சிங்கப்பூரில் 7வது தமிழ் இணைய மாநாடு – டிசம்பர் 11,12

This entry is part [part not set] of 61 in the series 20040805_Issue

அறிவிப்பு


‘நாளைய உலகில் தமிழ்த் தகவல் தொழில்நுட்பம் ‘ குறித்து விரிவாக விவாதிக்கும்

இந்த ஆண்டின் தமிழ் இணைய மாநாடு டிசம்பர் மாதம் 11,12 ஆகிய நாள்களில் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற உள்ளது. இதனை தமிழ் இணைய மாநாடுகளை நடத்தி வரும் உத்தமம் அமைப்பின் தலைவர் திரு.முத்து நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

இணையத்தில் மிக வேகமாக வளர்ச்சி கண்டு வரும் மொழிகளில் ஒன்று தமிழ். இன்று இணையத்தில் ஆங்கிலத்தைப் பயன்படுத்தி செய்யக்கூடிய செயல்களில் பெரும்பாலனவற்றை- அநேகமாக அனைத்தையும்- தமிழ் மொழியைப் பயன்படுத்தியே செய்ய முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வளர்ச்சியை மேம்படுத்தவும், தரப்படுத்தவும் உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம் (உத்தமம்) 1997ம் ஆண்டு துவங்கி ஆண்டுதோறும் அனைத்துலக மாநாடுகளை நடத்தி வருகிறது. இந்த வரிசையில் இந்த ஆண்டு நடைபெற இருப்பது 7வது தமிழ் இணைய மாநாடு ஆகும்.

இந்த 7வது தமிழ் இணைய மாநாடு டிசம்பர் 11,12 தேதிகளில் சிங்கப்பூரில் நடைபெற உள்ளது. இந்த அனைத்துலக மாநாடு சிங்கப்பூரில் நடைபெறுவது இது மூன்றாவது முறை.

‘நாளைய உலகில் தமிழ்த் தகவல் தொழில்நுட்பம் ‘ என்ற பொருளில் நடைபெற உள்ள இந்த மாநாட்டில், தமிழ்த் தகவல் தொடர்பான பிரசினைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன. பலநாடுகளைச் சேர்ந்த சுமார் 50 கணினி வல்லுநர்களும், முன்னணிக் கணினி நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். இந்த ஆண்டு நடைபெற உள்ள இந்தத் தமிழ் இணைய மாநாடு இதற்கு முந்தைய மாநாடுகளிலிருந்து சற்று வேறுபட்டிருக்கும். தமிழ்த் தகவல் தொழில்நுட்பத்தின் வர்த்தக, சமூக பயன்பாடுகள் குறித்த விவாதங்களைக் குறைத்துக் கொண்டு, தொழில்நுட்ப அம்சங்களில் இந்த மாநாடு அதிகம் கவனம் செலுத்தும்.

‘இரண்டாயிரமாவது ஆண்டு மிகப் பெரிய அளவில் தமிழ் இணைய மாநாட்டை சிங்கப்பூர் நடத்தியதைத் தொடர்ந்து நடைபெற்ற தமிழ் இணைய மாநாடுகள் பெரிய அளவிலேயே நடைபெற்று வருகின்றன. தொழில் நுட்பத்தை ஆழ்ந்து பரிசீலிக்கும் விதமாக முதன்முறையாக சிறிய அளவில் இப்போது சிங்கப்பூரில் மாநாடு நடக்க உள்ளது. தமிழ்த் தகவல் தொழில் நுட்பத்தின் பயன்பாடுகளை மக்களிடம் எடுத்துச் செல்வது எத்தனை முக்கியமோ அந்த அளவிற்கு மாறிவரும் தொழில்நுட்பங்களில் தமிழுக்கு உரிய இடம் கிடைப்பது குறித்து ஆராய்வதும் முக்கியமானது ‘ என்று நெடுமாறன் தெரிவித்தார். ‘இந்த மாறுபட்ட வடிவத்தையும் சிங்கப்பூர்தான் அறிமுகப்படுத்த உள்ளது ‘ என்றும் அவர் கூறினார்.

2004ம் ஆண்டிற்கானத் தமிழ் இணைய மாநாட்டை நடத்துவதற்குரிய அனைத்துலக அமைப்புக் குழு, சிங்கப்பூர் மாநாட்டுக் குழு ஆகியவற்றையும் உத்தமம் அறிவித்துள்ளது.

இந்த அனைத்துலக மாநாட்டை சிங்கப்பூரில் நடத்துவதற்கு கிடைத்த வாய்ப்புக் குறித்து மகிழ்ச்சி தெரிவித்த சிங்கப்பூர் மாநாட்டுக் குழுவின் தலைவர். திரு. அருண் மகிழ்நன், ‘ சிங்கப்பூரில் தமிழ் இணைய மாநாடு நடைபெறும் போதெல்லாம் தமிழ் சமூகம் பலனடைகிறது. அனைத்துலகத் தமிழ் சமூகத்திற்கு நாமும் ஒரு சிறிய அளவில் உரிய பங்களிப்பு செய்வதில் மகிழ்ச்சி அடைகிறோம் ‘ என்று தெரிவித்தார்.

மாநாட்டின் நிகழ்ச்சி நிரல், வாசிக்கப்படவுள்ள கட்டுரைகளுக்கான அறிவிப்பு, பேராளர் பதிவு, பயணம் மற்றும் தங்குமிட ஏற்பாடுகள் ஆகியவை குறித்து உத்தமம் அமைப்பின் தலைமைச் செயலகம் அவ்வப்போது அறிவித்து வரும்.

தமிழ் இணைய மாநாடு குறித்த சில தகவல்கள்:

முந்தைய மாநாடுகள்

ஃ 1997: சிங்கப்பூர்

ஃ 1999: சென்னை

ஃ 2000 சிங்கப்பூர்

ஃ 2001 கோலாலம்பூர்

ஃ 2002 சான்பிரான்சிஸ்கோ

ஃ 2003 சென்னை

அனைத்துலக அமைப்புக் குழு

ஆலோசகர்கள்

பேராசிரியர். மு. ஆனந்த கிருஷ்ணன் (இந்தியா)

பேராசிரியர்: டான் டின் வீ (சிங்கப்பூர்)

தலைவர்: திரு.முத்து நெடுமாறன்

துணைத்தலைவர்: திரு. அருண் மகிழ்நன் (தலைவர் சிங்கப்பூர் மாநாட்டுக் குழு)

உறுப்பினர்கள்: முனைவர்: கு.கல்யாணசுந்தரம் (சுவிட்சர்லாந்து)

திரு. குமார் குமரப்பன் (அமெரிக்கா)

திரு. உ.ஜெயதீபன் (இலங்கை)

திரு. மாலன் (இந்தியா)

சிங்கப்பூர் ஏற்பாட்டுக் குழு:

ஆலோசகர்கள்: திரு.ரா. இரவீந்திரன் ( சிங்கப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர்)

திரு.த.இராஜசேகர் (தலைவர், தமிழ் இணைய ஒருங்கிணைப்புக் குழு, சிங்கப்பூர்)

தலைவர்: திரு: அருண் மகிழ்நன்

துணைத் தலைவர்கள்: திரு. நாராயணன் ஆண்டியப்பன்

திரு. அழகிய பாண்டியன்

திரு. தி.சு. மணியம்

உறுப்பினர்கள்: திருமதி. தேவி பாலசுந்தரம்

திருமதி. ரமா சங்கரன்

திருமதி. மாலதி செல்வராஜு

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு