ஆகாயப் பந்தலிலே

This entry is part [part not set] of 34 in the series 20060113_Issue

வெங்கட்ராம கிருஷ்ணகுமார்


“ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா” என்று மெல்லிசை மன்னர் எம்.எஸ். விசுவநாதனின் பாடலைக் கேட்கும் போதெல்லாம் அழகான பெண் ஆட நான் பாட என்று எனக்கு கனவு வராது. அதில்லாமல் வாய் பந்தல் போட்டு, வார்த்தைகளைத் தோரணங்களாய்த் தொங்க விட்டு பேசுபவர்களின் சாமர்த்தியத்தில் லயித்து போவேன்.

“துளி சமர்த்து” போதாது என்று மனைவி இடிப்பதைத் துப்பறியும் சாம்பு போன்று இளித்துக் கொண்டு கேட்பவன், மற்ற வாய் பந்தல் வீரரிடம் மனதைப் பறி கொடுப்பதில் வியப்பில்லை தான். வாயுள்ள பிள்ளை பிழைக்கும் என்பதைக் கேட்பதுண்டு (“வாயுவுள்ள பிள்ளை” யாய் இருந்தால் டாக்டரிடம் செல்ல வேண்டும்!). சில பேர் அலுவுலகத்தில் சிறிது தொழில் சம்பந்தமான அறிவு வைத்துக் கொண்டு நிறைய பொது அறிவை வைத்துக் கொண்டு சமாளித்து விடுவர். வாய் சாமர்த்தியத்தில் பந்தல் கட்டி மற்றவர்களின் திறமைகளையெல்லாம் கட்டிப் போட்டு, தம் பால் ஈர்க்கச் செய்து கடைசி சமையத்தில் பேரையும் தட்டிச் செல்லும் திறமையுடையவர்கள் அவர்கள். அரசியலில் எந்தப் பிரச்சினைகள் வந்தாலும் வாய் சாமர்த்தியத்தில் “சதுரங்கம்” ஆடி தப்பித்து அதே சமயத்தில் தன்னையும், தன் கட்சியையும் வளர்ச்சிய்டையச் செய்யும் சாணகியர்களையும் நாம் கண்டதுண்டு. நான் கண்ட நபர் எப்படியெல்லாம் பந்தலிலே ஊஞ்சல் ஆடுகிறார் என்று பாருங்கள் !

சபாகர் என்று செல்லமாக அழைக்கப்படும் என் பால்யக் கால நண்பர் (எனக்கு 16 அவருக்கு 50) நினைவுக்கு வந்தார். அனைத்துக் கூட்டங்களிலும் (மனைவி தவிர வேறு யார் கூடினாலும்) அவர் சொல்லும், செயலும் அவரை சபாநாயகராக உயர்த்தும். ஆதலால் நாங்களும் சபாகர் என்று உரிமையுடன் அழைப்போம். அவர் பேசும் போது 9,10,11, & 12 வகுப்பு படிக்கும் எந்த மாணவனும் ‘ஆ’வென்று வாய் பிளந்து பார்ப்பான்.

முதலில் “பிரஷ்னேவ்” பற்றி பேசுவார். ரஷியாவைச் சிலாகித்துப் பேசுவார். அடுத்து ABC பீட்டர் ஜென்னிங்க்ஸை கார சாரமாக விமர்சித்துவிட்டு, அமெரிக்காவை விளாசித் தள்ளுவார். பெரும்பாலும் அமெரிக்க லைப்ரரிக்குப் போய் புத்த்கங்கள் எடுத்து படித்து விட்டு, இலவசமாக வீடியோ பார்த்து விட்டு, “இந்த அமெரிக்காகாரனை உதைக்கணும்” என்று கூறுவார். எங்களுக்கு குதூகூலமாக இருக்கும். பலமான ஒருவனை வாயில் புகையிலை போட்டு, வெற்றிலைச் சாறினை உமிழ்ந்து, வறுத்த சீவல் போட்டுக் குதப்பி “பளிச்” சென்றூ துப்பி வசமாக வைவார். பிரமிப்பாக இருக்கும்.

அமெரிக்கா வெளிநாட்டுக் கொள்கையே அவர் கைகளில் இருக்கும் பிரமிப்பைத் தருவார். “இரு” என்று சைகளால் காண்பித்துத் துப்பிவிட்டுப் பிறகு “ ?ிட்லர் இருந்தால் இவன் (அமெரிக்கா) ஜம்பம் பலிக்காது. . . .” மீண்டும் உமிழ்தல். “அவன் பண்ண ஒரே தப்பு ரஷியா கிட்டே குளிரில் வாலாட்டினது தான் . . .”.

எனக்கோ, ஜெர்மனி வாலை ஆட்டும் நாயெனக் கற்பனை பண்ணிக் கொள்வேன்.

ஆனால் பிரஷ்னேவிடம் அது நடக்காது என்று சட்டென்று சோவியத் ரஷியாவிற்கு வருவார். சரமாரியாக தாய், தங்கை, மோசமான பிறப்பு குறித்து சென்னைத் “தாய் மொழி” வந்து விழும். (கெட்ட வார்த்தைகள் தான். எதுகை மோனையுடன் இரண்டே கலந்து “வெற்றீலைப் பாக்குடன்” அள்ளித் “தெளிக்கும்”.).

ரஷியாவிலிருந்து தமிழகம் வருவார். “இங்கே …ஐய்யய்ய என்று கை விரல்களால் “வெற்றுப் பயல்கள்” என்று சைகை கட்டுவார்”. “சபாகர் . . . திமுக … “ என்றிழுத்தால் “ஐயோ அதை பற்றிக் கேட்காதே . . .” என்பார். “எம்.ஜி.ஆர் என்றிழுத்தால் அதேன் கேக்கறே . . . கூத்தாடிப் பயல்கள் . . .” என்பார். “ரொனால்டு ரீகன் . . .” என்றால் “அவர் கதை வேறு தம்பி. அவர் லெவல் கலிபோர்னியாவில் தெரியுமா உனக்கு . . .” என்பார். நமக்கு கலிபோர்னியா எங்கிருக்கு என்று கேட்டு விட்டால், ஆரம்பித்து விடுவார். ?ாலிவுட் முதல் பூகம்பம் வரை. ரொனால்டு ரீகன் டெமாக்ரடிக் பார்டியிலிருந்து ரிபப்ளிகன் பார்ட்டி வரை இருந்தக் கதையைச் சொல்லுவார். சொல்லிவிட்டு “இப்ப சொல்லு எம்.ஜி.ஆர் எங்கே, ரீகன் எங்கே என்று.”. என்பார். நாங்களும் வந்து விழும் விவரங்களைக் கிரகிக்கத் திரணியில்லாமல் “தலையை” ஆட்டி வைப்போம்.

புத்தகங்களைப் பற்றி பேசினாலும் சட்டென்று “இவனெல்லாம் என்ன எழுதறாங்க அலிஸ்டர் மெக்லின், ெ ?ரால்டு ராபின்ஸன் எல்லாம் பிச்சைக் காசு வாங்க வேணும் . . . .”. என்று அவர்களைப் படிக்காதவர்களை வியக்க வைத்து படிக்க வைப்பார். பாரதி வாழ்ந்து மறைந்த துளசிங்கப் பெருமாள் கோவில் தெருவில் குடியிருந்தாலும் பாரதியைப் பற்றியெல்லாம் அதிகம் பேசாமல் “அவர் ஒரு கிறுக்கு, அந்த மாமி பெண்கள் கஷ்டப்பட்டதை நான் பார்த்திருக்கேன் . . . என்று “ஜல்லி” யடிப்பார். பாரதியைப் பற்றி எங்கு பேச ஆரம்ம்பித்து விடுவோமோ என்று திசைத் திருப்பி “ஷெல்லி படிச்சிருக்காயாடா ?” என்று ஆரம்பித்துவிடுவார்.

திடாரென்று “சார்,” என்று சின்னப் பசங்களை அழைப்பார். அனைவரையும் வைத்து கிரிக்கெட் ஆடுவார். அணி சேர்ப்பார். பம்பாய், தில்லி ரஞ்சி கிரிக்கெட் ஆட்டக்காரர்களைச் சிலாகிப்பார். “தமிழ்நாட்டில தண்டம்பா . . .இந்த அப்துல் ஜப்பார் எப்படி ஆடறான். மற்றவன் எல்லாம் சூன்யம். பரத் ரெட்டி சூவிங்கம் தின்பதற்கும், சிகெரெட்டுக்கும் தாண் லாயக்கு. வெங்கட்ராகவன் ஒரு “தயிர்” சாதம்” என்று அவர் வழங்கும் கமெண்டுக்களுக்காக ஒரு சிறு கூட்டம் அவரைச் சுற்றி இருக்கும்.

ஸ்ரீகாந்த் ஆடவந்தால் மெரினா புல்தரையில் உட்கார்ந்து கொள்ள அவரை சுற்றி ஒரு கூட்டம் மொய்க்கும். “ஏர் இந்தியா டாம் லாயக்கில்லை. ஆல் இந்தியா ஸ்டேட் பாங்க்கில் “கேதார்நாத், பாபுல்நாத்” ஆடுவது வேஸ்ட். யஷ்பால் ஷர்மா ஏன் இப்படி மட்டமாக் பாட் பிடிக்கிறான் ?” என்று காரசாரமாக விவாதிப்பார். காலை பத்து முதல் மாலை 5.00 வரை வம்பு பேசிக்கொண்டு கீழே கிடக்கும் கற்களை வீசிக்கொண்டு பொழுதை ஓட்டும் அருமையான ஆட்டம் நம்ம கிரிக்கெட் தான். அதான் மக்களுக்குப் பிடிச்சிருக்கு. ஓசியாகக் காட்டும் புச்சிபாபு கிரிக்கெட் ஆட்டம் சென்னையில் வருடந்தோறும் நடைபெறும். சபாகர் ஓசியாக இருப்பதால் “பெவிலியனுக்கு குறைந்து” எங்கும் போகமாட்டார். அங்கு பிரபல்யங்கள் அருகே சென்று கொஞ்சம் ‘தம்பட்டம்” கூட செய்து கொள்வார். “சோ” கிரிக்கெட் பார்க்க வந்தால் “நம்ம பார்த்த சாரடி சபாவில் “சம்பவாமி யுகே ! யுகே !” பார்த்தேன். பிச்சிருக்கேள் . . . “ என்று ஐஸ் வைப்பார். அப்படியே யாரிடமோ எப்படியே பேசி அடுத்த டிராம டிக்கெட் ஓசியில் இரண்டு வாங்கி விடுவார்.

மெரினாவிலோ, சேப்பாக்கத்திலோ “ஓசி” கிரிக்கெட் பார்த்து விட்டு, அனைவரோடு வம்படித்து விட்டு கடைசியில் ஏதாவதொருவனிடம் “ஒரு இருபது ரூபாய் கொடு. அடுத்த மாட்சுக்குள்ளத் தருகிறேன்” என்று நைசாகக் கறந்து விடுவார். மாட்டிலிருந்து கறந்தால் மனிதன் மீண்டும் குடிப்பதற்குத் தான் அதன் மடிக்கு வருவான் என்று அந்த “மாட்டுக்”குப் புரியாது. சபாகரோ, மாடு, ஆடு, மனிதன் என்றூ அனைவரிடமும் கறந்து வீட்டில் ஏமாளியான மனைவியிடம் வெளியே “பிசினஸ் ரொடேஷன் மணி” என்ற அனைவர் முன்னாலேயும் தைரியமாக அளப்பார்.

“அக்கா ! நம்பாதீங்க” என்றால் ஏற்கனவே முழம் பூ சூட்டியிருப்பதால் வெகுளியாகத் “திருந்திடுவார்” என்று பதில் வரும். இப்படியே வேலை செய்யாமல், அனைவரையும் ஏமாற்றிப் பணம் பிடுங்குவார். கடன்காரர்களும் இவரைப் பார்த்தால் உஷாராகிவிடுவார்கள். வாய்க்கு வந்தபடி திட்டுவார்கள்.

திட்டு வாங்கியபடி அவர்களுக்கு “வைகுண்ட ஏகாதசி, சிவராத்திரி” சமயங்களில் அக்கம் பக்கம் பெருங் கூட்டமாயிருக்கும் கோவில்களில் உள்ளே நுழைய குறுக்கு வழித் தந்திரங்கள் பண்ணி பெருமாளையோ, சிவனையோ தரிசிக்க ஏற்பாடு பண்ணி “ஜமாய்த்து விடுவார்”. அப்புறம் அவரிடம் “கடனைக் கேப்பார்களா ?”. பிறவிக் கடனையே கழித்த மாகாத்மா இல்லையா ? அடுத்த வேளை “வெற்றிலை பாக்கு, புகையிலைக்கு” என்ன “உங்க பிள்ளை அட்லாண்டாவிலிருக்கானாமே .. . ஐபிஎம் மா ?” என்று கேட்டு மிரள வைப்பார். “என்ன சார் ரோடு போடறான் இங்க பாருங்க நம்ம முனிப்பிள்ளை எப்படி மாடுகளைக் கம்பீரமாக ரோட்டில் ஓட்டிப் போறான். அங்கு முடியுமா ? சிண்டைப் பிடிக்க மாட்டான் “ என்று அட்லாண்டா போலிசுக்குச் சிகரம் வைத்தாற் போல பாராட்டுவார். நமக்கும் “நம்ம நகரத்தை இகழ்ந்து, அடுத்தவனை புகழ்ந்தால் போதும்” சேர்ந்து கொள்வோம். “பெர்பெக்ட்லி கரெக்ட் சார்” என்று முதுகில் அறைந்து, பாண்டில் பணமெடுத்து புகையிலை வாங்கிக் கொடுப்போம்.

“பெங்களுரைப் பாருங்க ! வெள்ளைக்காரன் வருமளவிற்கு வைச்சிருக்கா ?ன் . . .”. “இங்கே நாய் பசங்க . . .” என்று இகழ்வார். அப்படியில்லை. அவர் சொல்வது தப்பு என்றால் கூட்டம் கூடும் வரைக்கும் உரக்க வாதிட்டு, தொண்டை தண்ணி வற்றியபிறகு கடைசியில் தோள் மீது கை போட்டு “கிருஷ்ணா கபேயில் ஒரு கப் காபி சாப்பிடலாம் வாங்க என்று கனிவன்புடன் அழைப்பார்!”. மனைவியிடம் சண்டை போட்ட பிறகு அவரிடம் போனால் காயம் பட்ட மனடிற்கு நல்ல மருந்து போடுவார் … “இந்தப் பெண்களே இப்படி தான் கற்காலத்திலிருந்து . . . “ என்று ஆரம்பித்து விடுவார்.

படித்தது பத்தாம் வகுப்பு வரை. ஆனால் ஆங்கிலத்தில் கரை கண்ட மாதிரி அனைத்து ஆங்கிலப் பேராசிரியர்களைப் பற்றி அவர்கள் சேக்ஸ்பிரியர் பற்றி பேசுவது, நடிப்பது பற்றி நடித்தே காட்டுவார். தான் சின்ன வயதில் அனைத்து ஆசிரியர்களையும் படுத்தியது பற்றியும், கெமிஸ்டிரி வாத்யார் வயிற்றீல் அமிலத்தைக் கரைத்தது பற்றியும் கதை விடுவார். எங்களுக்கு அவர் பொய்யை உண்மையாகப் பேசுவாரென்று தெரியும். ஆனால் அவரிடம் பேசினால் நேரம் போகும் என்பதற்காக அவரிடம் உட்கார்ந்து வம்பளப்போம். அவருக்கு வெகு நாளைக்குக் குழந்தைகள் பிறக்கவில்லை. வேலையுமில்லை. அதைப் பற்றிக் கவலையும் படவில்லை.

குடியும் அதிகம். கண்கள் சிவ சிவக்க “என்னடா சின்னப் பசங்களா, ட்ரை பண்றீங்களா. அயோத்திக்குப்பத்தில ஒரு பார் கடையாண்டா எல்லாம் கிடைக்கும் “ என்று கண்சிமிட்டுவார். ஒரு தடவை அனைத்துக் கடன்காரர்களும் தெருவில் துரத்த ஐயப்ப மாலை போட்டவர் துண்டைக் காணோ,, கறுப்பு வேட்டியைக் காணோம் என்று அம்மணமாக ஓடினார். குடும்ப தலையில் அடித்துக் கொள்ள “பைத்தியம்” என்று கடன்காரன் துரத்துவதை நிறுத்தினான். நகரத்தில் வேறு இடத்திற்கு புலப் பெயர்ந்து மீண்டும் “வாய் பந்தல்.” “ஆகாயப் பந்தலிலே . . . “

“இப்படி தாண்டா, அவர் சின்ன பசங்க்களைக் கூப்பிட்டு கிரிக்கெட் ஆடபோனார். சுனாமி வந்த போது பீச் போனார். ஓவரா உப்புத் தண்ணிக் குடித்து” மிதந்திருந்தார். எல்லாரும் வந்து புரட்டிய போது “எவண்டா என்னை புரட்டறது ?” என்று உறுமியவாறு எழுந்து வந்தார். நாங்க அனைவரும் ஆடிப் போயிட்டோம் ! அப்றம் ஆடிப் பெருக்கன்று அய்யா நடுத் தெருவில் “ஆடிப் பெருக்கெடுத்துக் கொண்டிருந்தார்”. கிரிக்கெட்டில் திடாரென்று நான் ஜெஃப் தாம்ஸ்ன் என்று சொல்லிக் கொண்டு 40 அடி ஓடி வந்து “ஃபுல் டாஸ்” பிட்ச் பண்ணாமல் லாகவமாக பேட்டுக்கு பந்து போடுவார். அடுத்த பந்தே நின்றவாறு போடுவார். “கால் வலிக்குதுடா” என்பார்.

சின்ன பசங்க கூட கிரிக்கெட் ஆடும்போது பந்துகளை வாங்க இலவசமாக காசு (மற்றவர்களிடம் வாங்கித் தான்) கொடுப்பார். எப்படி “காட்ச்” பிடிக்க வேண்டுமென்று சொல்லித் தருவார். அதைக் கேட்டு புது முறையில் “காட்ச்” பிடிக்கப்போய் முன் பல் உடைந்தது. பிறகு திருமணம் ஆவதால் டாக்டரிடம் 15,000 ரூ. கொடுத்து பொய் பல் கட்டிக் கொண்டேன். சபாகரால் வந்த வினை.

நோய் வந்துவிட்டால், சபாகர் தான் “மெடிக்கல் ரெப்ரஸன்டேடிவ்!” (MR) கம்பெனி பெயர் சொல்லி நோய்க்கு உண்டான மருந்தை ஏதாவது MR கிட்டே ஓசி வாங்கி வந்து விடுவார். டாக்டர் கிட்டே போகும் போது இஞ்ஜெக்க்ஷன் பெயர் சொல்லி போட வைப்பார். நர்ஸ் வந்தால் மில்லி லிட்டர் அளவுச் சொல்லி போட வைப்பார். அதே நர்ஸ்ஸிடம் சிரிச்சு பேசி டையாபடிஸ் வந்திருக்கும் மாமிகளுக்கு வீட்டில் போய் இன்சுலின் போடத் தயார் படுத்துவார். உபகாரத்திற்குபிரதி உபகாரமாக சமயம் வந்த போது சமத்காரமாய் வீட்டு மாமாக்களை உதவி பண்ண வைத்து விடுவார்.

வெகு காலம் கழித்து சபாகரைப் பார்த்தேன். என்ன “சபாகர்” என்பதற்கு “டேய்! கால் மீ பிராப்பர்லி! இப்ப நான் ஒரு சபா செக்ரெட்டரி” என்றார். அவருக்கு வயது சுமார் 65 இருக்கும். ஆள் மாறி மெலிந்திருந்தார். வாயில் அதே காவிப் பற்கள். நடுத்தர வர்க்கக் குடியிருப்புக்களை விட்டு சபாகர் இப்போது வெள்ளை ஜிப்பா, சந்தனப் பொட்டுடன் உயர்தரக் குடியிருப்புக்களுக்குப் போய், “சூப்பர் கச்சேரிகள் மாமா, கிரேசி மோகன் டிராமா, லால்குடி கச்சேரி, க்ளீவ்லேண்டு சகோதரிகள் எல்லாரும் எங்க சபாக்கு 2006 பேசியிருக்கு. அவசியம் வந்துடணும் !” என்பார். பேச்சு வேறு ஆளுக்கேற்றாப் போல் மாற்றிக் கொள்வார். எங்களுடன் கோலி, கில்லி, பட்டம், சடுகுடு, கிரிக்கெட், மூன்று சீட்டு, பீர் என்று ஆடிவிட்டுப் பிள்ளையில்லாத அக் கிழம் துள்ளி விளையாடி மகிழ்ந்து, களைத்தாலும் காலம் கடந்து “சபாகராகவே” வாய்ச் சொல்லில் வீரராகவே இலவசமாக வாழ்க்கையைக் கழித்தார்.

பார்த்தால் பொறாமையாக இருக்கும் ! ஆகாயப் பந்தலிலே … ஊஞ்சல் கட்டி சோம்பேறியாக, ஊர் சுற்றியாக… மன்னிக்கவும் ! சுறு சுறுப்பாக அவரைப் போல வாழ வேண்டும் ! எல்லாவற்றையும் கொஞ்சம் தெரிந்து நிறையப் பேசணும் !

கற்றது கைமண் அளவு ! வாயளப்பது உலகளவு !

—-

kkvshyam@yahoo.com

Series Navigation

வெங்கட்ராம கிருஷ்ணகுமார்

வெங்கட்ராம கிருஷ்ணகுமார்