கடிதம் ஜூன் 10, 2004

This entry is part [part not set] of 48 in the series 20040610_Issue

ஜெயமோகன் – ரெ கார்த்திகேசு


அன்புள்ள ரெ கார்த்திகேசு அவர்களுக்கு,

திணையில் இந்நூல் மதிப்புரைகளை பாஷாபோஷிணி மலையாள இதழ் வெளியிடும் நூல் மதிப்புரைகளை முன்மாதிரியாகக் கொண்டு எழுதியுள்ளேன். அதாவது அந்நூல்களை இன்னும்படிக்காதவர்களை மனதில் கொண்டு, அதிகமாக நூல்களுக்குள் தலையிடாமல், மாதிரிகளைச் சுட்டி, பொது மதிப்பீடுகளுடன் எழுதுவது. இவ்வகையில் எழுதுபவர் தன் சொந்த பேரில் எழுதுவது முக்கியம். இந்தச் சில வரிகள் அவர் அதுவரை எழுதியவற்றுடன் சேர்ந்தே பொருள் படுகின்றன. ஆகவே சுஜாதா கதையைப்பற்றி அதிகமாகப் பேசமுடியாமலாயிற்று. தாங்கள் பேசியிருப்பதனால் மேலும் சில வரிகள்.

பொதுவாக திறனாய்வு என்பதை நான் ‘பதிவு செய்யப்பட்ட ஒரு வாசிப்பு ‘ என்றே எண்ணுகிறேன். அவ்வாசிப்பு பிறர் வாசிப்புக்கு உதவலாம். உதவாமலும் போகலாம். வாசிக்கையில் கோட்பாடுகளைப் பயன்படுத்துபவர்கள் குறித்து ஆழமான ஏளனம் எனக்கு உண்டு. நான் வாசிக்க ஆரம்பித்த பிறகு குறைந்தது மூன்று திறனாய்வுக் கொட்பாட்டு அலைகள் அடித்து ஓய்ந்துவிட்டன. நல்ல படைப்புகளும் நல்ல வாசிப்புகளும் இவற்றால் தீண்டப்படாமல் நின்றபடியே உள்ளன. என்னைப்பொறுத்தவரை என் மனதை தொடுகிறதா , என் உணர்வுகளையும் கனவுகளையும் பாதிக்கிறதா என்பதே முக்கியமான வினாவாகும். அப்படி உடனடியாக ஏற்படும் மனப்பதிவையெ வாசிப்பின் முக்கிய அனுபவமாகவும் முடிவுகளை உருவாக்கும் அடிப்ப்டையாகவும் கருதுகிறென்.

திறனாய்வாக எழுதும்பொது அந்த வாசிப்பனுபவத்தை மூன்று தளங்களில் ஆராய்ந்து நோக்குவதுண்டு. 1] அப்படைப்பின் மேல்தளத்து மொழி, புனைவு நுட்பங்கள் 2 ] குறைவாகச் சொல்லி நிறைய குறிப்புணர்த்தும் தன்மை. அது குறிப்புணர்த்தும் விஷயங்களின் விரிவு. 3] அவ்வாறு அப்படைப்பின் மூலம் உணர்த்தப்படும் விஷயத்தின் அறம் சார்ந்த, நீதியுணர்வு சார்ந்த, வாழ்க்கை முழுமைசார்ந்த , பிரபஞ்நோக்கு சார்ந்த எழுச்சி.

பிற்பாடு என் தரப்பை சொல்லும்போதுதான் கலைச்சொற்கள், கோட்பாட்டு உபகரணங்கள் தேவையாகின்றன. அவை அருவமான ஒன்றை புறவயமாகச் சொல்வதற்கான கருவிகளே. என்றுமே இலக்கிய திறனாய்வு எதிர்கொள்ளும் சிக்கல் சுயவாசிப்பனுபவம் என்ற ஆழ்மனம் சார்ந்த, அகவயமான நிகழ்வை புறவயமாக பொதுவாக சொல்வதே. அதற்கு ஏற்கனவே உருவாக்கப்பட்ட கோணங்களை, வரையறைகளை அவறின் குறியீடுகளான கலைச்சொற்களை பயன்படுத்தி மேலும் சொல்ல முயல்வதே ஒரே வழியாகும். இதுவே என் திறனாய்வு முறை. என் நோக்கில் இதுவே சாத்தியமான சிறந்த வழிமுறை. இதில் உள்ள அந்தரங்கத்தன்மையே உண்மையில் நிலைத்து நிற்பது.

சுஜாதாவின் கதை அதன் குறிப்புணர்த்தப்படும் விஷயங்களின் விரிவினாலும், அக்குறிப்புகளில் உள்ள அடிப்படையான வாழ்க்கைநோக்கினாலும்தான் முக்கியமானது. அக்கதை மிகச்சுருக்கமாக, தாவித்தாவிச் சொல்லிச் செல்கிறது. சொல்லப்படாமல் விட்டுவிட்ட இடங்களே அதில் முக்கியம். இரு இடங்களை உதாரணமாகச் சொல்லலாம். மிகவெற்றிகரமானவனான பாச்சா மது வெறியில் தன் ஆழத்தில் உள்ள ஓர் ஏக்கத்தை, அதில் உள்ள ஈடுசெய்ய இயலாத தோல்வியைச் சொல்லும் இடம் முதலில். வெற்றி தோல்வி என்பதையே ஒருவகையில் தலைகீழாக்குகிறது அது. பலசாலி அப்படி இருப்பதனாலேயே அனுதாபம் என்பதை அடைவதேயில்லை. நோயுற்றவன் நோய் காரணமாகவே அதிக அன்பை அடையும் அதிருஷ்டமுள்ளவனாகிறான். கதை முழுக்க உள்ள ‘ஆமை முயல் ‘ ஓட்டம் இங்கே தலைகீழாகிறது. இரண்டாவதாக ஆண்டாள் ஏன் ஆராமுதுவை ஏற்கத் திடாரென சம்மதிக்கிறாள் ? கதையில் அவள் மாஞ்சு மீது வைத்துள்ள அதீதமான பிரியத்தின் இன்னொரு தளம் இங்கே விரிகிறது. மாஞ்சு இறந்ததுமே அவள் சட்டென்று விடுதலை அடைந்துவிடுகிறாள். அதாவது அவள் மனதில் மாஞ்சு கணவனின் பிரதிபிம்பமாக இருந்தானா ? கதையில் ஒரே வரியில் முதலியேயே அந்த சமானத்தன்மையை சொல்லியிருக்கிறார் ஆசிரியர். மாஞ்சு அவள் கணவனின் நீட்சி. அவனுக்கு அவள் செய்த பணிவிடைகளுக்குள் மர்மமான பல மன ஓட்டங்கள் உள்ளன. அவன் இறந்ததுமே அவள் கணவன் உள்ளூர முழுமையாக இறந்துவிடுகிறான்.

இக்கதையின் மறைபிரதிகள் [ சப் டெக்ஸ்ட் ] உருவாக்கும் வாழ்க்கைத்தரிசனமும் எனக்கு மனவிரிவை அளிப்பதாக இருந்தது. மனிதர்கள் நெருக்கமாக ஒருவரோடொருவர் பின்னிக் கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் யாரும் யாருடனும் இல்லைதான். அறுபட சில சூழல்கள் சில தருணங்கள் தேவையாகின்றன. மைந்தர்களுக்காகவே வாழ்ந்த ஆண்டாள் ஒரு கணத்தில் தன்னை தான் மட்டுமாகவே அடையாளம் காண்பது அப்படிப்பட்ட ஓர் அறுபடல், ஓர் சிறகடித்தெழல். அது நம் புனைகதையில் முக்கியமான ஒரு தருணம்தான். சிறந்த ஜானகிராமன்கதைகளின் ஆழமும் நுட்பமும் கொண்ட கதை இது.

நீங்கள் சொன்ன ‘மேலைநாட்டு அச்சம் ‘ குறித்து. அப்படி நீங்கள் வாசிக்க இடமிருக்கிறது. ஆனால் அதே நோக்கை விரிவாக்கும் வாய்ப்பு உள்ளது. நகரத்தில் வாழ்பவர்களை கிராமத்தார்களை விட சுயநலமிகளாகத்தானே நம் புனைவிலக்கியம் பொதுவாகக் காட்டியுள்ளது ? அதன் நீட்சிதானே இன்று அமெரிக்க அல்லது ஐரோப்பியரை அப்படிக் காட்டும் நோக்கு. மேலும் யோசித்தால் செல்வந்தர்களை விட ஏழைகளை முக்கியப்படுத்துவதாக்வே உலக இலக்கியத்தின் பெரும்பகுதி இருந்துவந்துள்ளதைக் காணலாம். இன்னும் சொல்லப்போனால் லெளகீக வெற்றி கொண்டவர்களை ஐயத்துடனும் சற்றே வெறுப்புடனும் தான் இலக்கியங்கள் சித்த்ரிக்கின்றன. வெற்றிகளைவிட தோல்விகளையே இலக்கியங்கள் பாடுகின்றன. அர்ச்சுனனை விட கர்ணன் ஒருபடி மேல்தான். லெளகீகம் மேலேயே கலைக்கு ஆழமான ஒரு மன விலகல் உள்ளது. தன்னை அது லெளகீகத்துக்கு எதிரானதாகவே கற்பனை செய்து கொள்கிறது என்று படுகிறது. இந்த அடிப்படை இயல்பு காரணமாகவே அது அதிகாரத்துக்கு எதிரான நிலையை பொதுவாக எடுக்கிறது. நிறுவப்பட்ட உண்மைகளுடன் மாறுபடுகிறது. கோபுரங்கள் சரியவேண்டுமென்ற ஆசையை அது தன்னகத்தே எப்போதும் கொண்டுள்ளது. வானுயர்ந்த விஷ்ணுபுர ராஜகோபுரம் சரியாவிட்டால் அந்நாவல் உங்களுக்கு நிறைவை அளித்திருக்குமா ?

இது கதை என்ற வடிவின் ஆதி நியதிகளில் ஒன்று. அது மனிதனின் ஆழ்மனதில் உருவாகும் நியதி. முற்றிலும் லெளக்கீகராக வாழ்பவர் சுஜாதா. வெற்றிகரமானவர். ஆனால் அவர் தன் கதைகளில் எப்போதுமே லெளகீகத்திற்கு எதிநிலையையே எடுத்திருபதைக் காணலாம். மீண்டும் மீண்டும் அவர் கதைகள் இதையே காட்டுகின்றன. ஜானகிராமனானாலும் சரி எம் யுவனானாலும் சரி கதையின் விதி இதுவாகவே உள்ளது.

ஜெயமோகன்

jeyamoohannn@rediffmail.com


மலேசியக் கொடூரம் பற்றி மத்தள ராயர் எழுதியிருப்பது உண்மையே. பள்ளிக் குழந்தைகள் முன்னிலையில் போதைப்பொருள்கடத்துபவர்களுக்குக்கொடுக்கும் தண்டனையை (கசையடி) நாடகப் படுத்திக் காட்டுவதனால் பிள்ளைகளுக்கு ஏற்படும் மனோவியல் பாதிப்புகள் பற்றிக்கல்விஅதிகாரிகள் ஆராய்ந்தார்களா என்பது தெரியவில்லை. விவேகம் இலாமல் வேகம் மட்டுமே உள்ள போலிஸ் மற்றும் கல்விஅதிகாரிகளால் சில பள்ளிகளில் இவ்வாறு செய்யப்பட்டபின் விழித்துக் கொண்ட அரசாங்கம் இந்த நிகழ்வுகளை இப்போதுதடைசெய்து விட்டது என்பது ஆறுதல் அளிக்கும் செய்தி.

ஆனால் போதைப் பொருள் கடத்துபவர்களுக்கும் விற்பவர்களுக்கும் அளிக்கப்படும் கொடூரத் தண்டனைகளை சுலபமாகக் குறைசொல்லிவிட முடியாது. ஒவ்வொரு போதை மருந்து விற்பனையாளர் தண்டிக்கப்பட்டு சமுதாயத்திலிருந்து அகற்றப்படும் போதும் நூற்றுக்கணக்கான

இளைஞர்கள் அவர்களின் அழிவுப் பிடியிலிருந்து காப்பாற்றப் படுகிறார்கள் என்பது உண்மை. நமது அனுதாபத்தையும் பரிதாபத்தையும் இப்படிப் போதைப் பொருளில் சிக்கிக் கொள்ளும் இளைஞர்கள் பக்கமே திருப்ப வேண்டுமே தவிர தெரிந்தும் குற்றம் புரிபவர்கள் மேலல்ல. மலேசியா விதிக்கின்ற கடுமையான தண்டனைகளினால் (மரணம், கசையடி உட்பட) மலேசியாவுக்குள் போதைப்பொருள் கடத்தப்படுவது கணிசமாகக் குறைந்துள்ளது (ஆனால் ஒழிந்துவிடவில்லை). போதைப்பொருள் கடத்தல், வியாபாரம் செய்வர்கள் மனித உரிமைகளை மீறிய குற்றம் புரிகிறபோது அதற்கான பரிகாரங்களும் அந்த அளவுக்குத் தீவிரமாகத்தான் இருக்க வேண்டியுள்ளது.

ரெ.கார்த்திகேசு.

kgesu@pd.jaring.my


Series Navigation

ஜெயமோகன்

ஜெயமோகன்

கடிதம் ஜூன் 10, 2004

This entry is part [part not set] of 48 in the series 20040610_Issue

அக்னிப்புத்திரன்


தமிழக அரசியலில் திருப்பம்!

முதல்வர் ஜெயின் அதிரடி அறிவிப்புகள்! சலுகைகள்!! நலத்திட்டங்கள்..!!! ஜெக்கு திடார் ஞானோதயம்… அடுத்த திருப்பம் என்ன ? திமுகவின் பலம் மத்தியில் அதிகரித்து இருக்கும் இந்தச் சூழ்நிலையில் ஜெயின் எண்ணவோட்டம் என்னவாக இருக்கும் ? இது ஒரு கற்பனைதான் என்றாலும் இது எதிர்காலத்தில் நடக்காது என்று கூறமுடியாது! ஜெயின் அரசியல் வாழ்க்கையைக் கூர்ந்து கவனிப்பவர்கள் அவரது எதிர்காலத் திட்டத்தை ஊகிப்பது அவ்வளவு சிரமம் இல்லை என்றே தோன்றுகின்றது.

கடந்த மூன்று ஆண்டுகளாக அடுக்கடுக்கான அடக்குமுறையுடன் கூடிய அறிவிப்புகள். சில அரசியல் (சோ)மாறிகளிடமும், (வீர)மணிகளிடமும் இருந்து “தைரியசாலி முதல்வர்” என்ற பட்டம் வேறு. அடிவருடிகளின் ஆலாபனையோ சொல்லிமாளாது. என்னே ஆர்ப்பாட்டம்.! அரசு ஊழியர்களை ஓட ஓட விரட்டிய பரிதாபம்…(பொது மக்களும் ஆதரித்தது போல்தான் காட்சிகள் அமைந்தன) இத்தனையும் தேர்தலுக்குப் பிறகு போன இடம் தெரியவில்லை.

கேட்ட சலுகைகள் கேட்காத சலுகைகள் என அத்தனையும் வரிசை வரிசையாக வலம் வருகின்றன. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், வீடுகளுக்கு மின்கட்டணக் குறைப்பு, அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை தவிர்ப்பு, மாணவர்களுக்கு இலவச பஸ்பாஸ்..பால் கொள்முதல் விலை உயர்வு..மேலும் மேலும் சலுகைகள் வரும் என்ற ஊகங்கள்.

ஜுனியர் விகடன் மற்றும் குமுதம் ரிப்போர்ட்டர் போன்ற அரசியல் வார இதழ்கள் தமிழக சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் வரும் என்று ஆருடம் கூறியுள்ளன. இக்கூற்றை முற்றிலுமாக ஒதுக்கித் தள்ளமுடியாது என்றே தோன்றுகின்றது. ஏனென்றால், ஜெயின் சூழ்நிலையும் அப்படித்தான் அமைந்துள்ளது. திமுக இவ்வளவு உயரத்தில் இருப்பதை அவரால் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள முடியாது.

சரி என்னதான் செய்யக்கூடும் ? கற்பனைதான்..ஆனால் இதுவே எதிர்காலத்து உண்மையாகவும் இருக்கக்கூடும்.

உடனடியாக மக்களிடம் ஆதரவு பெற்றாக வேண்டும். அதற்கு மக்களைக் குளிப்பாட்டும் ஜில் ஜில் அறிவிப்புகள் நாள் தோறும் வெளியாகலாம். அதுதான் தற்போது நடந்துவருகின்றன. அதேசமயம் திமுகவின் மீது சேற்றை வாரியிறைக்க வேண்டும். குறிப்பாக திமுக தலைவர் கருணாநிதி மற்றும் ஸ்டாலின் மீது பாலம் கட்டியதில் ஊழல் என்ற பொய்வழக்கை விரைவுபடுத்த வேண்டும். அதுவும் தொடங்கி விட்டது என்றே சொல்ல வேண்டும். கடந்த வாரம் அதற்கான அறிவிப்பு வெளியானதைப் பலரும் கவனித்து இருப்பார்கள்.

மத்தியில் தமக்குத் தற்சமயம் பஜகவின் ஆதரவு தேவை என்பதால் அதற்கும் காய் நகர்த்தப்படும். என்னதான் திருநாவுக்கரசர் போன்றவர்கள் கடுமையாக விமர்சித்தாலும் இப்போது கண்டுகொள்ளமாட்டார்கள். (இப்பொன்னான வாய்ப்பை திருநாவுக்கரசரும் நன்கு பயன்படுத்தி வருகின்றார்) சகட்டுமேனிக்கு விட்டு விளாசுகிறார். ஆனால் இதையே காரணம் காட்டி பின்னாளில் தேர்தல் நேரத்தில் பஜக உறவு தேவையில்லை என்ற நிலையில் ஜெ. பிரச்சனை பண்ணக்கூடும். பஜக மட்டும் இளைத்தவர்களா என்ன ? திருநாவுக்கரசரையே கட்சியில் இருந்து விலக்கிவிட்டு ஜெயிடம் கையேந்தினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

சரி இன்னும் இரண்டு ஆண்டுகளில் இவை மட்டுமா திட்டமாக இருக்கும் ? இவை வெற்றிக்கு உதவுமா ? கண்டிப்பாக இதைத் தவிர மேலும் பல திட்டங்கள் இருக்கும். கட்சி மட்டத்திலும் ஆட்சி மட்டத்திலும் மாபெரும் மாற்றங்கள் இருக்கக்கூடும். கட்சிக்காரர்களுக்கு “வழிகாட்ட” வாரியங்கள் ஆணையங்கள் பதவி வாரி வழங்கப்படும்.

மாற்று எதிர்முகாமில் இருந்து உதிரி கட்சிகளை உருவமுடியுமா என்ற முயற்சியும் நடக்கலாம். ஆனால் மத்திய மந்திரிகள் என்று பதவிக்கயிறு கொஞ்சம் இறுகக் கட்டப்பட்டுள்ளதால் உதிரிகள் உருள வழியில்லை என்றே தெரிகிறது. இதையும் மீறி “அன்புச்சகோதரி” என்ற பாசம் நிறைந்த நாடகம் உருவானாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை.

தங்களுடன் கூட்டணி ஏற்படாவிட்டாலும் குறைந்தபட்சம் எதிர்முகாமை உடைக்க அனைத்து அஸ்திரங்களும் பயன்படுத்தப்படலாம். சோ போன்ற அரசியல் ஞானிகளுக்கு( ? ? ?) வேலை தரப்படலாம். வாசனை வளைக்கலாமா ? தங்கபாலுவை தக்க வைக்கலாமா ? என்ற ஆராய்ச்சிகள் முடுக்கி விடப்படும்.

அதிமுக, தற்போதைய தேர்தலில் நாற்பது இடங்களிலும் தோல்வியைத் தழுவினாலும் அதன் ஓட்டு வங்கி அப்படியே உள்ளதைக் கவனிக்க வேண்டும். என்னதான் ஆட்டம் போட்டாலும் 28% லிருந்து 32% ஓட்டு நிலையாக உள்ளது.

தற்போது சலுகைகளை வாரியிறைக்கும் நிலையில் மழுங்கிய அல்லது மயங்கிய மக்களின் ஓட்டும் விழ வாய்ப்புள்ளது. எதிர்கட்சிகளின் கூட்டணி உடையும் சூழலில் மும்முனைப் போட்டி என்ற நிலையில் கணிசமான இடங்களை கைபற்றவும் வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது. தமக்கு ஏதாவது பிரச்சனை என்றால்தான் அரசு ஊழியர் போன்ற நடுத்தர மக்கள் பொங்கி எழுந்து ஓட்டு போட ஓட்டுச்சாவடிக்கு வருவார்கள். பிரச்சனை இல்லாவிட்டால் யார் ஆண்ட நமக்கு என்ன என்று கூறி வீட்டில் தொலைக்காட்சியில் சீரியல் பார்த்துக்கொண்டு இருந்து விடுவார்கள். கடந்த திமுக ஆட்சி சிறப்பாக இருந்தும் தோல்வியைத் தழுவியதற்கு இதுவும் ஒரு காரணம்.

அதேசமயம் ஜெ மக்களின் அனுதாபத்தைப் பெறவும் முயலுவார். மத்திய அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகவே தன்னுடைய ஆட்சியைக் கலைக்க காய் நகர்த்துவார் என்றே தோன்றுகின்றது. அதற்காக மீண்டும் கருணாநிதி கைதுபடலம் அல்லது காவேரி பிரச்சனையை உருவாக்கி சட்டம் ஒழுங்கைப் பாதிக்கச்செய்து அதன் காரணமாக மத்திய அரசு ஏதாவது நடவடிக்கை எடுத்தால் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று கூறி முன்பு திமுக ஆட்சியில் நடத்திய தலைவிரிகோல நாடகத்தை மீண்டும் அரங்கேற்றி மக்களிடம் அனுதாபத்தைப் பெற முயல்வார். அதிரடி அரசியல் நடத்துவதில் கைதேர்ந்தவர் ஜெ.

திமுகவும் திமுக தொண்டர்களும் வெற்றிக்களிப்பில் மிதந்துகொண்டு இருக்க அதிமுகவிலோ விரைவாக காய்கள் நகர்த்தப்படுகின்றன. திமுகவும் தன்பங்கிற்கு சில திட்டங்களைத் தீட்டும். ஆக, அடுத்து வரும் இரண்டு ஆண்டுகளில் தமிழக அரசியலில் சுவாரஸ்யமான காட்சிகள் அரங்கேறும் என்பது மட்டும் உண்மை. இறுதி வெற்றி யாருக்கு ? காலம்தான் பதில் சொல்லும்.

-அக்னிப்புத்திரன்.

agniputhiran@yahoo.com


Series Navigation

அக்னிப்புத்திரன்

அக்னிப்புத்திரன்

கடிதம் ஜூன் 10 ,2004

This entry is part [part not set] of 48 in the series 20040610_Issue

அரவிந்தன் நீலகண்டன்


வீர சாவர்க்கர், ஜெய்ராம் பட விமர்சனம், பகவத் கீதை, மதச்சார்பின்மை, காஷ்மீர் கோவில்கள் வரை

தேர்தல் பணி காரணமாக படிக்கமுடியாமல் போன பல திண்ணை விவாதங்களை நிம்மதியாக உட்கார்ந்து படித்தேன். சுவாரசியமான விவாதங்கள் அதைவிட சுவாரசியமான மனநிலைகள்.

வீரசவார்க்கர் மீது விமர்சனம் வைக்கிறார் ஒரு நபர். பிரிட்டிஷ் துணிகளை கொளுத்திய வீரசாவர்க்கர் அதே பிரிட்டனில் போய் படிக்க சியாம்ஜி கிருஷ்ண வர்மாவிடம் உதவி கேட்டாராம். இது வீர சாவர்க்கரின் இரட்டைநிலையை காட்டுகிறதாம். இந்த புண்ணியவான் குறைந்த பட்ச வரலாற்றறிவுடன் தகவல்களை அளித்திருக்கலாம். சியாம்ஜி கிருஷ்ண வர்மா சர்வதேச அளவில் செயல்பட்டுக் கொண்டிருந்த ஒரு விடுதலை போராட்ட வீரர். காமா அம்மையார் போன்ற பிற விடுதலை போராட்ட தியாகிகளும் அவருடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வந்தனர். வீர சாவர்க்கர் பிரிட்டன் செல்ல சியாம்ஜி கிருஷ்ண வர்மாவிற்கு உதவித்தொகை கோரி ஜூன் 9, 1906 அன்று விண்ணப்பித்த கடிதத்தின் வாசகங்கள் சில உண்மைகளை நமக்கு தெளிவாக கூறுகிறது, ‘சுயசார்பு, விடுதலை இவை இரண்டையும் நான் என் இதயத் துடிப்பாகவும் நம் தேசத்தின் உயிர் மூச்சாகவும் உணர்கிறேன். என் மதிப்பிற்குரிய ஐயா, என் சிறுவயதிலிருந்தே நம் தேசத்தின் அடிமை நிலையும் அந்த அடிமைநிலையை உடைத்தெறியும் சாத்தியக் கூறும் மட்டுமே தினப்பொழுதுகளில் என் எண்ணமாகவும் இரவுகளில் என் கனவுகளாகவும் கழிந்து வருகின்றன. ‘ இங்கிலாந்தில் அவர் சுக போக வாழ்க்கையை வாழவில்லை. மதன் லால் திங்க்ராவின் கைதுக்கு பிறகு அவர் திங்க்ராவை சிறையில் சென்று பார்க்கவும் தவறவில்லை. அவரது புரட்சிகர செயல்பாடுகளின் விளைவாக இங்கிலாந்தில் அவர் வாழ்க்கை, ‘உறைவிடமின்றி, நண்பர்களின்றி, பசியுடன் அலையும் படியாகவும், எப்போதும் போலிஸ் ஒற்றர்களால் துரத்தப்படுவதாகவும் அமைந்தது. ‘ (தனஞ்சய் கீர்). ஜூலை 8 1910 அன்று எஸ்.எஸ்.மோரியாவிலிருந்து அவர் தப்ப முயன்றது சக புரட்சியாளரான காமா அம்மையாருடன் இணைந்து திட்டமிட்ட சதியாகும். துரதிர்ஷ்டவசமாக, ஒரு ரயில்வே கிராசிங்கில் அம்மையார் வருவது தாமதப்பட்டுவிட்டதால் கைக்கு எட்டிய அந்த அரிய சந்தர்ப்பம் வாய்க்கு எட்டாமல் போய்விட்டது. இது குறித்து ஹேக் சர்வதேச நீதி அமைப்பில் வழக்கு தொடரப்பட்டது. பிப்ரவரி 24 1911 இல் இந்த அமைப்பு அளித்த தீர்ப்பு விசித்திரமானது. ‘ சாவர்க்கரை பிரிட்டிஷ் போலிஸ் பிரஞ்சு மண்ணில் கைது செய்தது தவறு ‘ என ஒப்புக்கொண்டாலும் கூட அந்த தீர்ப்பு பிரிட்டிஷ்க்கு ஆதரவாக அமைந்தது. டிசம்பர் 23 1910 இல் வீர சாவர்க்கருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அவருக்கு மிக கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டன. பெரும்பாலான நேரங்களில் ஒற்றைச்சிறையில் மாதக்கணக்கில் கழிக்க வேண்டியிருந்தது. அவர் ஆபத்தானவர் (Dangerous) என்பதைக் குறிக்க D எனும் கழுத்துப்பட்டையம் பொறிக்கப்பட்டது. சிறையில் அவருக்கு காசநோய் இருப்பதற்கான அறிகுறிகளும் தென்படலாயிற்று. இந்நிலையில் அவர் இரக்க மனு கொடுத்ததில் என்ன தவறு இருக்க முடியும் ? வீர சாவர்க்கர் போன்ற ஒரு மேதை (10,000 வரிகள் கொண்ட காவியத்தை சிறைச்சுவர்களில் கைநகத்தாலும் முட்களாலும் சிறு கற்களாலும் எழுதி முடித்திருந்தார் அவர்.) இருண்ட சிறையில் முடங்கி மரணிப்பதைக் காட்டிலும், வெளியே இன்னமும் சிறப்பாக பாரத விடுதலைக்காக பணியாற்ற முடியும். எனவே அவர் இரக்க விண்ணப்பம் எழுதியதில் எந்த தவறும் இல்லை. அந்தமான் சிறை ஆவணங்கள் ஒரு உண்மையை காட்டுகின்றன. சில இஸ்லாமிய மேன்மைவாதிகளாலும் வக்கிர-கபட மதச்சார்பின்மையாளர்களாலும், பலமுறை சுட்டிக்காட்டப்பட்டுள்ள அவரது இரக்க விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட பின் அவர் ‘ஆங்கில அரசுக்கு எதிரான இலக்கியங்களை வைத்திருந்ததற்காக ‘ தண்டிக்கப்பட்டிருக்கிறார். பல காங்கிரஸ் ‘தியாகிகளின் ‘ சிறைவாழ்க்கை வீர சாவர்க்கரின் சிறைவாழ்க்கையுடன் ஒப்பிடும் போது கட்டாய ஓய்வாக மட்டுமே தென்படுகிறது. சிறைவாழ்க்கைக்கு நடுவில் சுகவீனப்பட்ட தன் மனைவியை பரோலில் காண சுவிட்சர்லாந்த் வரை செல்லும் அனுமதி என்பது போன்ற அம்சங்கள் வீர சாவர்க்கரின் சிறை வாழ்க்கையில் இல்லை. வீர சாவர்க்கரின் குடும்பமோ அவர்களது சொத்துக்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், வீர சாவர்க்கரின் மனைவி சாவு வீடுகளில் வைக்கப்படும் உணவினை இரவல் வாங்கி வயிற்றைக்கழுவ வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். கலிலியோ தன் வாழ்க்கையில் சிறைசாலையா அல்லது மன்னிப்புடன் கூடி மீண்டும் அறிவியலுக்காக உழைக்கும் வாய்ப்பா எனும் கேள்வி எழுந்த போது கத்தோலிக்க அதிகார பீடத்தின் முன் மண்டியிட்டு பூமி சூரியனை சுற்றுவதாக தான் கூறிய மடத்தனமான அறியாமைக்கோட்பாட்டை கைவிட்டுவிட்டதாக கூறினார். எத்தனையோ வானவியலாளர்கள் மன்னிப்பு கேட்காமல் எரிந்துபோனார்கள் ஆனால் கலிலியோ மட்டும் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டாரே எனவே அறிவியலின் வரலாற்றில் அவரை பெரிய தியாகியாக காட்டுவது சரியா என்று எதாவது மண்டையன் கேட்டால் நாம் என்ன எதிர்வினை காட்டுவோமோ அதைக் காட்டுவதுதான் இங்கும் சரி. இன்று உலகம் அதை கோழைத்தனம் எனக் கூறுவதில்லை. ஒரு தேசத்திற்காக உயிர்தியாகம் செய்வது பெரிய விஷயம். அதைப்போலவே அத்தனை அவமானங்களையும் சகித்துக்கொண்டு, எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் ஒரு தேசத்தின் விடுதலைக்காகவே வாழ்வதும் பெரிய விஷயம். ஆனால் சிறிய மனமும் அற்ப புத்தியும் கொண்டவர்கள் அதனை அளவிட முயற்சிப்பது நரி வாலால் சமுத்திர ஆழத்தை காண முயன்ற கதையாகத்தான் முடியும். புரட்சியாளரான வீர சாவர்க்கர் தான் விண்ணப்பித்த கருணைமனுவில் தான் தன் தவறான புரட்சிபாதையிலிருந்து மனம் திரும்பி இராஜவிசுவாசத்துடன் நடப்பதாக கூறினார். ஆனால் அவரது பிற்கால வாழ்க்கை கூறுவது என்ன ? ஷகீத் பகத்சிங் வீர சாவர்க்கரை சந்தித்ததும், பகத்சிங்கின் அமைப்பான ஹிந்துஸ்தான் சோஷலிஸ்ட் ரிப்பளிக்கன் அசோசியேஷனுக்கு பண உதவிக்காக வீர சாவர்க்கரின் ‘முதல் விடுதலைப் போரின் ‘ பிரதிகளை பயன்படுத்த வீர சாவர்க்கர் உதவியதும் ஆவணப்படுத்தப்பட்ட வரலாற்று உண்மைகள். ஹிந்து மகாசபையின் ஜப்பானிய தலைவரான ராஷ்பிகாரி போஸ்தான் சுதந்திர பாரத படையை நிறுவியவர். அவருடன் நேதாஜி பாரதத்திலிருந்து மறைவதற்கு முன்னதாக வீர சாவர்க்கர் பலமுறை கடிதப்போக்குவரத்து நடத்தினார். நேதாஜி பாரதத்திலிருந்து மறைவதற்கு முன் அவர் சந்தித்த ஒரே தலைவர் வீர சாவர்க்கர்தான். பின்னாளில் நேதாஜி ராஷ்பிகாரி போஸினை சந்தித்ததும், பின்னர் ஆஸாத் ஹிந்த் பவுஜ் எழுந்ததும் வரலாற்று சம்பவங்கள். ஆஸாத் ஹிந்த் அரசின் வானொலியில் நேதாஜி வீர சாவர்க்கருக்கு தன் நன்றியை தெரிவித்தார். மகாத்மாவின் எந்த அகிம்சை போராட்டத்தைக் காட்டிலும் நேதாஜியின் எழுச்சியே பிரிட்டிஷாருக்கு தாம் பாரதத்தில் நீடிக்கமுடியாது என்ற முடிவைக் கொடுத்தது என்கிறார் வரலாற்றாசிரியரான மஜும்தார். எனவே வீர சாவர்க்கரின் வீரத்தையோ தேசவிடுதலையில் அவருக்கு இருந்த தீவிரத்தையோ அல்லது அவரது தியாகத்தையோ கேள்விக்குறியாக்க அரைகுறை உண்மைகளை பயன்படுத்துவது கீழ்த்தரமான முயற்சி. கபட மதச்சார்பின்மை பேசும் ஹிந்துக்களை விட இஸ்லாமிய மேன்மைவாதிகளிடம் அதிக நேர்மை இருப்பதாக எண்ணியிருந்தேன். இஸ்லாமிய மேன்மைவாதிகளுக்கு வீரசாவர்க்கர் இஸ்லாம் மீது வைத்த விமர்சனங்கள் நிச்சயம் அவர் மீது வெறுப்பை ஏற்படுத்தலாம். அதற்கான நியாயங்கள் அல்லது நியாயமின்மை தனியாக விமர்சிக்கப்படவேண்டும். அவற்றை வாதிக்கவும் செய்யலாம். ஏனெனில் என்னைப்போன்றவர்கள் அதில் நியாயமிருப்பதாக உணர்வதுடன் இன்னமும் அவை கடுமையாக முன்வைக்கப்பட்டிருக்க வேண்டும் எனவும் உணர்கிறோம். ஆனால் அதை எதிர்கொள்ள அவரது மற்றொரு பரிமாணத்தை அறியாமையுடன் விமர்சிப்பது இஸ்லாமிய மேன்மைவாதிகளது மனித நேயத்தையும் பகுத்தறிவையும் போலவே அவர்களது நேர்மையையும் வெற்றிடமாக காட்டுகிறது.

அடுத்ததாக இரு-தேச சித்தாந்தம் குறித்து சொல்லப்படும் பொய் தகவல்கள். 1905-06 இல் ஆகாகானின் தலைமையில் தூது குழுவினர் 1906 அக்டோபர் 1 அன்று வைஸ்ராயினைச் சந்தித்தனர். ஆகாகான் தான் பரம்பரை பிரிட்டிஷ் ராஜ விசுவாசி என்பதில் பெருமையுடையவர். தனக்கு பிரிட்டிஷ் அரசாங்கம் 11 முறை பீரங்கி முழங்கி வரவேற்பளித்ததை கவுரமாக கருதி விசுவாச புளகாங்கிதமடையும் இந்த இஸ்லாமிய கனவானின் தலைமையில் வைஸ்ராயை சந்தித்த தூதுக்குழுவானது, வைஸ்ராயிடம் முன்வைத்த கோரிக்கை ‘எந்த விஷயமானாலும் அதில் இஸ்லாமியருக்கு அளிக்கப்படும் நிலையானது அவர்களுடைய எண்ணிக்கையை மாத்திரமின்றி அவர்களது அரசியல் முக்கியத்துவத்தையும் கணக்கில் கொள்ளவேண்டும். ஏறத்தாழ 100 வருடங்களுக்கு முன் முஸ்லீம்கள் இந்தியாவில் கொண்டிருந்த அந்தஸ்தை அனுசரித்து அதற்கேற்ப அவர்களுக்கு அந்தஸ்துகள் வழங்கப்படவேண்டும்….வைஸ்ராய் கவுன்சிலில் முஸ்லீம்களுக்கு சிறுபான்மை என்றில்லாமல் தகுந்த பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும். ‘ மிண்டோ இதனை ‘முழுக்க முழுக்க ஒப்புக்கொள்வதாக ‘ குறிப்பிட்டார். இதன் படி குறிப்பிட்ட தொகுதிகளில் முஸ்லீம் வாக்காளர்கள் மட்டும்தான் நிற்பார்கள் என்பதுடன் அங்கு முஸ்லீம் வாக்காளர்கள் மட்டுமே வாக்களிக்க முடியும். பிற சமயத்தைச்சார்ந்த வாக்காளர்கள் பொதுதொகுதிகளில் தான் வாக்களிக்கவேண்டும். டாக்கா மாநாட்டில் 1906 டிசம்பர் 30 அன்று அனைத்திந்திய முஸ்லீம்லீக் அமைக்கப்பட்டபோது ஆகாகான் அதன் நிரந்தர தலைவரானார். 1924 இல் முஸ்லீம் அரசியல் தலைமையின் மனநிலையை ரவீந்திரநாத் தாகூர் தெள்ளத்தெளிவாக படம் பிடித்துக்காட்டுகிறார், ‘முஸ்லீம்கள் ஒரு தேசத்திற்கு மட்டும்தான் தங்கள் தேசபக்தி என்று கட்டுப்படுத்திக்கொள்ளாமல் இருப்பதுதான் ஹிந்து-முஸ்லீம் ஒற்றுமையை சாத்தியமாகாமல் ஆக்குகிறது. ஒரு முஸ்லீம் ஆக்ரமிப்பாளன் இந்தியா மீது படையெடுத்து வந்தால் நீங்கள் யாருக்கு சார்பாக போராடுவீர்கள் என பல முஸ்லீம்களிடம் நான் கேட்டிருக்கிறேன் அதற்கு அவர்கள் அளித்த பதில் அத்தனை திருப்திகரமானதாக இல்லை. ‘ (டைம்ஸ் ஆஃப் இந்தியா 18-4-1924) 1925 இல் மகாத்மா காந்தி பின்வருமாறு கூறினார், ‘முஸ்லீம்கள் இந்த நாட்டை தங்கள் பெருமிதத்திற்குரிய நாடாக காணவில்லை. மாறாக தங்களை ஆக்ரமிப்பாளரின் வாரிசுகளாக காண்கின்றனர். இது தவறு என்பது என் எண்ணம். ‘ (யங் இந்தியா, 2/4/1925) 1930 இல் இஸ்லாமிய பாசிசத்தின் கவி குயிலும் ஹிட்லரின் விசிறியுமான சர் முகமது இக்பால் தெள்ளத்தெளிவாக இஸ்லாம் எனும் மார்க்கம் தான் தோற்றுவித்த சமூக ஒழுங்குடன் பிரிக்கமுடியாதபடி பின்னிப்பிணைந்து இருப்பதாகவும் எனவே அது இந்திய தேசிய அடிப்படையில் உருவாக்கப்படும் ஒரு அரசியல் முறையை ஒரு முஸ்லீம் ஏற்பது குறித்து நினைத்துப்பார்க்க கூட முடியாது என்றும் கூறி ஆகவே முஸ்லீம் சுயாதிகாரமுள்ள அரசு அமைவது அவசியம் என கூறினார். (அஜீஸ் அகமது, Studies in Islamic cultre in the Indian environment, பக் 272-273) கேம்பிரிட்ஜ்ஜில் செளத்திரி ரஜ்மத் அலி பாகிஸ்தான் எனும் பதத்தை உருவாக்கி ‘இன்றில்லையேல் என்றும் இல்லை ‘ என ஒரு துண்டறிக்கையை வட்டமேசை மாநாட்டிற்கு இங்கிலாந்த் வந்திருந்த இஸ்லாமிய பிரதிநிதிகளுக்கு கொடுத்தார்.

இந்நிலையில்தான் வீர சாவர்க்கரின் ஆமதாபாத் 1937 உரையினை நாம் காணவேண்டும். மிகத்தெளிவாக மனரீதியில் ஹிந்துக்களும் முஸ்லீம்களும் வெவ்வேறு அரசியல் திசைகளில் இருப்பதை அவர் கூறுகிறார் என்பதுடன் அவ்வுரையிலேயே இந்த யதார்த்த நிலை (ஹிந்துக்களும் முஸ்லீம்களும் இரு தேசியங்களாக இருப்பது) மாற்றப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறார். அதே உரையில் அவர் கூறிய வார்த்தைகள், ‘இந்த வகுப்புவாத விவகாரங்கள் எல்லாம் நூற்றாண்டுகளாக ஹிந்துக்களிடையேயும் முஸ்லீம்களிடையேயும் இருந்துவரும் பரஸ்பர வெறுப்புணர்வினால் எழுபவைதான். நேரம்கூடிவரும் போது அவற்றைத் தீர்த்துக்கொள்ளலாம். ஆனால் அவற்றை அங்கீகரிக்க மறுத்துவிடுவதன் மூலம் மட்டுமே அவற்றை அமுக்கிவிடமுடியாது….இந்திய அரசு இந்தியத்தன்மையுடனேயே இருந்துவிட்டு போகட்டும். மத அடிப்படையில் வாக்குரிமை, அரசுப்பணிகள் வரிவிதிப்பு ஆகியவற்றில் பாரபட்சம் காட்டாதிருக்கட்டும். ‘ மத அடிப்படையிலான வகுப்புவாரி பிரதிநிதித்துவம் கேட்ட ஜின்னாவின் கூக்குரலுக்கு வெகுவாக மாறிய உண்மையான மதச்சார்பற்ற குரலாக ஒலிக்கிறது வீர சாவர்க்கரின் குரல்.

பொதுவாக புறங்கை நக்கியதாக ஓட்டுப்பிச்சை கேட்டுப் புலம்பும் பழக்கம் உடைய நம் உள்ளூர் மஞ்சள் துண்டு பகுத்தறிவு பிரமுகர் கூட முஸ்லீம் லீக் அதிகாரபூர்வமாக பாகிஸ்தான் பிரிவினை பிரகடனப்படுத்தப்படுவதற்கு முன்னரே தான் பாகிஸ்தான் சிந்தாபாத் போட்டதாக அண்மையில் பெருமையுடன் கூறி சிறுபான்மை ஓட்டுவங்கி மேலாளர்களிடம் மஞ்சள் துண்டை விரித்து ஓட்டுப்பிச்சை கேட்டதை நினைவில் கொள்ளலாம். கூடவே இன்று மீண்டும் இராணுவத்திலும், காவல்துறையிலும் வகுப்புவாத பிரதிநிதித்துவம் கேட்கும் அதே பழைய விஷப்பாம்புகள் தலை தூக்குவதையும், இம்முறை தம் நச்சு இருளை பாரதம் முழுவதற்கும் பரப்ப சீறி காளிங்கனாக எழுவதை நம்மால் தஞ்சாவூரில் காணமுடிந்தது. அன்று சிந்து மாகாணத்திலும், மலபாரிலும் கொலைச்செய்யப்பட்ட ஹிந்துக்களை குறித்து கவலைப்படாமல் கிலாபத் என்கிற பெயரில் எங்கோ துருக்கியில் தூக்கி எறியப்பட்ட கிலாபத்துக்காக பிலாக்கணம் பாடினர் முற்போக்கு மேல்சாதி மதச்சார்பின்மை காங்கிரஸ், இன்று மேல்சாதியினராலும், மேட்டுக்குடிகளாலும் ஆன முற்போக்கு மதச்சார்பற்ற கூட்டம் பங்களா தேஷ் ஹிந்துக்களுக்காகட்டும், அல்லது காஷ்மீர் பண்டிதர்கள் ஆகட்டும் அவர்களை குறித்து சிறிதும் கவலைப்படுவதில்லை மாறாக எங்கோ பாலஸ்தீனம் என்பதாக இவர்கள் கூறும் இஸ்ரேலிய பகுதிகளில் நடக்கும் பயங்கரவாத ஒழிப்பினை மானுட உரிமை பறிப்பாக கூக்குரலிடுவார்கள். அற்ப வேடதாரிகள்! இந்த சில வாரங்களில் வந்த கட்டுக்கதைகள் பொய் தகவல்கள் ஏராளம். படு சில்லறையாக சினிமா தொடங்கி, வெகு சீரியசாக மகாத்மா காந்தி கொலை வரை இஸ்லாமிய மேன்மைவாதிகளுக்கும் சரி, பல நிற கூட்டணியில் இருக்கும் மதச்சார்பற்ற அறிவுஜீவிகள் மற்றும் அவர்களது ஜால்ராக்களுக்கும் சரி உண்மையை பேசுவது என்பது சுட்டுப்போட்டாலும் வராது என்றே தோன்றுகிறது.

ஒரு பெரிய மனிதர் தமிழ்சினிமாக்களில் முஸ்லீம் பெண்கள் – ஹிந்து ஆண்கள் என்றுதான் காட்டுகிறார்கள். மாறாக ஹிந்து பெண்களை காதலிக்கும் முஸ்லீம் ஆண்களை காட்டுவதில்லை என்கிறார். அடப்பாவமே! விஜய் நடித்த சந்திரலேகாவில் ஒரு முஸ்லீம் இளைஞன் அந்தணப்பெண்ணை காதலிப்பதை காட்டவில்லையா ? அல்லது நெப்போலியன் நடித்த முஸ்தபாவையும் அன்னார் பார்க்கவில்லை போலும். ஆனால் என்ன, இந்த படங்களை இயக்கிய இயக்குநர்கள் வீடுகளில் பைப் வெடிகுண்டுகளை கோழைத்தனமாக முகத்தை மூடி வீசி எரிந்து, அதன் மூலம் மறுமை சுகத்தை அனுபவிக்க கூடிய ஹிந்துக்களும் இல்லை அல்லது அவ்வாறு போதிக்ககூடிய ‘இறங்கிய திருமறைகளும் ‘ ஹிந்துக்களுக்கு இல்லை.

பீகாரில் தலித்துகளை கொலை செய்வதையும் அவர்களை அடிமைத்தளையில் வைத்திருப்பதையும் ஒரு அறிவியல் பூர்வ கலையாக செய்து வருவது லல்லு பிரசாத் யாதவ்வின் கூட்டம். பல தலித்துகள் கூட்டமாக அங்கே யாதவ் கும்பல்களால் கொல்லப்பட்டு வருகின்றனர். மற்றொரு பக்கம் காங்கிரசின் மதச்சார்பின்மையால் ஹிந்துக்களை பிளக்க உருவாக்கப்பட்ட ‘ஷத்திரியர் ‘ ஒட்டு வங்கி வக்கிரத்தின் பரிணாம விளைவான ரண்வீர் சேனாவால் தலித்கள் கொல்லப்படுகின்றனர். இந்நிலையில் மதச்சார்பற்ற முற்போக்குகளோ லல்லுபிரசாத்தின் வெற்றி சமுதாய நீதியின் வெற்றி என்கிற ரீதியில் கதைவிடுவது நகைச்சுவை என்றாலும் சிரிக்கமுடியவில்லை. மனு ஸ்மிருதி ஒரு காட்டுமிராண்டித்தனமானதென்றே வைத்துக்கொள்வோம். என்ற போதிலும் அது ஸ்மிருதிதான். என்றென்றும் மாற்றப்படமுடியாத, இறைவன் தனது exclusive marketing agent மூலம் இறக்கிய இறுதி வார்த்தை அல்ல. ஆனால் அடிமை ஸ்தாபனத்தையும் யூத வெறுப்பையும் தன்னுள் ஏற்றுக்கொண்ட, இன்றைக்கும் பல நாடுகளில் அடிமை விற்பனையை ஆதரிக்க கூடிய ஒரு மத்திய கால மதநூலை, தெளிவாகவே அறிவியலால் நிராகரிக்கப்பட்டுவிட்ட பல கருத்துக்களை சுமந்து கொண்டுள்ள ஒரு மதநூலை, இன்றைக்கும் பரிணாம அறிவியலை தங்கள் மாணவர்களுக்கு கற்பிக்க வலுவில்லாத அராபிய சமுதாயங்கள் உருவாக காரணமாயிருக்கும் ஒரு நூலை உண்மையென ஏற்றுக்கொண்டுள்ள ஒரு கூட்டம் ஹிந்துத்வத்தை விமர்சிக்க துணிவது அருவெறுப்பான ஒரு விஷயம்.

இஸ்லாமின் தோற்றம் முதல் செப்டம்பர் 2001 இல் உலக வர்த்தக மைய கோபுரத்தில் விமானத்தை இடித்து 250 பாரதியர்களை கொன்ற முகமது அட்டா வரை, இஸ்லாமின் வரலாறு பெருமளவுக்கு யூத வெறுப்பினாலும் சிலைவணக்கத்தை புரிந்து கொள்ளை இயலாத அறியாமையாலும்தான் நடத்தப்பட்டுள்ளது. இத்தனைக்கும் மேலாக ஆர்.எஸ்.எஸ் இயக்கம் இஸ்லாமிய இறையியலின் ஆக உயர்ந்த விழுமிய சிந்தனைகளின் அடிப்படைகளையும் உள்வாங்கி ஒரு பரந்த ஹிந்துத்வத்தினை ‘அவர் நாண நன்னயம் புரிந்து ‘ உருவாக்கியவாறே உள்ளது. இஸ்லாமியரை நம் இரத்த சகோதரர்களாக சகோதரிகளாக பாவித்து அவர்களுக்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்பு ஆற்றியுள்ள ஆர்ப்பாட்டமற்ற ஆக்கப்பூர்வ சேவை, எந்த மதச்சார்பின்மை வேடம் கட்டி ஆடும் கபட முற்போக்குவாதிகளாலும் நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒன்றாகும். வகாபியத்தால் அழிக்கப்படும் அபாயத்திலுள்ள பாரத இஸ்லாமின் ஆக்கப்பூர்வ எதிர்காலம் ஆர்.எஸ்.எஸ்ஸால் பாதுகாக்கப்பட்டுள்ளது. பகுத்தறிவாளர்கள் என தங்களைத்தானே அழைத்துக்கொள்ளும் ஒரு கூட்டம் இந்த பரிணாம எதிர்ப்புவாதிகளான வகாபிய இஸ்லாமிய அராபிய மேன்மைவாதிகளுடன் கைக்கோர்ப்பது அதீத அவமானகரமானது. ஆனால் அதெல்லாம் மானமும், சுயமரியாதையும் உடையவர்களுக்கு. ஈவெரா போன்ற கூலிக்கு பகுத்தறிவு மாரடிப்பு செய்த இனவெறியருக்கும் அவரது ஜால்ரா கோஷ்டிகளுக்கும் உரைக்காததில் அதிசயமில்லை. நமது பகுத்தறிவாளர்களும் சரி, மதச்சார்பின் மையாளர்களும் சரி காசிரங்கா விலங்கு பூங்காவின் முக்கிய விலங்கின் தோல் வாய்க்கப்பட்டவர்கள் என்னும் எண்ணம் எனக்கு வெகுநாட்களாகவே உண்டு, அடிக்கடி அதை நமது மதச்சார்பின்மை நண்பர்கள் திண்ணையில் நிரூபிக்கிறார்கள். ஆனாலும் இந்த இஸ்லாமிய மேன்மைவாதிகளுக்கு போயும் போயும் ஒரு நூரானியா கிடைக்க வேண்டும். நூரானியின் இலட்சணம் எப்படி பட்டது என்பதற்கு இதோ ஒரு சாம்பிள்: ‘A Half Century ‘s Gory Record ‘ எனும் தலைப்பில் இந்த ஆசாமி 15 ஜனவரி 2000 தி ஸ்டேட்ஸ்மன் பத்திரிகையில் வழக்கம் போல ஆர்.எஸ்.எஸ்க்கு காந்திஜி கொலையில் தொடர்பு உண்டு என எழுதினார். இதனைத் தொடர்ந்து, இந்த ஆசாமிக்கும் தி ஸ்டேட்ஸ்மன் பத்திரிகைக்கும் எதிராக ஆர்.எஸ்.எஸ் வழக்கு தொடர்ந்தது. பத்திரிகை நீதிமன்றத்தில் மன்னிப்பு தெரிவித்தது, ஆனால் நூரானி ஆசாமி சாமனியப்பட்டவரா இந்த நீதிமன்றங்களிலெல்லாம் ஆஜராகக்கூடிய அளவு தகுதி குறைந்தவரா அவர் ? எனவே அவர் நீதிமன்றத்தின் பக்கமே வரவில்லை.

விளைவு ஆசாமிக்கு எதிராக நான்-பெயிலபிள் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. பின்னர் வந்தார் நூரானி. நீதிமன்றத்தில் பிப்ரவரி 25, 2002 அன்று எழுத்துமூலம் தன் கட்டுரைக்கு அவர் மன்னிப்பு தெரிவித்தார். இந்த ஆசாமியின் கட்டுரைதான் திண்ணையில் ஒரு கூட்டத்தால் ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு எதிரான நச்சுப்பொய் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. இதிலிருந்தே பொதுவாக மதச்சார்பற்ற அறிவு ஜீவிகள் மற்றும் குறிப்பாக இந்த கூட்டத்தின் யோக்கியாம்சத்தை தெரிந்து கொள்ளலாம். மற்றொரு மனிதர் பகவத் கீதையை சாதியத்தை வலியுறுத்தும் நூல் என்கிறார். இதைவிட மடத்தனமான பொய்யான ஒரு விஷயத்தை ஏதாவது ‘இறக்கப்பட்ட திருமறையில் ‘ தான் தேடவேண்டும்.ஏனென்றால் இது போன்ற உளறல் மானுட அறிவின் சாத்தியத்திற்கு அப்பாற்பட்டது. மற்றொரு பெரிய மனிதர் கூறுகிறார். இந்தியாவில் எங்கும் ஹிந்துக்களுக்கு மத வழிபாட்டு உரிமை பறிக்கப்படவில்லையாம். திரிபுராவில் பொட்டு வைக்ககூடாது, பூ அணியக்கூடாது, வளையல்கள் போடக்கூடாது, ஈமச்சடங்குகளை பாரம்பரிய முறையில் செய்யக்கூடாது, மகரசங்கராந்தி கொண்டாடக்கூடாது என்றெல்லாம் பாப்டிஸ்ட் திருச்சபை ஆதரவுடன் NLFT பத்வா விதித்தது ஒரு வேளை மருத்துவ ஆலோசனைகளோ என்னவோ. NLFT ஹிந்துக்களை கொன்று, பல லட்சம் ஜமாத் தியாக்களை சொந்த நாட்டில் அகதிகளாக்கியிருப்பது, ஒருவேளை ஜமாத்தியாக்களே தாங்கள் வாழ்கிற கிராமங்களின் வானிலை பிடிக்காமல் இன்ப சுற்றுலா கிளம்பிவிட்டதை என்னைப்போன்ற ஹிந்து பாசிஸ்ட்கள் தவறுதலாக பிரச்சாரம் செய்வதுதான் போல. (பார்க்க: டெலிகிராப் டிசம்பர் 5, 2000; பிபிசி ஏப்ரல் 18, 2000; இந்தோ ஆசிய செய்தி நிறுவன நிருபர் சையது சாபீர் ஹுசைனின் செய்தி – ஆகஸ்ட் 2, 2001; டைம்ஸ் ஆஃப் இந்தியா 28 டிசம்பர் 2000) இந்த இலட்சணத்தில் தீய எண்ணங்களை பரப்பாதே என அறிவுரை வேறு. ஹிந்து என்பதற்காகவே கொல்லப்பட்ட ஹிந்துக்களின் எண்ணிக்கை நிச்சயமாக இந்த நாட்டில், மதச்சார்பின்மை ஆட்சிகளின் கீழ், முஸ்லீம் என்பதற்காகவே கொல்லப்பட்ட முஸ்லீம்களை விடவும், கிறிஸ்தவர் என்பதற்காகவே கொல்லப்பட்ட கிறிஸ்தவர்களை விடவும் மிகக் கணிசமான அளவு அதிகம் என்கிற உண்மையை சொன்னால் கசக்கத்தான் செய்யும். உங்களால் மகாத்மாவின் குரங்காக மாறி கண்களையும் காதுகளையும் பொத்திக்கொள்ள முடிகிற பக்குவம் வந்துவிட்டால் வாழ்த்துக்கள் அதற்காக எங்களையும் அவ்வாறு மாற வற்புறுத்தாதீர்கள். குஜராத்தில் நடந்தது படுகொலைகள் அல்ல கலவரங்கள் – ஹிந்துக்களின் கை ஓங்கிய கலவரம். முஸ்லீம்கள் மட்டுமல்ல ஹிந்துக்களும் அங்கு அகதிகளானார்கள். மோடி அரசின் போலிஸ் துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்கள் 80% ஹிந்துக்கள். மேலும் கலவர அகதிகளில் 90% சதவிகிதத்தினர் தங்கள் வீடுகளுக்கு திரும்பி விட்டனர். லிண்டோவின் தேர்தல் கமிஷனே இதை உறுதி செய்துதான் தேர்தல் நடத்த அனுமதி அளித்தது. ஆனால் காஷ்மீரில் எத்தனை சதவிகித பண்டிதர்கள் திரும்பியுள்ளனர் ? இந்நிலையில் ஹிந்துக்களுக்கு ஆபத்தில்லையாம். ஒருவேளை அவர்களும் அவர்கள் வாழ்ந்த காஷ்மீர பள்ளத்தாக்கை விட டெல்லியின் சாக்கடைகள் பிடித்ததால்தான் இடம் பெயர்ந்துவிட்டனரோ ? இருக்கலாம் அன்னார் குடும்பத்தோடு அவரது வீட்டை விட்டு சென்று கூவம் ஓரத்தில் டெண்ட் அடித்து இந்த இடம்பெயர்தல் இரகசியத்தை நமக்கெல்லாம் demonstrate செய்தால் இன்னமும் நன்றாக இருக்கும். என்றாலும் கவலையில்லை. நாளைக்கே யாராவது ஒரு பமீலா தப்பார் தப்பாமல் காஷ்மீர் பண்டிட்களின் இனம் அழிந்ததற்கு இஸ்லாமிய பயங்கரவாதம் காரணமில்லை மாறாக ‘முரண்பாட்டியங்கியலின் பொருளாதார இயக்கத்தின் கலாச்சார தாக்கத்தின் மக்கட்தொகை பின்-விளைவு நிகழ்வியக்கம்தான் காரணம் ‘ என வெளுத்து வாங்கிவிடமாட்டாரா என்ன ? ஏதோ மருத்துவ சேவை முழுவதையும் இங்கு மிஷிநரிகளே செய்வது போலவும் அவர்களே அனைத்து கல்வி நிலையங்களையும் நடத்துவது போலவும் சிலர் செய்யும் மாய்மாலங்களை வாசிக்க கூடவே ஒரு ‘அவாமின் ‘ மாத்திரையும் தேவைப்படுகிறது. ஹிந்துக்களின் கல்விநிலைய நிறுவன முயற்சிகளுக்கு எந்த அளவு காலனிய அரசு எதிர்ப்புக்களை உருவாக்கியது என்பது வரலாற்று ஆவணங்களை சிறிது புரட்டினாலும் கிடைக்கும் செய்தி. என்ற போதிலும், தாயானந்த் ஆங்கிலோ வைதிக் பள்ளிகள் ஒரு கல்வியறிவு மறுமலர்ச்சியையே உருவாக்கின என்பதுதான் உண்மை. இந்த பள்ளிகளிலிருந்துதான் பகத் சிங் போன்ற தியாகத் தீப்பிழம்புகள் உருவானர்கள். துரதிர்ஷ்டவசமாக ஆரிய சமாஜின் உயிர்நாடி லாகூரில் இருந்ததால் பிரிவினையில் பட்ட அடியிலிருந்து அது மீளவே இல்லை. அறிவியல் அமைப்புகளை பாரதியர்கள் (ஆச்சார்ய ஜகதீஷ் சந்திர போஸ், அசுதோஷ் முகர்ஜி, ஜாம்செட்ஜி டாடா போன்றவர்கள்) நிறுவ பட்டபாடு, அதற்கு மிஷிநரிகளை மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் ஆதரித்த பிரிட்டிஷார்கள் போட்ட முட்டுக்கட்டைகள் ஆகியவற்றை அறியாமல் வெள்ளைக்காரனும் பாதிரியும்தான் நமக்கு மருந்தும், கல்வியறிவும் தந்தார்கள் அதற்கு விசுவாசமாயிருக்கவில்லையே நீ என்றால் என்ன சொல்ல. இன்றைக்கும் கல்விநிலையத்தை நடத்த ராமனுக்கு இல்லாத சலுகைகள் ரகீமுக்கும் ராபர்ட்டுக்கும் அளிக்கப்படுகின்றன. இத்தனைக்கும் அரசு உதவி பெறும் சிறுபான்மை கல்வி நிலையங்களுக்கும் சேர்த்து வரிப்பணம் கட்டுபவர்களில் பெரும்பாலானவர்கள் ஹிந்துக்கள்தான். ஹிந்து கல்விநிறுவனங்களில் அரசு எந்த அளவுக்கு இடையூறு செலுத்தமுடியும் மற்றும் சிறுபான்மை கல்விநிறுவனங்களில் (சமயக்கல்வி அல்ல வெறும் கல்வி) எந்த அளவுக்கு அரசு கை வைக்கமுடியாது என்பதை, இராமகிருஷ்ண மிஷன், வங்கத்து டைனோசரும் மார்க்சிய அடிப்படைவாதியுமான ஜோதிபாசு தலைமையிலான மார்க்சிஸ்ட் வெறியர்களின் இடையூறிலிருந்து தப்ப தங்களை சிறுபான்மையினர் என அறிவிக்க நீதி மன்றத்தை அணுகியதிலிருந்து தெரிந்து கொள்ளலாம். அடுத்தது காஷ்மிர் கோவில்கள். உட்துறை அமைச்சகம் 1992 மார்ச் மாதம் பாராளுமன்றத்தில் வெளியிட்ட அறிக்கையின் படி (மார்ச் 12, 1992 கேள்வி எண் 2604- பதிலளித்தவர் மத்திய உட்துறை இணை அமைச்சர் எம்.எம்.ஜாகோப்) 38 வழிபாட்டு தலங்கள் சேதப்படுத்தப்பட்டன. 1986 பிப்ரவரி இல் மட்டும் 24 கோவில்கள் அழிக்கப்பட்டன அல்லது மிக மோசமாக சேதப்படுத்தப்பட்டன. மேலும் 21 கோவில்கள் பயன்படுத்தப்பட முடியாமல் அசுத்தப்படுத்தப்பட்டன (பார்க்க: தி ஹிண்டு 4-3-1986, தி டெலிகிராப் 4-3-1986, தி ஸ்டேட்ஸ்மேன் 5-3-1986, ஹிந்துஸ்தான் டைம்ஸ் 3-3-1986) உட்துறை அமைச்சக அறிக்கையிலிருந்து இஸ்லாமிய பயங்கரவாதிகளால் தீ வைக்கப்பட்ட கோவில்களில் சில:

1986 பிப்ரவரி 20-21:

வனோபாவில் 2 கோவில்கள் கானாபல், ஆனந்த்நாக் மாவட்டம்

தானோபந்த்தில் ஒரு கோவில் குல்காம், ஆனந்த்நாக் மாவட்டம்

சர்னாலில் கவுதம் நாக் மந்திர், ஆனந்த்நாக் மாவட்டம்

ஹரிஷ் சந்திர சேவா மந்திர், ஆனந்த் நாக் மாவட்டம் – சிலைகள் உடைக்கப்பட்டன

யால்கோட்டில் உள்ள சாரதா தேவி மந்திர், ஒரு பகுதி எரிக்கப்பட்டது பட்காம் மாவட்டம்

1989 மார்ச் 24 முதல் நவம்பர் 2 வரை:

சோடா பஸாரில் உள்ள சிவன் கோவில் முழுமையாக சேதப்படுத்தப்பட்டது (ஸ்ரீ நகர் மாவட்டம்)

உதம்பூர் ஸ்ரீ ராமர் கோவில்- சிலைகள் உடைப்பு – (பட்காம் மாவட்டம்)

சுபநாக் கோவில் – சிலைகள் உடைப்பு, கோவில் எரிப்பு (பட்காம் மாவட்டம் அக்டோபர் 21 ஆம் தியதி)

இது மட்டுமல்ல ஹிந்துக்களின் சமுதாய சேவை இயக்கங்களும் கூட தாக்கப்பட்டன. உதாரணமாக:

1989 இல் ஸ்ரீ நகர் ராமகிருஷ்ண ஆசிரம வளாகம் பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டது.

1990 இல் ஆரிய சமாஜத்தினரின் பள்ளிகள் தாக்கப்பட்டன.

இது போக பல ஹிந்து கோவில்கள் மீண்டும் மீண்டும் தாக்கப்பட்ட பின்னரும் நிமிர்ந்து நிற்கின்றன. உதாரணமாக ரகுநாத் கோவில். 1989 இல் பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டது. மீண்டும் 1990 இலும், 1991 இலும் தாக்கப்பட்டது. 1991 இல் கிரேனேட் குண்டுகள் எறியப்பட்டன. அண்மையில் ஜிகாதிகள் ஆயுதமற்ற பக்தர்கள் மீது ஆயுதத் தாக்குதல் நடத்தியது ஞாபகம் இருக்கலாம்.

நாற்பதாண்டுகளாக கோவிலாகவே இயங்கி வந்த பாப்ரி அமைப்பு டிசம்பர் 6, 1992 அன்று உடைக்கப்பட்டதற்கு லபோ திபோ என்று அடித்துக்கொண்ட மதச்சார்பின்மை வாதிகள் இந்த ஹிந்து வழிபாட்டுத்தலங்கள் உடைக்கப்பட்ட போது, சேதப்படுத்தப்பட்ட போது மற்றும் அசிங்கப்படுத்தப்பட்ட போது மவுனித்தது ஏன் ? என்பதுதான் அன்று அத்வானி அவர்கள் எழுப்பிய கேள்வி. அப்புறம் மதச்சார்பின்மைவாதிகள் கோவணத்திலும், ஜட்டியிலும், கக்கூசுகளிலும் காட்டும் ஒரு அதீத ஆர்வம். ஒருவேளை சிருஷ்டிவாதம் (creationism),. கபட மதச்சார்பின்மை, போல இதுவும் ஒரு மனவியாதியாக இருக்கலாம். எதுவானாலும் மன-பகுப்பாய்வு சிகிட்சையாளர்களுக்கு இவர்கள் சுவாரசியமான specimen என்பதில் சந்தேகமில்லை. இஸ்லாமின் சமூகநீதி முகமூடி பாகிஸ்தான், சவுதி அரேபியா, சூடான் என பல இஸ்லாமிய நாடுகளில் நன்றாகவே கிழிக்கப்பட்டு வருகிறது. இஸ்லாமிய அடிப்படைவாதிகள் பரிணாம அறிவியலை கண்டு நடுங்குவது, உண்மையின் ஒளியில் கண்கூசி கண்ணடைத்து அறிவுக்குருடர்களாக நிற்பது இன்றைக்கும் பரிணாம அறிவியலை பாடமாக வைக்கத் திராணியில்லாத அரேபிய நாடுகளின் எண்ணிக்கைகளில் தெளிவாகிறது. இந்த இருள் பரப்பும் அடிப்படைவாதக் கூட்டத்துடன் கைக்கோர்த்து ஹிந்துத்வத்தை எதிர்க்கும் இடதுசாரி முற்போக்கு அறிவுஜீவியாதிகள் ஏதோ தங்களை அறிவியல்பூர்வ சித்தாந்தங்களுக்கு சொந்தகாரர்கள் என்று கூறிக்கொள்வது மகா அற்பத்தனமானது. உதாரணமாக எங்கள் ஊரில் ஒரு முற்போக்கு அறிவு வியாதியால் நடத்தப்படும் புத்தகக் கடையில் பரிணாம எதிர்ப்பு கட்டுரைகளை தாங்கி நிற்கும் இஸ்லாமிய அடிப்படைவாத இதழ்களை இடதுசாரி முற்போக்கு அறிவுஜீவிகளின் குடும்ப பத்திரிகைகளுடன் இணையாக வைத்து விற்பதை காண முடியும். என்னதான் இடதுசாரி அறிவுஜீவி என்றாலும் பொதுவாக இந்த வகையறாக்கள் தமக்கும் தம் வாரிசுகளுக்கும் குடியுரிமை பெறுவதென்னவோ காஸ்ட்ரோவின் கியூபாவில் இல்லை, நடமாடும் சைத்தானாக இவர்கள் வர்ணிக்கும் புஷ்ஷின் அமெரிக்காவில்தான் என்பது வேறுவிஷயம். கபட மதச்சார்பின்மைக்கு வால் பிடிக்கும் மேதாவிகள், கபட-மதச்சார்பின்மையை தங்கள் அராபிய, வகாபிய இஸ்லாமிய மேன்மைவாத இருளை பரப்புவதற்கான தயாரிப்புகளமாக பயன்படுத்தும் மதவெறியர்களுக்கும் என்ன எழுதினாலும் உரைக்கப் போவதில்லை. ஆனால் குறைந்தபட்சம் அவர்கள் ஏதோ தங்களை மானுடநலம் விரும்பிகள் போல அரிதாரம் பூசி ஆடவேண்டாம்.

அரவிந்தன் நீலகண்டன்

infidel_hindu@rediffmail.com

(நீக்கங்கள் உண்டு – திண்ணை குழு)


Series Navigation

அரவிந்தன் நீலகண்டன்

அரவிந்தன் நீலகண்டன்