பயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ் – 19
சாய் (என்கிற) பேப்பர்பாய்
டேக் 19
முழுக்கு !
2-10-1975 அன்று பெருந்தலைவர் காமராஜர் திடீரென மரணமடைந்தார். நாடே கலங்கிப் போனது. அத்துடன் சிவாஜியின் பிரச்சாரத்தின் மைய அச்சும் முறிந்தது. இலக்கை இழந்து விக்கித்து போய் நின்றது.
காமராஜரின் திடீர் மறைவைத் தொடர்ந்து கலகலத்துப் போய் கடைசியில் கட்சியைப் போலவே இந்திராவின் இறுகியப் பிடிக்குள் சிவாஜியின் பாலிடிக்ஸ்சும் ஐக்கியமாகிப் போனது.
திமுகவை கழற்றி விட்டு விட்டு அதிமுக பக்கம் தாவி 1977 மார்ச்சில் நடந்த பாராளுமன்றப் பொதுத் தேர்தலை இந்திரா சந்தித்ததில் இருந்து சிவாஜியின் பாலிடிக்ஸ்சுக்கும் சவலைத் தட்டத் தொடங்கியது. தொடர்ந்து மாறி மாறி திராவிடக் கட்சிகளின் தோளை தமிழக காங்கிரஸ் தொத்திக் கொண்ட போதெல்லாம், அதற்கேற்ப ஆடும் ‘ரிக்கார்டு டான்ஸ்’ போலானது சிவாஜியின் பிரச்சார நிலைமை.
சினிமாவில் தொழில் ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் எந்த எம்ஜிஆருக்கு எதிரானதொரு தோற்றத்தை அதுநாள் வரை பராமரித்து தனது ரசிகர்களை திருப்திப்படுத்தி வந்தாரோ அந்த எம்ஜிஆர் , 1977 மார்ச் தேர்தலில் திடீரென சிவாஜிக்கு ‘உடன்பிறவாச் சகோதரர்’ ஆனார். அடுத்து மூன்றே மாதங்களில் சட்டமன்றப் பொதுத் தேர்தலில் கூட்டணி உடைந்து காங்கிரஸ் தனியே நின்றபோது ‘ சகோதரர் ‘ மீண்டும் சத்ருவாகிப் போனார். 1980ல் கொஞ்ச காலத்திற்கு திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி ‘உற்ற நண்பர்’ ஆக இருந்தார். திரும்பவும் 1984ல் ‘இரட்டை இலை’யில் தன்னை ஒரு இலையாக வர்ணித்துக் கொண்டு பிரச்சாரம் செய்யவும் சங்கோஜப்படவில்லை சிம்மக்குரல். (இன்னொரு இலை எம்ஜிஆராம்!)
நடுவில், எப்போதாவது தனித்து தேர்தலில் நின்று பார்க்கும் சபலம் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்படும்போது அதற்கேற்ப, மாஜி / வருங்கால நண்பர்களை திட்டி, காங்கிரசுக்கு ஓட்டு கேட்கவும் தயாராகவே இருந்தார் சிவாஜிகணேசன்.
” ஞானத்தோடு வாழுவோம் ; நிதானத்தோடு வாழுவோம்
மாபெரும் தலைவர் சொன்ன மானத்தோடு வாழுவோம்
பஞ்சம் போக்க பாடுவோம்; லஞ்சம் நீக்கக் கூடுவோம்
பழைய பாதை தனை மாற்றி புதிய பாதை காணுவோம்
நாணயங்கள் பெருகவே நல்லவர்கள் வருகவே
நாட்டு மக்கள் நல்லவர்க்கு வாக்குச் சீட்டுத் தருகவே.
காலமாற்றம் காட்டுவோம்; கயவர் தம்மைப் பூட்டுவோம்
கள்ளச் சந்தைப் பேர்வழிக்கு கைவிலங்கு மாட்டுவோம்
ஊரை ஏய்க்கும் மனிதரே…..”
1977ல் வெளியான ‘அவன் ஒரு சரித்திரம்’ படத்தில் வரும் ” நாளை என்ன நாளை…” எனத் தொடங்கும் இப்பாடலில் காங்கிரசுக்கு ஓட்டு கேட்டார் கணேசன்.
இப்படியாக, மரத்துக்கு மரம் தாவி வந்த கட்சியின் நிலைப்பாட்டை அனுசரித்து வளைந்து நெளிந்து சிவாஜியின் பிரச்சாரமும் நம்பகத்தன்மையையும் வீரியத்தையும் இழந்தது. ஒருகட்டத்தில் திரையில், தனது உள்ளங்கையை (காங்கிரசின் தேர்தல் சின்னமான ‘கை’யை பிரபலப்படுத்துகிறாராம் !) குளோசப்பில் காண்பிப்பதும், ‘அம்மாவே’; ‘அன்னையே’ (இந்திராகாந்தியை மறைமுகமாக குறிப்பிடுவதாம்) என்று
நீட்டி முழக்கி விளிப்பதுமாக அது சுருங்கியும் விட்டது.
*********************
பொதுவாக, எம்ஜிஆருக்கு இணையாக ரசிகர்கள் பட்டாளத்தையும்- பேரும் புகழையும் பெற்றிருந்தும் கூட திமுகவில் எம்ஜிஆருக்குக் அளிக்கப்பட்ட அந்தஸ்து, காங்கிரசில் சிவாஜிக்கு கொடுக்கப்படவில்லை. மக்கள் திலகத்துக்கு அறிஞர் அண்ணாவிடம் கிடைத்த ஊக்குவிப்பும் அரவணைப்பும், நடிகர் திலகத்துக்கு காமராஜரிடம் கிடைக்கவில்லை என்பதே நிஜம். ஏறத்தாழ 25 ஆண்டுகளுக்கும் மேலாக கட்சி மீது சிவாஜி காண்பித்து வந்த அபிமானத்துக்கும் விசுவாசத்துக்கும் உழைப்புக்கும் உரிய அங்கீகாரம் அவருக்கு காங்கிரஸில் காமராஜர் காலத்தில் இருந்தே கடைசி வரை கிடைக்கவே இல்லை. (1980களில் ஒரே ஒரு முறை சிவாஜியை பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக ஆக்கியதோடு ‘பதில் மரியாதை’யை காங்கிரஸ் தலைமை முடித்துக் கொண்டது ! ).
இந்திராகாந்தி காலத்தை தொடர்ந்து ராஜீவ் காலத்திலும் இந்த உதாசீனம், அதிகமாகவே சிவாஜி, 1988ல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி ‘தமிழக முன்னேற்ற முன்னணி’ என்ற பெயரில் தனிக் கட்சி தொடங்கினார். அப்போது, எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு இரண்டாக உடைந்திருந்த அதிமுகவில், ஜானகி எம்ஜிஆரின் அணியுடன் கூட்டணி வைத்து 1989ல் சட்டமன்றப் பொதுத் தேர்தலில் போட்டியிட்ட சிவாஜியின் கட்சி படுதோல்வி கண்டது. சிவாஜியே கூட திருவையாறு தொகுதியில் ஏறக்குறைய 10 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளரிடம் தோற்றுப் போனார். முன்னதாக, கட்சியின் கொள்கைப் பிரகடனத் திரைப்படமாகக் கூறி சிவாஜி தயாரித்து நடித்த ‘என் தமிழ் என் மக்கள்’ என்ற படத்துக்கும் (1988) இதே கதி தான்.
பின்னர், கட்சியை கலைத்து விட்டு 1990களின் துவக்கத்தில் ஜனதாதளம் கட்சியில் சேர்ந்து அதன் தமிழக தலைவராக சில காலம் இருந்தும் பார்த்தார். சூதும் சூட்சமும் நிறைந்த அரசியல் தனக்கு ஒத்துவராது என தாமதமாக புரிந்துக் கொண்டு, கடைசியில் அரசியலுக்கே பெரிய கும்பிடும் போட்டு விட்டார் ‘செவாலியே’. முதுகில் சுமந்திருந்த வேதாளத்தை கீழே இறக்கி விட்டு நிம்மதி கொண்டார்.
அரசியலில் விட்டதை சினிமாவில் பிடித்தார். ஜெயித்தார். சாதித்தார். தனது கன்னக் கதுப்புகளையும் கைவிரல் நகங்களையும் கூட கதாபாத்திரத்திற்கேற்ப நடிக்க வைக்கத் தெரிந்த அந்த மகா நடிகனை கலை கடைசி வரை கைவிடவேயில்லை. ‘ நடிப்புலகச் சக்ரவர்த்தி ‘ என்ற உயர் அங்கீகாரத்தை கல்வெட்டாய் தமிழ் சினிமா உலகில் பொறித்து விட்டு, 21-7-2001 அன்று மண்ணுலகை விட்டு பறந்து விட்டது அந்த கலைக்குயில்.
(வளரும்)
அடுத்து: ‘ சைடு ரீல்கள் ‘ !
—————————————————–
vee.raj@rediffmail.com
———————————————————
- புலம் பெயரும் மக்களைப்பற்றின சில படங்கள்
- காதல் நாற்பது (22) கொடுமை இழைக்கும் இவ்வுலகம் !
- பயம்
- பெரியபுராணம்- 132
- உம்மா
- தந்தை மகற்கு ஆற்றும் நன்றி
- நிலமகளின் குருதி! (தொடர்ச்சி) – 2
- ஊதா நிறச் சட்டையில்…
- நாற்காலிக்குப் பின்னால்
- ஆறும் ஒன்பதும்
- தொடர்நாவல்: அமெரிக்கா! – அத்தியாயம் பதினொன்று: இளங்கோ இலங்கா ஆன காதை!
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்) (அங்கம்: 8 காட்சி: 2 பாகம்: 2)
- சுளுக்கெடுப்பவர்
- கால நதிக்கரையில் .. – 7
- விவாகங்கள் விகாரங்கள் விவாதங்கள்
- ஒரு கணம்
- பாரத தேசத்துக்குப் படைப்பலம் அளித்த விஞ்ஞான மேதை டாக்டர் அப்துல் கலாம் -7
- மாத்தா-ஹரி – அத்தியாயம் 11
- மீனாட்சிபுரம் முஸ்லிம்கள் பற்றி திரு.வெங்கட்சுவாமிநாதன் சமூகத்திற்கு…
- PhD மாணவர்களின் நிலை
- மும் மொழி மின் வலை இதழ்
- அற்றைத்திங்கள் நிகழ்ச்சி
- சி.பா.ஆதித்தனார் அனைத்திந்திய இதழியல் கழகத்தின் 2-ஆம் தேசிய கருத்தரங்க அறிவிப்பு
- கடிதம் (ஆங்கிலம்)
- அமீரகத் தமிழ்க் கவிஞர் பேரவை கவிதைத் திருவிழா
- பேராசிரியர் சிவத்தம்பியின் 75 வது வயது நிறைவு
- அர்த்தமுள்ள அறிமுகங்கள்
- பயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ் – 19
- நகுலனின் நினைவில்
- இலை போட்டாச்சு! – 30 அடை
- மெய் எழுத்து ஏடு ஜூலை முதல்