கடிதங்கள் மே 27,2004

This entry is part [part not set] of 54 in the series 20040527_Issue

அருளடியான்-மு. சுந்தரமூர்த்தி – பிரதாப ருத்ரன்


மத்திய அமைச்சரவையில் தமிழ் நாட்டு எம்.பிக்கள்

-அருளடியான்-

மத்திய அமைச்சரவையில் தமிழ் நாட்டுக்கு 12 இடம் கிடைத்துள்ளது. தமிழ் நாட்டில் காங்கிரஸ் சார்பாக கேபினட் அமைச்சராகும் ப. சிதம்பரமும், மணி சங்கரும் பொருத்தமான தேர்வு. ஈ.வெ.கி.ச. இளங்கோவனுக்கும் கேபினட் பொறுப்பு கொடுத்திருக்கலாம். டாக்டர் ராமதாஸ் மகன் அன்புமணி, முரொசொலி மாறன் மகன் தயாநிதி மாறன் இருவரும் கேபினட் பொறுப்பு கொடுக்கப் பட்டுள்ளனர். இது அக்கட்சிகளில் உண்மையாக உழைத்த எம்.பிக்கள் முதல் அடிமட்டத் தொண்டர்கள் வரை அனைவரையும் அவமதிக்கும் செயலாகும். கலைஞர், முரசொலி மாறனின் மறைவுக்குப் பிறகு, தயாநிதி மாறனுக்கு என்.டி.ஏ. அமைச்சரவையில் இடம் கேட்டார் என்று ஜெயலலிதாவும், இல. கணேசனும் தேர்தல் பிரச்சாரத்தில் குற்றம் சாட்டினர். அதனை அப்போது மறுத்த கலைஞர் இப்போது தன்னையறியாமலேயே அதனை ஒப்புக் கொண்டுள்ளார். இப்போது தானே தயாநிதி மாறன் எம்.பியாகியுள்ளார். அவர் ஐந்தாண்டு காலம் நாடாளுமன்ற அனுபவம் பெற்று, இணை அமைச்சர், கேபினட் அமைச்சர் என படிப்படியாக வளர்ந்தால் என்ன ? முதல் முறையாக எம்.பியான ராகுல் காந்தி அமைச்சர் பொறுப்பு எதுவும் ஏற்கவில்லையே ? மு.க. ஸ்டாலின் கூட பல ஆண்டுக் காலம் இளைஞரணி செயலாளர், எம்.எல்.ஏ என பொறுப்பு வகித்து, மாநில அமைச்சர் பொறுப்பைக் கூட ஏற்கவில்லையே ? மாநகர மேயரானது கூட அவரது 30 ஆண்டு அரசியல் அனுபவத்திற்குப் பிறகு தானே ?

சிவசேனைத் தலைவர் பால் தாக்கரே எந்த ஆட்சிப் பொறுப்பிலும் இருக்க மாட்டார். ஆனால் ஆட்சியில் இருக்கும் தன் கட்சிக் காரர்களை இயக்கும் ரிமோட் கண்ட்ரோல் இவர் கையில் இருக்கும். இது ஜன நாயகத்தைக் கேலி கூத்தாக்கும் செயலாகும். பா.ஜ.கவை இயக்கும் ரிமோட் கண்ட் ரோல் ஆர்.எஸ்.எஸ்ஸிடம் இருப்பது போலத் தான் இதுவும். தமிழ் நாட்டின் பால் தாக்கரேவாக டாக்டர் ராமதாஸ் இருக்கிறார். இவர் தன் மகனை நேரடியாக அரசியலில் இறக்கியதை ஒரு வகையில் பாராட்டலாம். ஆனால் இவரது முந்தைய பேச்சுகள் எதுவும் நம் நினைவுக்கு வரக் கூடாது. டாக்டர் அன்புமணி இனிமேல் தான் ராஜ்யசபா எம்.பியாக வேண்டும். அவர் சில ஆண்டுகள் நாடாளுமன்ற அனுபவம் பெற்று பின்னர் படிப்படியாக இணை அமைச்சர், கேபினட் அமைச்சர் என வளர்ந்தால் என்ன ?

தி.மு.கவின் 15 எம்.பிக்களில் ஒருவர் கூட முஸ்லிம் இல்லை. தி.மு.கவில் ராஜ்ய சபா எம்.பியாக இருக்கும் காதருக்காவது அமைச்சர் பொறுப்பு கொடுத்திருக்கலாம். அல்லது, காங்கிரஸ் எம்.பி. ஹாரூனுக்காவது அமைச்சர் பொறுப்பு கொடுத்திருக்கலாம். தமிழ் நாட்டைச் சேர்ந்த 12 மத்திய அமைச்சர்களில் ஒருவர் கூட முஸ்லிம் இல்லை. இதனை தமிழ் நாட்டு முஸ்லிம்கள் கவனிக்கத் தவறவில்லை.

நான் புரிந்துக் கொண்டவரை காமராஜரைப் போல் பதவி ஆசை இல்லாத தலைவராக சோனியா காந்தி இருக்கிறார். அதே போல, அவரது பிள்ளைகளான பிரியங்கா, ராகுல் இருவருக்கும் பதவி ஆசை இல்லை. ஆனால் திராவிட இயக்த்தில் இருந்து பா.ஜ.கவுக்கு சென்ற திருநாவுக்கரசு பதவி இல்லாவிட்டால் உயிர் வாழ முடியாது எனக் கருதுகிறார். கருணாநிதி தன் வாழ் நாளில் தன் குடும்பத்தில் இருந்து அதிகமான பேரை அதிகாரத்துக்கு கொண்டுவர முயற்சி செய்கிறார். தன் மகன் அன்புமணிக்காக, டாக்டர் ராமதாஸ் கட்சியில் இருந்து 1. நெல்லிக் குப்பம் கிருஷ்ணசாமி 2. பன்ருட்டி ராமச்சந்திரன் 3. தலித் ஏழுமலை 4. பேராசிரியர் தீரன் 5. பு.தா. இளங்கோவன் என முக்கிய்த் தலைவர்களை கட்சியில் இருந்து நீக்குகிறார். தமிழ் நாட்டில் காங்கிரஸ் கட்சி வளர்ந்து தனித்து தமிழ் நாட்டில் ஆட்சியமைக்கும் நிலைக்கு உயரும் போது தான் இந்த சீர்கேடுகளுக்கு ஒரு முற்றுப் புள்ளி கிடைக்கும்.

—-

aruladiyan@netscape.net


நடந்து முடிந்த இந்தியப் பொதுத் தேர்தல் முடிவுகளும், அதைத்தொடர்ந்து நடக்கும் நிகழ்வுகளும் பலருக்கும் வியப்பையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கலாம். என்னைப்பொறுத்தவரை இந்த நிகழ்வுகள் எந்தவித ஆச்சரியத்தையும், ஏற்படுத்தவில்லை. எனக்கு நம் ஊடகங்களின் மீதும், பா.ஜ.க.வினரின் வெற்று வாய்ச்சவடால்களில் மீதும் நம்பிக்கையில்லாததே இதற்குக் காரணம்.

இந்திய மேட்டுக்குடியினரின் கைகளில் இருக்கும் ஊடகங்கள் கணித்து வெளியிட்ட முடிவுகள் அவர்களுடைய அடிமனத்து ஆசைகள் உருப்பெருக்கிக் காட்டியவை. அவற்றை நம்பிவிட்டவர்களுக்கே இறுதி முடிவுகள் வெளியானபோது ஏமாற்றமளித்திருக்கும். பல்வேறு திசைகளிலிருந்தும் வெளியான செய்திகளையும், காட்டமான சிந்தனையாளர்களின் பார்வைகளையும் படித்து கருத்தை உருவாக்கிக் கொண்டவர்களுக்கு தேர்தல் முடிவுகள் ஆச்சரியமளித்திருக்காது. இந்த வகையில், ‘இந்து ‘ நாளேட்டில் யோகேந்திர யாதவ் எழுதிய மாநிலம்வாரியான ‘போர்க்களம் ‘ தொடர் அலசல் நுண்மையான பல உண்மைகளைத் தன்னுள் கொண்டிருந்தது மற்ற கூச்சல்களில் எடுபடாமல் போயிருக்கும். ‘திசைகள் ‘ இதழில் மாலன் எழுதியிருந்த கணிப்புக் கட்டுரையும் அதே செய்தியைக் கொண்டிருந்தது. அதேபோல் ஆந்திர மாநிலத் தேர்தல் முடிவுகள் வெளியான அன்று ‘இந்து ‘ நாளேட்டில் பி. சாய்நாத் எழுதியிருந்த கட்டுரையும், வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளும் வித்தியாசமாக இருக்கும் என்பதை தெளிவுபடுத்தியது.

பா.ஜ.க.வினருக்கு வாய்மையின் மீது இருக்கும் நம்பிக்கையைவிட வாய்ச்சவடால்களிலேயே நம்பிக்கை அதிகம். தம் மீதும், தம் கொள்கைகளின் மீதும் அபரிமிதமான நம்பிக்கை. இதுபோன்ற குணம் பொதுவாக வெறுப்பையும், ஆணவத்தையும் மட்டுமே முதலீடாக வைத்து இயங்கும் தீவிரவாத வலதுசாரிகளுக்கு அதிகம். இந்தியாவின் இந்துத்துவ கும்பல், நம்ம ஊர் ஜெயலலிதா, இஸ்ரேலின் ஆரியல் ஷரோன், அமெரிக்கக் குடியரசு கட்சியின் ‘Neocons ‘, ஒசாமா பின் லாடன், முன்னாள் செர்பியா ஜனாதிபதி ஸ்லோபதான் மிலோசொவிச் என்று இதற்கு ஏராளமான உதாரணங்கள் உண்டு.

இதே சவடால்கள் தாம் இந்த பத்திரிகையில் எழுதும் இந்துத்துவ ஆதரவு எழுத்தாளர்களிடமும் துளிகூட கூச்சமின்றி தொடர்ந்து வெளிப்படுகின்றன. தேர்தல் பணி முடிந்து திரும்பியிருக்கும் அரவிந்தன் தன் மனதில் குவித்து வைத்துள்ள அழுக்கு மலையில் இருந்து கடந்த வாரத் தவணையாக இரண்டு கைகள் அள்ளி கொட்டியிருக்கிறார். இந்துத்துவ சக்திகள் அதிகாரத்திலிருந்து நீக்கப்பட்டிருப்பதால் அவருடைய எரிச்சல் இனி தொடர்ந்து உமிழப்படும் என்று எதிர்பார்க்கலாம். சில வாரங்கள் காணாமல் போயிருந்த தீவிர சோனியா காந்தி எதிர்ப்பாளரான சின்னக்கருப்பனும் சோனியாவுக்கு எதிராக தேர்தல் பிரச்சாரத்திற்கு போயிருந்திருப்பார் என்று எண்ணியிருந்தேன். தன் எதிர்பார்ப்பை மீறி சோனியா பிரதமர் ஆவது போல் தெரிந்ததால் பிரச்சாரம் முடிந்த கையோடு சின்னக்கருப்பன் ஒரு வேளை ‘இந்து ‘ மாக்கடலில் குதிக்கப் போய்விட்டாரோ என்று கூட அஞ்சினேன். நல்லவேளை சுஷ்மா சுவராஜ் மொட்டையடித்துக்கொள்வதிலிருந்து காப்பாற்றப்பட்டது போல சின்னக்கருப்பனும் கடற்கரையில் குப்புற விழுந்ததோடு தப்பித்திருக்கிறார். ஆனாலும் எழுந்து மணல் ஒட்டவில்லை என்று மீசையை முறுக்கிகொண்டு வந்து நிற்கிறார். இனி ‘திண்ணை ‘யில் அரசியல் நகைச்சுவைக்குப் பஞ்சமிருக்காது என்பதற்கு அவருடைய தேர்தல் அலசல் எடுத்துக்காட்டு. பி. கே. சிவக்குமார் சுட்டிக்காட்டியுள்ளது போல மஞ்சுளா நவனீதனுக்கு பா.ஜ.க. தோற்றதின் ஏமாற்றமும், சோனியா காந்தியின் மீதுள்ள வெறுப்புமாகச் சேர்ந்து தமிழர் பிரதமர் ஆகவேண்டும் என்ற அக்கறையை உருவாக்கியுள்ளன. சோனியா காந்தி மீதான வெறுப்பு ம. நவனீதனுக்கு கலைஞர் கருணாநிதி மீதும், சின்னக்கருப்பனுக்கு ராஜசேகர் ரெட்டியின் மீதும் திடார்ப் பாசத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்த பாசத்தை தொடர்ந்து பொழிவார்கள் என்று எதிர்பார்ப்போம்.

கருணாநிதியிடம் எனக்கு பிடித்த குணங்கள் சிலவும், பிடிக்காத குணங்கள் சிலவும் உண்டு. பிடித்த குணங்களில் ஒன்று அரசியலில் தன் பலத்தையும், எல்லைகளையும் தெளிவாக வகுத்து வைத்திருப்பது. தமிழ்நாட்டைத் தாண்டி தேசிய அரசியலில் தானே நேரடியாக ஈடுபடமாட்டார் என்பது வெளிப்படை–அது பிரதமர் பதவியாக இருந்தாலும். சமீப காலமாக பிரதமராக ஆசைப்படும் ஒரே தமிழர் ஜெயலலிதா தான் (சுப்பிரமணியம் சுவாமிக்குக் கூட இப்படி ஒரு ஆசை இருப்பதாக எங்கோ படித்த நினைவு). ஆனால் அது எப்போது நடக்கும் என்பது அவருடைய ஆஸ்தான ஜோசியருக்குத் தான் வெளிச்சம். ஜெயலலிதாவின் இப்போதைய கவனம் முதல்வர் பதவியை தக்கவைத்துக்கொள்வதில் தான் இருக்கும்.

இந்த தேர்தலில் சில அரசியல் கட்சிகளும், சில தனி மனிதர்களும் வலிமை வாய்ந்த மனிதர்களால்-கட்சிகளால் ஓரங்கட்டப்பட்டார்கள். கடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வோடு இணைந்து போட்டியிட்டு, அண்மைக்காலம் உற்ற துணையாக இருந்த திருமாவளவனும், டாக்டர் கிருஷ்ணசாமியும் தி.மு.க.வால் ஓரங்கட்டப்பட்டனர். அவர்களையும் அரவணைத்துச் சென்றிருக்க வேண்டும். பா.ம.க., காங்கிரஸ், தி.மு.க. கட்சிகள் தலா ஒவ்வொரு இடத்தைக் குறைத்துக்கொண்டு, திருமாவளவனையும், கிருஷ்ணசாமியையும், கண்ணப்பனையும் தி.மு.க. சின்னத்திலியே போட்டியிட வைத்திருக்கலாம். ஆள்பலம், பணபலம், அதிகார பலம், ஊடக பலம் கொண்ட இரண்டு பெரும் கூட்டணிகளை எதிர்த்து ‘மக்கள் முண்ணனி ‘ யின் சார்பில் போட்டியிட்ட திருமாவளவன் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளதும், கிருஷ்ணசாமி ஒரு லட்சம் வாக்குகளுக்கு மேல் பெற்றுள்ளதும் ஆறுதலையும், நம்பிக்கையையும் தருகிறது. தலித் விடுதலையில் உண்மையான ஆர்வமுள்ளவர்கள் இவர்களை ஊக்கப்படுத்துவதும், பொருளுதவி செய்வதும் இவர்களுடைய செயல்பாடுகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல உதவும். அதே நேரம் விளிம்பு நிலை மக்களை மையமாக வைத்து இயங்கும் அனைத்து கட்சிகளும், அமைப்புகளும் ஒன்றிணைந்து செயல்படவேண்டும். இன்றைய அரசியல் சூழ்நிலையில் ஒன்றுபட்ட வாக்கு வங்கியே அரசியல் அதிகாரம் பெறவும், ஓரளவு சமூக மாற்றத்துக்கும் வகைசெய்யும்.

‘இந்தியா ஒளிர்கிறது ‘ என்ற மிகையான நம்பிக்கையில் தேர்தலை முன்கூட்டியே திட்டமிட்டு, மக்கள் வரிப்பணத்தில் பெரிதாக விளம்பரமும் செய்யப்பட்டது. மேட்டுக்குடி-உயர் நடுத்தர வர்க்க இந்தியா மட்டும் தான் ஒளிர்கிறது என்பது பிரதமர் வாஜ்பாய் தொகுதியிலேயே அவர் கட்சியினராலேயே கொடூரமான முறையில் நிரூபிக்கப்பட்டது. உள்ளூர்த் தலைவரின் பிறந்த நாள் விழாவில் கொடுக்கப்போகும் இலவச புடவைகளுக்காக மறைந்த உயிர்கள் ‘இந்தியா ஒளிர்கிறது ‘ என்பதின் போலிக் கூச்சலை தோலுரித்துக் காட்டியது. எட்டு சதவீத வளர்ச்சி, 100 பில்லியன் டாலர் அந்நியச் செலாவணி, அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சில ஆயிரம் வேலைவாய்ப்புகள் போன்ற புள்ளிக் கணக்குகள் மட்டுமே ஒளிரும் இந்தியாவுக்கான சாட்சிகள் அல்ல. இன்று புள்ளிக் கணக்காகி போன அந்த 22 உயிர்களைப் போன்ற கோடிக்கணக்கான இந்தியர்களின் கண்களும் ஒளிரும்போதுதான் இது போன்ற கோஷங்களுக்கு பொருள் இருக்கும். தேர்தல் களேபரத்தில் பறிபோன உயிர்களைப் பற்றி எந்த அரசியல் கட்சியும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. அந்த கோர நிகழ்வை தேர்தல் விதி மீறலாக சித்தரித்ததோடு எதிர்க்கட்சிகள் முடித்துக்கொண்டன. இந்த படுகொலைக்குக் காரணமான பா.ஜ.க.வோ தேர்தல் ஆணையம் தேவையில்லாமல் இதை கடுமையாக எடுத்துக்கொண்டதாக அங்கலாய்த்தது (பார்க்க: அரவிந்தனின் போன வார கட்டுரை). இதற்கு யார் மீது இது வரை என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்று ஊடகங்களும் தெரிவிக்கவில்லை. இது போன்ற சோகங்கள் இனி நடக்காமல் பார்த்துக்கொள்வோம் என்று சம்பந்தப்பட்ட கட்சியான பா.ஜ.க. உள்பட எந்த அரசியல் கட்சியும் ஒரு சம்பிரதாயத்துக்காகக் கூட உத்தரவாதம் அளிக்க முன்வரவில்லை. ஆகவே இனி ஒளிரப்போகும் இந்தியாவிலும் இத்தகைய கோரச் சம்பவங்கள் தொடரும் என்ற அச்சம் மட்டுமே இப்போதைய உத்தரவாதம்.

ஒருவழியாக ரஜனிகாந்தின் உண்மையான மதிப்பு இந்த தேர்தலில் நிரூபிக்கப்பட்டு விட்டது. இந்த மதிப்பு மேலும் குறையவே வாய்ப்பு உண்டு. ஞாநி யோசனை கொடுத்துள்ளதைப் போல ரஜனிகாந்த் மனம் தெளிந்து இதுபோன்ற குளறுபடிகளில் இறங்காமல் வயதுக்கேற்ற பாத்திரங்களில் நடிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். அவரைப் போலவும், அவருடைய சீடர்களைப் போலவும் அரசியல் ஆசை வைத்திருக்கும் பிற நடிகர்களுக்கும், ரசிகர் மன்றங்களுக்கும் கொஞ்சம் அரசியல் ஞானம் பிறந்திருக்கும். இனி அரசியல் நப்பாசை காரணமாக தாளித்துக் கொட்டப்படும் வெற்று வேட்டு வசனங்களும் தமிழ் சினிமாக்களில் கொஞ்சம் குறையலாம். அதைவிட முக்கியமாக இனிமேலாவது ‘சூப்பர் ஸ்டார் மனதைத் திறக்கிறார், சுப்ரீம் ஸ்டார் வாயைப் பிளக்கிறார் ‘ என்று நூற்றுக் கணக்கில் செய்தியாளர்கள் கேமராக்களையும், ஒலிபெருக்கிகளையும் தூக்கிக்கொண்டு ஓடாமலிருப்பார்கள் என்று எதிர்பார்ப்போம்.

மு. சுந்தரமூர்த்தி

munirathinam_ayyasamy@yahoo.com


அன்புடையீர் வணக்கம்.

முந்தைய மற்றும் இந்தவார திண்ணை.காம் மின்னிதழில் ஜெயமோகனின் எனக்குப் பிடித்த புத்தகம்

என்ற தலைப்பில், பிரம்மராஜன் மொழிபெயர்ப்பில் வெளியான கால்வினோ கதைகள் மற்றும் லதா

ராமகிருஷ்ணன் மொழிபெயர்ப்பில் வெளியான யாசுனா கவாபட்டாவின் ‘மூங்கில் ஆலைப் படகுகள் ‘

ஆகிய மொழிபெயர்ப்புகளைப் பற்றி எழுதியிருந்தார்.

கால்வினோவின் சிறுகதைகள், சா.தேவதாஸ் மொழிபெயர்ப்பில் ஒரு தொகுப்பாக

வெளிவந்துள்ளது எனவும், யாசுனா கவாபட்டாவின் ‘தூங்கும் அழகிகள் இல்லம் ‘ நாவலையும்

சா.தேவதாஸ் தமிழில் மொழிபெயர்த்துள்ளார் எனவும் எழுதியிருந்ததார்.

ஆனால், சா.தேவதாஸிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியதில், அவர்

கால்வினோவின் சிறுகதைகள் சிலவற்றை மட்டும் தான் மொழிபெயர்த்ததாகவும், அதனை

சிறுபத்திக்கைகளில் மட்டுமே வெளியிட்டதாகவும், தொகுப்பாக வெளியிடவில்லை எனவும்

தெவித்தார்.

யாசுனா கவாபட்டாவின் ‘தூங்கும் அழகிகள் இல்லம் ‘ கதையை தான் மொழிபெயர்க்கவே இல்லை

எனவும் தெரிவித்தார்.

இதுபோன்ற சில தவறான தகவல்களை வெளியிடும்போது சற்று கவனத்துடன் வெளியிடும்படி

கேட்டுக்கொள்கிறேன்.

பிரதாப ருத்ரன்,

தருமபுரி.


Series Navigation

மு. சுந்தரமூர்த்தி

மு. சுந்தரமூர்த்தி