பயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ் – 17

This entry is part of 24 in the series 20070503_Issue

சாய் (என்கிற) பேப்பர்பாய்


டேக் 17

திசை மாற்றியத் திருப்பதி !

விழுப்புரம் சின்னையா கணேசன் என்கிற ஒப்பற்றக் கலைஞனை தமிழ் சினிமாவுக்கு தந்ததற்காக , திராவிட இயக்கத்திற்கு முதற்கண் நன்றி தெரிவித்து விட்டு இந்த அத்தியாயத்தை ஆரம்பிப்பதே சரியானதாக இருக்கும்.

*********
நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமிக்கு அடுத்து திராவிட இயக்கத்தால் ஊட்டி வளர்க்கப்பட்ட நாயகக் கலைஞர் வி.சி.கணேசன் தான். வி.சி.க. சாதாரண நாடக
நடிகராக இருந்த போதே அவரை தத்தெடுத்துக் கொண்டது திராவிட இயக்கம்; குறிப்பாக திராவிட முன்னேற்றக் கழகம்.

சாஸ்திரீய சங்கீதப் பாடல்களில் மூழ்கிக் கிடந்த தமிழ் சினிமா மற்றும் நாடகத்தை கையை பிடித்துத் தூக்கி வசன தளத்திற்கு இழுத்துப் போட்ட திமுகவுக்கு, நவரச நடிப்பாற்றல் – தமிழைக் கடித்துக் குதறாமல் உணர்ச்சிகரமாகவும், தெளிவாகவும் வசனங்களை உச்சரிக்கும் பாங்கு – கர்ஜிக்கும் கம்பீரக் குரல்வளமும் கொண்டிருந்த வி.சி.க. சரியானத் தேர்வாக இருந்தார்.

இந்து சனாதனர்களைச் சாடி அறிஞர் அண்ணா எழுதிய ‘ சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்ஜியம்’ என்ற நாடகத்தின் மூலமாக வி.சி.கணேசனை சிவாஜிகணேசன் ஆக்கியதும் தி. இ. தான்.

சிவாஜியும் திமுக அபிமானியாக அக்கட்சி பிரமுகர்களுடன் பழக்கம் வைத்திருந்தார். கட்சித் தலைவர் அண்ணாவிடம் சிவாஜிக்கு நெருக்கமான நட்பு இருந்திருக்கிறது. ஆரம்பத்தில் (நாடக காலகட்டத்தில்) அண்ணா போகும் நிகழ்ச்சிகளுக்கெல்லாம் சிவாஜியும் கூடவே போவாராம்.

நாடக நடிகராக இருந்த சிவாஜியை தங்களது போர்வாளாக சினிமாவுக்குள் கொண்டு வருவதில் திமுக ஆர்வம் காட்டியது. அதற்கு வழி வகுத்தாள் ‘பராசக்தி’.
நாடகமாக நடந்துக் கொண்டிருந்த ‘பராசக்தி’க்கு மு.க. வசனத்தில் சினிமா வடிவம் கொடுக்கப்பட்ட போது கதாநாயகன் வாய்ப்பு சிவாஜிக்கு கிடைத்தது. இதன்
பின்னணியில் அண்ணாவின் பங்கு பெருமளவில் இருந்தது.

திராவிட இயக்கத்தின் முழு முதல் சினிமா உருவமாக வர்ணிக்கப்படும் ‘பராசக்தி’ 17-10- 1952 அன்று வெளியாகி ஆங்கிலத்தில் over- night star என்பார்களே அப்படி ஒரே நாளில் சிவாஜியை நட்சத்திர அந்தஸ்துக்கு கொண்டு சென்றது. இந்த ’17’க்கு பிறகு சிவாஜி கடைசி வரை திரும்பி கீழே பார்க்கவேயில்லை.

***********

சிவாஜியின் அரசியல் ஈடுபாட்டை 1.திராவிட இயக்க காலம்; 2. தேசிய இயக்கம் அல்லது காங்கிரஸ் காலம் என இரு வகைப்படுத்தலாம். இதில் திராவிட இயக்க காலம் என்பது சிவாஜிக்கு முத்திரைக் காலமாக சொல்லிட முடியாது. காரணம், அந்த இயக்கத்தில் அவர் நீடித்திருந்த காலமும், பங்களிப்பும் சொற்பமே.

திராவிட இயக்கம், தமிழ் டாக்கியை கையகப்படுத்தியிருந்த அந்த காலகட்டத்தில் கே.ஆர்.ஆர், எஸ்.எஸ்.ஆர்., வரிசையில் அவ்வியக்கத்தின் ‘வாய்ஸ்’ ஆக மட்டுமே இருந்தார் சிவாஜி.

பராசக்தி நீங்கலாக ‘திரும்பிப் பார்’ (1953), ‘மனோகரா’ (1954), ‘இல்லறஜோதி’ (1954), ‘ராஜாராணி’ (1956), ‘புதையல்’ (1957) என்று 1950களில் ஒரு காலகட்டம் வரை பெரும்பாலும் திராவிட இயக்கத்தார் படங்களில் நடித்து மு.கருணாநிதி, கண்ணதாசன் (இவர் திராவிட முகாமில் இருந்த காலகட்டமது) போன்றோரின் வசனங்களை திரையில் உரக்க ஒலிபரப்பி வந்தார். மற்றபடி, திராவிட இயக்கத்தின் திரைப் பிரதிநிதியாக சிவாஜி அடையாளம் பதித்திடவில்லை. அதில் அவர்
நீடித்திருந்தால் ஒருவேளை அது சாத்தியப்பட்டிருக்குமோ என்னமோ தெரியாது. ஆனால், மிகச் சில ஆண்டுகளிலேயே சிவாஜி, அவ்வியக்கத்தில் இருந்து விலகிப் போகும் சந்தர்ப்பத்தை, திருப்பதி ஏற்படுத்திக் கொடுத்து விட்டது.

ஒரே படத்தில்- அதுவும் முதல் படத்திலேயே நட்சத்திர அந்தஸ்து கிடைத்ததும் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்ததும் ‘திராவிட இயக்க’ வி.சி.க.,வுக்கு கடவுளை ஞாபகப்படுத்தியிருக்க வேண்டும். இருந்தது இருந்தாற்போல், 1950களின் மத்தியில் சில ஆன்மீக நண்பர்களுடன் சேர்ந்து திடீரென திருப்பதிக்கு புறப்பட்டுச் சென்று ஏழுமலையானை கும்பிட்டு விட்டு வந்தார் சிவாஜி. இந்த திடீர் பக்தியை திமுகவில் இருந்த சிவாஜியின் ரசிகர்களாலும் கட்சித் தொண்டர்கள் சிலராலும்
ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. ‘திருப்பதி கணேசா. நீ நடந்து வந்த பாதையை திரும்பிப் பார் ‘ என்ற வாசகங்களுடன் போஸ்டர்கள் அடித்து ஒட்டி தங்களின் கோபத்தை காண்பித்தனர். சிவாஜி படப் போஸ்டர்களில் சாணி அபிஷேகம் ஆரம்பமானது.

இதையடுத்து, நிகழ்வுகளை பொறுமையாக கவனித்துக் கொண்டு வந்த சிவாஜி, திராவிட இயக்கத்தில் இருந்து நகர்ந்து தேசிய இயக்கத்தின் பக்கம் சாயத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்து ‘தேசிய நடிகர்’ ஆனார். தமிழ்நாட்டு அகராதிப்படி தேசிய இயக்கம் என்றாலே அது காங்கிரஸ் கட்சி மட்டும் தானே !

சிவாஜிகணேசனின் தேசிய அல்லது காங்கிரஸ் நீரோட்டம், 1959ல் வெளியான வீரபாண்டிய கட்டபொம்மனில் இருந்து ஊற்றெடுத்து 1960களில் பெருக்கெடுத்து ‘கப்பலோட்டிய தமிழன்’, ‘ரத்தத் திலகம்’ என பிரவாகமாகியது.

(வளரும்)

அடுத்து : இன்குலாப் ஜிந்தாபாத் !


vee.raj@rediffmail.com

Series Navigation