக்காதீர்கள் என்ற கோரிக்கையே பிரதானப் படுத்தப் பட்டது. அதன் நீட்சியாகவே இன்று தூய இஸ்லாத்தைப் பின்பற்றுபவர்களாக தம்மை கருதுபவர்கள் கூட எதோ ஒரு வகையில் அரபி பாகன்களின் பழக்க வழக்கங்களைப் பின்பற்றுகிறவர்களாகவே இருக்கின்றனர். சிலை வழிபாடு, இணை வைப்பது ஆகியவை வெவ்வேறு ரூபங்களில் இஸ்லாமிய உலகு எங்கும் நிறைந்திருக்கின்றன.

அன்று நபிகள் நாயகம் அனுமதித்த சிலை வழிபாடுக்குக் கூட , அன்று அவர் பின்பற்றிய அரசியல் இஸ்லாத்துக்குக் கூட சில நியாயங்களை சிலர் முன்வைக்கலாம். ஆனால், இன்று நாகூர் ‘ஆண்டவரிடம் ‘ பிள்ளை கேட்டு- செய்வினை நீங்க- தொழில் செழிக்க- பயனம் போன மச்சான் பத்திரமாகத் திரும்பி வர பிரார்த்தனை செய்பவன் முஃமீன் ஏனென்றால் அவன் இறுதி நபிக் கோட்பாட்டை ஏற்றுக் கொண்டவன். அல்லாஹ்வை வணங்கினாலும், குலாம் மிர்ஜா ஒரு தூதரே என்று ஏற்றுக் கொள்பவன் காஃபிர் என்று இஸ்லாமிஸ்ட்டுகள் கருதுவதை எந்த அடிப்படையில் ஏற்பது என்று தெரியவில்லை.

அரசியல் இஸ்லாத்தை முன்வைப்பவர்களாலேயே இஸ்லாத்தைப் பற்றிய தவறான புரிதல்கள் உலகிற்கு ஏற்பட்டுள்ளது. ஆன்மீக இஸ்லாத்தை நோக்கி யாரும் கைநீட்டுவதில்லை. ஜலாலுத்தீன் ரூமியின் இஸ்லாத்தை நோக்கி யாரும் குற்றச் சாட்டுகளை குவிப்பதில்லை, நாகூர் ரூமிக்களின் இஸ்லாமே கண்டனத்துக்கு உள்ளாகிறது.

இங்கு ஒன்று கேட்கலாம், நீ யார் இதையெல்லாம் கேட்பதற்கு என்று. அதற்கு நான் குறிப்பிடுவதெல்லாம் இதுதான் – ஒரு சமூகமாக, நாடாக, ஒத்த வாழ்வு முறைகொண்ட கூட்டமாக, எப்படிப் பார்த்தாலும் எம் சமுதாயம் இஸ்லாமிய அடிப்படைவாதத்தாலும், கொள்கைகளாலும் வெகுவாக பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளது(நல்லதோ , கெட்டதோ எப்படிப் பார்த்தாலும்). இங்கு எம் சமுதாயம் என்று குறிப்பிடும் போது அதில், மதச்சார்பின்மை,மதப் பிரிவுகள் கடந்த மனித நேயம் ஆகியவற்றை ஏற்றுக் கொண்டிருக்கிற ஏராளமான இஸ்லாமியச் சகோதர, சகோதரிகளையும் என் சமூகமாகவே காண்கிறேன் என்பதை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

இஸ்லாத்தின் பெயரில் தினம் தினம் நிகழும் வன்முறைகள், தொடர்ந்து நிலவிக் கொண்டிருக்கும் போர்ச் சூழல், இதனால் பின்னுக்குப் போகும் டெவலப் மன்ட் ரிலேடட் வேலகள் என்று இச்சூழலில், நிச்சயமாக இஸ்லாத்தை நோக்கி கைநீட்ட அனைத்து இந்தியர்களுக்கும், ஏன் மனித குலம் முழுமைக்குமே உரிமை இருக்கிறது. மனித நாகரீகம் முன்னேறிவருகிற காலத்தில், ஒரு நாடு எவ்வித உரிமைகளைத் தமது குடிமக்களுக்கு தருகிறது என்பது பற்றி கூட உலக நாடுகள் கூட்டாகச் சேர்ந்து நிர்ப்பந்தம் செய்யும் போது, இஸ்லாத்தால் தொடர்ந்து பாதிக்கப் பட்டுவரும் இந்தியர்கள் குரலெழுப்பக் கூடாது , கேள்வி கேட்கக் கூடாது என்ற கோரிக்கைகள் சரியல்ல.

இங்கு ஒரு விஷயத்தைக் குறிப்பிட விரும்புகிறேன். இம்மாதிரியான தவறுகள் எங்கும் உண்டு. டிகிரி தான் வித்தியாசம். இஸ்லாம் மட்டுமென்றில்லை. எல்லா மதங்களுக்கும் ஒரு காணச் சகியாத வரலாற்றுக்கோர முகமுண்டு. அடிப்படை வாதத்தை நியாயப் படுத்தும், மத ரீதியான உலகப் பார்வையை முன்வைக்கும் குழுக்கள் எல்லா மதங்களிலும் காலம் காலமாக இருந்து வந்திருக்கின்றன. சதியை நியாயப் படுத்தியவர்கள், காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றவேண்டும் என்ற கூற்றை மதத்தின் அடிப்படையில் முன்மொழிந்தவர்கள், தேவதாசிகள் என்று பெண்களில் ஒரு பிரிவினர் மீது மத அடிப்படையில் பாலியல் வன்முறையைத் திணித்தவர்கள் என்பது போன்ற மதவாதிகள் இங்கும் இருந்திருக்கின்றனர்.

அப்போது , வெளியில் இருந்து பார்த்தவர்களுக்கு இதன் கொடூரம் புரிந்தது. சதி என்ற பெயரில் பெண்களைக் கொல்லும் ‘இந்து ‘ மதப் பழக்கத்தை முகலாயர்கள் தடை செய்ய முற்பட்டனர், ஆங்கிலேயர்கள் தண்டித்தார்கள், எதிர்த்து அத்தவற்றின் அநியாயங்களை இந்துக்களுக்குப் புரிய வைத்தார்கள். தேவதாசி முறையை எதிர்த்த, சதியை எதிர்த்த இந்துக்களுக்கு துணையாக நின்றார்கள்.

அக்பரும், பெண்டிங் பிரபுவும் செய்தது தவறா என்று சிந்தித்துப் பார்க்க வேண்டுகிறேன். அப்படி என்னை நோக்கி விரல் நீட்டு முன்னர், இப்படிப் பட்ட அநியாயங்கள் நீங்கியது, இந்து சமுதாயத்தை வாழ வைத்ததா, அழித்ததா, ஆரோக்கியமாக ஆக்கியதா என்று சற்றே எண்ணிப் பார்க்க வேண்டுகிறேன்.

இந்து மதத்தில் இப்போது வேதத்தையும், உபநிஷத்களையும், புராணங்களையும், மனு ஸ்மிருதியையும், காட்டிக் காட்டி ஜாதியை நியாயப் படுத்துபவர்களை இழிவாகப் பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சதிக்கு துணை போகிறவர்கள் சட்டத்தால் தண்டிக்கப் படுகிறார்கள், விதவை மறுமணம் சட்ட ரீதியாக அனுமதிக்கப் பட்ட ஒன்றாகி ஏராளமான பெண்களை மதத்தின் பெயரால் ஒடுக்கி வைத்ததிலிருந்து விடுவித்துள்ளது, மதத்தால் அனுமதிக்கப் படாத விவாகரத்து முறை, நியாயங்களின் புரிதலுக்குப் பின் ஏற்படுத்தப் பட்டுள்ளது. தேவதாசி முறைக்கு எதிராக சட்டங்கள் பிறப்பிக்கப் பட்டு செயல்படுத்தப் படுகின்றன.

இதிலெல்லாம் ஓட்டைகள் இல்லை என்று நான் சொல்ல வரவில்லை. ஆனால், மத அங்கீகாரம் தரப் படுவது பெருமளவில் கண்டனத்துக்குள்ளாகிறது. இம்மாதிரியான மாற்றங்கள் வந்ததில் பல இந்து அல்லாதவர்களுக்கு பங்குண்டு. இம்மாற்றங்கள், இந்து மதத்தில் ஏற்பட்டது போலவே , இஸ்லாத்த்திலும் ஏற்படும் என்று நம்புகிறேன் நான். அது உலகிற்கும் நன்மை பயக்கும்.

அப்பணியில், எனது சிறு அர்ப்பணமே இந்த முயற்சிகள். இதைப் பார்த்து பலர் விவாதித்தால், சிந்தித்தால், சந்தோஷமே. ஒரே நாளில் எந்த மாற்றமும் வந்து விடாது, நெடுங்காலம் பிடித்தாலும் என்றாவது ஒரு நாள் இஸ்லாத்திலும், ஏனைய மதங்களைப் போலவே அடிப்படைவாதம் பின்னுக்குச் செல்லும் என்ற நம்பிக்கை இருக்கிறது, இன்ஷா அல்லாஹ்!

– நேச குமார் –

* – * – *

[01] – திண்ணை கட்டுரை

[02] – திண்ணை கட்டுரை

[03] – திண்ணை கட்டுரை டிசம்பர் 2

[04] – திண்ணை கட்டுரை டிசம்பர் 9

[05] – திண்ணை கட்டுரை அக்டோபர் 21

[06] – திண்ணை கட்டுரை நவம்பர் 4

http://islaam.blogdrive.com

http://islaamicinfo.blogspot.com

Series Navigation

நேச குமார்

நேச குமார்

நபிகள் நாயகத்தின் வாழ்வு , அன்னை ஜைனப்பின் திருமணம், இறுதிநபி : சலாஹூதீனுக்கு சில வரிகள்

This entry is part [part not set] of 50 in the series 20041202_Issue

நேசகுமார்


பர்தா பற்றிய எனது கட்டுரை சம்பந்தமாக சலாஹீதீன் என்பவர் சென்ற திண்ணை இதழில் என்னிடம் ஆதாரங்களை கேட்டிருந்தார்[1].

இதை சொல்ல வந்த அவர், முகமது நபியவர்களையும் அவர்களது மனைவியரையும், இஸ்லாமியர்கள் மிகுந்த மதிப்புடன் கருதுவதாகவும், எனது பெற்றோர்களையோ அல்லது மதிக்கக் கூடிய தலைவர்களையோ நான் மற்றவர்கள் எப்படி கண்ணியத்துடன் அழைக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறேனோ, அதே அளவு கண்ணியத்துடன் நானும் அவர்களை அழைக்க வேண்டும், எழுத வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இங்கு நான் சலாஹீதீன் மற்றும் அனைத்து முஸ்லீம் சகோதரர்களுக்கு குறிப்பிட விரும்புவது இதுதான். இஸ்லாத்தின் தத்துவக் கொள்கைகளுள் ஒன்று, முகமது நபி அவர்கள் ஏனைய மனிதர்களைப் போன்றவர்தாம் என்பது. அவர் கடவுள் அல்ல. அவர் தப்பே செய்யாதவர் அல்ல. அவர் பல முறை தவறுகள் செய்திருப்பதையும், வருந்தியிருப்பதையும், குழம்பியிருப்பதையும், அவரே தாம் தவறு செய்திருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளதையும் ஆரம்ப காலத்திய இஸ்லாமிய ஆவணங்களே தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கின்றன. நன்கு இஸ்லாம் அறிந்த எந்த அறிஞரும் இவற்றை எடுத்துரைப்பர். பிற்காலத்திலேயே, இந்த நபி வழிபாடு ஆரம்பித்தது. நபி வழிபாடு என்றால், கோவில் எடுத்து சிலை வைத்து வழிபாடு செய்வது அல்ல. கடவுளைப் போன்று அவரை மானுடப்பிறழ்வுகளுக்கு அப்பாற்பட்ட அமானுடராக கருதுவதே நபி வழிபாடாகும். இன்றைய இஸ்லாமிய சமூகம் அவரை கடவுளுக்கும் மேலாக வழிபாடு செய்கிறது. அண்டை நாடான பாகிஸ்தானில் நடைமுறையிலிருக்கும் அவதூறு சட்டத்தின் படி (Blasphemy Law), அல்லாஹ்வை திட்டினால் ஆயுள் தண்டனைதான், நபிகள் நாயகத்தை திட்டினாலோ, மரண தண்டனை! [2] ஆரம்பக் கால இஸ்லாமிய அறிஞர்கள் பதிந்து வைத்திருக்கும் இத்தகைய வரலாற்றுச் சம்பவங்களின் மீதான காய்தல்-உவத்தல் இல்லா விவாதங்கள் கூட இன்றைய இஸ்லாமிய உலகில் சாத்தியம் அல்ல. இதற்குக் காரணம் , நாளாவட்டத்தில் வரலாற்றின் வழி நாம் காணும் மானுடரான முகமது நபி பின்னுக்கு நகர்ந்து அவ்விடத்தில், தெய்வத் தன்மையுடன் கட்டமைக்கப் பட்ட நபிகள் நாயகம் வந்து அமர்ந்து கொண்டதே.

இஸ்லாமிய வரலாறு காட்டும் முகமது நபியவர்களுக்கும், இஸ்லாமியர்களின் மனதில் கடவுளாக இன்று உருவகப் படுத்தப் பட்டிருக்கும் நபிகள் நாயகத்திற்கும் மலைக்கும் மடுவுக்குமிடையேயான வித்தியாசம் உள்ளது. வரலாற்றின் வழி தென்படும் முகமது நபியவர்களைப் பற்றி எம் போன்றோர் எழுதும் போது, அது இஸ்லாமிய வரலாற்றை அறியாமல் அல்லது மெளதூதி போன்ற மதவெறியர்கள் காட்டும் இஸ்லாமிய வரலாற்றை மட்டுமே அறிந்த , நபிகள் நாயகம் பற்றி மனதில் ஒரு கற்பனை குணாதிசயங்களை வரித்து வைத்து வழிபடுகின்ற முஸ்லீம்களுக்கு மன வருத்தத்தையும், சஞ்சலத்தையும் ஏற்படுகிறது.

இஸ்லாமிய அச்சுறுத்தல்களுக்கும், அடிப்படை வாதத்திற்கும் தோற்றுவாயாக இருப்பது திருக்குரானும், சுன்னாவும் ஆகும். இதில் சுன்னா-வாக விளங்கும் நபிகளின் வாழ்வு காட்டும் பாதையை தேர்வு செய்து தீவிரவாதச் செயல்களில் ஈடுபடும் இஸ்லாமிஸ்ட்டுகளை எதிர்கொள்ளும் போது, இஸ்லாமிய ஆவனங்களில் பதிவு செய்யப் பட்டுள்ள அவரின் வாழ்வைப் பற்றி விவாதிப்பது அவசியமான ஒன்றாகிறது. எனது தந்தையைப் பற்றி நீங்கள் உண்மையை கூறினால், வரலாற்றை சுட்டிக் காட்டினால், அது உண்மையாகவும், வரலாறாகவும் இருக்கும் பட்சத்தில் நான் வருந்த முகாந்திரம் இல்லை. இதை அவதூறாக நினைக்கும் பட்சத்தில், ஹதீதுகளிலும் திருக்குரானிலுமே இத்தகைய ‘அவதூறுகள் ‘ முகமது நபியவர்களுக்கு எதிராக நிரம்பி இருக்கின்றன என்பதையும் தயை கூர்ந்து சிந்தியுங்கள்.

இவையெல்லாம் ஒரு புறம் இருந்தாலும், நான் கூடுமானவரையில் முகமது நபி அவர்களை கண்ணியத்தோடும் மரியாதையுடனுமே குறிப்பிட்டு வருகிறேன். முஸ்லீம் அல்லாதவனாகிய என்னுடைய பார்வையில் நபிகள் செய்தவையெல்லாம் குற்றங்களாகவே தென்படுகின்றன. இதை மறுத்து, இத்தகைய செயல்களுக்கு நியாயம் கற்பிக்கும் இஸ்லாமிய அறிஞர்கள் உள்ளனர். மதநம்பிக்கையுள்ள முஸ்லீம்கள் இதை ஏற்கலாம். ஆனால், முஸ்லீம் அல்லாதவனாகிய என்னால், அவரது செயல்களையெல்லாம் கடவுளின் வழியிலான செயல்களாக காணமுடியவில்லை. அவரால் அழிக்கப் பட்ட (அரபி) பாகன்களின் மீது பச்சாதாபமே எனக்கு ஏற்படுகிறது. என் நிலையில் நீங்கள் இருந்தால், இதைவிட கடுமையான பார்வை உங்களுக்கும் இருக்கக் கூடும். நீங்கள் அன்னையாகக் கருதும் நபிகளாரின் மனைவிகளின் மீது எனக்கு எந்தவித எதிர்மறைக் கருத்தும் கிடையாது. அவர்கள் மீதும் பச்சாதாபமே ஏற்படுகிறது.

உதாரணமாக, நபியவர்கள் மணந்து கொண்ட அன்னை சஃபியா என்ற யூதப் பெண்ணின் வரலாற்றைக் காணும் போது, நமக்கு அதிர்ச்சியே மிஞ்சுகிறது. சஃபியாவின் தந்தை ஹுயய்யா சிறந்த வீரர். முகமது நபியவர்கள் அவர் சார்ந்த யூதக் குலத்தாரை மதீனாவிலிருந்து விரட்டிய பின், சோர்ந்து போகாமல் கைபரில் இருந்த யூத சமுதாயத்தினரிடம் அடைக்கலம் புகுந்து அங்கும் முகமது நபியவர்களிடமிருந்து தம் குலத்தாரை காப்பதற்கு ஏற்பாடுகள் செய்து வந்தார். இவரை முஸ்லீம்கள் கொன்றனர். சஃபியாவின் கணவன் கினானாவை கைபர் வீழ்ந்தபிறகு நபிகளின் உத்தரவின் படி சித்திரவதை செய்து முஸ்லீம்கள் கொன்றனர். அதற்குப் பின் போரில் கைப்பற்றப் பட்ட பொருட்கள் வெற்றி பெற்ற முஸ்லீம்களுக்கிடையே பங்கு பிரிக்கப் பட்ட போது , திஹ்யா என்ற முஸ்லீம் வீரன் தனக்கு ஒரு பெண் வேண்டும் என்று முகமது நபியவர்களிடம் கோரவே, ‘ போய் உனக்குப் பிடித்த பெண்ணை எடுத்துக்கொள் ‘ என்று நபிகள் அனுமதி அளிக்கவே, திஹ்யா அங்கிருந்த பெண்களில் அழகான சஃபியாவை தனக்கென எடுத்துக் கொண்டார். இதற்கிடையில் சஃபியாவின் அழகைக் கண்டவர்கள் முகமது நபியவர்களிடம் வந்து , அடிமைகளாகப் பிடிக்கப் பட்ட பெண்களில் அவளைப் போன்ற ஒரு பெண்ணை காணமுடியாது என்றும், (அழகில் சிறந்த) சஃபியா நபியவர்களுக்கே சொந்தமாகத் தக்கவர் என்று கூறிவே, இதனைக் கேட்ட முகமது நபியவர்கள், திஹ்யாவை அந்தப் பெண்ணுடன் அழைத்து வாருங்கள் என்று கூறினார். இதன் பிறகு சஃபியாவைக் கண்ட முகமது நபியவர்கள், திஹ்யாவை அழைத்து பிடிக்கப் பட்ட பெண்களில் வேறு யாரையாவது , வேறு எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளும் படி திஹ்யாவுக்கு உத்தரவிட்டுவிட்டு, சஃபியாவை தாம் எடுத்துக் கொண்டார். ( ஒரு கூற்றின் படி, சஃபியாவுக்குப் பதிலாக ஏழு பெண்களை திஹ்யாவுக்குக் கொடுத்ததாகத் தெரிகிறது). பிறகு உடனடியாக சஃபியாவை அலங்கரிக்கவும் உத்தரவிட்டார், முதலிரவும் நடை பெற்றது. இதை விவரமாக ஷாஹி முஸ்லீம் ஹதீதுகளில் காண முடிகிறது. [3]

பண்டம் போல பகிர்ந்து கொள்ளப் பட்ட இந்த அபலையின் பெயரான சஃபியா என்பது காரணப்பெயர் என்றும், அதன் அரபி அர்த்தம், ‘ வென்றவரால் பகிர்ந்து கொள்ளப் பட்ட பொருள் ‘ என்றும் சில அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். தந்தையையும், கணவனையும் கொன்றவருக்கே(நபிகள் நாயகம்) பலிகடா போன்று விருந்தாக அளிக்கப் பட்ட இந்தப் பெண்ணுக்கு நிகழ்ந்தது விருப்புற்ற திருமணமாக இருக்க முடியாது. 1425 வருடங்களுக்கு முன்பிருந்த அரபித் தீபகற்பத்தில் வேண்டுமானால் இது ஏற்புடைய ஒரு செயலாக இருந்திருக்கக் கூடும்.

ஆனால், இத்தகைய நிகழ்வுகளை நபிகளாரின் கருணையாக காட்டவே இஸ்லாமிய அறிஞர்கள் முற்படுகின்றனர்.இதை சிறந்த சுன்னாஹ்வாகவும் இதை எடுத்துக்காட்டி , அடிமையாக இருந்த யூதப் பெண்ணை முகமது நபியவர்கள் மணந்து, அவரை அடிமைத் தளையிலிருந்து விடுவித்தார் என்று பெருமைப் பட்டுக் கொள்கின்றனர். சிலர் இது யூதர்களுடன் நல்லுறவை ஏற்படுத்தும் முயற்சி என்றும் குறிப்பிடுகின்றனர். நாகூர் ரூமியும் இத்தகைய முறையையே கையாண்டிருக்கிறார். ஆனால் இங்கு கவனிக்க வேண்டிய விஷயம், சஃபியாவை அடிமையாக ஆக்கியதே முகமது நபியவர்கள் தாம். சஃபியாவை ஒரு உணர்வற்ற பண்டம் போன்று விநியோகித்ததும் முகமது நபியவர்களே. பின் அவரது அழகையும் , அவர் உயர் குடியைச் சார்ந்தவர் என்பதையும் கேள்விப்பட்ட நபிகளார், திஹ்யாவுடன் சேர்த்து சஃபியாவையும் அழைத்து வரச் செய்து அவரது (அழகை நேரில்) பார்த்தபின்பே மணந்து கொள்ள முடிவெடுத்தார் என்பதை தீர்க்கமான ஹதீஸான ஷாஹிஹ் முஸ்லீமிலேயே காண முடிகிறது. அடிமைப் பெண்ணை விடுவிக்க நினைத்தால், யூதர்களுடன் நல்லுறவை ஏற்படுத்திக் கொள்வதற்காக சஃபியாவை மணந்து கொள்ள முடிவெடுத்தால், ஏன் சஃபியாவை நேரில் அழைத்து வரச் சொல்லி பார்த்தபிறகு மணந்து கொள்ள முடிவெடுக்க வேண்டும் என்ற கேள்விகள் இங்கு எம் போன்ற(முஸ்லீம் அல்லாத)வர்களுக்கு எழுவது தவிர்க்க இயலாததாகிறது.

1425 வருடங்களுக்கு முன்பு நிகழ்ந்த இத்தகைய சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட சுன்னாவைத்தான் நாகூர் ரூமி, முஸ்லீம்கள் நடந்து கொள்ள வேண்டிய பாதையாக காண்பிக்கிறார். இஸ்லாமிய அடிப்படை வாதிகளும் இவற்றை கண்மூடித்தனமாக பின்பற்றுகின்றனர்.இப்படி அந்தக் காலத்தில் நபிகள் செய்ததெல்லாம் சரியே, அது இந்தக் காலத்திற்கும் பொருந்தும் என்ற அடிப்படைவாதத்தின் விளைவாகவே ‘ஜிஹாத் ‘ நடைபெறும் பகுதிகளில் எல்லாம் முஸ்லீம் அல்லாத மதங்களைச் சார்ந்த பெண்களை கற்பழிப்பதும், அடிமைகளாக ஆக்குவதும் நடைபெறுகிறது. 1946ல் வங்க தேசத்தில் நடைபெற்ற மதக் கலவரம், ஜிஹாத் என அறிவிக்கப் பட்டே செயல் படுத்தப் பட்டது. இதனை அறிவித்து நடத்திய குலாம் சர்வார் என்ற முஸ்லீம் எம்.எல்.ஏ . இந்த மதக் கலவரத்தை நிறுத்த தீவிரமாக முயற்சித்தவர் பாபு ராஜேந்திரலால் ராய் என்ற வழக்கறிஞர். அவர் நவகாளி வழக்கறிஞர் சபையின் தலைவராகவும் இருந்தார். நபிகள் நாயகத்தின் வாழ்வை அங்கிருந்த முஸ்லீம்கள் பின்பற்றியதன் விளைவாக, ராஜேந்திரலால் கொல்லப் பட்டு அவரது வெட்டப் பட்ட தலை குலாம் சர்வாருக்கு இஸ்லாமிய அன்பளிப்பாக அளிக்கப் பட்டது. ராஜேந்திரலாலின் மகள்கள் சஃபியா போன்று பிடிக்கப் பட்டு குலாம் சர்வாரின் தளபதிகளுக்கு (அடிமைகளாக) வழங்கப் பட்டனர்[4].

இது எதோ இந்துக்களுக்கும் மற்ற முஸ்லீம் அல்லாத மதத்தைச் சார்ந்த பெண்களுக்கு மட்டும் நிகழும் ‘புனிதக் கற்பழிப்பு ‘கள் அல்ல. இத்தகைய ‘சுன்னாஹ் ‘வின் நீட்சியாக முஸ்லீம் பிரிவுகள் மற்றும் குழுக்கள் மற்ற பிரிவு அல்லது குழுவைச் சார்ந்த பெண்டிரை செக்ஸ் அடிமைகளாக பிடித்துச் செல்வதும், கூட்டுக் கற்பழிப்புகளை மதத்தின் பெயரால் செய்வதும் நிகழ்கிறது. ஆப்கானிஸ்தானில் இஸ்லாத்தின் வீரர்களான முஜாஹிதீன்கள் செய்த கூட்டுக் கற்பழிப்புகளை இணையத்தில் ஷியா தளங்களிலும், ஆப்கானிய பெண்கள் அமைப்பான ராவா போன்றவற்றின் வலைத்தளங்களிலும் காணலாம்[5].

ஆகவே நிகழ்வுகள் இவ்வாறிருக்கையில், இஸ்லாமிய அடிப்படை வாதிகளின் ஒவ்வொரு நடவடிக்கையும் சுன்னாவைப் பின்பற்றியிருக்கையில், நபிகளாரின் வாழ்வு பற்றிய விவாதங்களை அவதூறு எனக்கருதி விவாதிக்க வேண்டாம் எனக்கோருவது சரியல்ல.

தற்போது சரித்திரத்திற்கு மீள்வோம்:

1. பர்தா பற்றிய அல்லாஹ்வின் கட்டளைகள் அடங்கிய சூரத்துல் அஹ்ஜாப்(சதிகார அணியினர்), ஜைனப்பை மணந்துகொள்ள அல்லாஹ் விரும்பியதை முகமது நபியவர்கள் வெளிப்படுத்தத் தயங்கி மறைத்து வைத்தார் என்று குறிப்பிடுகிறது. [6]

2. இந்த வசனத்தில் அல்லாஹ் சொல்ல வந்ததை தாம் மறைத்ததாக நபிகள் குறிப்பிடும் சம்பவத்தை விரிவாக முஹம்மது இப்னு யாஹ்யா இப்னு ஹய்யான் தெரிவித்தார் என்று இஸ்லாத்தின் துவக்கக் கால வரலாற்றை பதிவு செய்த, அபு அப்துல்லாஹ் இப்னு சாஆத் அறிவிக்கிறார் .இதன் படி, ஒரு நாள் நபிகள் நாயகம் அவர்கள் தமது (வளர்ப்பு) மகன் ஜைத்தின் வீட்டுக்குச் சென்றபோது , சரியான முறையில் ஆடை அணியாத (வீட்டுடையில்) ஜைனப் அவரை வரவேற்றார். நபிகள் உள்ளே வர மறுத்து திரும்பும் போது ‘ இதயங்களை மாற்றும் அல்லாஹ்வுக்கு நன்றி ‘ என்று முனுமுனுத்தவாரே திரும்பிச் சென்றார். வீடு திரும்பிய ஜைத், ஜைனப்பிடமிருந்து நபிகள் வந்து திரும்பிச் சென்றதை கேள்விப்பட்டவுடன், ‘ ஏன் நபிகள் திரும்பிச் சென்றார் ? நீ அவரை உள்ளே அழைக்கவில்லையா ‘ என வினவ அதற்கு ஜைனப் தாம் உள்ளே அழைத்ததாகவும் ஆனால் வரமறுத்து போகும் போது ‘இதயங்களை மாற்றும் அல்லாஹ்வுக்கு நன்றி ‘ என்று முனுமுனுத்துச் சென்றதாகவும், அதற்கு என்ன அர்த்தம் என்று தமக்குப் புரியவில்லை என்றும் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, ஜைத் முகமது நபியவர்களிடம் சென்று, ‘ நீங்கள் ஜைத்தை விரும்புகிறீர்கள் என்று நினைக்கிறேன். நான் அவளை விடுவித்து விடுகிறேன் ‘ என்று சொல்ல, அதை மறுத்த முகமது நபியவர்கள், அவள் உன்னிடமே இருக்கட்டும், அவளை வைத்துக்கொள் என்றெல்லாம் சொன்னதையே இந்த 33:37ல் வரும் வாசகம் ‘ அல்லாஹ் வெளியாக்க இருந்ததை, மனிதர்களுக்கு பயந் து உமது மனதில் மறைத்து வைத்திருந்தீர் ‘ என்ற வார்த்தைகள் குறிக்கின்றன. இதன் பிறகு, சிறிது காலம் கழித்து, அவர் ஆயிஷாவுடன் பேசிக்கொண்டிருந்தபோது திருக்குரான் இறங்கும் போது முகமது நபிகளுக்கு ஏற்படும் வஹி என்ற இறை ஆவேசம் ஏற்பட்டது. இந்த வஹீ முடிந்து சாமான்ய நிலைக்கு அவர் திரும்பியவுடன், புன்னகைத்தவாரே, ‘ யார் சென்று ஜைனப்பிடம் சொல்வார்கள், அவளை எனக்கு அல்லாஹ் சொர்க்கத்தில் மணமுடித்து வைத்துவிட்டார் என்பதை ? ‘ என்று வினவினார். இது ஆயிஷாவுக்கு மிகவும் வருத்தத்தை அளித்தது, ‘ ஏற்கெனவே அவள் சிறந்த அழகி என்பதை நான் கேட்டறிந்தேன். அவளை (அவருக்கு) அல்லாஹ் சொர்க்கத்தில் மணம் செய்வித்தார் என்பதையும் கேட்கிறேன். இது அவளை தற்பெருமை கொண்டு தம்பட்டம் அடிக்கச் செய்யும் ‘ என்று வருந்தியதும் குறிப்பிடப் பட்டுள்ளது[7].

3. இதை நிரூபிப்பது போன்று, ஜைனப்பைத் திருமணம் செய்து கொண்டதற்காக முகமது நபியவர்கள் கொடுத்த மிகப் பெரிய விருந்தில், ஜைனப் மற்ற மனைவிகளிடம், தன்னை அல்லாஹ்வே முகமது நபியவர்களுக்கு மணம் செய்து கொடுத்ததாக பெருமையோடு சொல்லிக் கொண்டார் என்று அனஸ் பின் மாலிக் தெரிவித்ததாக புகாரி குறிப்பிடுகிறார்[8]. இங்கேயும், திருக்குரானின் இந்த வசனத்தின் பின்னணி நிரூபணமாகிறது.

4. புகாரியின் மற்றொரு ஹதீஸில், திருக்குரான் வசனம் 33:37ல் அல்லாஹ் வெளிப்படுத்தியதை முகமது நபிகள் மறைத்து வைத்தார் என்று சொல்லியிருப்பது ஜைனப்பையும், ஜைத்தையும் குறித்தே என்று குறிப்பிடப் பட்டுள்ளது[9].

5. அதே புகாரியின் இன்னொரு ஹதீஸில், நபிகளின் மனைவிகளிலேயே திருமணத்திற்கு மிகப் பெரிய விருந்து, ஜைனப்பை மணம் செய்து கொண்டபோதுதான் முகமது நபியவர்களால் தரப்பட்டது என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது[10]. இதிலிருந்தே இத்திருமணத்தின் மூலம் முகமது நபியவர்கள் மிகவும் மகிழ்ந்தார் என்பது தெளிவாகிறது. புகாரியின் ஹதீதுகள் முஸ்லீம்களால் மிகவும் மதிக்கப் படுபவை என்பதை இதைப் படிக்கும் இஸ்லாமிய அன்பர்கள் அறிந்திருப்பார்கள்.

6. இந்த விருந்தைப் போன்றே, மனைவிகளிலேயே முகமது நபியவர்களுக்கு மிகவும் பிரியமானவராக ஜைனப் இருந்ததாகவும் அடிக்கடி ஜைனப்பிடம் நபிகள் சென்றார் என்றும் முகமது நபியவர்களின் மற்றொரு மனைவியான உம் சலமா கூறியுள்ளார். இதை ஷாஹி முஸ்லீமின் ஹதீஸ்கள் அறிவிக்கின்றன. ஷாஹி முஸ்லீமின் ஹதீதுகளும் இஸ்லாமிய சமுதாயம் மிகவும் மதிக்கும் ஹதீதுகளே!

8. இது மட்டுமல்லாது, ஜைனப்பிடம் இந்த தகவலை சொல்லும் படி ஜைத்தையே முகமது நபியவர்கள் கேட்டுக் கொண்டதாகவும், மிகவும் விசனத்துடன் ஜைத் ஜைனப்பை நெருங்கி, அவளை எதிர்நோக்க மனமில்லாமல் அப்புறமாகத் திரும்பிக் கொண்டு இந்தத் தகவலை தெரிவித்ததாகவும், இதைக் கேட்ட ஜைனப், உடனடியாக இதற்கு சம்மதிக்க மறுத்து, ‘ அல்லாஹ் சொல்லாமல் இதைச் செய்வதற்கு நான் ஒப்புக்கொள்ள மாட்டேன் ‘ என்று கூறி அவர் தாம் வழிபடும் இடத்தில் நிற்கும் போது, அல்லாஹ்விடமிருந்து வஹி மூலமாக ஜைனப்பை மணந்து கொள்ளச் செய்யும் வசனம் முகமது நபியவர்களுக்கு இறங்கவே, அதன் பின்னரே ஜைனப் முகமது நபியவர்களை மணந்து கொள்ள சம்மதித்ததாக குறிப்பிடும் ஹதீதும் உள்ளது. இதையும் குறிப்பிடுவது , மிகவும் நம்பத்தகுந்த ஹதீஸாக முஸ்லீம்கள் கருதும் ஷாஹி முஸ்லீம்தான். [12] இந்த ஹதீதின் மூலம், ஜைனப் மற்றும் ஜைத் இருவருமே அல்லாஹ் கட்டளையிட்டதன் படியே பிரிந்து முகமது நபியவர்களின் விருப்பத்தை நிறைவேற்றினர் என்பதும் விளங்குகிறது. இது தவிர, முகமது நபிகள் ஜைனப்பை விரும்பியதை அறிந்த ஜைத்தின் மனதில் ஜைனப்பின் மேல் வெறுப்பு நிரம்பி மணவிலக்கு செய்யும் படி அல்லாஹ்வினால் தூண்டப் பட்டதாகத் தெரிவிக்கின்ற வரலாறுகள், ஜைத்தை தேடிச்சென்ற முகமது நபியவர்கள் ஜைனப்பை விலகிய திரைச்சீலையின் வழியே கண்டவுடன் அவரது இதயத்தில் ஜைனப்பின் மீது நன்னயம் மேலோங்கியது என்றும், இது நடந்தவுடன், ஜைத்துக்கு அவளை பிடிக் கவில்லை, முகமது நபியவர்களிடம் வந்து அவளை விலக்கிவிடுவதாகக் கூறினார், அப்போது முகமது நபியவர்கள் மறுத்து, அவளுடனே வாழும்படி அறிவுரை கூறினார் என்றும், இதையே அல்லாஹ் 33:37ல் குறிப்பிட்டுள்ளார் என்றெல்லாம் வஹாப் போன்றவர்கள் தெரிவித்ததாக அறிவிக்கும் இஸ்லாமிய ஆவணங்களும் உள்ளன [அல்-தப்ரி]. ஜைனப்பை மணந்து கொண்ட பின்பே, நபிகளின் வீட்டுக்குள் அவரது உத்தரவில்லாமல் ஏனைய முஸ்லீம்கள் பிரவேசிக்கக் கூடாது என்ற திருக்குரான் வசனமும் இறங்கியது என்பதைக் குறிப்பிடும் ஹதீதுகளும்[13] உள்ளன. இவையும் பர்தா பற்றிய திருக்குரான் வசனங்களுக்கும் ஜைனப்பின் மணத்திற்கும் இடையே உள்ள சரித்திரத் தொடர்பையும் விளக்குபவையாக உள்ளன.

இந்த வரலாற்று நிகழ்வுகளை இங்கு குறிப்பிடுவது, முகமது நபியவர்களை சாடுவதற்காகவோ அல்லது இஸ்லாம் தவறான மார்க்கம் என்பதை நிறுவுவதற்காகவோ அல்ல. முகமது நபியவர்கள் செய்த அனைத்தும், மனித குலம் முழுவதற்கும் சிறந்த எடுத்துக் காட்டு, அவர் அப்பழுக்கற்றவர், அவரை பின்பற்றியே ஒவ்வொரு முஸ்லீமும் தமது வாழ்வில் நடந்து கொள்ளவேண்டும் என்று நாகூர் ரூமி மற்றும் இஸ்லாமிய அடிப்படை வாதிகளின் கூற்றை மறுக்கவே, இத்தகைய திருக்குரான் வசனங்கள், சுன்னாஹ் போன்றவற்றின் பின்னணியை விளக்க நேரிடுகிறது.

இங்கு நான் சலாஹூதீன் போன்ற முஸ்லீம் சகோதரர்களிடம் வேண்டுவதெல்லாம் இதுதான், முகமது நபியவர்கள் 1400 வருடங்களுக்கும் முன்பாக என்ன காரணமாக இப்படியெல்லாம் நடந்து கொண்டார் என்பது குறித்து நமக்குள் வேறுபாடுகள் இருக்கலாம். அவரை நீங்கள் கடவுளை விட மேலானவராகவும் , என்னைப் போன்றவர்கள் வழிதவறிய இறைநேசராகவும் காணலாம். முஸ்லீம்கள் அவரை ஒரு சூஃபிகளுள் தலையாய சூஃபி எனக் கருதும் அதே நேரத்தில், முஸ்லீம் அல்லாத பலர் ,முகமது நபியவர்களை, நபியல்ல என்று எண்ணும் போது, அவரே இறுதி நபி என்னும் நம்பிக்கையை உலகின் மீது திணிப்பது வன்முறைக்கே வழிவகுக்கும்.

இவை ஒரு புறமிருக்க, இறுதி நபி பற்றி தனது கருத்துக்களை சொல்ல வந்த சலாஹுதீன், இறுதி என்ற அர்த்தத்திலேயே காத்தமன் என்ற சொல் பயன் படுத்தப் பட்டுள்ளது என்று வாதிட்டுள்ளார். காத்தமன் என்ற சொல் சிறந்தது என்ற அர்த்தத்தில் பயன் படுத்தப் படும் அரபிப் பிரயோகங்களை நானும் அடுக்கலாம், முகமது நபியவர்கள் தமக்கும் எகிப்திலிருந்து பரிசாக அளிக்கப் பட்ட கிறிஸ்துவப் பெண்ணுக்கும் பிறந்த ஆண் மகவு இறந்த போது அக்குழந்தை உயிர் வாழ்ந்திருந்தால், ஒரு நபியாக ஆகியிருந்திருக்கும் என்று கூறியிருப்பது போன்றவற்றை சுட்டிக் காட்டி அவரே தாம் இறுதி நபி என்று கருதவில்லை, பிறகு ஆண் மகவு எதுவும் உயிர் தரிக்காததால், பெண்ணை நபியாக அறிவிக்க முடியாது என்ற மத்திய கிழக்குக் கலாச்சாரத்தையொட்டி, யாரையும் நபியாக அறிவிக்கவில்லை என்று வாதிடலாம். ஆனால், சலாஹுதீனுக்கும் மற்ற முஸ்லீம் சகோதரர்களுக்கும் நான் சொல்லிக் கொள்வதெல்லாம் இதுதான். கடவுள் பற்றிய விஷயங்கள் எல்லாமே நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுந்தவைதாம். அப்படி இருக்கும்போது உங்களது நம்பிக்கைகள் தவறு, எனது நம்பிக்கைகள் சரி என்று வாதிடுவது மடமை. ஆனால், ஒருவரது நம்பிக்கையை மற்றவர் மீது திணிக்க, அதுவும் வன்முறையைப் பயன்படுத்தி ஒரு நம்பிக்கையை உலகமெல்லாம் நிறுவ முயற்சிப்பது மிகவும் தவறு என்பதே.

அதே போன்று, முகமது நபிகளின் வாழ்வு பற்றிய விவாதங்கள், மாறுபட்ட கருத்துக்கள் முஸ்லீம்கள் மற்றும் ஏனையோரிடையே இருந்தாலும், அவர் அப்போது செய்தவையெல்லாம் ஒவ்வொரு முஸ்லீமும் இன்றும் செய்யவேண்டும் என்று வரலாறும், அக்காலச்சூழலும் அறியாமல் கண்மூடித்தனமாக பின்பற்றுவது மனித குலத்தை 1400 வருடங்கள் பின்னோக்கி கற்காலத்துக்கே எடுத்துச் செல்லும். ஆகவே, அவரது செயல்களின் பிண்ணனியை உணர்ந்து, இக்காலத்துக்கு ஏற்ற உதாரணங்களை மட்டுமே எடுத்துக் கொண்டு மற்றவற்றை பின் தள்ளுவது இஸ்லாமிய சமுதாயத்திற்கும், ஏனைய சமுதாயங்களுக்கும் நீங்கள் செய்யும் பெரும் சேவையாக இருக்கும். இதை இஸ்லாமிய சமுதாயத்தின் அறிஞர்கள், தலைவர்கள் முன்னெடுத்து செய்ய வேண்டும். இதுவே இறைவனுக்காக நீங்கள் செய்யும் சிறந்த இறைக்கொடை(ஜகாத்) ஆக இருக்கும் என்பதே என் கோரிக்கை.

– நேச குமார் –

[01] – http://www.thinnai.com/le1118045.html

[02] – Blasphemy Law, Pakistan :

‘Whoever by words, either spoken or written or by visible representation, or by any imputation, innuendo, or insinuation, directly or indirectly, defiles the sacred name of the Holy Prophet Mohammed (PBUH) shall be punished with death and shall also be liable to a fine ‘ Pakistan Penal Code Section 295(c).

Asian Human Rights Commission on Blasphemy Law:

http://www.ahrchk.net/hrsolid/mainfile.php/1999vol09no07/1143

[03] – http://www.usc.edu/dept/MSA/fundamentals/hadithsunnah/muslim/008.smt.html

http://www.usc.edu/dept/MSA/fundamentals/hadithsunnah/muslim/008.smt.html>

[04] – Binay Bhushan Ghosh in ‘ Dwijatitatva O Bangali ‘ Page 68.

[05] – Rape, molestation by Mujahideen in Afghanistan:

Taliban: http://www.rawa.org/herat-e.htm

Anti Taliban Alliance : http://www.atimes.com/ind-pak/Cl01Df01.html

[06] – http://www.tamililquran.com/sura33.html

[07] – Tabaqat Ibn Sa ‘d Volume 8

‘Abu Abdullah Muhammad ibn Sa ‘d is one of the earliest authorities on Muslim biography.Authorities such as as Ibn Hajar, adh-Dhahabi, al-Khatib al-Baghdadi and Ibn Khallikan have testified to his reliability. ‘ :

http://www.bysiness.co.uk/ulemah/bioibnsad.htm

http://www.bysiness.co.uk/ibn_sad.htm

[08] – http://www.usc.edu/dept/MSA/fundamentals/hadithsunnah/bukhari/093.sbt.html

[09] – http://www.usc.edu/dept/MSA/fundamentals/hadithsunnah/bukhari/093.sbt.html

[10] – http://www.usc.edu/dept/MSA/fundamentals/hadithsunnah/bukhari/062.sbt.html

http://www.usc.edu/dept/MSA/fundamentals/hadithsunnah/bukhari/062.sbt.html

[11] – ‘Allah ‘s Messenger (may peace be upon him) saw a woman, and so he came to his wife, Zainab, as she was tanning a leather and had sexual intercourse with her ‘ :

http://www.usc.edu/dept/MSA/fundamentals/hadithsunnah/muslim/008.smt.html

http://www.usc.edu/dept/MSA/fundamentals/hadithsunnah/muslim/008.smt.html

[12] – http://www.usc.edu/dept/MSA/fundamentals/hadithsunnah/muslim/008.smt.html

[13] –http://www.usc.edu/dept/MSA/fundamentals/hadithsunnah/muslim/008.smt.html

[14] – Koenraad Elst in ‘ Ayodhya and After ‘ Page 199

—-

http://islaam.blogdrive.com

(நீக்கங்கள் உண்டு – திண்ணை குழு)

Series Navigation

நேச குமார்

நேச குமார்