அந்த நாள் ஞாபகம் – பாட்டும் நானே!பாவமும் நானே!!

This entry is part [part not set] of 32 in the series 20070426_Issue

ஸ்ரீனி



சினிமாவும் நானும் என்று தலைப்பு இருந்தால் இன்னும் பொருத்தம்.பிரிக்க முடியாதது எங்க ஊரும் சினிமாவும்! சவுக்கியமா ..காபி சாப்பிடறீகளா என்று கேட்பதை விட என்னங்கண்ணே…படம் பார்த்தீங்களா என்ன படம் என்று தான் கேட்பது வழக்கம்!சினிமா என்று சொல்ல மாட்டார்கள்,
படம் தான்!காட்சி,கட்டம்,எளுத்து (டைட்டில்),இடவேளை,இதெல்லாம் படம் விளக்க குறிச் சொற்கள்!

இந்த சூழலில் பிறந்து வளர்ந்த எனக்கு படம் பார்ப்பது ஒரு தொழில் போல என்றே சொல்லலாம்!சிறு வயதில் இருந்தே படத்துடன் வளர்ந்தவன்!பரிட்சைக்கு முதல் நாள் கூட படம் போனவன் நான்!பரிட்சை என்று வீட்டில் சொன்னால்தானே!
இந்தக் கூத்தும் ஒரு முறை,ஜிட்டு பத்மனாபன் போட்டுக் கொடுத்து,சாயம் போய் முதுகு வெளுத்து விட்டது.பாவி வந்தவன் நான் இல்லையென்றால் போக வேண்டியது தானே!

எங்கடா நீ மட்டும்..?இது நம்ப பண்டரி!
சீனி கிட்டே வகுப்பு நோட்ஸ் வாங்க வந்தேன்…
உன்னை வகுக்கணுமடா!
சரி அவன் வந்தால் சொல்றேன்…
எப்பொ வருவான்…
ரொம்ப அவசியம்!
எப்போ வரும்..உங்க கோஷ்டிதானே…ஆமாம் நீ படம் பாக்கப் போகலையா?
நாளைக்கு எக்ஸாம்…..!!!
பொட்டு வைத்த முகமோ…..இசையுடன் வந்த நான் வசை பட மாட்டி!
பொட்டாவது… முகமாவது…எல்லாம் அம்மா கையில்
நசுங்கி அமாவாசையாகி விட்டது!

அந்த நாட்களில் ரேடியோவில் படம் வெளியாவதற்கு முன்பே பாட்டு ரிலீஸ் ஆகி விடும்.அப்படி நல்ல பாட்டு கேட்டு பிறகு படம் பார்த்து மண்டை காய்ந்ததும் உண்டு! மறக்க முடியுமா,”ஆகாயப் பந்தலிலே” பாட்டும் அதைக் கேட்டுப் பார்த்த அந்தப் படமும்!இந்த பாட்டு புகழ் படம்
எல்லாம் முதல் நாளே பார்த்து விட வேண்டும், அப்போது தானே மண்டை இன்னும் காயும்!படம் பார்ப்பதில் பாகு பாடே கிடையாது!ஒரிஜினல் தமிழ்,டப்பிங்,ஆங்கிலம்,ஹிந்தி..ஒன்று விடுவதில்லை!

ஒரு வாட்டி பாக்கலாம்டா!
அந்த ரெண்டு பாட்டுக்கே காசு ஜெவிச்சுருச்சுப்பு!
முதப் பாட்டுதான் மாப்ளே டாப்பு!
இடவேளை வரை உக்காரலாம்டா!
கலர் படமாமுல்லே,பாக்கணும்டா!

இதெல்லாம் படம் பார்க்க நாங்கள் சொல்லும் காரணங்கள்.இந்த கேட்டகிரிகளில் விழாத படமே இல்லை என்று சொல்லலாம்.குரங்கு தாவாத கொம்பு உண்டொ,சீனி பார்க்காத படம் உண்டொ எனப் பாடல் பெருமை பெற்றவனாயிற்றே நான்!

ஆனால் இதற்கு காசு பெயர்வதற்குள் ஒரு பாரதமே நடக்கும்.இத்தனைக்கும் ஒரு ரூபாய்தான் என்னுடைய லக்ஸ¤ரி பட்ஜெட்.சமயத்தில் ஒரு ரூபாய்க்கு கம்மியாக கிடைத்தாலும் அட்ஜஸ்ட் செய்யப்படும்.டிக்கெட் 60 காசு.சைக்கிள் வைக்க 15 காசு.பாக்கி லாலா கடையில் தின்பதற்கு.
இந்த ஒரு ரூபாய்க்கு இத்தனை குரங்காட்டமா!தெரு முக்கு அநுமார் கோவில் வாசலில் சனிக் கிழமை அரை நாள் உட்கார்ந்தால் கிட்டி விடும் அந்த ஒரு ரூபாய்.என்ன பிழைப்புடா இது,நாளை நான் போகாமல் இருப்பேனோ என்று நந்தன் போல நொந்து இருக்கும் போதுதான் அது நடந்தது!

ஆறுமுகம் என்பவர் எங்கள் பகுதியில் தினசரிப் பேப்பர்,வார இதழ்கள் எல்லாம் போடுபவர்.அப்போது ஸ்கூட்டரில் வந்து பேப்பர் போட்டவர் அவர் தான் என் நினைக்கிறேன்.

ஒரு நாள் அப்பாவிடம் அவர் பேசும் போது,
என்னத்த சொல்றதுங்க,ஒண்ணும் சுகமில்லீங்க மாசம் சுளையா பத்து ரூபா கொடுத்தாலும் பயக ஒளுங்கா அமையமாட்டேங்கறாங்கே…ரெண்டு மாசம் ஜாஸ்தி இவனுகளோட…இவெங்களால நம்ப பேர் கெடுதுங்க…

கேட்டுக் கொண்டிருந்த எனக்கு மின்னல் ஐடியா ப்ளாஷ் ஆனது.என்னடா படம் பார்க்க எட்டணா,ஒரு ரூபாய் இந்த லோல் படுகிறோம்.பேப்பர் போட்டால் மாசம் பத்து ரூபாய்!
ஆனந்தமடா!ஐடியாவின் புத்திசாலித்தனத்தில் அக மகிழ்ந்து,ஆறுமுகம் கடைக்கே போய் அவரிடமே அப்ளிகேஷன் போட்டு விட்டேன்!

உடனடி ரியாக்ஷன்!நான் வீட்டிற்கு திரும்பும் முன்பே,ஸ்கூட்டர் இல்லாமலேயே ஓடி வந்திருக்கிறார் அப்பாவிடம்!
என்ன சார் ஆச்சு புள்ளைக்கு…சொன்னதும் ரொம்ப அதிர்ச்சியாயிருச்சி…படிக்கிற புள்ளைங்க…அதும் நம்ப வீட்டுப் புள்ள..நல்லா படிக்கட்டும்..என்னய மாதிரி ஆக வேண்டாங்க!கொஞ்சம்போல விட்டுப் பிடிங்கணுங்க.இந்த வயசுல அப்படித்தான் இருப்பாப்ல.நாலு இடம் போய் வர தம்பிக்கு “மேலே கீழே” பாக்காம செலவுக்கு கொடுங்க அய்யா!

போதாதா…சூடு ஏற..!
டால்டா டின் கட்டி அடிக்காத குறை!
எல்லா மரியாதையும் “மேலே கீழே” பார்க்காமல் கிரமமாகக் கிடைத்தது!
என்னய்யா..தப்பு செய்தேன்…புரியவே இல்லை!
டால்டா தான் மிச்சம்!

அதைத்தான் சொல்கிறேன்…
பாட்டும் நானே…பாவமும் நானே..
பாவம் தானே நான்!

ஸ்ரீனி


kmnsri@rediffmail.com

Series Navigation

ஸ்ரீனி

ஸ்ரீனி