பயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ் – 9

This entry is part of 35 in the series 20070308_Issue

சாய் (என்கிற) பேப்பர்பாய்


டேக் – 9

வெச்ச குறி தப்பாது !

கதாநாயகிக்கும், வில்லனுக்கும் முக்கியத்துவம் உள்ள படங்களில் வெறும் பெயருக்கு கதாநாயகனாக இருந்து வந்த எம்.ஜி.ராமச்சந்திரனுக்கு 1951ல் வெளியான ‘மர்மயோகி’ முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. கதாபாத்திரத்தின் பெயர் கரிகாலன். நாட்டில் அக்கிரமக்காரர்களிடமிருந்து பொருட்களை கொள்ளையடித்து ஏழைகளுக்கு உதவும்
‘ராபின்ஹ¥ட்’ போன்ற கதாபாத்திரம்.

“கரிகாலன் இருக்கும் போது எங்களுக்கென்ன கவலை” என்று ஏழை ஜனங்கள் சொல்ல சொல்ல அறிமுகமாவார் எம்.ஜி.ஆர். அவருக்கு பின்னாளில் மிக பலமான பின்புலச் சக்தியாக அமைந்த ‘ஏழைப் பங்காளன்’ இமேஜ்க்கு பிள்ளையார்சுழி போட்ட படம் மர்மயோகி. கதை வசனம் மு.க.

“கரிகாலன் வெச்ச குறி தப்பாது. குறி தப்புமென்றால் குறியே வைக்க மாட்டான் இந்த கரிகாலன்” – என்ற இப்படத்தில் எம்.ஜி.ஆர். அடிக்கடி சொல்லும் வசனம் மிகவும் பிரபலமானது. இன்றைய ‘பஞ்ச் டயலாக்’குகளுக்கெல்லாம் முன்னோடி.

ஆனாலும் இதற்கடுத்தும் எம்.ஜி.ஆருக்கு பெரியதாக படங்களில்லை. 1952ல் அந்தமான் கைதி, என் தங்கை, குமாரி என்று 3 படங்கள் தான். சொல்லி கொள்கிறார்போல்
கதாபாத்திரங்களுமில்லை.

அந்த சூழ்நிலையில், அறிஞர் அண்ணாவை முதன்முதலாக நேராக சந்தித்த எம்.ஜி.ஆர், 1953ல் முறைப்படி திமுகவில் அடிப்படை உறுப்பினராகச் சேர்ந்தார்.

1947லேயே கருணாநிதியின் சிநேகிதத்தால் திராவிட இயக்கத்தின் மீது கவனம் செலுத்த தொடங்கினாலும், அந்த இயக்கத்தில் எம்.ஜி.ஆர் தன்னை இணைத்துக் கொள்ள எடுத்துக் கொண்ட காலம் சுமார் 6 ஆண்டுகள். அதுவும் 1949ல் தி.க.வில் இருந்து
பிரிந்து திமுக கட்சி உருவாகி 4 ஆண்டுகள் கழித்தே எம்.ஜி.ஆர். அக்கட்சியில் சேர்ந்தார்.

இதே எம்.ஜி.ராமச்சந்திரன் தான், முன்பு ஜாதிய மேலாதிக்கத்தைச் சாடியும்- வைதீக சடங்குகளை விமர்சித்தும் அறிஞர் அண்ணா எழுதிய ‘சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம்’ என்ற நாடகத்தில் சத்ரபதி சிவாஜியாக நடிக்க மறுத்தவர்.

ஆக, நிலவரத்தை தூர இருந்தபடி கண்காணித்து அதற்கேற்ப காய்களை நகர்த்தும் சமயோசிதமும், அதே சமயம் எந்த ஒரு நகர்த்தலும் தன்னை எவ்வகையிலும் காணாமல் செய்து விடக்கூடாதென்கிற அதீத கவனமும், முன்யோசனையும் ஆரம்பத்தில் இருந்தே எம்.ஜி.ஆருக்கு இருந்து வந்திருக்கிறதெனலாம்.

‘ மக்களின் நாடித் துடிப்பை நன்கு அறிந்தவர் எம்.ஜி.ஆர். சினிமாவிலும் அரசியலிலும்அவரெடுத்த முடிவுகள் சோடை போனதேயில்லை’ என்று இன்றளவுக்கும் கொண்டாடப்படும் அவரது புத்திசாலித்தனத்துக்கு , திமுகவில் சேர அவர் எடுத்த முடிவே மிகச் சரியான உதாரணம்.

வெகுஜனக் கட்சியாக செல்வாக்கு கூடிக் கொண்டிருந்த திமுகவில் இணைந்த பிறகு எம்.ஜி.ஆரை சுற்றி வலுவான அரசியல் இமேஜ் பின்னத் தொடங்கி விட்டது. கேரளாவை பூர்வீகமாக கொண்ட ஒரு மலையாளி, திமுக தலைவர்கள் மேடைகளிலும் எழுத்துகள் மூலமாகவும் உருவேற்றி வந்த தமிழ் மொழி, தமிழர்களின் காதல், வீரம் ஆகியவற்றின் திரை பிம்பமாக அக்கட்சி அபிமானிகளுக்கு தோன்றலானார். எம்.ஜி.ஆரின் தோற்றப் பொலிவும், உடற்கட்டும், லாவகமான வாள்வீச்சுத் திறனும் அவரை திரையில், சேரன் செங்குட்டுவனாக, குலோத்துங்க சோழனாக, திமுக மூச்சுக்கு முன்னூறு தரம் சொல்லி வந்த புறநானுற்று வீர இளவரசனாக ரசிகர்களால் உணரச் செய்தன. ஒரு கட்டத்தில், இல்லாதோருக்கு அள்ளித் தரும் ‘கலியுக பாரிவள்ளல்’ என்கிற ஒளிவட்டமும் அவருக்கு பின்னால் சுழன்றது.

*************

1954ல் வெளியான ‘மலைக்கள்ளன்’ படத்தில் இருந்து எம்.ஜி.ஆரின் சினிமா பரமபதத்தில் பாம்புகள் குறைந்து ஏணிகளே அதிகமாக துவங்கின. ‘திராவிட இயக்க’ எம்.ஜி.ஆரின் தனி ஆவர்த்தனம் தொடங்கியதும் இந்த படத்துக்கு பிறகு தான்.

வசனக்கர்த்தாக்களின் கிளிப்பிள்ளையாகவே இருந்து விடாமல் அவர்களின் ஆளுகைக்கு அப்பால் சென்று தனக்கென தனிப் பாதையை வகுத்துக் கொள்ள வேண்டுமென்ற எண்ணத்தை எம்.ஜி.ராமச்சந்திரனுக்கு மலைக்கள்ளனின் வெற்றி விதைத்திருக்க வேண்டும். அதற்கான ·பார்முலாவை மனதில் ஊற வைக்கத் தொடங்கினார்.

மலைக்கள்ளனில் இடம் பெற்ற ‘எத்தனைக்காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே’ என்ற பாடலின் ஆரம்ப வரியே அப்போதைய காங்கிரஸ் அரசுக்கு எதிராக சுழற்றப்பட்ட சாட்டையடியாக கழகக் கண்மணிகளால் கைத்தட்டி வரவேற்கப்பட்டது.

” ஆளுக்கொரு வீடு கட்டுவோம்- அதில்
ஆயக்கலைகளை சீராக பயில்வோம்
வேடிக்கையாகவே நாளினை போக்கிட
கேள்வியும் ஞானமும் ஒன்றாக செய்வோம்.
…………………………..
………………………..
கூழ்கஞ்சிக்கில்லை எனும்
சொல்லினை போக்குவோம் ”

-என்று திமுக ஆட்சிக்கு வந்தால் என்னென்ன நன்மைகளை செய்யும் என்று ஜனங்களுக்கு பறைசாற்றுவதாகவும் அமைந்திருந்தது அப்பாடல்.

இப்பாடலுக்கு கிடைத்த வரவேற்பு எம்.ஜி.ஆரை யோசிக்க வைத்திருக்க வேண்டும். பாடல் வரிகளின் வலிமையை உணர்ந்த அவர் , அதற்கு பிறகு 1977ல் கடைசி படம் நடிக்கும் வரை தனது கருத்துகளை- விருப்பு வெறுப்புகளை- போதனைகளை ஜனங்களுக்கு முக்கியமாகக் கட்சியினருக்கும் ரசிகர்களுக்கும் தெரியப்படுத்தும் வகையில் கொள்கைப் பாடலை ஒவ்வொரு படத்திலும் வைக்க தவறவே இல்லை அவர்.

பாடல் வரிகளில் இருந்து கதையமைப்பு, வசனங்கள், காட்சியமைப்பு, இசையமைப்பு, டைரக்ஷன் வரை படத்தின் எல்லா அம்சங்களிலும் தலையிட்டு தனக்கேற்ப செதுக்கி தனது தனித்துவத்தை பராமரித்துக் கொண்டார்.

கட்சிப் பிரச்சாரத்தைப் பொருத்தவரையும் கூட , யார் யாரை, எந்தெந்த விஷயங்களை மாத்திரம் திரையில் ‘ஹைலைட்’ செய்து மக்கள் முன் கொண்டு செல்வது எனவும் வகுத்துக் கொண்டார். கட்சி சம்பந்தப்பட்ட சின்னச் சின்ன விஷயங்களை பாமரர்கள் மனதில் பதியும் வகையில் முன் நிறுத்தும் உத்தியையும் கையாண்டார்.

சக்ரவர்த்தி திருமகள் (1957) படத்தில் கதாநாயகனான தனது பெயரை கட்சி சின்னமான ‘உதயசூரியன்’ என சூட்டிக் கொண்டார். படத்தில் இதர கதாபாத்திரங்கள் ” உதயசூரியன் ஏழைகளின் விடியல்; உதயசூரியன் வென்றே தீருவான்” என்பது போன்ற வசனங்களை பேச வைத்து, வளர்ந்து வரும் தனது கட்சியின் சின்னத்தையும் அதன் செல்வாக்கையும் மக்கள் மன்றத்தில் முக்கியமாக கிராம மக்கள் மத்தியில் பதிவு செய்ய முயன்றார். நெற்றியில் உதயசூரியன் சின்னத்தை திலகமாக தரித்தபடி திரையில்
தோன்றினார்.

கட்சித் தலைவர் அண்ணா அடிக்கடி குறிப்பிட்டு வந்த ‘கடமை, கண்ணியம் கட்டுப்பாடு’ என்கிற கோட்பாட்டை மதுரைவீரன் படத்தில் கிளைமாக்ஸ் பாடல் வரிகளாக வைத்தார்.

கருணாநிதி என்கிற எல்லைக் கோட்டை தாண்டி, அப்போது திராவிட இயக்க எழுத்தாளர்களில் கருணாநிதிக்கு இணையாக வசனங்களை எழுதும் திறனும் கூடுதலாக பாட்டெழுதும் ஆற்றலும் கொண்டிருந்த கண்ணதாசனையும் இழுத்துப் போட்டுக் கொண்டு மதுரைவீரன் (1956), மகாதேவி (1957), மன்னாதிமன்னன் (1960) என்று அடுத்தடுத்து
திராவிடப் பிரசாரம் செய்தார் எம்.ஜி.ஆர்.

இச்சூழ்நிலையில், தான் வகுத்து வைத்திருந்த ·பார்முலாபடி அதாவது கட்சியையும் அதே நேரத்தில் தன்னையும் ஒரு சேர முழுவீச்சில் முன்னிலைப்படுத்தும் வகையில் சொந்தமாக முதன் முறையாக படமெடுத்தார் எம்.ஜி.ஆர். அது தான் ‘ நாடோடி மன்னன்’.

இது ‘if i were the king’ என்ற ஆங்கில படத்தின் தழுவல். எம்.ஜி.ஆருக்கு ஏற்றவாறு தமிழில் நாடோடி மன்னன் ஆனது. இதில் எம்.ஜி.ஆருக்கு மன்னன், புரட்சிவீரன் என இரட்டை வேடம். டைரக்ஷனும் அவரே. வசனம் கண்ணதாசன். 1958ம் ஆண்டு ஆகஸ்ட் 22ல் ரிலீஸ் ஆன இப்படம் பெரும் வெற்றி பெற்று அவரை சூப்பர்ஸ்டார் அந்தஸ்துக்கு கொண்டு போய் நிறுத்தியது. பிரேமுக்கு பிரேம் அரசியல் நெடி. துணிச்சலான அரசியல் பிரச்சாரம்.

தமிழ் டாக்கியில் முதன்முதலாக திமுக கொடியை பகிரங்கமாக ‘நாடோடி மன்னன்’ படம் வாயிலாக காண்பித்தார் எம்.ஜி.ஆர். படத்தின் டைட்டிலில் கறுப்பு- சிவப்பு கொடியுடன் ‘ எம்ஜியார் பிக்சர்ஸ்’ என்ற பேனரை திரையில் கண்ட திமுக கட்சியினருக்கு குறிப்பாக ரசிகர்களுக்கு பீறிட்டுப் பொங்கிய உணர்வை- உற்சாகத்தை இங்கு எழுத்தில் கொண்டு வர முயல்வது அத்தனை சுலபமில்லை.

வீராங்கன் என்ற பெயரில் நாடோடியாக அதாவது புரட்சி வீரனாக வரும் எம்.ஜி.ஆரின் கொள்கைச் சிறப்பை அறிந்த பிறகு , மன்னன் எம்.ஜி.ஆரின் மனைவி சொல்வாள்:

“அண்ணா.. நீங்கள் தான் அரசாள வர வேண்டும்”

———–

“எனக்கு ஆட்சி அதிகாரம் கிடைத்தால் நிலமற்றோருக்கு நிலமளிக்கப்பட்டு உழவுக்கு ஊக்கமளித்து உணவு உற்பத்தி பெருக்கப்படும். தொழிலுக்கும் ஊக்கமும் மானியமும் தரப்படும். பெண்கள் முன்னேற அவர்களுக்கு சுயதொழில் செய்ய அரசு உதவி செய்யும். அநியாய வரிகள் இருக்காது…”

-என்ற ரீதியில் எதிர்கால செயற் திட்டங்களை அடுக்குவார் ‘நாடோடி’ எம்.ஜி.ஆர்.

————

இன்னொரு காட்சியில் மார்த்தாண்டன் என்ற பெயரில் வரும் ‘மன்னன்’ எம்.ஜி.ஆருக்கும் ‘நாடோடி’ எம்.ஜி.ஆருக்கும் நேருக்கு நேர் நடக்கும் உரையாடல்:

மன்னன்: “எதற்காகப் புரட்சி ? யாரை எதிர்த்து?”

நாடோடி: ” உங்கள் ஆட்சியை எதிர்த்து. சர்வாதிகார முறையை ஒழிக்க.
எங்கள் லட்சியம் ஆளை ஒழிப்பதல்ல. மக்களாட்சியை
ஏற்படுத்துவது.”

மன்னன்: ” ஏன் நானும் மக்களில் ஒருவன் தானே. நானே ஆண்டாலென்ன?

நாடோடி : ” நீங்கள் மக்களில் ஒருவர் தான். ஆனால் மக்களின் நிலையை
அறியாதவர். அவர்களின் நிலை உணர்ந்த ஒரு ஏழை தான்
நாட்டை ஆளவேண்டும்.”

மன்னன்: ” ஆட்சி பற்றி உனக்கென்ன தெரியும்? ”

நாடோடி : ” நீங்கள் மாளிகையில் இருந்து கீழே மக்களை பார்க்கிறீர்கள்.
ஆனால் நான் மக்களில் ஒருவனாக இருந்து மாளிகையை
பார்க்கிறவன். மக்களின் துயரமும் தேவைகளும் எனக்கு
நன்றாக தெரியும்”

– இந்த காட்சியில் அப்போதைய காங்கிரஸ் ஆட்சி மன்னன் மார்த்தாண்டனாகவும்,
நாடோடி வீராங்கன் திமுகவின் பிரதிநிதியாகவும் உணரப்பட்டது கழகக் கண்மணிகளால்.
—————-

அதே படத்தில் மற்றொரு கட்டத்தில் , தனக்கு பதிலாக அரசை சில நாட்கள் ஆள வேண்டுமென்று கேட்டுக் கொள்ளும் மன்னனிடம் நாடோடி சொல்வார்:

” பதவியில் அமருவது எனக்கு நோக்கமில்லை என்றாலும் மக்களுக்கு நன்மை கிடைக்குமென்பதால் ஒப்புக் கொள்கிறேன். நான் மக்களுக்காக செய்ய விரும்பும் திட்டங்களை நிறைவேற்றும் அதிகாரம் எனக்கு அளிக்கப்பட வேண்டும். அதிகாரமில்லாத அரசாட்சியை நான் விரும்ப மாட்டேன் ”
———-

அதே படத்தில் வரும் ”காடு வெளஞ்சென்ன மச்சான் …” எனத் தொடங்கும் பாடலில்,

” இப்போ- காடு வெளயட்டும் பொண்ணே
நமக்கு காலமிருக்குது பின்னே.
……………………………………
……………………………………
நாளை போடப் போறேன் சட்டம் – பொதுவில்
நன்மைப் புரிந்திடும் திட்டம்.
நாடு நலம் பெறும் திட்டம். ”

——–

– இவ்வாறாக , எம்.ஜி.ஆர். தனது வருங்கால இலக்கை கோடிட்டு காண்பிக்கிறாரா அல்லது தான் சார்ந்திருந்த திமுகவையும் அதன் தலைவரையும் உயர்த்திப் பிடிக்கிறாரா என்று கணிக்க முடியாதபடிக்கு ஒருவித கெட்டிக்காரத்தனம், இப்படம் முழுவதும்
வியாபித்திருந்தது.

(வளரும்)

அடுத்து – ” வேட்டக்காரன் வருவான். உஷாரு…”

*********************

vee.raj@rediffmail.com

Series Navigation