பயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ் – 13

This entry is part of 33 in the series 20070405_Issue

சாய் (என்கிற) பேப்பர்பாய்டேக் 13

கணக்கால் பிணக்கு !

1971. மீண்டும் சட்டமன்றப் பொதுத் தேர்தலை சந்திக்க தமிழகம் தயாரானது. தங்களின் ஐந்தாண்டு கால ஆட்சி மீதான மக்களின் ‘ரியாக்ஷனை’ எதிர்பார்த்து திமுகவும் – ‘ சிண்டிகேட் & இண்டிகேட் ‘ என்று இரண்டாக உடைந்த நிலையில் காங்கிரசும் தேர்தலுக்கு ஆயத்தமாயின.

அப்போது பிரதமராக இருந்த இந்திராகாந்தி தலைமையிலான ‘ இண்டிகேட் ‘ என்றும் இந்திரா காங்கிரஸ் எனவும் அழைக்கப்பட்ட காங்கிரஸ் அணி , திமுகவுடன் முதன்முறையாக கூட்டணி அமைத்துக் கொண்டது. ஆனாலும் இந்த சட்டமன்றத் தேர்தலில் ‘இண்டிகேட்’ போட்டியிடாமல் திமுகவுக்கு ஆதரவளித்தது. எதிர்புறம், காமராஜ் தலைமையிலான ‘சிண்டிகேட்’ காங்கிரஸ் ( இது ‘பழைய காங்கிரஸ்’ எனவும் ‘ஸ்தாபன காங்கிரஸ்’ என்றும் அழைக்கப்பட்டது) திமுகவை எதிர்த்து நின்றது.

தேர்தலையொட்டி, தமிழகத்தில் அரசியலும் சினிமாவும் சூடுபிடிக்கத் தொடங்கியது. சினிமாவில் இரு துருவங்களாக இருந்து வந்த எம்.ஜி.ஆரும் சிவாஜிகணேசனும் அரசியல் களத்திலும் மல்லுக்கு நின்றனர்.

திமுகவுக்காக எம்.ஜி.ஆரும், ‘ சிண்டிகேட்’ டுக்காக சிவாஜியும் பிரச்சாரம் செய்தனர். இருதரப்பு ரசிகர்களும் அரசியல்ரீதியாகவும் மோதிக் கொண்டனர்.

கடைசியில் தேர்தல் முடிவு , கருணாநிதி தலைமையிலான திமுகவின் செல்வாக்கை வெளிச்சமிட்டு காண்பித்தது. காமராஜர் தலைமையிலான சிண்டிகேட் காங்கிரசுக்கு அதிர்ச்சித் தோல்வியை தந்து, 184 இடங்களை கைப்பற்றி தனி மெஜாரிட்டியுடன் திமுக மீண்டும் ஆட்சி அமைத்தது. 1971 மார்ச் 15ம் தேதி கலைஞர் கருணாநிதி முதலமைச்சராக பதவியேற்றார். பரங்கிமலைத் தொகுதியை தக்க வைத்துக் கொண்டார் எம்ஜிஆர் .

அரசியல் அரங்கில் மு.க.,வின் செல்வாக்கு வளர்ந்திருந்தது போல் எம்.ஜி.ஆரின் செல்வாக்கும், எவரும் எட்டிப் பிடிக்க முடியாதபடிக்கு சினிமாவிலும் அதைச் சார்ந்து திமுக கட்சியிலும் வளர்ந்து வந்தது.

இதன் பலன்..?

வெற்றிகரமான எந்த இயக்கத்துக்கும் நேரும் கதி தான்!

திமுகவில் இரட்டைத் தளபதிகளாக கைகோர்த்திருந்த மு.க.வுக்கும் எம்.ஜி.ஆருக்கும் மத்தியில் ஈகோ தலையை நுழைத்தது. அவர்களின் கால் நூற்றாண்டு கால நெருங்கிய நட்புக்கு இடையே புகைச்சல் கசிய ஆரம்பித்தது இக்காலகட்டத்தில் தான்.

நடிக்கும் ஆர்வமும் பாடும் திறனும் கொண்டிருந்த தனது மூத்த மகன் மு.க.முத்துவை 1971ல் திடீரென சினிமாவில் இறக்கினார் கருணாநிதி. இது எம்.ஜி.ஆரின் செல்வாக்கை மட்டம் தட்ட கருணாநிதி போடும் திட்டமென ஆரம்பத்திலேயே அர்த்தம் கொள்ளப்பட்டது. ஆனாலும் இப்படத்தின் துவக்க விழாவில் எம்ஜிஆர் கலந்துக் கொண்டு முத்துவை வாழ்த்தினார்.

அதேபோல், வெளிநாடுகளுக்குச் சென்று மிகுந்தப் பொருட்செலவில் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ என்ற படத்தை சொந்தமாக தயாரிக்க திட்டமிட்டிருந்த எம்.ஜி.ஆர்., அது தொடர்பாக வெளிநாடு சென்ற போது , விமான நிலையம் வரை சென்று வாய் நிறைய வாழ்த்திப் பேசி வழியனுப்பி வைத்தார் கருணாநிதி.

1972ல் ‘ரிக்ஷாகாரன்’ படத்துக்காக அகில இந்திய சிறந்த நடிகருக்கான ‘பாரத்’ விருது எம்ஜிஆருக்கு கிடைத்தபோது அருமை உடன்பிறப்பான எம்ஜிஆர், இந்த பெருமைக்கு முற்றிலும் தகுதியானவர் என்றும், சிறுகுழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரது இதயத்திலும் நிறைந்திருக்கும் உருவம், எம்ஜிஆரின் உருவம் எனவும் வஞ்சனையின்றி புகழ்ந்துத் தள்ளியிருந்தார் கலைஞர்.

இப்படியாக, ஆரம்பத்தில் புகைச்சல் வெளிப்பார்வைக்கு தெரியாதபடிக்கு இருவருமே சாமர்த்தியமாக நடந்துக் கொண்டாலும், 1972ம் ஆண்டில் ஒரு கட்டத்தில் பூனை வெளியே வந்து விட்டது.

அக்டோபர் மாதம் திருக்கழுகுன்றத்தில் பொதுக் கூட்டமொன்றில் பேசிக் கொண்டிருந்த எம்ஜிஆர், யாரும் எதிர்பாராத வகையில் திடீரென ‘ கட்சித் தலைமை உட்பட திமுக கட்சி பொறுப்பாளர்கள், அமைச்சர்கள் எல்லோரும் தங்களின் சொத்துக் கணக்கைப் பொதுமக்களுக்கும் கட்சித் தொண்டர்களுக்கும் பகிரங்கமாகக் காண்பித்து தங்களின் தூய்மையை நிரூபிக்க வேண்டும்.’ என்று குறிப்பிட்டு கட்சிக்குள் குண்டை தூக்கிப் போட்டார். பின்னர் அதைத் தொடர்ந்து சென்னை லாயிட்ஸ் சாலையில் நடந்தப் பொதுக் கூட்டத்திலும் அதையே வலியுறுத்தினார்.

இதனால் அதிர்ச்சியடைந்த திமுக கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உடனே கூடி காரசாரமாக விவாதித்தனர். கட்சிக்குள் பேச வேண்டியதை எப்படி பொது மேடையில் பேசலாமென கொந்தளித்தனர். இறுதியில், கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதாக
திமுகவில் இருந்து எம்.ஜி.ஆர். நீக்கப்பட்டார்.

அப்போது ‘ இதயவீணை ‘ படப்பிடிப்பிற்காக வெளி மாநிலத்தில் இருந்த எம்.ஜி.ஆருக்கு இந்த விஷயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரோ அதிர்ச்சி அடைந்ததாகவே காண்பித்துக் கொள்ளவில்லையாம்.

உடனே அப்படத்தில் இடம் பெற்றிருந்த ‘ காஷ்மீர் பியூட்டி·புல் காஷ்மீர் ‘ என்ற பாடலில் ஓரிரு வரிகளை மாற்றிப் போடச் சொன்னாராம். அந்த வரிகள்:

” எல்லோர்க்கும் வழிகாட்ட நானிருக்கிறேன்
வந்தாரை வரவேற்க காத்திருக்கிறேன் ”

– செய்வதறியாது திகைத்து நிற்கும் லட்சக்கணக்கான ரசிகர்களுக்கு தனது அடுத்த ‘மூவ்’ எது என்பதை அவர் தெரிவிக்கும் அறிவிப்பே இது.

17-10-1072 அன்று, தனது தனிப்பட்ட செல்வாக்கையும், ‘விசிலடிச்சாஞ் குஞ்சுகள்’ என்று கேலி பேசப்பட்ட தனது லட்சக்கணக்கான ரசிகர்களையும் அபிமானிகளையும் நம்பி புதிய அரசியல் கட்சியை துணிச்சலுடன் ஆரம்பித்தார் எம்.ஜி.ஆர். அது தான்: ‘ அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ‘ .

இதனால், திராவிட இயக்கமானது திமுக மற்றும் தமிழ் தேசியக் கட்சி ஆகியவற்றைத் தொடர்ந்து 3வது பிளவை சந்தித்தது.

( தி.க.விலிருந்து பிரிந்து முதல் பிளவை ஏற்படுத்தியவர் தமிழை தாய்மொழியாக கொண்டவர் (சி.என்அண்ணாதுரை); அடுத்த பிளவு கன்னடத்தைத் தாய்மொழியாக் கொண்டவரின் (ஈ.வி.கே.சம்பத்) கைங்கரியம். மூன்றாமவரோ (எம்.ஜி.ராமச்சந்திரன்) மலையாளி. பிற்காலத்தில் 4வது பிளவாக 1990களில் திமுகவில் இருந்து பிரிந்து ‘ மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்’ கண்டவருக்கோ (வைகோ) தாய்மொழி தெலுங்கு. சபாஷ்..! திராவிட இயக்கம், பெயருக்கு ஏற்றமாதிரி தானிருக்கிறது !! )

*********

1972 ம் ஆண்டு நிகழ்வுகளைத் தொடர்ந்து தமிழ் டாக்கியில், திராவிட இயக்கப் பிரச்சாரத்தின் திசையும் மாற தொடங்கியது. திராவிட இயக்கத்தார் பொது எதிரியை விட்டு விட்டு அவர்களுக்குள்ளேயே மோதிக் கொள்ளலாயினர். அந்த உரசலிலோ வேகமும் உக்கிரமும் அதிகமாகவே இருந்தது.

(வளரும்)

அடுத்து: சாகச ‘வாலிபன்’ !
————————————————————-
vee.raj@rediffmail.com
————————–

Series Navigation