ஆசை ஆசை.. இப்பொழுது பேராசை..

This entry is part [part not set] of 37 in the series 20080925_Issue

ராமலக்ஷ்மி


அன்று சாமான்யனுக்கு எகிறும் விலைவாசியில் கார் வாங்குவதென்பது நிறைவேறாத ஆசை போலிருந்தது.
இன்றோ விலைவாசி கட்டுக்குள் வராவிடினும் வங்கிகள் கடனை வாரி வழங்கிட வாசலுக்கு வண்டி வருவது கடினமாயில்லை.

ஆனால்….
ஆனால் என்ன?

அன்றைக்கு ஒரு இருபத்தியெட்டு ஆண்டுகளுக்கு முன்னர் 1980-ல் எழுதி ’84-ல் நான் இளங்கலை இரண்டாம் ஆண்டிலிருந்த போது திருநெல்வேலி சாராள் தக்கர் கல்லூரி ஆண்டு மலரில் வெளியான இந்த நையாண்டிக் கவிதையின் கடைசி நான்கு வரிகள் இன்றைக்கும் பொருந்தி வந்தால் அதற்கு நான் பொறுப்பல்லதானே!

——————————————————————————–

மனிதா ஆசைப்படாதே!

காரு வாங்கப் போறேன்-நானு

காரு வாங்கப் போறேனய்யா!

பஸ்ஸைப் பிடிச்சு பதபதச்சு ஆபீஸ் போகப்

பிடிக்கலை யெனவே காரு வாங்கப் போறேனய்யா!

பத்து வருஷம் ஆனாலும்

பாங்காய் பணத்தைச் சேமிச்சு

புத்தம் புதிதாய்க் கார் வாங்கிப்

போகத்தான் போறேனய்யா!

நாலு வருஷம் ஓடிடுச்சு

சேமிப்பு நல்லா வளருது

காரை என்மனம் மறந்திடுத்து

‘சட்’டென ஏறும் விலை பார்த்து.

பைக்கு வாங்கப் போறேன்-நானு

பைக்கு வாங்கப் போறனய்யா!

பத்தாண்டும் கழியட்டும்-அதுக்கடுத்த

புத்தாண்டும் வருகட்டும்!

மேலும் ரெண்டு வருஷங்கள்-மழை

மேகம் போலே மறைஞ்சிடுச்சு!

பைக்கை மறந்து துடிச்ச மனம்

ஸ்கூட்டரை நினைச்சு ஏங்கிச்சு.

ஸ்கூட்டர் வாங்கப் போறேன்-நானு

ஸ்கூட்டர் வாங்கப் போறேனய்யா!

‘சர்’ரென விரைந்து சடுதியில் போகும்

ஸ்கூட்டர் வாங்கப் போறேனய்யா!

எட்டு வருஷம் ஆயிடுச்சு,

கட்டாய் பணமும் சேர்ந்திடுச்சு-ஆனா

ஸ்கூட்டர் வாங்கக் காணாதய்யா

மொபெட் வாங்கப் போறேனய்யா!

மொபெட் வாங்கப் போறேன்-நானு

மொபெட் வாங்கப் போறேனய்யா!

பத்து வருஷப் பணமும் போட்டு

மொபெட் வாங்கப் போறேனய்யா!

பத்து ஆண்டு கழிந்ததும்-என்

வீட்டு முன்னால் நின்றது

புத்தம் புதிதாய் மின்னியது

மொபெட் என்றா நினைக்கிறீர்?

பெட்ரோல் விலை ஏறிடுத்து

மொபெட் வாங்கினா கட்டுமா?

வீட்டு முன்னால் நின்றது… …

சைக்கிள்தானே தெரியுமா?

——————————————————————————–

இப்போது பாடலாமா:
“ஆசை ஆசை இப்பொழுது பேராசை… பெட்ரோல் போட்டு வண்டியில் போவதுதான்…”

***

Series Navigation

ராமலக்ஷ்மி

ராமலக்ஷ்மி