பயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ் – 3 – இரட்டைக்குழல் துப்பாக்கி

This entry is part of 43 in the series 20070104_Issue

சாய் (என்கிற) பேப்பர்பாய்


– டேக் 3 –

இரட்டைக்குழல் துப்பாக்கி

ஈ.வெ.ரா. பெரியாரின் சுயமரியாதை இயக்கம் சூடு பிடிக்கத் தொடங்கியிருந்த போது காஞ்சிபுரம் நடராஜன் அண்ணாதுரைக்கு முறுக்கான
வாலிபப் பருவம். பெரியாரின் கடவுள் மறுப்பும், பிராமண எதிர்ப்பும் மற்ற பிராமணர் அல்லாத இளைஞர்களைப் போலவே சி.என். அண்ணாதுரையையும் (அப்போது kancheepuram அல்ல. canjeevaram என்றே குறிப்பிடப்பட்டு வந்தததால் ‘கே.என்’. அல்ல. ‘சி.என்’. தான்) ஈர்த்தது. சற்று அதிகப்படியாகவே ஈர்த்தது எனலாம்.
படிக்கும் காலத்திலேயே பெரியாரின் கருத்துக்களில் மனதை பறிகொடுத்த சி.என்.அண்ணாதுரை, 1934ல் அவரை முதன் முறையாக நேரில் சந்தித்து பேசும் வாய்ப்பை பெற்றார். பின்னர் ஜஸ்டிஸ் கட்சியில் சேர்ந்து திராவிடர் கழகத்தில் தொடர்ந்து (ஜஸ்டிஸ் கட்சி, 1944ல் திராவிடர் கழகமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது) 1949ல் பிரிந்து செல்லும் வரை பெரியாரின் நிழலாக தொடர்ந்தார். சி.என்.ஏ.,வுக்கு தமிழிலும் அதற்கு இணையாக ஆங்கிலத்திலும் நல்ல புலமை . விஷய ஞானத்துடன் வசீகரமான மேடைப் பேச்சு. அத்துடன் எழுத்தும் கூடப் பேசும். கேட்க வேண்டுமா, இளைஞர்களை பெரும்பான்மையாகக் கொண்டிருந்த அந்த இயக்கத்தில் வசீகர மையமாக ஆனார். ஆரம்பத்தில் ‘ தோழர் அண்ணாதுரை’யாக இருந்தவர் விரைவிலேயே ‘ தளபதி அண்ணா ‘ வாக உயர்ந்தார். பெரியாரின் போர் வாளாக கொண்டாடப்பட்டார்.

ஆனால் 1949ல் இந்த வாள், உறையிலிருந்து வெளியேறிட பெரியார்- மணியம்மை திருமண விவகாரம் காரணமாக அமைந்தது. இது
பொருந்தாத் திருமணமென எதிர்ப்பு தெரிவித்து அண்ணா தலைமையில் ஒரு பிரிவினர் திராவிடர் கழகத்தில் இருந்து வெளியேறி புதிய அரசியல் கட்சியை ஆரம்பித்தனர். ‘ திராவிட முன்னேற்றக் கழகம் ‘ என்று பெயரிடப்பட்ட அக்கட்சி, சென்னையில் 17-9-1949ல் முறைப்படி துவக்கப்பட்டது.

சுமார் 15 ஆண்டுகளுக்கும் மேலாக பெரியாரின் குருகுலத்தில் பயின்றாலும் அண்ணாவின் பார்வை இரு விஷயங்களில் குருவிடமிருந்து மாறுபட்டதாக இருந்திருக்க வேண்டும். அவை: 1. காங்கிரஸ் இயக்கத்துக்கு போட்டியாக திராவிட இயக்கத்தை அரசியல் இயக்கமாக மாற்றுவது; 2. நாடகம், சினிமா போன்ற கலை ஊடகங்களை குறிப்பாக வெகுஜன சாதனமாக விஸ்வரூபமெடுத்துக் கொண்டிருந்த பேசும் சினிமாவை (Talkie – டாக்கி) பிரச்சாரச் சாதனமாக பெருமளவில் பயன்படுத்திக் கொள்வது ஆகியவை ஆகும்.

தி.க.,விலிருந்து வெளியேறிய வேகத்தில் அவ்விரு அம்சங்களையும் முழுவீச்சில் கையாளத் தொடங்கி திராவிட இயக்கத்தின் புதிய பரிமாணத்துக்கு விதை போட்டார் அண்ணா.

தி.க.,விலிருந்து அண்ணா விலகியதும், அவர் கலைவாணரின் ‘ நல்லதம்பி ‘ படத்தின் மூலமாக சினிமாவில் முதலடி வைத்ததும் ஒரே ஆண்டில் (1949) நிகழ்ந்த வரலாற்று நிகழ்வுகளாகும். தமிழ் சினிமாவில் திராவிட இயக்கத் தாக்கத்துக்கு பாதை காண்பித்தவர் கலைவாணர் என்றால், ‘ நல்லதம்பி ‘ மூலம் முதல் காலடி பதித்து, பயணத்தை துவக்கி வைத்தவர் அண்ணா.

இயல்பாகவே கலைத் துறையில் அண்ணாவுக்கு மிகுந்த ஆர்வமுண்டு. கழக மாநாடுகளின் நிகழ்ச்சி நிரல்களில் கட்சி நாடகங்களும் இடம் பெறும் அளவுக்கு முக்கியத்துவமும் ஊக்கமும் கொடுத்தார். அவ்வளவேன், அண்ணாவே ‘சந்திரோதயம்’, ‘சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்’ போன்ற சில நாடகங்களை எழுதி நடித்துமுள்ளார்.

************

தி.க.விலிருந்து பிரிந்து வந்தாலும் அதன் காரம், குணம் மணத்துடனே தான் திமுகவும் பிறந்தது. ஆரம்பத்தில் நாத்திக வாதம், கடவுள் மறுப்பு (பின்னாளில் ‘ ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்று பிடி தளர்ந்தது வேறு விஷயம்) பிராமணிய எதிர்ப்பு, திராவிட நாடு பிரிவினை, ஆரியர்- திராவிடர் பேதம், இந்தி எதிர்ப்பு, சமூக நீதி என்று தாய் கழகத்தின் பிரதிபிம்பமாகவே தன்னை காட்டிக் கொண்டது சேய் கழகம் (திமுக). தனது இலக்கு இளைஞர்கள், பாமர மற்றும் நடுத்தர மக்கள் குறிப்பாக பிராமணரல்லாதோர் தான் என்பதில் தெளிவாக இருந்தது.

அதற்கேற்ப பிரச்சார எந்திரத்தை தமிழ் சினிமாவில் களம் இறக்கி விட்டார் அண்ணா. ‘இந்து மத கடவுளர்கள், புராண, இதிகாசங்கள், சடங்கு சாஸ்திரங்கள் போன்றவை ஒட்டு மொத்தமாக பிராமணிய மேலாதிக்கத்தின் அடையாளங்கள்; பிராமண அல்லது மேல்ஜாதிகள் என்று அழைக்கப்பட்ட இதர பிரிவினரின் மேலாதிக்கமே ஜாதி பேத தீண்டாமைக் கொடுமை, பொருளாதார ஏற்றத்தாழ்வு உள்ளிட்ட சமூக அவலங்களுக்கு காரண கர்த்தா’ என்பதே அந்த பிரசாரத்தின் மையக் கரு.

அண்ணா சினிமாவுக்கு எழுதிய கதை, வசனங்கள் இந்த கருவை உள்ளடக்கமாகக் கொண்டிருந்தன. வைதீகத்தையும். சாஸ்திர சம்பிரதாயங்களையும், ஜாதகம் ஜோதிடம் போன்றவற்றையும் கிழித்த அவரது பேனா, கலப்பு மணம், விதவைத் திருமணம், போன்ற சீர்திருத்தங்களை வலியுறுத்தியது. அத்துடன் பிராமணியத்தின் பிம்பமாக ஆரியர்கள் என்ற கருத்துரு உருவாக்கப்பட்டு திராவிடப் பெருமையும் பிரச்சாரம் செய்யப்பட்டது. பிராமணியத்தின் முத்திரை மோதிரமாக வடமொழி அடையாளம் காட்டப்பட்டு அதனை ஓரம் கட்டும் நோக்கமாக தமிழ்மொழி, தமிழ்நாடு பெருமையைத் தூக்கி நிறுத்த முனைப்புக் காண்பிக்கப்பட்டது.
“ஒன்றல்ல இரண்டல்ல தம்பி- சொல்ல
ஒப்புமையில்லாத அற்புதம் தமிழ்நாட்டில்”
– இது அண்ணா கதை வசனத்தில் உருவான ‘தாய் மகளுக்குக் கட்டியத் தாலி’ (1959) படத்தில் வைக்கப்பட்டப் பாடல். இதை எழுதியவர் அண்ணாவின் உற்ற நண்பர் , திராவிட இயக்க அபிமானியான உடுமலை நாராயணகவி.

‘ நல்லதம்பி ‘ தவிர ‘ ஓர் இரவு’ (1951) , சமூக ஏற்றத்தாழ்வுகளை சுட்டிக்காட்டும் ‘ வேலைக்காரி’ (1949) , சொர்க்கவாசல் (1954) , விதவை திருமணத்தை வலியுறுத்திய ‘காதல் ஜோதி’, பெண் மோகம் பிடித்த செல்வந்தரின் முகத்திரையை கிழிக்கும் ‘ நல்லவன் வாழ்வான்’, ‘ ரங்கோன் ராதா’ (1956), ஜாதி பேதம் பேசி ஏழைகளை சுரண்டும் பசுத்தோல் போர்த்திய புலியை அடையாளம் காட்டும் ‘ வண்டிக்காரன் மகன் ‘ உள்ளிட்ட திரைப்படங்கள் அண்ணாவின் கைவண்ணத்தில் உருவானவை. இவற்றில் சில அவரே கதை வசனம் எழுதியவையும் உண்டு. கதை மட்டும் அவருடையதாகவும் சில படங்களும் உண்டு.

தனது அரசியல் எதிராளிகளை சாடும் சாடலுக்குள் தங்களது இயக்க கருத்துகளை அல்லது மேன்மையையும் இழையோட செய்யும் சாமர்த்தியத்திலும்; சொல்ல வேண்டிய விஷயத்தை சொல்ல வேண்டியவர்களுக்கு சொல்லுவதற்கும், செல்லமாகக் குட்டுவதற்கும் கூட சினிமாவை பயன்படுத்திக் கொண்டதில் திராவிட இயக்க கலைஞர்களை மிஞ்ச ஆளில்லை. ‘ நல்லவன் வாழ்வான் ‘ படத்தில் கதாநாயகன் (எம்.ஜி.ஆர்) , பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்டு நடப்பு சேர்மனை (எம்.ஆர்.ராதா) தோற்கடிப்பார். வெற்றி மாலையுடன் நாயகன் நேராக, மாஜி சேர்மனிடமே சென்று எந்த பகையுணர்வும் இன்றி “இந்த வெற்றி உங்கள் வெற்றி ஐயா” என்ற ரீதியில் பேசி வாழ்த்து கோருவார். பெரியாரிடம் இருந்து பிரிந்து வந்தாலும் அவர் தான் என்றைக்கும் என் தலைவர் என்று தான் அடிக்கடி சொல்லி வருவதை இதன் மூலமும் அண்ணா வெளிப்படுத்தியிருப்பதாக கட்சியினரால் உணரப்பட்ட காட்சி இது.

பாமரர்களும் புரிந்துக் கொள்ளும் அதே நேரத்தில் புலமையான தமிழ் நடையில் வசனங்கள்; கோர்வையாய் எதுகை மோனை; கருத்துக்களையும் சாடலையும் படத்தின் பாடலில் கூட வைக்கச் செய்யும் செய் நேர்த்தி. எதிர்தரப்பை (இந்துமத கடவுளர்கள், சாஸ்திர சம்பிரதாயங்கள், பிராமணர்கள், புராண இதிகாசங்கள் போன்றவை) நேரடியாக முகத்திலறைந்தாற் போல் பட்டவர்த்தனமாக குத்திக் குதறாமல் காட்சியமைப்பு அல்லது எழுத்து வன்மை மூலம் பார்ப்போரை புரிந்துக் கொள்ளச் செய்யும் சாதுர்யம்.

– திரையுலகில் அறிஞர் அண்ணா கையாண்ட இந்த பாணி , தொடர்ந்து திராவிட இயக்கக் கலைஞர்களால் காலச் சூழ்நிலைக்கேற்ப
பின்பற்றப்பட்டதென்றால் அது மிகையாகாது.

ஒரு கட்சியை தோற்றுவித்து அதனை வளர்த்து ஆட்சிக் கட்டிலில் ஏற்றி உட்கார வைத்த கடும் அரசியல் பணிகளுக்கிடையில் அண்ணா ஏறக்குறைய பத்து படங்களுக்கு தனது எழுத்துப் பங்களிப்பை அளித்துள்ளார். 1967ல் தமிழகத்தின் முதலமைச்சராகி 3-2-1969ல் மறைந்தார். அதற்கு பிறகும் அவர் தனது பெயர் மூலமாகவோ, புகைப்படங்கள், கருத்துகள் வாயிலாகவோ இன்றளவும் தமிழ் சினிமாவில் இடம் பிடித்துக் கொண்டு தானிருக்கிறார்.

********************************

தமிழ் டாக்கியில் முழக்கம் செய்த திராவிட இயக்க துப்பாக்கியின் ஒரு குழல் அண்ணா என்றால் இன்னொரு குழல் மு.கருணாநிதி. பயணத்தை துவக்கியவர் முதலாமவர் என்றால், காங்கிரீட் தளம் போட்டு அந்தப் பாதையை வலுவாக்கியவர் இரண்டாமவர். அரசியல் வாழ்வில் முன்னவருக்கு தளபதியாக விளங்கினாலும் சினிமாவிலோ அவருக்கு ஓரிரு ஆண்டுகள் பின்னவரே சீனியர். இவர் சினிமாவுக்குத் தந்த எழுத்துப் படைப்புகளும் அதிகம். இந்த விஷயத்தில் குருவையே மிஞ்சிய இந்த சிஷ்யன் அடுத்த அத்தியாயத்தில் வருவார்.

(வளரும்)

அடுத்து : ‘ ராஜகுமாரி ‘

—————————————————————————————

vee.raj@rediffmail.com

Series Navigation