பயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ் – 11

This entry is part of 32 in the series 20070322_Issue

சாய் (என்கிற) பேப்பர்பாய்டேக் 11

” நான் ஆணையிட்டால்…”

பொதுவாக, டைரக்ஷன், எடிட்டிங்கில் இருந்து லைட்டிங் வரை சினிமாவின் அனைத்துத் தொழில் நுணுக்கங்களிலும் எம்.ஜி.ஆர். கைத்தேர்ந்தவர் என்று சொல்வார்கள். பாடல் வரிகளாகட்டும், டயலாக் டெலிவரியாகட்டும் எப்போதெப்போது குளோசப் வைப்பது; காட்சிப் பின்னணியில் என்னென்ன இருக்க வேண்டுமென்பது கூட அவர் தீர்மானித்து வைப்பாராம்.

தனது இலக்கு அதாவது Target Audience: கடுமையாக உழைத்து விட்டு ‘ போதும் போதாமலும்’ சம்பளம் வாங்கி லோல்படும் தொழிலாளர்களும், குமாஸ்தாக்களும்; விவசாயிகள், கூலித் தொழிலாளர்கள், கைவண்டி, ரிக்ஷா தொழிலாளர்களும் தான் என்பதை சந்தேகத்துக்கு இடமின்றி புரிந்து வைத்திருந்தார் எம்.ஜி.ஆர். அவர்களின் ஆழ்மன ஏக்கங்களை, நிறைவேறவே வாய்ப்பில்லாத ஆசைகளை பூர்த்தி செய்யும் பிரதிநிதியாக திரையில் தோன்றினார். அவர்களின் ரசனை, விருப்பத்தன்மைக்கேற்ற கதை, காட்சியமைப்புகளையும், நடை உடை பாவனைகளையும் கொண்டே படங்களில் நடித்தார். கட்சி பிரச்சாரத்தையும் அதே பாணியில் மேற்கொண்டார்.

இதற்காக எழுந்த கிண்டல், கேலி விமர்சனங்களை அவர் உதாசீனம் செய்தார். ஏற்கனவே குறிப்பிட்டபடி, தான் வகுத்து வைத்திருந்த உத்திகளின்படியே திமுகவின் உருவமாக, குரலாக திரையில் வலம் வந்தார்.

கறுப்பு சிவப்பு என இரு வர்ணம் கொண்ட பர்ஸை வைத்துக் கொண்டு அடிக்கடி வெளியே எடுத்துக் காண்பிப்பார். அதே போல் அதே இரு வர்ண பெல்ட். கறுப்பு பேன்ட், சிவப்பு சட்டை (இது இடம் மாறியும் வருவதுண்டு). காதலியுடன் டூயட் பாடும் காட்சிப் பின்னணியில் கூட ‘உதயசூரியன் ‘ சிம்பள். அவரை உதயசூரியனாக காதலியின் வர்ணிப்பு.
———-
‘ பரிசு ‘ (1963) படத்தில் படத்தில் ஒரு பாடல். ” கூந்தல் கறுப்பு; குங்குமம் சிவப்பு…” எனத் தொடங்கும். இது ‘அரிய’ கண்டுபிடிப்பு என அவருக்கு தெரியாமலிருக்குமா! கேலியை பற்றி கவலைப்படவில்லை. பாடலை முணுமுணுக்கும் பாமரன் மனதில் கட்சிக் கொடியின் இரு வர்ணத்தை ஆழமாக இறக்க வேண்டுமென்பதே புரட்சி நடிகரின் ஒரே நோக்கமாக இருந்திருக்க வேண்டும்.

கறுப்பு சிவப்புக்கு இன்னொரு உதாரணம் :
” கறுப்பென்றும் சிவப்பென்றும் வேற்றுமையாய் ;
கருதாமல் எல்லாலோரும் ஒற்றுமையாய்… ” (படம் : விவசாயி)

————

1961ல் தான் கதாநாயகனாக நடித்து அண்ணா கதை வசனத்தில் உருவான ‘ நல்லவன் வாழ்வான் ‘ படத்தில் வரும் “சிரிக்கின்றாள் அவள் சிரிக்கின்றாள்..” என்ற காதல் பாடலிலேயே,
” உதயசூரியன் உதிக்கும் போது
உள்ளத் தாமரை மலராதோ;
எதையும் தாங்கும் இதயமிருந்தால்
இருண்ட பொழுதும் புலராதோ ”
– என்று கட்சி சின்னமான உதயசூரியனையும் , கட்சித் தலைவர் அண்ணாவின் பிரபலமான ‘ எதையும் தாங்கும் இதயம் ‘ வாசகத்தையும் குறிப்பிட வைத்தார்
—————-

” அதிசயம் இவனது அறிவுமயம்
………………………………
ஆட்சியிலோ பெரும் புரட்சி படைத்தான்;
…………………………. – தொழும்
பகலவனை சின்னமாக கொண்டவனாம் ”
– இது விக்ரமாதித்தன் (1962) படத்தில் வரும் பாட்டு. (பகலவன் = உதயசூரியன்)

*******
இதற்கிடையில், மக்கள் மத்தியில் அதுவும் தனது இலக்கான வர்க்கத்தினர் மத்தியில் கடவுள் நம்பிக்கை அசைக்க முடியாதபடிக்கு இருப்பதை எம்.ஜி.ஆர். நன்குப் புரிந்தே வைத்திருந்தார். மற்ற தி.இ. நடிகர்கள் போல் உணர்வுப்பூர்வமான அந்த விஷயத்தில் கட்சிக்காக ‘ கை வைத்து ‘ மக்களின் அதிருப்தியை சம்பாதித்துக் கொள்ள எம்.ஜி.ஆர். தயாராக இல்லை.

” ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்
அவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான்”
– என பளிச்சென போட்டுடைத்தார்.

———-
” இறைவன் இருக்கின்றான்
கண்ணுக்கு தெரிகின்றதா
காற்றில் தவழுகிறான் -அதுவும்
கண்ணுக்கு தெரிகின்றதா ? ” (ஆனந்தஜோதி- 1963),
———–
” உனக்காக ஒன்று எனக்காக ஒன்று
ஒரு போதும் தெய்வம் கொடுத்ததில்லை ” (படகோட்டி – 1964)
———–

” ஆண்டவன் உலகத்தின் முதலாளி
அவனுக்கு நானொரு தொழிலாளி ” ( தொழிலாளி- 1964)

———–
” ஒருவருக்கென்றே உள்ளதையெல்லாம்
இறைவனும் தந்ததில்லை.
………………………………
……………………………
மனமென்னும் கோவில் திறக்கின்ற நேரம்
அழைக்காமல் அங்கே
தெய்வம் வந்து சேரும் ” (சந்திரோதயம்-1966)

———–
” கடவுளெனும் முதலாளி
கண்டெடுத்தத் தொழிலாளி
விவசாயி….” (விவசாயி – 1967)

———-
” இறைவன் ஒருவன் இருக்கின்றான் – இந்த
ஏழைகள் உழைப்பில் சிரிக்கின்றான் ” (அடிமைப்பெண் – 1969)
———–
” நீதியும் நியாயமும் எங்கெல்லாம் இருக்கோ அங்கெல்லாம் கடவுள் இருப்பார். முன்னெல்லாம் நீதியும் நேர்மையும் இருந்த ஜனங்க மனசிலே கடவுள் இருந்தார். இப்போ நீதியும் நியாயமும் இல்லாததால ஜனங்க, மனசிலே இருந்து கடவுளை வெளியே எடுத்து சிலையா வெச்சிட்டாங்க போல..”

-இது நம்நாடு படத்தில் எம்ஜிஆர் பேசும் வசனம். அதே படத்தில் அவர் தங்கியிருக்கும் குடிசையில் காந்தி, நேரு, அண்ணா படங்களுடன் முருக பெருமான் படமும் சுவாமி விவேகானந்தர் படமும் கூட தொங்கும்.
————-

– இவ்வாறு கடவுளின் இருப்பை தனது படங்களில் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் எம்ஜிஆர் தெரியப்படுத்தியே வந்தார். அதற்கேற்ப, அவர் சார்ந்திருந்த திமுக கட்சியும் ‘ஒன்றே குலம்; ஒருவனே தேவன்’ எனவும் ‘ ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் ‘ என்றெல்லாம் கூறி தனது நாத்திகக் கொள்கையில் சமரசம் செய்துக் கொண்டிருந்ததும் எம்ஜிஆருக்கு சாதகமாக இருந்திருக்கலாம். ஆனால் உன்னிப்பாக பார்த்தால், இந்த விஷயத்திலும் அவர் தனது தனித்துவத்தை பதிவு செய்யவே முயற்சித்திருக்கிறார் என்றே தெரிகிறது.

உதாரணமாக, திராவிட இயக்கத்தார் கடுமையாக விமர்சனம் செய்து வந்த (இப்போதும் தொடர்கிறது) இந்து மதத்தின் நான்கு வேதங்களை (மறைகளை) ஒரு படத்தின் பாடலில் எம்.ஜி.ஆர். துணிந்து வெளிப்படையாகவே உயர்த்திக் காண்பித்திருந்தார். அது ‘ தர்மம் தலைகாக்கும் ‘ (1963) படத்தில் இடம் பெற்ற ” தர்மம் தலைகாக்கும்; தக்க சமயத்தில் உயிர் காக்கும்” எனத் தொடங்கும் பாடல். அதில்,
” அள்ளிக் கொடுத்து வாழ்பவன் நெஞ்சம்
ஆனந்தப் பூந்தோப்பு – வாழ்வில்
நல்லவரென்றும் கெடுவதில்லை – இது
நான்கு மறைத் தீர்ப்பு ”

*******
எதிர்முகாமுக்குச் சென்றிருந்தாலும் கவியரசுக் கண்ணதாசனிடம் இருந்து தனக்குத் தோதான பாடல்களை எம்.ஜி.ஆர். பெற்றுக் கொண்டு வந்தார். அதற்கு ஊடே, எம்ஜிஆர் கவியரசுக்குப் போட்டியாக அப்போது புதுக் கவிஞராக இருந்த வாலியை உருவாக்கவும் தவறவில்லை. (பின்னர் ஒரு கட்டத்தில் எம்.ஜி.ஆர்- வாலி , சிவாஜிகணேசன் – கண்ணதாசன் என்று ஜோடி சேர்ந்தது வேறு விஷயம்).

1962 பொது தேர்தலில் கிடைத்த வெற்றி, அடுத்து 67 தேர்தலில் ஆட்சிக் கட்டிலை நோக்கி பயணிக்கும் உத்வேகத்தையும் நம்பிக்கையையும் திமுகவுக்கு ஏற்படுத்தியிருக்க வேண்டும். பிரச்சாரங்களிலேயே அது தொனித்தது.

‘ பணக்காரக் குடும்பம் ‘ படத்தில் ” ஒன்று எங்கள் ஜாதியே ; ஒன்று எங்கள் நீதியே…” என்று திமுகவின் சமூக நீதிக் கோட்பாடாக சொன்ன கையோடு,

” எங்களாட்சி என்றும் வாழும் இந்த மண்ணிலே
…………………………………
…………………………………
இல்லை என்பதில்லை நாங்கள் வாழும் நாட்டிலே”

– என அச்சாரமாக 1964லிலேயே திமுகவுக்கு ஓட்டு சேகரித்தார் எம்.ஜி.ஆர்.
————

” மக்களொரு தவறு செய்தால் மாமன்னன் தீர்ப்பளிப்பான்
மன்னவனே தவறு செய்தால் மாநிலத்தில் யார் பொறுப்பார்? ”

– இது 1963ல் வெளியான ‘ காஞ்சித் தலைவன் ‘ படத்தில் வரும் பாடல் வரிகள். அப்போதைய காங்கிரஸ் அரசை வீட்டுக்கு அனுப்ப மக்களை உசுப்பும் நுணுக்கம் இது . (படத்தின் தலைப்பை பாருங்கள். அறிஞர் அண்ணாவின் சொந்த ஊர் காஞ்சிபுரம் என்பதை நினைவில் கொள்க)
————-

‘ தெய்வத்தாய் ‘ (1964) படத்தில் ” மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்…” என பாடி ‘தி.மு.க.’ வை பூடகமாக குறிப்பிட்டு கழக கண்மணிகளின் கைத்தட்டலை பெற்றார்.
” வாழைமலர் போல -பூமி முகம் பார்க்கும்
கோழை குணம் மாற்றுத் தோழா..!
நாளை உயிர் போகும் – இன்று போனாலும்
கொள்கை நிறைவேற்றுத் தோழா..! ”
– என தொண்டகளை தயார்படுத்தினார்.
————
திமுகவினர் கொண்டாடி வந்த பாரதிதாசனின் “சங்கே முழங்கு..” என்ற பாடலை கலங்கரை விளக்கத்தில் (1965) முழங்க வைத்தார். நான் ஆணையிட்டால் (1966)படத்தில் ” தாய் மேல் ஆணை; தமிழ் மேல் ஆணை…” செய்தார்.
” இருட்டினில் வாழும் இதயங்களே- கொஞ்சம்
வெளிச்சத்துக்கு வாருங்கள்
நல்லவர் உலகம் எப்படியிருக்கும்
என்பதைப் பாருங்கள் ”
– என அழைப்பும் விடுத்தார்.

அதே படத்தில்,
” உதயசூரியன் உன் வரவு –
உலகம் யாவையும் உன் உறவு.
………………………..
………………………..
ஆலமரம் போல நீ வாழ – அதில்
ஆயிரம் பறவைகள் இளைப்பாற
காலமகள் உன்னை தாலாட்ட – அந்த
கருணையை நாங்கள் பாராட்ட.. ”
– என்று தன்னையும் முன்னிறுத்திக் கொண்டார்.
————–
அன்பேவா (1966) படத்தில் ” உதயசூரியனின் பார்வையிலே; உலகம் விழித்துக் கொண்ட வேளையிலே….” என்பார். ( ஆனால் சென்சார் காரணமாக அது ‘புதிய சூரியன்’ என்றே பாட்டு ரிக்கார்டில் வரும்) கூடவே, ” இவர் வரவேண்டும்; புகழ் பெற வேண்டும் என்று ஆசைத் துடிக்கிறது..” என்ற வரிகளும் – எம்.ஜி.ஆரின். குளோசப் ஷாட்டுடன் வரும்.

நம்நாடு படத்தில் குளோப்ஷாட்டில் ஒரு டயலாக்:
” எனது முதலே மக்களின் அன்பும், எனது நாணயமும் தான். அதுக்கு என்னைக்குமே மோசம் வராது. ”

———-

‘ திமுக என்கிற பதாகையை உயர்த்திப் பிடித்துக் கொண்டு அதன் மூலம் தான் முடிசூட்டிக் கொள்ளும் ரகசியத் திட்டம் வைத்திருக்கிறார்’ ; ‘ வெகுஜனங்களிடம் திமுகவுக்குள்ள செல்வாக்கை அட்டை போல் உறிஞ்சியெடுத்து அதில் தன்னை வளர்த்துக் கொள்ள பார்க்கிறார்’ என்றெல்லாம் எம்.ஜிஆருக்கு எதிராக திமுகவுக்கு உள்ளேயும் வெளியேயும் ஒரு சாரார் மத்தியில் நீண்டகாலமாகவே விமர்சனம் தொடர்ந்து வந்தது. இந்நிலையில் , அவர்களின் வாயில் கொஞ்சம் அவலை அள்ளி போடும் வகையில் வந்தான் ‘ எங்க வீட்டுப் பிள்ளை ‘ 1965ல்.

அப்படத்தில், ” கண்களும் காவடி சிந்தாகட்டும்..” எனத் தொடங்கும் பாடலில்,
” என்ன செய்வோமென்ற நிலை மாறட்டும்- உன்னாலே
மக்கள் எண்ணம் நிறைவேறட்டும்”
-என்ற வரிகள் வரும்போது எம்.ஜி.ஆர் ‘ டைட் குளோசப்’பில் தெரிவார். அதோடு நின்றதா! கூடவே ” நாடெல்லாம் உன்னைக் கண்டு புகழ் பாடட்டும்” என்ற வரிகள் வேறு.

இதற்கெல்லாம் மகுடம் வைத்தாற்போல், ” நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் இங்கு ஏழைகள் வேதனைப் படமாட்டார்..” என அவரே உரக்கச் சொல்வார். அவரே தொடர்வார்:
” ஒரு தவறு செய்தால் – அதை தெரிந்து செய்தால்
அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்.
…………………………………
………………………………
எதிர்காலம் வரும் ; என் கடமை வரும்
இந்தக் கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பேன்
…………………………..
இங்கு ஊமைகள் ஏங்கவும் ; உண்மைகள் தூங்கவும்
நானா பார்த்திருப்பேன்….”

இதற்கு முன் எந்த ஒரு திராவிட இயக்க நடிகரும் நினைத்துக் கூடப் பார்க்காத துணிச்சலான பிரகடனம் இது.
————-
இவ்வாறான விமர்சனங்கள், திமுக – எம்.ஜி.ஆர்., இடையேயான பிடிமானத்தை எவ்வகையிலும் பாதித்திடவில்லை. வரலாற்றில் இடம் பெறப் போகும் முக்கியமான கட்டத்திற்குள் இருவருமே நுழைந்தனர்.

(வளரும்)

அடுத்து- ” சூரியன் உதிச்சதுங்க… ”

—————————————————————————————–

vee.raj@rediffmail.com
————————-

Series Navigation