கடிதம் – ஜூலை 8, 2004

This entry is part [part not set] of 41 in the series 20040708_Issue

K. ரவி ஸ்ரீநிவாஸ்


வந்ததும், வரவிருப்பதும்

K. ரவி ஸ்ரீநிவாஸ்

திண்ணையில் வெளியாகியுள்ள கட்டுரைகளை படிக்கும் போது கீழ்க்கண்ட கருத்துக்களை/ அபிப்பிராயங்களை முன்னிறுத்தும் கட்டுரைகள், கடிதங்கள் வெளியானால் வியப்படையத் தேவையில்லை என்று தோன்றுகிறது. நீக்கங்கள் உண்டு என்ற திண்ணைக் குழுவின் குறிப்புடன் அக்கட்டுரைகள் வெளியாகலாம்.

1, இந்தியாவில் மக்கள் உரிமை இயக்கங்கள், சிவில் உரிமைகள் குறித்து பேசும் இயக்கங்கள் உண்மையில் ஹிந்த்துவ எதிர்ப்பு இயக்கங்கள்தான், ஹிந்த்துவ எதிர்ப்பை வேறு பெயர்களில் வெளிப்படுத்தவே இவை உருவாக்கப்பட்டன. இவைகளின் பிண்ணனியில் இருப்பவர்கள் நக்ஸலைட்களூம், கம்யூனிஸ்ட்களும்தான். ஸ்டாலினை கண்டித்து பி.யு.சி.ல் தீர்மானம் நிறைவேற்றாதாததை இதற்கு ஒரு ஆதாரமாகக் கொள்ளலாம்.

மோடியை எதிர்க்கும் பி.யு.சி.ல் ஸ்டாலின், போல்பாட்,சதாம் ஹுசைன்,மாவோவிற்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் ஏன் வழக்குத் தொடரவில்லை ?. இதற்கு காரணம் அது கம்யூனிஸ்டுகள், நக்சலைட்களில் கையில் இருப்பதுதான். இதற்கு மாற்று அமெரிக்க சிவில் லிபர்டிஸ் யூனியனின் இந்தியக் கிளையைத் துவக்கி அதுதான் அங்கீகரிக்கப்பட்ட சிவில் உரிமை அமைப்பு என்று சட்டம் மூலம் உறுதி செய்வதே.

2, குஜராத்தில் பா.ஜ.க அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த முஸ்லீம்கள் தங்களை தாங்களை தாக்கிக் கொண்டு ஹிந்துக்கள் மீது பழி சுமத்தினர். அங்கு நடந்தது அவர்கள் நடத்திய நாடகம், இனக்கலவரமல்ல. ஆனால் வாடிகன், ஜிகாதிகளிடமிருந்து பணம் பெற்றுக்கொண்ட ஊடகங்கள் ஏதோ கலவரம் நடந்த்து போன்ற ஒரு தவறான சித்திரத்தை கொடுத்தன.

3, குஜராத்தில் நடந்த கலவரங்கள் குறித்த புகைப்படங்கள், ஆவணப்படங்கள் போன்றவை போலியானவை.

நடக்காத கலவரத்தை நடந்தது போல் காட்டி பாரதத்தின் பெருமைக்கு பங்கம் விளைவிக்கவே இவை உருவாக்கப்பட்டவை. ஆனந்த் பட்வர்த்தனுக்கு ஆவணப்படம் எடுக்கத் தெரியாது, அவர் பெயரில், திருச்சபை எடுத்த ஆவணப்படங்கள் பாரதியரை பாரதியரே இழிவு படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்ட படங்கள்.கணினி தொழில் நுட்பம் கொண்டு லண்டனிலும், நியு யார்க்கிலும் அல் கொய்தா கொடுத்த நிதியைக் கொண்டு உருவாக்கப்பட்டவை இவை. பாரதத்திற்கு எதிராக போப்பண்டவரும், பின் லேடனும் சேர்ந்து உருவாக்கிய, சதியின் ஒரு பகுதியே இது.

4, நாத்திகம் பேசிய பெரியார் நான் நாத்திகன் ஆனால் இந்து என்று சவால் விட்டிருக்க வேண்டும். மக்கள் இயக்கத்தை உருவாக்கியதற்கு பதிலாக உபநிடதங்களுக்கு உரை எழுதியிருக்க வேண்டும். பிள்ளையார் கோயில் கட்டியிருக்க வேண்டும். இதையெல்லாம் செய்யாததால்தான் திராவிட இயக்கங்கள் சீரழிந்தன. பகுத்தறிவு ஒரு தத்துவக் கோட்பாடே அல்ல, ஆன்மாவின் அழிவின்மை என்பது குறித்த தத்துவ விளக்கம் குறித்துத்தான் அவர் அக்கறைக் காட்டியிருக்க வேண்டும். தேவையில்லாமல் வைக்கம் போராட்டம், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவது குறித்த சட்டம் போன்றவற்றில் ஈடுபட்டார்.

5, சித்தர் பாடல்களை மார்கழி மாதத்தில் பஜனை செய்தும், காஞ்சி மடத்தின் வாசலில் நின்று கொண்டு இந்து மதத்தில் நாத்திகத்தின் இடம் குறித்து உரை நிகழ்த்தியிருந்தால் பெரியாரை அங்கீகரிக்க முடியும். அதை விடுத்து பகுத்தறிவு, சுயமரியாதை என்று பேசியதன் மூலம் தன் தத்துவ முதிர்வின்மையை அவர் நீருபித்துவிட்டார்.

6, ஹிந்த்துவம் என்பது ஒரு தத்துவ சர்ச்சையின் வெளிப்பாடு. அதை கலாச்சார தேசியவாதத்துடன் தொடர்புடையது என்று தவறாக இடதுசாரிகள் பிரச்சாரம் செய்கிறார்கள். அதற்குக் காரணம் அவர்களால் ஹிந்து மதம் என்று ஒன்று இருப்பதை ஏற்க இயலாத மனப்பாங்குதான். அசோக் சிங்காலும், பிரவீண் தெகோடியாவும் பேசுவது உயர்ந்த தத்துவம் என்பது அவர்களுக்கு புரியவில்லை, புரிந்து கொள்ளவும் மறுக்கிறார்கள்.

7, பூக்கோவியக் கண்ணோட்டத்தில் ஹிந்த்துவம்தான் சரியான கோட்பாடு, இந்தியாவிற்கு ஏற்றதும் கூட. இது இடது சாரிகளுக்கு புரியாததற்கு காரணம் அவர்களுக்கு தேச பக்தி இல்லாததே. தேச பக்தி இல்லாத எவரும் உண்மையான சமூக அறிவியல் ஆய்வு செய்ய முடியாது. ஆனால் இந்தியாவில் உள்ள பல சமூக அறிவியல் ஆய்வாளர்களுக்கு தேச பக்தி என்பது கிடையாது. எனவே அவர்கள் எழுத்துக்களை மதிக்கத் தேவையில்லை.

வாழ்க கருத்து சுதந்திரம்.

ravisrinivas@rediffmail.com

Series Navigation