கடிதம் ஆகஸ்ட் 5, 2004

This entry is part [part not set] of 61 in the series 20040805_Issue

அரவிந்தன் நீலகண்டன்


வழக்கறிஞர்கள் மத்தியில் சொல்வதுண்டு, ‘வழக்கு சாதகமாக இருந்தால் பலமாக வழக்கை பிடி. வழக்கு சாதகமாக இல்லையா பலமாக மேசையை குத்து ‘ என்று. பித்தன் மேசையை குத்தோ குத்தென்று குத்தியது மட்டுமல்ல, மேசை மேலேயே ஏறி தன் கருத்தியல் சூனியத்தையும் சட்டசபை எம்.எல்.ஏக்கள் பாணியில் காட்டியிருக்கிறார்.

பித்தன்: மொரார்ஜி தேசாயும் அவர் அப்பாவும் சேர்ந்து வந்து பாராளுமன்றத்திலேயே சொல்லியிருக்கிறார்கள் ‘ஆர்.எஸ்.எஸ்-ற்கு சம்பந்தமில்லை என்று ‘ என்கிறார்! கூடவே இருந்த கொலைகாரனின் அண்ணன், அவன் கடைசி வரை ஆர்.எஸ்.எஸ்-ல் தான் இருந்தான் என்கிறார். அதை ஒத்துக்கொள்ள மாட்டார்களாம். சில அரசியல்வாதிகள், ஏதோ அரசியல் காரணங்களுக்காக சொன்னதை மட்டும் ஒத்துக்கொள்வார்களாம்

உண்மை: நீதிமன்றங்களும், விசாரணை கமிஷன்களும் காந்திஜி கொலைக்கும் ஆர்.எஸ்.எஸ்ஸுக்கும் தொடர்பில்லை எனக் கூறினவே தவிர அரசியல்வாதிகள் அரசியல் காரணங்களுக்காகக் கூறவில்லை. ஆர்.எஸ்.எஸ்ஸில் இருந்த கோட்சே பின்னர் ஆர்.எஸ்.எஸ்ஸிலிருந்து விலகியதும், ஆர்.எஸ்.எஸ்ஸை காங்கிரசின் கைக்கூலி என அவர் தீவிர ஹிந்துத்வவாதிகளாக தங்களை கருதிக்கொண்டவர்களுக்கு உள்ளாகவே நடத்திய உள்சுற்று பத்திரிகையில் கடுமையாக விமர்சித்ததும், கபூர் கமிஷனில் விலாவாரியாக அலசப்பட்டுள்ளன. ‘காந்திஜியின் கோட்பாடுகளில் சில ஆர்.எஸ்.எஸ்ஸால் கடுமையாக விமர்சிக்கப்பட்டாலும், அது மகாத்மாவை கொலை செய்யும் அளவுக்கானதாக எப்போதும் இருந்ததில்லை ‘ என்பதாக கூறியது கபூர் கமிஷன் எந்த அரசியல்வாதியுமல்ல.

பித்தன்: தெகல்கா-க்களும், rediff-களும் கடித ஆதாரங்களுடன் சாவர்க்கர்கள் பற்றியும், வாஜ்பாயிகள் பற்றியும் புட்டு புட்டு வைத்துவிட்டதற்குப் பிறகும் இணையதள உலகில் வந்து ‘சாவர்க்கர் வானத்தை வில்லாய் வலைத்தார், மலையப் புடுங்கி -யிறாகத் திரித்தார் ‘ என்று சொல்பவர்களை என்ன சொல்ல ? இன்னொருவர் பாய்ந்து வந்து, ‘சாவர்க்கர் எப்படி வீரமாக கப்பலில் இருந்து தப்பித்தார் தெரியுமா ‘ என்று சொல்கிறார், எதற்காக கப்பலில் கொண்டுவந்தார்கள் என்பதை கவனமாக சொல்லாமல் விட்டுவிட்டு. தப்பியோடிய கொலைகாரன், அவனைப் பிடித்து அந்தமான் சிறையில் போட்டிருக்கிறார்கள். அந்தமான் சிறையில் இருந்த ஒரே காரணத்துக்காக (அதுவும் ஆங்கில வார்டன்களிடம் கஷ்டப்படாமலிருக்க கெஞ்சி கூத்தாடியவரை) ‘வீர ‘ பட்டம் போட்டு அழைப்பது உண்மையான வீரர்களை அசிங்கப் படுத்துவது போன்றதாகும்.

உண்மை: 1. வீர சாவர்க்கரை கைது செய்தது எதற்காக என்பது அனைவருக்கும் தெரியும். இதில் எந்த ஒளிவுமறைவும் இல்லை. குறிப்பாக இந்த சர்ச்சையில் இது குறித்து பேச தொடங்கியவர்கள் வீர சாவர்க்கரை ஆதரிப்பவர்கள் அல்ல. ஆனால் அவரது கருணை மனு குறித்து பாதி உண்மைகள் தான் சிலரால் பேசப்படுகின்றன என்பதுதான் உண்மை. உதாரணமாக, விடுதலையான பின்னரும் நேதாஜிக்கு ஆதரவாக செயல்பட்டதும், வீர சாவர்க்கருக்கு நேதாஜி ஆஸாத் ஹிந்த் வானொலியில் நன்றி தெரிவித்ததும் ஆவண உண்மைகள். அதைப்போலவே அந்தமான் சிறை ஆவணங்களில் அவர் கருணை மனு எழுதியபின் பிரிட்டிஷ் விரோத இலக்கியங்களை வைத்திருந்ததற்காக தண்டிக்கப்பட்டதும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

விமர்சனம்: ஒரு விடுதலை வீரரை கொலைகாரன் என்று எழுதும் பித்தனின் பித்தம் குறித்து கவலையில்லை. நாளைக்கு அவருக்கு காந்தி மேலும் பித்த வாந்தி எடுக்க ஆவல் வந்தால் ‘உப்பு திருடன் ‘ என்று உப்பு சத்தியாகிரகத்தைக் கூறக்கூடும். முழு உண்மையையும் சுட்டிக்காட்டிய பின்னரும் இதை மீண்டும் மீண்டும் கூறி கோயபல்ஸ்தனமாக செயல்படும் குள்ளநரித்தனத்துடன் ‘மலயப் பிடுங்கி -யிராக சாவர்க்கர் திரித்ததாக ‘ பித்தன் உண்மையிலேயே பண்பாடுடைய நடுநிலைவாதிதான்!

பித்தன்: சங்கப்பாடல் குறித்த கேள்வி.

பதில்: தேசம் முழுவதுமானதோர் புனிதத்தன்மையை காட்டுவதாக அப்பாடல் அமைகிறது. இமயத்தினையும், கடலையும், இத்தேச ஆறுகளையும், வனங்களையும் தெய்வங்கள் உறையும் புனிதத்தன்மை வாய்ந்தவையாகக் காணும் பார்வை ஹிந்து தர்மத்தின் பார்வை. மசூதியில் உள்ள கல்லுக்கும் சரி, வேளாங்கண்ணி சிலுவைக்கும் சரி அத்தகைய மண் சார்ந்த புனிதத்துவத் தன்மை ஆபிரகாமிய மதக் கருத்தியலில் இருக்கும் வாய்ப்பு இல்லை. இந்த மண்சார்ந்த புனிதப்பார்வை பாரதத்தின் தேசிய ஒருமைப்பாட்டில் முக்கிய பங்கும் ஆற்றுகிறது. இந்த கற்பூர வாசனையை அறியும் பிறவியாக பித்தன் இல்லாத காரணத்தால் இதனை நான் விளக்க முற்படவில்லை. இதனை அவரே உணர்ந்திருப்பார். ஆனால் இந்த மடத்தனமான கேள்விக்கு பதில் சொல்லாததை ஏதோ நேர்மையின்மை போல காட்ட முற்படும் தந்திரத்தோடு செயல்படும் இவரது நேர்மை எந்த அளவு இருக்கிறது ? புறநானூற்றில் நான் ஒரு பாடலை மேற்கோள் காட்டி வேதம் புறநானூறுக் காலத்திலும் தமிழர் பாரம்பரியத்தில் ஒன்றியிருப்பதைக் காட்டினேன். திருவாளர்.நடுநிலைவாதி பித்தன் என்ன செய்தார் ? அந்த மேற்கோளை அப்படியே வெட்டி அதிலிருந்து ஒரே ஒரு வார்த்தையை எடுத்து முதுநூல் என்றால் எப்படி வேதம் என்கிறாய் என்றார். பின்னர் மடையன் நான் மீண்டும், ‘ஒன்று புரிந்த ஈர்-இரண்டின்

ஆறு உணர்ந்த முதுநூல் ‘ என்பது

நான் மேற்கோள் காட்டிய ஆவூர் மூலங்கிழார் பாடல் என்றும் ஆறு அங்கங்களோடு திகழும் நான்மறை என்பது இதன் பொருள் என்று சொல்லி ‘அமர ஓர் அங்கம் ஆறும் வேதம் ஓர் நான்கும் ‘ என்பது ஆழ்வார் மொழி என்றும் கூறினேன். அவர் பெரிய மனிதர். மதச்சார்பற்ற நடுநிலைவாதி. எதையும் எப்படியும் வெட்டி கேள்வி கேட்பார். பதில் சொல்ல வேண்டியது ஹிந்துத்வ பாசிஸ்ட்டின் கடமை. இதைவிட கேவலமான ஒரு விமர்சனத்தையும் வைத்திருந்தார் திருவாளர்.நடுநிலைமை. நக்கீரரின் திருமுருகாற்றுப்படையில் முருகனின் ஒரு திருமுகம் அந்தணர் வேள்வியை ஏற்கும் என வந்ததால் அது தமிழருடையது அல்ல என்றாகிறதாம். தர்க்கமையா தர்க்கம். விஷ்ணுபுரத்து சுடுகாட்டு சித்தனின் பின்நவீனத்துவ இஷ்டையிலில் தர்க்கத்துக்காகவே தர்க்கம். மேல்மாடி இந்த இலட்சணத்தில் டாரிசெல்லி வெற்றிடமாக இருக்கிற ஆசாமிக்கு பதில் சொல்லிக்கொண்டிருந்தால் கருணாகரரும் நிஷ்டாபரரும் தோற்றுப்போவார்கள். இனி வணிகர் வீதி என்று வந்தால் அது வணிகர் வீதி தமிழருடையது அல்ல என்பார் போல. இந்த இலட்சணத்தில் ‘நான் என்ன அறிவு பூர்வமாக கேட்டிருக்கிறேன் அற்பபதரே பதில் சொன்னாயா நீ ‘ என்கிற பாணியில் கேள்வி வேறு கேட்கிறார். மன்னிக்கணும் பித்தன் சார் உங்க லெவலுக்கு பதில் சொல்லுகிற அளவு புத்திசாலி நிச்சயமாக சங்கத்தில் யாரும் கிடையாது. ஏன்னா நீங்களே சொன்னமாதிரி உங்களை மூளை சலவை எல்லாம் பண்ண முடியாது.

பித்தன்: (அவர் சொன்னதை அப்படியே தராமல் வசன பாணியில் தருகிறேன்) கல்விநிலையம் வைத்தாயா ? ஏழை மாணவர்களுக்கு கல்வி சேவை ஆற்றினாயா ? மிஷினரிகளைப் பார்! ஏழைகளின் கல்விக்கண்களை திறக்கும் அந்த தியாகசீலர்களை பார்! அங்கு கட்டணம் எவ்வளவு குறைவாக இருக்கிறது தெரியுமா ? ஆனால் ஹிந்து கல்விநிலையங்களில் கல்விக்கட்டணம் எப்படி இருக்கிறது தெரியுமா ? தெரசா செய்த சமூக சேவையை உமாபாரதி செய்தாரா அல்லது சுஷ்மா சுவராஜ் செய்தாரா ? யார் வெளிநாட்டுக்காரர் ? எனவே சோனியா பிரதமராக வந்தால் என்ன தவறு ? அவர் பிரதமர் பதவியை தியாகம் செய்தது எவ்வளவு பெரிய பெருந்தன்மை! etc.

பதில்: திருவாளர். பித்தர் முதலில் இந்தியாவில் கல்வி நிலையங்கள் வைப்பதில் சிறுபான்மையினருக்கு இருக்கும் சலுகைகளை தெரிந்து கொள்ளவேண்டும். சோனியாவின் இத்தாலியில் ஹிந்துமதம் மதமாகவே இன்னமும் அங்கீகரிக்கப்படவில்லை. ஆனால் இந்தியாவில் ஒரு சிறுபான்மை சமுதாயத்தைச் சார்ந்த கல்வி நிறுவனம் அரசின் இடையூறுகள் இன்றி ஒரு வெளிநாட்டவரால் கூட நடத்தப்பட முடியும். அதைப்போல ஹிந்து நிறுவனங்களில் அரசின் தலையீடு எந்த அளவுக்கு போக முடியும் என்பதற்கு ஒரு உதாரணம், ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் தங்கள் சேவை நிறுவனங்களில் மேற்கு வங்க மார்க்சிய அடிப்படைவாத அரசின் தலையீட்டால் தங்களை சிறுபான்மையினர் என அறிவிக்க நீதிமன்றத்திடம் வேண்டிய காட்சி. இதே மார்க்சிய வெறியர்கள் இன்றைக்கு தெரசாவுக்கு சான்று பகர நாக்கைத் தொங்கப்போட்டுக்கொண்டு மத அபின் வாயில் ஒழுக கல்கத்தாவிலிருந்து வத்திகானுக்கு கேட்கும் படியாக ஓலமிடுகின்றனர். பித்தன் ஒருவிஷயத்தை முடிந்தால் புரிந்து கொள்ளட்டும். இன்றைக்கு தேசமுழுமையாக இயங்கும் பரந்த அளவிலான ஒரு கல்வி சேவை ஸ்தாபனம் வித்யா பாரதி. ‘ஓராசிரியர் பள்ளி ‘ எனும் சங்க செயல்திட்டம் இன்றைக்கு மற்ற வளர்ந்த நாடுகளில் ஒரு நல்ல முன்மாதிரியாக அடையாளம் காணப்பட்டு வருகிறது. ஆனால் இதற்கு முற்போக்குகளின் எதிர்வினை என்ன ? எந்த ஆதாரமுமின்றி பிஜு மாத்யூஸும் இன்னபிறரும் குஜராத் கலவரங்களுக்கும், சங்கம் செய்து வரும் வனவாசி சேவைகளுக்கும் முடிச்சு போட்டு ஒரு அறிக்கையை உருவாக்கினர்.அவ்வறிக்கை ஹிண்டு உட்பட பல பத்திரிகைகளிலும் பிற ஊடகங்களிலும் பிரதான இடம் கொடுக்கப்பட்டது. குஜராத் பூகம்ப நிதிகளை ஏதோ ஆர்.எஸ்.எஸ் காரர்கள் ஆயுதம் வாங்கப்பயன்படுத்தியதைப் போல./ ஆனால் இந்த புகார்களை விசாரித்த பின்னர் அவை பொய் என பல அதிகாரிகளும் கூறியது இந்த பத்திரிகைகளில் வரவில்லை. ஆக, ஆர்.எஸ்.எஸ் காரர்கள் கல்வி-மருத்துவ சேவை செய்தால் அதை தடுக்க தன்னாலான உச்ச ஸ்தாயியில் ஊளையிட வேண்டும்; ஹிந்து கோவில்களை அரசு தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்; ஹிந்து கல்வி நிறுவனங்கள் நடத்த தன்னால் வேண்டிய அத்தனை இடையூறுகளையும் செய்வதோடு மற்ற மதத்தினரின் கல்வி நிறுவனங்களுக்கு – அது மதச்சார்பற்ற கல்வி நிறுவனமாக இருந்தாலும் கூட, வேண்டிய சலுகைகளை செய்ய வேண்டும். இதற்கு பெயர் மதச்சார்பின்மை. இந்த கேடுகெட்ட மதச்சார்பின்மைக்கு ஆதரவாக பேசுகிற ஆசாமி நாணமற்ற முறையில் ‘நீங்கள் என்ன சேவை செய்கிறீர்கள் ‘ என்று வேறு கேட்பார். அதற்கு நான் பதில் சொல்ல வேண்டும்.

அடுத்ததாக தெரசா! ஒரு நிமிஷம் நான் அசந்துவிட்டேன். தேர்தலில் நிற்பது தெரசாவா அல்லது சோனியாவா என்று. சோனியா எந்த தொழுநோயாளியை தொட்டு தூக்கினார் ? சோனியா வயதான ஒரு இந்தியரை தன் காலணியை எடுத்து நீட்ட வைத்து அதில் தன் காலை செலுத்தும் அழகிய புகைப்படம் வெளிவந்தது ஒரு வேளை பித்தன் கண்களுக்கு தெரியாமல் இருக்கலாம். எனவே மடத்தனமாக உள்ளது பித்தன் உளறுவது! சோனியா குடியுரிமை பெற்ற மாய்மாலம் வக்கிரமானது. முதலில் தன் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்து பின்னர்ரது நீக்கப்பட்டு …ஒருவேளை ‘அன்னை ‘யார் இந்திராவின் மருமகளானவுடனேயே இந்திய குடிமகளாகிவிட்டாரோ ? அப்படி இந்திய சட்டத்தில் இருக்கிறதா என்ன ? இப்போது வெரோனிக்கா ‘அன்னை ‘யாரையும் சோனியா ஏற்றுவிட்டதால் அந்த ‘அன்னை ‘யாரும் இப்போதிருந்தே இந்திய குடிமகள்தானா ? மன்னித்துவிடுங்கள் பித்தன் ஏதோ வேகத்தில் கேட்டுவிட்டேன். தொழுநோயாளியை நீ தொட்டாயா நீ எப்படி அன்னை வெரோனிக்காவை பேசலாம் என்று ஒரே போடாக போட்டார்களென்றால் நான் அம்பேல். சோனியா பிரதமர் பதவியை உதறியதில் பெருந்தன்மையாம் ? அட காங்கிரசில் ஒரு பதவியையும் வகிக்காமலே கோடிக்கணக்கான சொத்துள்ள அரசு டிரஸ்டை அபேஸ் செய்ய பார்த்த அம்மணிக்கு இந்த தந்திரம் கூடவா வராது. நீதிமன்றமே தலையிட்டு இது எப்படி செய்யலாம் என்று கேட்டதால் IGNCA தப்பியது. இதில் பெருந்தன்மையையும், தியாகத்தையும் பார்க்கக் கூடிய அளவு இளிச்சவாய்தனத்திற்கு ஈவெரா பகுத்தறிவுதான் வேண்டும் .

அப்புறம் திருமாவளவன். அவர்தான் தன்னை இந்து அல்ல என்கிறாரே பின்னே அவருக்கு என்ன வேலை தேர் இழுப்பதில். திடாரென்று தேர் இழுப்பதில் ஆசை வந்துவிட்டதா ? அல்லது ஏதாவது வேண்டுதலா ? அப்படி என்றால் அந்த ஆசாமி முதலில் அதை வெளிப்படையாக சொல்லட்டும். அதன் பின் கைது செய்தால் அது அநியாயம். ‘நான் ஹிந்து அல்ல, ஹிந்து மதம் அடிமைத்தனம். ஹிந்து பெயர் வேறு தமிழ் பெயர் வேறு ‘ என்று கூறுகிற ஆசாமிக்கு ஊர் கூடி தேர் இழுக்கிற இடத்தில், கொல்லன் பட்டறையில் ஈயாக, என்ன வேலை ?

இதற்கிடையே கூத்திலே கோமாளி என்பதாக ஒரு இஸ்லாமிய மேன்மைவாதி கைபர்-போலன் வழியாக வந்த கள்ளக்குடியேறிகளை குறித்து பேசுகிறார். அகழ்வாராய்ச்சிகளும் மானுட பரிணாம அறிவியலும் கூறும் உண்மைகளை அறியாது இப்படி உளற நிச்சயமாக கலப்படமற்ற ‘தூய ‘ அராபிய கிணற்றில் கிணற்றுத் தவளையாக இருப்பவர்களால்தான் முடியும். டேல்ஸும், கென்னோயரும், ஷாப்பரும் (அம்பேத்கரும், விவேகானந்தரும், பாரதியும், ஸ்ரீ அரவிந்தரும் ஏற்கனவே சொல்லிய விஷயம்தான் என்றாலும், எஸ்.ஆர்.ராவ்வும், பி.பி.லாலும், பிஷ்ட்டும் நிரூபித்த விஷயம்தான் என்றாலும், இவர்களுக்கு வெள்ளைத்தோல் இல்லாததால் அவர்களுக்கு காவி நிறமடிக்க உங்களது ‘பச்சை புத்தி ‘ ‘சிவப்பு கண்கள் ‘ உள்ளவர்களுக்கு வக்கிர வசதியிருக்கும் என்பதால் அவர்களை விட்டுவிடுகிறேன்.) பாகிஸ்தானிய வெயிலில் ஹரப்பாவிலும் மொகஞ்சதாரோவிலும் தேடு தேடென்று தேடிவிட்டு கள்ளக்குடியேறி கதையெல்லாம் கலப்படமற்ற பொய் என்று சொன்னாலும், நம் கலப்படமற்ற புனித கிணற்று தவளைகளுக்கு ஏறுவதில்லை. அப்புறம் ‘பெண்களை பொட்டுக்கட்டி தேவதாசியாக்குதல் ‘ சமூக சீர்கேடுகள் ‘இந்து வேதங்களில் அங்கீகரிக்கப்பட்டிருப்பதாக ‘ தூயகிணறுவாசி கூறுகிறார். இந்த பலே கண்டுபிடிப்பு இவருடையதா அல்லது ஏதாவது இறைவாக்கு இறக்கமா தெரியவில்லை. ஹிந்து வேதங்களான நால்வேதங்களில் இந்த சமுதாய முறை எங்கு வருகிறதென்று அவர் விளக்கலாம். அல்லது ஏதாவது குகையில் இறக்கப்பட்டதாக நம்பப்படுகிற ஏகஇறை சமாச்சாரங்கள் கூறும் வலதுகைக்கு பெண்டாள பெண்கள் கொடுக்கப்படுவதில் இருக்கும் பெண்ணுரிமை பேணல் குறித்து அடுத்த திண்ணையில் மேற்படி தவளையார் இன்னும் ‘பொளந்து ‘ கட்டலாம். அல்லது ஒரு விதவை தானே ஒரு கணவரைத் தேர்ந்தெடுத்து மறுமணம் புரியுமளவு சுதந்திரம் இருந்த அரேபியாவில், ஏகஇறை தத்துவம் எனும் இருள் ‘இறங்கிய ‘ பின், ஏன் சில ‘தேர்ந்தெடுக்கப்பட்ட ‘ விதவைகள் மறுமணம் புரிய தடைவிதிக்கப்பட்டனர் என்பது குறித்தும் சப்பைக்கட்டு கட்டலாம்.

சில தவிர்க்கமுடியாத தனிப்பட்ட காரணங்களால் ஒரு சில மாதங்கள் திண்ணையில் எழுத முடியுமெனத் தோன்றவில்லை. உளவியல் ஆய்வுகள் குறித்த ஒரு கட்டுரைத் தொடர் எழுத எண்ணித் தொடங்கியது பாதியில் நிற்கிறது. அவ்வாறே பரிணாம அறிவியலாளர்கள் குறித்து எழுத எண்ணித் தொடங்கியதும் லெமார்க்குடன் நிற்கிறது. முடிந்தால் விரைவில் அவற்றை தொடர்கிறேன். திண்ணை ஆசிரியர் குழுவிற்கு இந்த சில ஆண்டுகளில் என்னால் ஏற்பட்டிருக்க கூடிய அர்ச்சனைகள் முதல், ஒருவேளை முதிர்ச்சியற்ற ஒருவேளை தவறான எனது சில கட்டுரைகளால் காயப்பட்டவர்கள் அல்லது ஆத்திரமடைந்தவர்கள் ஆகிய அனைவரிடம் உளப்பூர்வமான மன்னிப்பினைக் கேட்டுக்கொள்கிறேன். குறிப்பாக சிறுபான்மையினரை நான் தாக்கி எழுதியதாக கூறப்படுவது குறித்து ஒரு தன்னிலை விளக்கத்தை அளிக்க வேண்டியவனாக உள்ளேன். சிறுபான்மை எனக் கருதப்படும் சமயங்களின் பரவுதன்மை குறித்தும், அவ்வாறு பரவுத்தன்மையின் ஆர்வலர்களாக உள்ளவர்கள் இச்சமயங்களின் குறுகலான ஒற்றைப்பரிமாண சித்திரங்களை விற்பவர்கள் என்பதனையே நான் விமர்சித்துள்ளேன். உடன் கூடவே இச்சமயங்களுடன் பாரத தர்மங்கள் ஒரு வேதாந்த அடிப்படையில் உரையாட முடிவதற்கான புள்ளிகளை தேடியே வந்துள்ளேன். இது எனக்கு தனிப்பட்ட முறையிலும் முக்கியமானது. எனவேதான் Gnostic Gospels குறித்தும், பியரி சார்டின் குறித்தும், சூஃபித்துவ இஸ்லாம் மேற்கின் தனி-ஆளுமை-கடந்த உளவியலுடன் உருவாக்கியுள்ள உரையாடல்கள் குறித்தும் எழுதியுள்ளேன். எனவே நிச்சயமாக என் எழுத்துக்களை முத்திரை குத்துவதற்கும் அப்பால் அவற்றின் முழுமையில் யாராவது என்றாவது காண்பார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது. என்னை சகித்த திண்ணை வாசகர்களுக்கும், சக திண்ணை எழுத்தாளர்களுக்கும் நன்றி.

—-

infidel_hindu@rediffmail.com

Series Navigation

அரவிந்தன் நீலகண்டன்

அரவிந்தன் நீலகண்டன்