பயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ் – 15

This entry is part of 34 in the series 20070419_Issue

சாய் (என்கிற) பேப்பர்பாய்டேக் 15

கோட்டையை பிடித்தது ‘ கோடம்பாக்கம் ‘ !

31-1-1976. அன்று தமிழகத்தில் திமுக அரசு, ஐந்தாண்டு பதவிக் காலத்தை முழுமையாக நிறைவு செய்வதற்கு முன்னரே திடீரெனக் கலைக்கப்பட்டது. நெருக்கடி நிலையை (மிசா) துணிச்சலுடன் எதிர்த்த கருணாநிதியின் அரசை, ஊழல் குற்றச்சாட்டுகளை முன் வைத்து வீட்டுக்கு அனுப்பினார் அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி.

பின்னர், ஒருவழியாக மிசாவை வாபஸ் பெற்று, நாடு முழுவதும் 1977 மார்ச்சில் பாராளுமன்ற மக்களவைக்கு பொதுத் தேர்தலை நடத்தினார் இந்திரா. தமிழகத்தில் முதன்முறையாக அதிமுகவுடன் காங்கிரஸ் (அப்போது இண்டிகேட், சிண்டிகேட் என இரண்டு காங்கிரஸ் இல்லை. இந்திராகாந்தி தலைமையில் ஒன்றாகி விட்டிருந்தன ) கூட்டணி வைத்து பாராளுமன்றப் பொதுத்தேர்தலை சந்தித்தது. இதில் அதிமுக- 18 தொகுதிகளிலும் காங்கிரஸ் – 14 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெற்றன. திமுக – ஜனதா கூட்டணியோ படுதோல்வி கண்டது. திமுகவுக்கு கிடைத்தது ஒரே ஒரு தொகுதி தான். ஆனால் பரவலாக நாடு முழுவதும் ஜனதா பெரும் வெற்றி பெற்று மத்தியில் ‘அவியல்’ அரசை அமைத்தது. காங்கிரஸ் பலத்த அடியை வாங்கி மத்தியில் ஆட்சியை பறிகொடுத்தது.

அதே ஆண்டு ஜுன் மாதம் தமிழக சட்டமன்றத்துக்கு நடந்த பொதுத்தேர்தலில் அரசியல் அரங்கில் காட்சிகள் மாறிப் போயிருந்தன. பாராளுமன்றத் தேர்தலின் போதிருந்த கூட்டணிகள் இல்லை. திமுக, அதிமுக, காங்கிரஸ், ஜனதா ஆகிய பிரதான கட்சிகள் தனித்தே நின்று சட்டமன்றத் தேர்தலைச் சந்தித்தன.

இதனிடையே, அடுத்தடுத்த தேர்தல்களினால் அரசியல் களத்தில் ‘பிஸி’யானார் எம்ஜிஆர். அத்துடன் தனது அரசியல் எதிரியை மையப்படுத்திய இலக்கு நீர்த்துப் போகாதபடிக்கு சினிமாவிலும் பார்த்துக் கொண்டார்.

முதன்முறையாக சட்டமன்றப் பொதுத் தேர்தலை சந்திக்க கட்சியை தயார்படுத்த வேண்டிய முக்கிய கட்டம் எம்ஜிஆருக்கு ஏற்பட்டது. அக்னிப் பரிட்சைக்கு ஆயத்தமாக வேண்டிய கட்டாயம். ஊர் ஊராக அலைந்து திரிந்து நேரடிச் சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டார். அதே சமயம்,சினிமாவிலும் பிரச்சாரத்தை வெகுவாக முடுக்கி விட்டார். கருணாநிதி மீதான தாக்குதலை உக்கிரப்படுத்தினார்.

” நான் பார்த்தா பைத்தியக்காரன் – உன்
பாட்டனுக்கும் வைத்தியம் பாப்பேன்
…………………………………………..
………………………………………..
ஊரே சிரிக்குது உன்னை பார்த்து – இப்போ
ஊளையிட்டு என்ன லாபம் என்னை பார்த்து?
காலம் நெருங்குது கதை முடிய – இந்த
காட்டு நரிக் கூட்டத்துக்கு விதி முடிய ! – நான்
யாருன்னு இப்போ தெரியாது – அதை
நானாக சொன்னாலும் புரியாது.
ஊருக்குள்ளே நீ செய்யும் அநியாயம் – நான்
உள்ள வரை நிச்சயமாய் நடக்காது.
செங்கோல் பிடிக்கும் ஒருவன்
கன்னக்கோல் பிடிக்கும் கள்வனென்றால்
நீதியெங்கே குடியிருக்கும் ?
நான் கேட்டு வெச்ச கேள்வியிலே பொருளிருக்கு
அதை கேளாதோர் நெஞ்சத்திலே இருளிருக்கு.
உண்மைகளை ஊரறிய எடுத்துரைப்பேன் – நாளை
உன்னுடைய ஆட்டமெல்லாம் முடித்து வைப்பேன் ”

– நீதிக்கு தலைவணங்கு (1976) .

முன்னதாக, 72ல் கம்யூனிஸ்ட் தலைவர் பெரியவர் கல்யாணசுந்தரத்துடன் ஊர்வலமாக சென்று அப்போதைய கவர்னரிடம் அப்போது முதலமைச்சராக இருந்த கருணாநிதி மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள் மீது ஊழல் புகார் கொடுத்திருந்தார் எம்.ஜி.ஆர். அந்த ஊழல் பட்டியலில் விவசாயத்துக்கான பூச்சி மருந்து ஊழலும் அடங்கும். அதை 76ல் இதே ‘நீதிக்கு தலைவணங்கு’ என்ற படத்தில் பாக்க..பாக்க சிரிப்பு வருது அடக்க முடியலே…” என்ற பாடலில் நினைவுப்படுத்தியிருப்பார் சமையல்காரர் வேஷத்தில் எம்.ஜி.ஆர். :

” கண்ட கண்ட உரத்தைப் போட்டு
காய்கறியை வளக்கிறான் – அந்த
உரத்தில் கூட ஊழல் பண்ணி
எங்க பேரை கெடுக்கிறான்.
……………………………………
……………………………………
சிலர் எதுவும் செய்ய லாயக்கில்லை
பதவி ஆசை விடுவதில்லை.
கலப்படமாய் சரக்கு இருக்கு
எதிலும் இப்போ சுத்தமில்லை
அது புலப்படும் நாள் வரைக்கும்
என்னை சொல்லி குத்தமில்லை ”

————————-

” நாளை உலகை ஆள வேண்டும்
உழைக்கும் கரங்களே..
………………………………….
…………………………………..
விடியும் வேளை வரப் போகுது
தருமம் தீர்ப்பை தரப் போகுது
வாருங்கள் தோழர்களே….
கல்விக்கு சாலை உண்டு;
நூலுக்கு ஆலை உண்டு;
நாட்டுக்குத் தேவையெல்லாம்
நாம் தேடலாம்.
சிரிக்கும் ஏழை முகம் பார்க்கலாம்
சிந்தும் கண்ணீர் தனை மாற்றலாம்
நியாயங்கள் சாவதில்லை… ” (- உழைக்கும் கரங்கள் – 1976)

– என்று தொண்டர்களை தேர்தலுக்கு உற்சாகப்படுத்தினார்.

————————-

” நேருக்கு நேராய் வரட்டும்
நெஞ்சில் துணிவிருந்தால்
என் கேள்விக்கு பதிலை தரட்டும்
நேர்மை திறனிருந்தால்
…………………………………….
……………………………………….
நீதியின் தீபங்கள் ஏந்திய கைகளின்
லட்சியப் பயணமிது – இதில்
சத்திய சோதனை எத்தனை வரினும்
தாங்கிடும் இதயமிது.
அண்ணனின் பாதையில் வெற்றியே காணலாம்
தர்மமே கொள்கையாய்
நாளெல்லாம் காக்கலாம் ” – ( மீனவநண்பன் -1977)

அதே படத்தில் ” பட்டத்து ராஜாவும் பட்டாளச் சிப்பாயும் ஒன்றான காலமிது…” எனத் தொடங்கும் பாடலில்:

” கோட்டைக் கட்டி கொண்டாட்டம் போட்ட
கூட்டங்கள் என்னானது – பல ஓட்டை வந்து
தண்ணீரில் மூழ்கும் ஓடங்கள் போலானது; – மாமா
உங்க முன்னேற்றமெங்கள் கண்ணீரில் தான் வந்தது – அட ராமா
உண்மை சொன்னாலே கோபம் என் மேலே ஏன் வந்தது?
ஏற்றிய ஏணியை தூற்றிய பேருக்கு இது தான் பாடமய்யா ”

– 1969ல் அண்ணா மறைந்ததும் கட்சியில் ஏற்பட்ட பலத்த போட்டிக்கிடையே மு.க., முதலமைச்சர் பதவிக்கு வந்ததற்கு எம்.ஜி.ஆரின் உதவி பெருமளவில் இருந்ததாக கருதப்பட்ட கருத்து இங்கு கோடிடப்படுவதாக அர்த்தம் கொள்ளலாம். (ஏற்றிய ஏணி = எம்.ஜி.ஆர். ? )
———————-

இத்தனை அரசியல் பரபரப்புக்கு மத்தியிலும், 1977ல் தனது 136வது படமான ‘ மதுரை
மீட்ட சுந்தர பாண்டியன்’ படத்தில் நடித்து வந்தார் எம்ஜிஆர். அப்படத்தில்” தாயகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை..” என்று பிரகடனப்படுத்தியபடி ஒரு பாடல்.
அதில்:

” ஒற்றுமையாய் பகைவர்களை ஓட வைப்போம்
உழைப்பாலே நம் நாட்டை உயர்த்தி வைப்போம்
கோட்டையிலே நமது கொடி பறந்திடவேண்டும்
கொள்கை வீரர் தியாகங்களை ஏற்றிட வேண்டும்.
புரட்சியிலே சரித்திரத்தை மாற்றிட வேண்டும்
…………………………………………………………………
…………………………………………………………………..
வீரமுண்டு வெற்றி உண்டு ; விளையாடும் களமும் உண்டு
வா.. வா.. என் தோழா ! ”

– தலைவன் சொன்னதெல்லாம் வேத வாக்காக போற்றிக் கொண்டிருந்த அதிமுக கட்சி தொண்டர்களுக்கு, ரசிகர்களுக்கு இது போதாதா ! இதை விட வேறென்ன அழைப்பு வேண்டியிருக்கப் போகிறது ?

************

1977 சட்டமன்ற பொதுத் தேர்தலில் அதிமுக, 200 இடங்களில் நின்று 130 தொகுதிகளில் வென்று தனி மெஜாரிட்டியுடன் தமிழகத்தில் ஆட்சியை பிடித்தது. திமுகவோ வெறும் 48 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. காங்கிரஸ் 27 இடங்களுடனும், ஜனதா 10 இடங்களுடனும் திருப்திபட்டு கொள்ள வேண்டியதாயிற்று. அருப்புக்கோட்டைத் தொகுதியில் எம்ஜிஆர், சுமார் 30 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் ஜெயித்தார்.

அரசியல் சட்டம் இடம் கொடுக்காது என்பதால், தனது கடைசிப் படமாக ‘மதுரை மீட்ட சுந்தர பாண்டியன்’ படத்தை முடித்து கொடுத்து விட்டு 30-6-1977 அன்று எம்.ஜி.ஆர், தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.

உலக வரலாற்றிலேயே, ஒரு சாதாரண சினிமா நடிகர் சொந்தமாக அரசியல் கட்சி ஆரம்பித்து ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக உயர்ந்த முதலாமவர் என்ற சாதனையோடு கோட்டைக்குள் நுழைந்தார் எம்ஜிஆர்.

எந்த சினிமாவில் துக்கடா வேடத்திற்கு கூட வாய்ப்புக் கிடைக்காமல் ஸ்டுடியோ
வாசல்களில் தவம் கிடந்தாரோ, அதே சினிமாவை தனது சாதுர்யத்தால் தன்வசமாக்கி அதன் மூலமாக புனித ஜார்ஜ் கோட்டைக்குள்ளேயே புகுந்தார் மருதூர் கோபால மேனன் ராமச்சந்திரன்.

ஆம். ஒரு நாடோடி, மன்னன் ஆனார் !

‘வேஷதாரி’ என்று மட்டம் தட்டியவர்களையும், ‘அரிதாரம் பூசிகிறவனெல்லாம் அரசாள முடியுமா’ என்று நக்கலாக கேட்டவர்களையும் ‘ கோட்டையிலே இனிமேல் கூத்தாட்டம் தான் நடக்கும்’ என்று கிண்டலடித்தவர்களையெல்லாம் வாயடைக்க செய்யும் விதத்தில் மக்கள் ஆதரவுடன் 1977ல் ஆரம்பித்து 87ல் மரணமடையும் வரை மொத்தம் 10 ஆண்டுகள், 5 மாதங்கள் மற்றும் 25 நாட்கள் தமிழகத்தின் முதலமைச்சராக முத்திரைப் பதித்தார்.

பாலிடிக்ஸில் பயாஸ்கோப்புக்கு தனிப் பெரும் அந்தஸ்தையும் மரியாதையையும் ஏற்படுத்திக் கொடுத்த மக்கள் திலகம் 24-12-1987ல் மண்ணுலகை விட்டு மறைந்தார், தமிழக அரசியலிலும், சினிமாவிலும் மட்டுமின்றி ஏழை எளிய மக்களின் மனதிலும் நிரந்திரமாகத் தங்கி விட்டு.

(வளரும்)

அடுத்து : பிள்ளையோ பிள்ளை


vee.raj@rediffmail.com

Series Navigation