அலைபேசியும் ஆடை அலங்காரமும்!

This entry is part [part not set] of 40 in the series 20110206_Issue

சபீர்



என்னதான் சொல்லுங்கள், இந்த ஸெல்ஃபோன், மொபைல் ஃபோன் இப்படியெல்லாம் அழைப்பதைவிட “அலைபேசி” என்று அழைக்கும்போதுதான் தமிழை ஏன் செம்மொழி என்று பெருமைப் படுகிறோம் என்று விளங்குகிறது.

பலர் தத்தமது அலைபேசிகளை சீவி சிங்காரித்து பூவும் பொட்டும் வைப்பதில்லையே தவிர மற்றபடி அதற்கு அழகழகா உடுத்திப்பார்ப்பதில் எந்த குறையும் வைப்பதில்லை.

இந்த மொபைல் ஃபோனை பாதுகாக்கிறேன் பேர்வழி என்று பல வித்தியாசமானவர்கள் படுத்துகிற பாடு சொல்லி மாலாது.

ரேடியம் ரேஞ்சுக்கு ஜொளிக்கும் கிளிப்பச்சைக்கலர் ப்ளாஸ்டிக் கவர் போட்டிருந்தவரைப் பார்த்து, “என்ன ஃபோனுக்கு பாபாஷூட் போட்டு வச்சிருக்கிய”என்று கேட்டார் என் நண்பர் ஒருவரின் மச்சான்.

ஊரில் பச்சை வெல்வெட்டில் ப்ரஸ் பட்டன் எல்லாம் வைத்துத் தைத்த அலைபேசி உறை நான் பார்த்திருக்கிறேன்.தர்கா பார்ட்டிகள் ஊதுவர்த்தி கொளுத்தி பரவசப்படும் அளவுக்கு படு விமரிசையாக அடக்கம் செய்யப்பட்டிருக்கும் அந்த ஃபோன்.

சிலர் ஃபோனை இடுப்பு பெல்ட்டில் ரிவால்வார் ரேஞ்சுக்கு சோப்புப் பெட்டி போன்றதொரு கடினமான உறைக்குள் வைத்திருப்பார்கள். இன்னும் சிலரோ ஃபோன் அடிக்க ஆரம்பித்ததும் அதை எடுப்பதற்குள்ளே கதகளி துவங்கி களரி வரைக்கூட அபிநயம் பிடித்து முடிப்பார்கள். அத்தகைய இடத்தில் பதுக்கி இருப்பார்கள்.

இன்னொரு பார்ட்டி உறைக்கு ஜிப்பு வைத்து தைத்து இருந்ததால் அந்த ஜிப்பின் அச்சு அப்படியே ஃபோனின் பக்கங்களில் பதிந்து ஏதோ மேஜர் அறுவை சிகிச்சை முடிந்து தையல் போட்ட இடம்போல பளிச்சென்று தெரியும். அதிலும் அவர் திறந்து மூடும்போது ஜிப்பின் ரன்னர் சிக்கிச்சிக்கி இரண்டு இடங்களில் ஃபோன் கன்டிப்போன மாதிரி இருக்கும்.

என் நண்பர் ஒருவர் ஃபோன வந்ததும் இடுப்பில் உள்ள போச்சிலிருந்து எடுத்து பேசிவிட்டு வைக்க, திரும்ப உடனே ஃபோனடிக்க மீண்டும் பேசிவிட்டு வைக்க, இப்படியே எடுப்பதும் பேசுவதும் வைப்பதும் என ரொம்ப அவதிப்பட்டார். இது இப்படியே பழக்கமாகி பல சமையங்களில் ஃபோன் அடிக்காமலேயே அனிச்ச்சியாக கை ‘போச்’ பக்கம் போனதை பார்த்து மிரண்டுபோய்,”ஃபோன் பேசாத நேரங்களில் இந்த கையை வைத்து வேறு ஏதாவது வேலைகூட செய்வீர்களா?” என்று கேட்டு வைத்தேன்.

துபை தமிழ் பஜாரில் நேரில் கண்டது: “புலி வருகுது புலி வருகுது”என்ற கருத்தாழம் மிக்க சினிமாப் பாட்டின் ரிங் டோன் அடிக்க ஒருவர் கிணற்றில் தண்ணீர் கேந்தும் லாவகத்தோடு இடுப்புக்கருகில் ஒரு நூலைப் பிடித்து இழுத்தார். மூன்றாவது இழுவையில் நூலின் முடிவில் புலி வரவில்லை என்றாலும் மெலிந்த பொற்கிளியைப் போன்றதொரு அழகான சுருக்குப்பை மேலே வந்தது. அதை எடுத்து சுருக்கை அகட்டி கவிழ்த்தார். கையில் ஃபோன் விழுந்தது. எடுத்து, “ஹலோ… ஹலோ…”என்று இரண்டு முறையல்ல மூன்றுமுறை சொல்லிவிட்டு “வச்சிட்டான்” என்று தன் நண்பரிடம் வறுத்தப் பட்டார். ஃபோன் செய்தவருக்கு எப்படித்தெரியும் பார்ட்டியோட பந்தோபஸ்த் மேட்டரெல்லாம்.

நானும்தான் சட்டென்று ஃபோனை எடுத்துவிடமாட்டேன். ஆனால், மேற்சொன்ன காரணங்கள் ஏதுமில்லை, இது வேறு, உங்களிடம் சொல்வதெற்கென்ன. நான் ஃபோனை எப்பவும் வைப்ரேஷன் மோட்லேயே வைத்திருப்பேனா, ரிங் அடிக்கும்போது கூடவே வைப்ரேட் ஆகுமா, அந்த வைப்ரேஷன் என் ஃபோன் இருக்கும் இடத்தில் கிர்கிர்னு கூச்சம் காட்டுமா, அது கொஞ்சம் குஜாலா இருக்குமா அதை அப்படியே அனுபவிச்சிட்டு அப்புறம்தான் ஃபோனை எடுப்பேனாக்கும்.

உங்களுக்கு நம்பிக்கை வரனும்னா 00……என்கிற என் அலைபேசிக்கு ஃபோன் பண்ணிப் பாருங்களேன், கொஞ்ச நேரம் உங்களை கூச்சம் காட்டவிட்டுத்தான் ஃபோனை எடுப்பேன்.

இந்த ஆய்வுக்கட்டுரை(?) எழுதிக் கொண்டிருக்கும்போது என் அலைபேசி “பறவை முனியம்மா காலிங்” என்று ரிங் டோனியது. நான் குழம்பி புருவம் உயர்த்தவம் என் மகள் சட்டென வந்து ஃபோனைப் பிடுங்கி, “அது என் ஃபிரென்டுக்கு நான் வைத்த காலர் ஐ டி டாடி” என்று சொன்னது.

ஆஹா அடுத்து ஆய்வு “ரிங் டோன் மற்றும் காலர் ஐ டி” பற்றியதாக இருக்கட்டுமே என்று செய்தி சேகரிக்க துவங்கினேன்.

-Sabeer
Sabeer.abushahruk@gmail.com

Series Navigation

சபீர்

சபீர்