பயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ் – 8 – உருண்டது உத்ராட்சக் கொட்டை !

This entry is part of 35 in the series 20070222_Issue

சாய் (என்கிற) பேப்பர்பாய்


டேக் – 8

1947லில் மருதூர் கோபால மேனன் ராமச்சந்திரன் , முத்துவேலர் கருணாநிதியை சந்திக்கும் வரை பக்கா காங்கிரஸ்காரர். ஆன்மீகவாதியும் கூட.

கதர் வேட்டி சட்டை. நெற்றியில் விபூதி பட்டை. கழுத்தில் உத்ராட்சக் கொட்டை. சரியான சிவப்பழம்.

நாடகத்தையே ஜீவனமாக கொண்டிருந்த மற்ற நடிகர்கள் போலவே இவரும் சினிமா வாய்ப்புக்காக அலையோ அலையென அலைந்துக் கொண்டிருந்தார். கிடைத்த வேடங்களோ போலீஸ் இன்ஸ்பெக்டர், காவலாளி போன்ற துக்கடா வேடங்கள் தான். பல படங்களின் டைட்டில்களில் இவர் பெயரே வராது. ‘இன்னும் பலர்’ என்ற பட்டியலிலேயே அடங்கி விடுவார்.

நாலு வார்த்தை சேர்ந்தாற்போல் வசனம் பேசும் வாய்ப்பு பெறக் கூட நாலு பேர் கையில் காலில் விழுந்து கெஞ்ச வேண்டிய நிலை. அபூர்வமாக கதாநாயகன் வாய்ப்பு கிடைத்த ஒரு படமும் பாதியிலேயே நின்று போனதால் ‘ராசியில்லாதவர்’ என்று அவப் பெயர் வேறு.

1936ல் சினிமா உலகில் நுழைந்து (‘சதிலீலாவதி’ முதல் படம். இன்ஸ்பெக்டர் வேடம்) சுமார் 10 ஆண்டுகள் கழித்தே அதாவது தனது 30வது வயதில் தான் ஒரு வழியாக கதாநாயகன் வேடம் ராமச்சந்திரனுக்கு தக்கியது. அந்த புண்ணியத்தை கட்டிக் கொண்டது 1947ல் வெளியான ஜூபிடர் பிக்சர்ஸ் தயாரித்த ‘ராஜகுமாரி’ படம் தான்.

இதே ‘ராஜகுமாரி’ படத்தில் தான் முத்துவேலர் கருணாநிதிக்கும் முதன்முறையாக வசனம் எழுத வாய்ப்பு கிடைத்தது. நாயகனும் வசனகர்த்தாவும் நண்பர்களாயினர்.

கிடைத்த வாய்ப்பை பற்றிக் கொண்டு, எப்படியாவது மேலேறி தங்களின் அடையாளத்தை பதிக்க வேண்டுமென்ற துடிப்பில் இருந்த கோபால மேனன் மகனும் முத்துவேலர் மகனும் ஒரு மையப் புள்ளியில் ஒன்று சேர்ந்தனர்.

விளைவு… ஒரு கதர் வேட்டி கரை வேட்டியாக மாறியது. உத்ராட்சக் கொட்டை தொங்கிய கழுத்தில் கருப்பு சிவப்பு துண்டு ஏறியது.

************

திராவிட இயக்கத்தின் பிரதான பிரச்சார நடிகர்களாக கருதப்பட்ட எம்.ஆர்.ராதா, கே.ஆர்.ராமசாமி, எஸ்.எஸ்.ராஜேந்திரன் மற்றும் எம்.ஜி.ராமச்சந்திரன் ஆகிய நான்கு ‘ரா’க்களில் முதல் மூவருக்கும் நான்காமவருக்கும் இடையே சில அடிப்படை
வித்தியாசங்கள் உண்டு.

மற்ற மூவரைப் போல, எம்.ஜி.ராமச்சந்திரன் பிறப்பாலோ அல்லது பூர்வீகத்தாலோ தமிழர் அல்ல. கேரளா. மலையாளக் குடும்பம். பிறந்ததும் கூட இந்நாட்டில் இல்லை; இலங்கை கண்டி நகரில். பஞ்சம் பிழைக்க இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் (கும்பகோணம்) அடைக்கலம் புகுந்து, தனது 7வது வயதிலேயே வயிற்றுப் பிழைப்புக்காக நாடகத்தில் நுழைந்தவர்.

அந்த மூவரைப் போல, பெரியாரின் பகுத்தறிவு கொள்கைகளால் ஈர்க்கப்பட்டவரோ; நாடகங்கள் மூலமாக திராவிட இயக்க கருத்துகளை பரப்பி வந்தவரோ அல்ல. இன்னும் சொல்லப் போனால், ஆரம்பத்தில் அதாவது பெரியாரிய கருத்துகள் இளைஞர்களின் மத்தியில் வசீகரமாக மையம் கொள்ள தொடங்கியிருந்த அந்த காலகட்டத்திலேயே எம்.ஜி.ராமச்சந்திரன் பழுத்த ஆஸ்திகவாதியாகத் தான் இருந்திருக்கிறார். அத்துடன், மகாத்மா காந்தி மீது அதீதமான அபிமானம் கொண்டிருந்த தீவிர காங்கிரஸ்காரராக தான் இருந்துள்ளார். 1947ல் கலைஞர் கருணாநிதியுடன் நட்பு ஏற்பட்ட பிறகே அவரது போதனைகளை கேட்டு மனம் மாறி திராவிட இயக்கத்தின் பக்கம் எம்.ஜி.ஆர். சாய்ந்ததாராம்.

திராவிட இயக்கத்தில் இணைந்தது மற்றும் ஈடுபாட்டை கணக்கில் கொண்டால் கூட சீனியாரிட்டி அடிப்படையில் எம்ஜிஆருக்கு நான்காவது இடம் தான். ( திமுகவில் இருந்த போது இவர் எந்த ஒரு போராட்டத்திலும் நேரடியாக பங்கேற்றதில்லை;
சிறைக்கு சென்றதில்லை என்ற விமர்சனம் இப்போதுமுண்டு).

எல்லாவற்றையும் விட, அந்த மும்மூர்த்திகள் போல் திரையில் இயக்கத்தின் பிரச்சார ஒலிபெருக்கிகளாக மட்டும் இருந்து விடாமல், தன்னையும் முன்னிலைப்படுத்திக் கொண்ட நான்காமவரின் சாமர்த்தியம் மிக முக்கிய வித்தியாசம்

– ஆக மொத்தம் முதல் மூன்று ‘ரா’க்களும், நாடகத்திலும் சினிமாவிலும் நாயகர்களாக திராவிட இயக்கப் பிரச்சாரத்தை ஆரம்பித்து பிறகு ஒரு கட்டத்தில் சாதாரணமாக போய் விட ; சாதாரணமாக ஆரம்பித்த எம்.ஜி.ஆரோ, நிறைவில் நாயகனாக நிலை பெற்றார். சினிமாவில் திராவிட இயக்கத்தின் ஒட்டுமொத்த திரை உருவமாகவும் அரசியலில் தவிர்க்கவே முடியாத தனிப் பெரும் சக்தியாகவும் விஸ்வரூபமெடுத்தார்.

**********

தனது திசை எது என்பதில் தெளிவாக இருந்தார் எம்.ஜி.ஆர். அவரது அணுகுமுறையும் கணக்கீடும் ஆரம்பத்தில் இருந்ததே ஒரு இலக்கு நோக்கி அமைந்திருந்தது அவரது பின்னாளைய அபார வெற்றிகள் புலப்படுத்துகின்றன.

1940-50ம் ஆண்டு. சினிமாவை அதிகம் பார்க்கும் பாமரர்கள் , நடுத்தர வகுப்பினர் குறிப்பாக இளைஞர்களை திராவிட இயக்கம் காந்தம் போல் இழுத்துக் கொண்டிருந்த காலகட்டம் அது. ‘ நித்திய கண்டம் பூர்ணாயுசு ‘ என்ற கணக்கில் தத்தளித்துக் கொண்டிருந்த தனது சினிமா வாழ்க்கையில் கரையேற life Boat -ம், வெகுஜனங்களிடம் நெருங்கிச் செல்ல முத்திரை மோதிரமும் திராவிட இயக்கமே என்று எம்ஜிஆர் தெளிவாக புரிந்து வைத்திருந்திருக்க வேண்டும். அதே வேளையில் முழுசாய் அதில் ஐக்கியமாகி இயக்கத்தின் சினிமா பிரசங்கியாக மட்டும் இருந்தால் ஒரு கட்டத்தில் காணாமல் போய் விடுவோம் என்றும் அவரால் கணிக்கவும் முடிந்திருக்கிறது.

எனவே, தான் சார்ந்திருந்த இயக்கத்தின் சினிமா உருவமாக தன்னை முன்னிலைப்படுத்திய அதே வேகத்தை, அதற்கு இணையாக திரையில் தனது தனித்துவ அடையாளத்தை பதிப்பதிலும் அவர் காண்பித்தார்.

‘ திமுகவால் எம்.ஜி.ஆர். வளர்ந்தாரா? அல்லது அவரால் திமுக வளர்ந்ததா? ‘ என்கிற விடை காண முடியாத கேள்வி இன்றளவும் தமிழகத்தில் உலாவிக் கொண்டு தானிருக்கிறது.

*************

சினிமா- அரசியல் – தனிவாழ்க்கை ஆகிய மூன்றுமே ஒன்றோடு ஒன்றுப் பின்னிப் பிணைந்து பிரித்து பார்க்க முடியாதபடிக்கு அமைந்து போனது எம்.ஜி.ஆருக்கு மட்டும் தான்.

ஒரு படத்தில் ஒரு நடிகன் சொல்லும் கருத்துகள் அந்த படத்தில் அந்த கதாபாத்திரம் பேசும் சாதாரண வசனங்களாக கருதாமல், திரைக்கு வெளியே தனிமனிதனாக அந்த நடிகனே அக்கறையுடன் தங்களுக்கு தெரிவிக்கும் நற்செய்தி அல்லது போதனையாக பாமர ஜனங்கள் எடுத்துக் கொண்டு கொண்டாடியது எம்.ஜி.ஆருக்கு மட்டும் தான். இது உள்நாட்டில் மட்டுமல்ல உலகளவிலும் கூட எந்த ஒரு சினிமா நடிகருக்கும் அமையாத தனிச் சிறப்பு என அடித்து சொல்லலாம்.

எம்.ஜி.ஆரின் சினிமாவும் அரசியலுமே பெரும்பாலும் மு.கருணாநிதியுடன் சம்பந்தப்பட்டதாகவே அமைந்தது. இவர்கள் இருவரின் இடையேயான நட்பு – பகையே தமிழ் சினிமாவையும் தமிழக அரசியலையும் சுமார் 40 ஆண்டு காலம் ஆக்கிரமித்து வந்ததெனலாம்.

எம்.ஜி.ராமச்சந்திரனின் பயாஸ்கோப் பாலிடிக்ஸை எடுத்துக் கொண்டால் அதை, இரண்டு முக்கிய காலகட்டங்களாக வகைப்படுத்தலாம் ; கி.மு- கி.பி போல.
அவை: 1) 1972க்கு முன் – 2) 1972க்கு பின்.

இதில் முதலாவது, 1947 முதல் 72 வரை கலைஞர் கருணாநிதியுடன் கூடிக்குலாவிய காலகட்டம். அடுத்தது, கடுமையாக மோதிக் கொண்ட 1972-77 வரையிலான காலகட்டம்.

இனி முதலாவதை அலசுவோம்:

ராஜகுமாரி மூலம் 1947ல் அஸ்திவாரம் போடப்பட்ட எம்.ஜி.ஆர்.- மு.க. நட்பு, அடுத்து 1950ல் வெளியான மந்திரிகுமாரி, மருதநாட்டு இளவரசி ஆகிய படங்களின் மூலமாக வலுப்பெற்றது.

தமிழ் டாக்கியில் ராஜாராணி கதைகளே பெரும்பாலும் ஆக்கிரமித்திருந்த காலகட்டம் அது. வஞ்சகமான மந்திரி அல்லது ராஜகுரு ; தலையாட்டி ராஜா; அவனுக்கு அழகான, சதிகார வைப்பாட்டி; பதிவிரதையான மகாராணி; அவள் வாயும் வயிறுமாக அநியாயமாக காட்டுக்கு விரட்டப்படுவாள்; அங்கு அவளுக்குப் பிறக்கும் மகன் சத்தியசீலனாக இருப்பான்; புரட்சி வீரனாகி ஏழை அப்பாவி ஜனங்களுக்காக அரண்மனைக்காரர்களிடம் கம்யூனிசம் பேசுவான் ; கெட்டிக்காரனாய் வாள் சண்டையெல்லாம் போடுவான்; கிளைமாக்ஸில் கெட்ட மந்திரி அல்லது ராஜகுரு, மேனாமினுக்கி வைப்பாட்டி ஆகியோர் பாவத்தின் சம்பளத்தை பெறுவார்கள்; அசட்டு ராஜாவும் மனம் திருந்தி மனைவி, மகனை ஏற்பான்.

– இதுவே அப்போதைய ராஜாராணி படங்களின் அடிப்படைக் கதைக் கரு. இதை மையமாக வைத்து கொண்டு அதையும் இதையும் மாற்றி மாற்றிப் போட்டு கதை பண்ணுவார்கள். இதில் திராவிட இயக்கக்காரர்கள் படமென்றாலோ உச்சந்தலை குடுமியோடு ராஜகுரு வந்து சமயச் சடங்குகள், கடவுள்கள் பெயரை சொல்லி வில்லத்தனம் செய்வார். (உதாரணம்- மு.க. கதை வசனம் எழுதிய ‘மந்திரிகுமாரி’. இது பற்றி ஏற்கனவே முந்தைய அத்தியாயங்களில் மேயப்பட்டுள்ளது). கிளைமாக்ஸில் இளவரசனாக ஏற்கப்படும் நாயகன், “முடியாட்சி முடிந்தது. இனி மக்களாட்சி தான்” என்று டயலாக் சொல்லி முடித்து வைப்பான். (உதாரணம்- ‘மருதநாட்டு இளவரசி’)

திராவிட இயக்கத்தை சேர்ந்த ஆசைத்தம்பி வசனத்தில் எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்து 1951ல் வெளியான ‘சர்வாதிகாரி’ படத்தில்,

” தர்மத்துக்காகவும், நீதிக்காகவும் போராட
இந்த வாள், என்றைக்கும் தயங்காது”
– என்று எம்ஜிஆர் வீரமாக வசனம் பேசுவார். ஆசைத்தம்பியின் திராவிட இயக்கப் பேனா இங்கு வாளாக குறிப்பிட்டது திராவிட இயக்கத்தை என்று அந்த இயக்கத்தாரால் உணரப்பட்டு ரசிக்கப்பட்டது.

மேலும் அதே படத்தில்,
” பச்சைத் தண்ணீருக்காக பரிதவிப்பவர்கள்
ஏராளம் அங்கே ; பழரசம் இங்கே.
கந்தல் துணி கூட இல்லை அங்கே
பட்டு பீதாம்பரம் ஜொலிக்கிறது இங்கே..”

– என்று அரண்மனைவாசியான தனது காதலியிடம் கம்யூனிசம் பேசுவார் கதாநாயகன் எம்.ஜி.ஆர்.

அதே ஆண்டு வந்தான் ‘ கரிகாலன் ‘ ; ஏழைப் பங்காளன் இமேஜ்க்கு பிள்ளையார்சுழி போட்டு எம்.ஜி.ராமச்சந்திரனை பின்னாளில் ‘ புரட்சி நடிகர்’ ஆக்கிடுவதற்காக.

(வளரும்)

அடுத்து: வெச்ச குறி தப்பாது !


vee.raj@rediffmail.com

Series Navigation