கடிதம் நவம்பர் 11,2004

This entry is part of 55 in the series 20041111_Issue

K.ரவி ஸ்ரீநிவாஸ்


திண்ணை ஆசிரியர் குழுவினருக்கு

கீதை குறித்து நான் எழுதியதில் பிறர் கூறியது குறித்துதான் அதிகம் கூறியிருக்கிறீர்கள், உங்கள் கருத்துக்களை ஏன் எழுதவில்லை என்று சிலர் எனக்கு மின்னஞ்சல்கள் அனுப்பியுள்ளனர்.ஒருவர்

தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சித்திருக்கிறார்.

கீதையை நான் பள்ளி நாட்களிலே படிக்க ஆரம்பித்தாலும், பல உரைகளைப் படித்து, தொடர்புடைய மேலும் பல நூல்களைப் படித்தது கல்லூரியில் படிக்கும் போதுதான். கீதை குறித்து எனக்கு பல கேள்விகள்

எழுந்த காலம் அது. சில கேள்விகளுக்கு விடை கிடைத்தது அப்போது, ஆனால் பின்னர் அவற்றை

மறு பரீசலனை செய்ய வேண்டியதாயிற்று. நான்கு வர்ணம் குறித்து பல உரைகள், விளக்கங்கள் படித்தும்,

எனக்கு திருப்தி ஏற்படவில்லை. கீதை குறித்த என் வினாக்களுக்கு பதில்கள், பதில்களுக்கான

துவங்கு புள்ளிகள் முற்றிலும் எதிர்பாராத நூல்கள்,விவாதங்கள்,சிந்தனையாளர்களிடமிருந்து, கிடைத்தன. மார்க்சியமும், இருத்தலியமும் சில தெளிவுகளைத் தந்தன.அறவியல் கோட்பாடுகள், விவாதங்கள் வேறு சிலவற்றை புரிந்து கொள்ள உதவின. அன்றைய சங்கரர் முதல் இன்றைய அமர்த்த்யா சென் வரை பலரது

எழுத்துக்கள் எனக்கு கீதையை புரிந்து கொள்ள உதவியுள்ளன. எனவே இன்னும் கீதையை ஒரு வகையில் நான் உரையாடலுக்காக பயன்படுத்திக் கொண்டுதானிருக்கிறேன் என்று சொல்வேன்.சில ஆண்டுகளுக்கு முன் இணையத்தில் கிடைத்த கட்டுரை ஒன்றில் எனக்கு எழுந்த ஒரு முக்கியமான கேள்வி இன்னொருவருக்கும் வேறொரு கோணத்தில் எழுந்திருக்கிறது, அவரும் கிட்ட்தட்ட என்னுடைய முடிவிற்கே வந்திருக்கிறார் என்பதை அறிந்தேன்.

சிலருக்கு வாழ்க்கையின் கேள்விகளுக்கான விடைகள் அனைத்தும் நார்மன் வின்செண்ட் பீலே எழுதியவற்றில் கிடைக்கலாம், சிலருக்கு அர்த்தமுள்ள இந்துமதம் போதும். சிலருக்கு விடைகளை விட விடைகளை கண்டறிய மேற்கொள்ளும் பயணமும், எழும் கேள்விகளும், அவற்றை எதிர் கொள்ளும் முறையும் முக்கியம். எனக்கு விடை காண என்று சொல்வதை விட, சரியான கேள்விகளை கேட்க பலரது எழுத்துக்களும்,சிந்தனைகளும் உதவியுள்ளன என்பது இன்னும் பொருத்தாமாயிருக்கும்.புரிதல் என்பது ஒரு புள்ளியில் நின்று நிலைத்து விடுவதில்லை. கேள்விகளுடன் ஆயுள் முழுவதும் பயணம் செய்வது என்னைப் பொருத்தளவில்

தவிர்க்க முடியாதது. உபநிடதங்கள் சிலவற்றைக் குறித்து ஒரு புதிய கண்ணோட்டத்தினை கடந்த ஆண்டு வெளியான Crisis in Knowledge என்ற நூல் தந்தது. சமீபத்தில் படித்த கட்டுரையிலிருந்து, உடல் உழைப்பு -மூளை உழைப்பு குறித்தது, சிலவற்றை புரிந்து கொண்டேன். இது கீதை என்னுள் எழுப்பிய வினாக்களுக்கு, கீதை குறித்த என் வினாக்களுக்குத் தொடர்புடையது.ஆனால் இன்று என் பிரதான ஆராய்ச்சிஅக்கறை இன்று கீதையோ உபநிடதங்கள் அல்ல என்பதால் இது குறித்து மேலும் படிக்கவும், எழுதவும் இப்போது இயலாத நிலையிலிருக்கிறேன்.

கீதை குறித்த விளக்கங்கள் குறித்த என் வாசிப்புகள், எனக்குக் எழுந்த கேள்விகள், என் கேள்விகளை தெளிவாக்க உதவிய சிந்தனைகள், சிந்தனையாளர்கள், இவை குறித்த என் கண்ணோட்டங்கள் இவையெல்லாம் தொகுத்து என்றேனும் ஒரு நாள் ஒரு நூலாக எழுத முடியுமென நினைக்கிறேன். இப்படி பல கேள்விகளை எழுப்பிய நூல் என்ற அளவில் கீதை எனக்கு ஒரு முக்கியமான நூல்தான். ஆனால் அதை முன்னிறுத்தி ஒரு மலினமான அரசியல் செய்ய என்றும் நான் தயாரில்லை.

K.ரவி ஸ்ரீநிவாஸ்

—-

k.ravisrinivas@gmail.com

Series Navigation