பயணம்

This entry is part of 54 in the series 20090915_Issue

கலா“கண்டக்டர் சார். இந்த பஸ் எந்த ஊருக்குப் போகுது?”

“அது பதினெட்டுப் பட்டிக்குப் (தமிழ் சினிமா உபயம்?) போவுது. அதையெல்லாம் உன்கிட்டச் சொல்லிக்கிட்டு இருக்க முடியாது. நீ போக வேண்டிய ஊரைச் சொல்லிக் கேட்க கத்துக்க. படிச்சவனும் இப்படித் தான் இருக்கான். படிக்காதவனும் இப்படித்தான் இருக்கான்” கண்டக்டர் அலுத்துக் கொண்டார்.

“நான் புதுச்சேரிக்குக் போகணும். இந்த பஸ் போவுமா?”

“போவும், போவும் ஏறு”.

கண்டக்டருக்கும் பயணி ஒருவருக்கும் நடந்த இந்த உரையாடலை காதில் வாங்கிக் கொண்டே, கூட்டத்தினுள் புகுந்து அடித்துப் பிடித்துக் கொண்டு பேருந்தில் ஏறிவிட்டேன்.

அன்று முகூர்த்த நாள் என்பதால் ஏகப்பட்ட கூட்டம். நடுவே அகப்பட்டுக் கொண்டு ஒவ்வொரு நிறுத்தத்தின் போதும் பயணிகள் இறங்கி ஏறுவதால் ஏற்பட்ட தள்ளுமுள்ளுகளால் நான் பட்ட வேதனையைச் சொல்லி மாளாது.

என் பக்கத்தில் நின்ற அம்மாள், நன்கு வளர்ந்த தம் பையனை இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டு நின்றிருந்தார். ‘இப்படிப்பட்ட நெரிசலில் நிற்பதே கஷ்டம். அதிலும் பையனைத் தூக்கி வைத்துக் கொண்டு நிற்பதென்றால்?’ என்று பரிதாபப் பட்ட நான் அவரை நோக்கி, “இவ்ளோ பெரிய பையனை எதுக்குத் தூக்கி வைச்சிக்கிட்டுக் கஷ்டப்படுறீங்க? இறக்கி விடுங்க, அவன் நிற்பான்” என்றேன்.

நான் கூறியது எதுவும் காதில் விழுந்ததாகவே அவர் காட்டிக் கொள்ளாததால், அவருக்குக் கேட்கும் திறன் குறைவு என்றெண்ணிய நான், மீண்டும் சத்தமாகச் சொன்னேன்.

நான் கூறியது எனக்குப் பின்னால் நின்றிருந்த கண்டக்டருக்குக் கேட்டு விட்டது போலும். எங்கள் பகுதியில் டிக்கெட் கொடுத்து முடித்துவிட்டுத் திரும்பிப்போக எத்தனித்தவர், எட்டிப்பார்த்தார்.

“ஏம்மா! யாரும்மா அது? பையனை எறக்கி விடு. எவ்ளோ உயரம் இருக்கான்னு பார்க்கணும்”

பக்கத்திலிருந்த கம்பத்தில் அவன் உயரத்தை அளந்தவர், அவனுக்கு அரை டிக்கெட் எடுத்தாக வேண்டும் என்று சொல்லிவிட்டார்.
“கிடு கிடுன்னு வளர்ந்துட்டான், ஆனா இன்னும் மூணு வயசு கூட ஆகல சார்,” என்று அவர் கெஞ்சியும், கண்டக்டர் கறாராக டிக்கெட்டைக் கிழித்துக் கொடுத்துவிட்டார்..

டிக்கெட் எடுப்பதை தவிர்ப்பதற்காகத் தான் அவர் தூக்கி வைத்திருந்திருக்கிறார் என்ற விஷயம் அப்போது தான் எனககுப் புரிந்தது.
‘இது கூடத் தெரியாத மடச் சாம்பிராணியா இருக்கிறாயே’ என்பது போல், பையன் கேவலமாக ஒரு பார்வை பார்த்தான். டிக்கெட்டை வாங்கிவிட்டு நிமிர்ந்த அவன் அம்மாவின் விழிகளிலோ, கொலைவெறி!

அந்தப் பார்வையின் உக்கிரம் தாங்காமல், அவர் பார்வையிலிருந்து மறையும் பொருட்டு, மெல்ல நகர்ந்து பேருந்தின் பின்புறம் வந்தேன்.

ஒரு நிறுத்தத்தில் இருக்கையொன்று காலியாகவே, உட்கார இடம் கிடைத்தது. என் பக்கத்தில் சிறுமியொருத்தி அவள் அம்மாவின் முந்தானையைப் பிடித்துக் கொண்டு நின்றிருந்தாள். நான் அவளை அழைத்து என் மடியில் தூக்கி உட்கார வைத்துக் கொண்டேன். ஆனால் அக்குழந்தை மீது (குழந்தையா அது?) இரக்கப்பட்டது எவ்வளவு பெரிய தவறு என்பது சீக்கிரத்திலேயே எனக்குப் புரிந்தது.

அடிக்கடி என் மடியிலிருந்து இறங்குவதும், திரும்ப ஏறுவதுமாக அவள் செய்த இம்சைகளால், என் தொடைகள் ரணகளமாகிப் போயின. கால் வலி தாங்க முடியாமல், ஒரு சமயத்தில் அவளை இறக்கி விட்டாலும், ரொம்பவும் உரிமையாக மீண்டும் என் மடி மேல் ஏறி அமர்ந்து கொண்டாள்.

நல்லவேளையாக என் மனைவி பக்கத்தில் இல்லை. இருந்திருந்தால்,
“வேலியில போன ஓணானைப் புடிச்சி மடியில விட்டுட்டு, அதுக்கப்புறம் அது குத்துதே, குடையுதேன்னு புலம்பின மாதிரி, அதுபாட்டுக்கு சிவனேன்னு நின்னுக்கிட்டுருந்த புள்ளையைத் தூக்கி மடியிலே வைச்சுக்கிட்டு, இப்படி அவஸ்தை படறது தேவை தானா?” என்று ஊர் போய்ச் சேருகிற வரைக்கும் என்னைத் திட்டித் தீர்த்திருப்பாள்.

ஒரு கட்டத்தில், அமர்ந்திருப்பதை விட நிற்பது எவ்வளவோ மேல் என்று தோன்ற, “இந்தாம்மா நீயே உட்கார்ந்துக்க” என்று கடுப்புடன் சொல்லிவிட்டு, எழுந்து நின்று கொண்டேன். மறுநிமிடம் அவள் தன் அம்மாவைக் கூப்பிட்டு அங்கு அமரச் சொல்லிவிட்டு, அவள் மடியில் அமர்ந்துகொண்டாள். ஆனால் என்ன ஆச்சரியம்! என் மடியில் செய்த சேட்டைகள் எதுவும் செய்யாமல் அமைதியாக இருந்தாள்.

ஒண்ட வந்த பிடாரி, ஊர்ப் பிடாரியை விரட்டிய கதையாக என்னை அங்கிருந்து கிளப்பிவிட்டு, அவள் அம்மாவை உட்கார வைக்க குட்டிச்சாத்தான் சதி செய்ததோடு மட்டுமின்றி, இடத்தைப் பறிகொடுத்துப் பரிதாபமாக நின்றிருந்த என்னைப் பார்த்து வெற்றிப் புன்னகை வேறு!.

இடத்தைப் பறிகொடுத்ததால் ஏற்பட்ட கடுப்பில், எனக்குத் தர வேண்டிய ஐந்து ரூபாயைத் தராமல் டபாய்த்த கண்டக்டரிடம் என்னைத் தாண்டி அவர் போகும் போதும், வரும் போதும் என் சீட்டை அவர் முகத்துக்கு நேரே நீட்டி ‘பாக்கி கொடுக்கணும்’ என்று நச்சரித்துக் கொண்டிருந்தேன். ‘மீதியை வாங்காமல் விடாது இந்தக் கிராக்கி’ என்பது உறுதியானவுடன், என் சீட்டை வாங்கிப் பார்த்துவிட்டுச் சில்லறையைக் கொடுத்தார்.

“சார், நான் ஊருக்குப் புதுசு. ஹவுஸிங் போர்டு காலனி ஸ்டாப்பிங் வந்தா, என்னைக் கொஞ்சம் இறக்கிவிடணும்” என்றேன் சில்லறையை வாங்கிக் கொண்டே.
“ஸ்டாப்பிங் வந்தாச் சொல்றேன். என்னால இறக்கியெல்லாம் விடமுடியாது. நீங்களாத் தான் இறங்கிக்கணும்” என்றார் கண்டக்டர் நக்கலாக.

kalayarassy@gmail.com

Series Navigation