பயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ் – 18

This entry is part of 34 in the series 20070517_Issue

சாய் (என்கிற) பேப்பர்பாய்


டேக் 18

‘ இன்குலாப் ஜிந்தாபாத் ‘

தமிழ் சினிமாவில் திராவிட இயக்கத்துக்கு எதிராக பகிரங்கமாக களம் இறங்கிய முதலாவது நட்சத்திர நாயக நடிகர் சிவாஜிகணேசன் தான். ‘ தேசிய நடிகர்’ ஆன பிறகு சிவாஜியுடன், அப்போது தமிழ் சினிமாவில் தீவிர காங்கிரஸ் அபிமானிகளாக இருந்த ஏ.பி.நாகராஜன், பீம்சிங் போன்ற இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் நாடி வந்து கைக் கோர்த்துக் கொண்டனர். திமுகவில் இருந்து விலகி தேசிய நீரோட்டத்தில் ஐக்கியமாகியிருந்த கவிஞர் கண்ணதாசனும் இந்த வரிசையில் சேர்ந்துக் கொண்டார்.

இதுவே பின்னாளில் ஒருகட்டத்தில்… திராவிட – தேசிய (காங்கிரஸ் தான்) இயக்கங்களின் அபிமானிகள் என்ற அடிப்படையில் ‘ எம்ஜிஆர் குரூப் ‘ மற்றும் ‘ சிவாஜி குரூப்’ என இரண்டு கோஷ்டிகள் தமிழ் சினிமாவில் உருவாக அடித்தளமாக அமைந்தது .

*********
1960களின் துவக்கத்தில் காங்கிரஸ் அபிமானியாக – காமராஜரின் விசுவாசியாக ஆரம்பித்து பிரச்சார பீரங்கியாக உருவெடுத்தார் சிவாஜிகணேசன். தமிழகத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி ஏற்பட்டு காமராஜரை முதலமைச்சர் நாற்காலியில் அமர்த்தி பார்க்க வேண்டுமென்பது மட்டுமே சிவாஜி பிரச்சாரத்தின் ஒரே இலக்காக இருந்தது. காந்தி, நேரு வரிசையில் காமராஜரை கொண்டு சென்று திரையில் புகழ்பாடுவதே அதற்கான பிரதான வழிமுறையாக கையாண்டு வந்தார்.

சினிமாவில் படு பிஸியாக இருந்தபோதும், 1967ல் நடந்த சட்டமன்றப் பொதுத் தேர்தலில் ஊர் ஊராக சுற்றுப்பயணம் செய்தும் காங்கிரசுக்கு ஓட்டு கேட்டார். காங்கிரஸ் கட்சி, இந்திராகாந்தி தலைமையிலான ‘இண்டிகேட்’ ( இந்திரா காங்கிரஸ் ) மற்றும் காமராஜர் தலைமையிலான ‘சிண்டிகேட்’ (ஸ்தாபன காங்கிரஸ்) என 1969ல் இரண்டாக உடைந்த போதும் சிவாஜியின் இலக்கு, திசை மாறவில்லை. 1971ல் திமுகவுடன் தோழமை வைத்து பாராளுமன்ற, சட்டமன்றப் பொதுத் தேர்தல்களை இந்திரா சந்தித்த போதும் காமராஜர் பக்கமே நின்றார் சிவாஜி.

‘காமராஜர் தான் அடுத்த முதலமைச்சர்’ என்கிற நம்பிக்கையை பரவலாக ஏற்படுத்தி விட்டு கடைசியில் காலை வாரி விட்ட 1971 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகும் கூட சிவாஜி சோர்ந்து விடவில்லை.

“அம்பிகையே; ஈஸ்வரியே
……………………………….
………………………………
“ஏழைகளை ஏய்ச்சதில்லை முத்துமாரி – நாங்க
ஏமாத்தி பொழச்சதில்லை முத்துசாமி
வாழ விட்டு வாழுகிறோம் முத்துமாரி- இனி
வருங்காலம் எங்களுக்கே முத்துமாரி ”
-1972ல் வெளியாகி சக்கைப் போடு போட்ட ‘பட்டிக்காடா பட்டணமா” என்ற படத்தில் இடம் பெற்ற இப்பாடலில், தனது தளராத நம்பிக்கையை வெளிப்படுத்தியிருப்பார்.
” சிவகாமி உமையவளே முத்துமாரி – உன்
செல்வனுக்கு காலமுண்டு முத்துமாரி.
மகராஜன் வாழ்கவென்று வாழ்த்துக் கூறி
மக்களெல்லாம் போற்ற வேண்டும்
கோட்டையேறி…”

– என்றும் எதிர்பார்ப்புடன் நீளும் அப்பாடல்.

தமிழக அரசியலில் பெரும் சக்தியாக உருவாகி வந்த எம்ஜிஆர், 1977ல் காமராஜர் முதலமைச்சராக பெரும் இடைஞ்சலாக இருப்பார் என சிவாஜி அஞ்சியிருக்க வேண்டும். 1972க்கு பிறகு சினிமாவில் சிவாஜியின் அரசியல் பிரச்சாரம் அப்போதைய திமுக ஆட்சியாளர்களைக் காட்டிலும் எம்ஜிஆரையே பிரதானமாகக் குறி வைத்து அமில அஸ்திரங்களை ஏவத் தொடங்கின – அல்லது அப்படியானதொரு தோற்றத்தை ஏற்படுத்தின. ஏற்கனவே தொழில் முறையில் நேரடிப் போட்டியாளராகவும் எம்ஜிஆர் இருந்ததால் ஏவுகணைகளின் சூட்சமங்களை புரிந்துக் கொள்வதில் சிவாஜி ரசிகர்களுக்கு சிரமம் இருக்கவில்லை. திமுக மீதும் முக்கியமாய் அப்போது எம்ஜிஆர் மீதும் கடும் கோபத்தில் இருந்த கவிஞர் கண்ணதாசன், இந்த விஷயத்தில் சிவாஜிக்கு துணைக்கு வந்தார்.

” நான் நாட்டைத் திருத்தப் போறேன்
அந்தக் கோட்டையைப் பிடிக்கப் போறேன்
……………………………………………………
……………………………………………………
ஊரை ஏமாத்தும் உல்லாசக்காரன்
வேஷத்தை கலைக்கப் போறேன்
உள்ளே ஒண்ணாக வெளியே ஒண்ணாக
பேசாமப் பண்ணப் போறேன்.
ஆணி அச்சாணி இல்லாத தேரை
எல்லார்க்கும் காட்டப் போறேன்
அச்சம் பண்பாடு இல்லாத ஆளை
என்னான்னு கேக்கப் போறேன்”

– ” என்னடா.. இந்த ‘ஸாங்’லே நம்ம அண்ணன் யாரை அட்டாக் பண்றார் தெரியுதா?” ; ” தெரியும், தெரியும். ‘ தொப்பி’ யை தானே..!” – 1975ல், ‘மன்னவன் வந்தானடி’ படம் ரிலீஸ் நாளன்று மேட்னிஷோவில் எங்கள் ஊர் கிருஷ்ணகிரியில் தியேட்டரில் பெஞ்ச் டிக்கட்டில் எனக்கு பக்கத்தில் உட்கார்ந்து படம் பார்த்துக் கொண்டிருந்த இரண்டு ‘பிள்ளைகள்’ விசிலுடன் பரிமாறிக் கொண்ட இந்த அர்த்தமே அதற்கு சான்று. ( சிவாஜி தனது ரசிகர்களை ‘பிள்ளைகளே..’ என்று பிரியத்துடன் அழைப்பார்)
அதே பாடலில்,
” காலம் வந்தது கத்தியைத் தீட்டு
கத்தியைப் போலப் புத்தியைத் தீட்டு
வெற்றியை நான் வாங்கித் தாரேன்”

– என்று உத்தரவாதம் வேறு கொடுப்பார்.

———————————-

1974ல் வெளியான ‘என் மகன்’ படத்தில் ஒரு பாடல். “நீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா சொல்லுங்கள்..” என்று குளோசப் ஷாட்டில் சிவாஜி கை நீட்டி கேட்பது போல் பாடல் ஆரம்பிக்கும். அதில்:

” அழகாகத் தோன்றும் ஒரு கருநாகம் கண்டேன்
அநியாயம் செய்பவர்க்கும் மரியாதைக் கண்டேன்
சதிகாரக் கூட்டமொன்று சபை ஏறக் கண்டேன்
தவறென்று என்னைச் சொல்லும் பரிதாபம் கண்டேன்;
கொள்ளையடிப்போன் வள்ளலைப் போல
கோயிலை இடிப்போன் சாமியைப் போல – இங்கு
ஊழல் செய்பவன் யோக்கியன் போல
ஊரை ஏய்ப்பவன் உத்தமன் போல காண்கின்றான்.
சட்டத்தின் பின்னால் நின்று சதிராடும் கூட்டம்
தலைமாறி ஆடும் இங்கு அதிகார ஆட்டம்
என்றைக்கும் மேலிடத்தில் இவர் மீது நோட்டம்
இப்போது புரியாது ; எதிர்காலம் காட்டும்.
நாடக வேஷம் கூட வராது
நாளைய உலகம் இவரை விடாது….”

– பாடல் வரிகள், எம்ஜிஆரையும் – திமுக ஆட்சியாளர்களையும் ஒரு சேர காய்ச்சியெடுப்பதாக காங்கிரஸ் தோழர்களும், ‘பிள்ளை’களும் அர்த்தம் கொண்டு கைத்தட்டி மகிழ்ந்தனர். அதிலும், மு.க. தலைமையிலான திமுக அரசின் ஊழல்களை (அப்போதைய) பிரதமர் இந்திராகாந்தி உன்னிப்பாக கவனித்துக் கொண்டு வருகிறார். திடீரென ஒருநாள் அதிரடியாக நடவடிக்கை எடுக்கப் போகிறார் பார்த்துக் கொண்டேயிருங்கள் என்று சிவாஜி கோடிட்டுக் காட்டுவதாகவும் குஷிப்பட்டுக் கொண்டனர்.
——————————-

” பார்த்தாலும் பார்த்தேண்டி மதறாசுப் பட்டணத்தை
பத்துக் கண்ணு போதாதம்மா, பட்டிக்காட்டம்மா.
தெருவெங்கும் பிராந்திக் கடை தெறந்திருக்காங்க
தினந்தோறும் கண்காட்சி நடத்திக்கிறாங்க.
பணமிருந்தா கோட்டையைக் கூட வாங்கிக்கிறாங்கம்மா.
கூவத்திலே காசை அள்ளிப் போட்டிருக்காங்க
கூட ஒரு முதலையையும் விட்டிருக்காங்க;
துண்டு போட்ட மனுஷங்கெல்லாம் சுத்திக்கிறாங்கம்மா – இந்த
நாட்டைக் கூட துண்டு போட எண்ணிக்கிறாங்கம்மா..”

– அதே 1974ல் வந்த ‘தாய்’ என்ற படத்தில் இடம் பெற்ற பாடல். 1970களில் சென்னைக் கூவம் நதியை சுத்தப்படுத்தி படகு விட அப்போதைய திமுக அரசு நடவடிக்கையெடுத்ததையும், அந்த அரசின் மதுக் கொள்கையையும், அப்போதைய கழகக் கண்மணிகள் தெருவைப் பெருக்குமளவுக்கு தோளில் நீ..ள..மான துண்டுகளை அணிந்து திரிந்ததையும் கிண்டலடிக்கும் பாடல் இது.
——————————

ராஜபார்ட் ரங்கதுரை’ (1973) படத்தில் பகத்சிங் வேடத்தில் சிவாஜி பாடும் “இன்குலாப் ஜிந்தாபாத்; இந்துஸ்தான் ஜிந்தாபாத்..” எனத் தொடங்கும் பாடலில்
” எங்கள் பொன்னாடு எந்நாளும் எம்மோடு
கொள்ளை செய்வோரை பழி செய்வோம் கூண்டோடு
……………………………………….
……………………………………..
தாயின் கண்ணீரே வழிகாட்டும் புதுவெள்ளம்
நாய்கள் வெளியேற வழி சொல்லும் அவள் உள்ளம்.
இந்நாட்டை ஆள்கின்ற திருடர்கள் ஓயாமல்
தேசீய நெஞ்சங்கள் ஓயாது…”

– என வரிகள் வரும். பிரிட்டிஷ் அரசை சாடுவதாக பாடலின் காட்சியமைப்பு இருந்தாலும் உண்மையில் அவை அப்போதைய திமுக ஆட்சியாளர்களுக்கு எதிராக சாட்டையை சொடுக்குவதாகவே ரசிகப் பிள்ளைகளாலும், தேசீய உள்ளங்களாலும் அர்த்தம் கொள்ளப்பட்டு ரசிக்கப்பட்ட வரிகள். அதே பாடலில் காமராஜர் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைய கட்சியினர் திரள வேண்டுமென்கிற அழைப்பையும் விடுவார் சிவாஜி.

” எல்லோர்க்கும் வாழ்வென்னும் கர்மவீரர் பின்னாலே
இந்நாட்டின் இளைஞர்கள் எழ வேண்டும்.
பகைவரை விட மாட்டோம் – வலைதனில் விழ மாட்டோம்
………………………………………………….
………………………………………………….
துணிந்திடும் மனம் உண்டு; சுதந்திரக் கொடியுண்டு
இளைஞர்கள் படை உண்டு; தலைவனின் துணை உண்டு
இங்கே ஒரு காந்தி இருக்கின்றார் அவர் வாழ்க
தெற்கே ஒரு காந்தி வருகின்றார் அவர் வாழ்க! ”

—————————–

காமராஜர் புகழ்பாடும் விதத்தில் ‘தாய்’ படத்தில் ஒரு பாடல்:

” நாடாள வந்தாரு’ நாடாள வந்தாரு
ராஜாங்கம் கண்டாரம்மா.
கல்லாமை கண்டாரு; இல்லாமை கண்டாரு
கல்லூரி தந்தாரம்மா.
பாண்டிய நாட்டுச் சீமையிலே – ஒரு
பச்சைக் குழந்தை அழுததடி;
பாலுக்காக அழவில்லை – அது
படிப்புக்காக அழுததடி.
மாடு மேய்க்கும் சிறுவனைக் கண்டு
மனதும் உடலும் பதைத்ததடி
வளரும் பிள்ளை தற்குறியானால்
வாழ்வது எப்படி என்றதடி !
பெற்ற தாயையும் மறந்ததடி- அது
பிறந்த பொன்னாட்டை நினைத்ததடி.
உற்றார் உறவினர் யாரையும் மறந்து
உலகம் காக்க துணிந்ததடி.
கல்யாணம் செய்யவும் எண்ணமில்லை – ஒரு
காசுக்கும் பணத்துக்கும் ஆசையில்லை;
எல்லார்க்கும் எல்லாமும் வேண்டுமென்று…”

———————————
1975ல் வெளியான ‘டாக்ட சிவா’ படத்தில் ஒரு பாடல்:

” நல்லவர் குரலுக்கு மதிப்பிருக்கும் இந்த நாட்டிலே
……………………………………………………………..
…………………………………………………………….
பறவை இனத்தில் பிறந்தவர் போல்- சிலர்
பதவிக்கு அலைவார் நாட்டிலே.
பட்டமும் பதவியும் தேடினால் கூடுமோ ?
…………………………………………..
……………………………………………
செடி மேல் படர்ந்த கொடியினைப் போல்
பெருந்தலைவரும் தொண்டரும் சேரலாம் – அவர்
மடியினில் எதையும் மறைத்ததில்லை- இந்த
மாநிலம் அவர் வசமாகலாம்.
தியாகமும் சீலமும் தேசத்தை ஆளலாம்”

– காமராஜர் முதலமைச்சராக வேண்டுமென்கிற பேரவாவை வெளிப்படுத்திய அதே சமயம் கோட்டையை நோக்கி வேகமாக நகர்ந்துக் கொண்டிருப்பதாக கருதப்பட்ட எம்ஜிஆரின் அரசியல் செல்வாக்கு மீதான கோபத்தையும் சிவாஜி வெளிப்படுத்துவதாக அர்த்தம் கொள்ளத்தக்கப் பாடல் இது.

*****************

எம்ஜிஆருக்கு ‘ அண்ணா’ போல் சிவாஜிக்கு கிடைத்தது ‘ ராஜா’. காமராஜர் என்பதின் செல்லமான சுருக்கம். ‘எங்க ஊர் ராஜா’, ‘எங்க தங்க ராஜா’, ‘தர்மராஜா’ என்று வைத்தது போதாதென ‘படிக்காத மேதை’, ‘சிவகாமியின் செல்வன்’, ‘தவப்புதல்வன்’, ‘மன்னவன் வந்தானடி’, ‘அவன் தான் மனிதன்’, ‘அவன் ஒரு சரித்திரம்’ … எனவும் தனது படங்களுக்கு டைட்டில் வைத்தும் காமராஜர் மீதான தனது விசுவாசத்தை காண்பித்து வந்தார் சிம்மக்குரலோன்.

” ஏழுகடல் சீமை ; அதை ஆளுகின்ற நேர்மை
இவர் எங்க ஊரு ராஜா, தங்கமான ராஜா..”
(‘எங்க ஊர் ராஜா’ – 1968)

“கோடியில் ஒருவன் பிறந்து வந்தான் -பல
குடும்பங்கள் காக்க வாழ்ந்து வந்தான்
எங்கள் தங்க ராஜா- அவன்
என்றும் மணக்கும் ரோஜா ”
(‘எங்க தங்க ராஜா’ -1973)

***********

இப்படியெல்லாம் எந்த ‘ராஜா’வை தமிழகத்தின் ராஜாவாக அழகு பார்க்க வேண்டுமென்று சிவாஜி ஆசைப்பட்டு வந்தாரோ, அந்த நெடுநாளைய ஆசையில் 1975ம் ஆண்டு காந்தி ஜெயந்தி அன்று திடீரென்று இடி விழுந்தது.
………………………..

(வளரும்)

அடுத்து: ‘ முழுக்கு ‘ !

———————————————————————————–

vee.raj@rediffmail.com
———————————————————

Series Navigation