ஓட்டை சைக்கிள் !

This entry is part [part not set] of 26 in the series 20050923_Issue

வெங்கட்ராம கிருஷ்ணகுமார்


அம்மா எனக்கு கடைசியில் சைக்கிளை வாடகைக்கு எடுக்க அனுமதி கொடுத்தாள். பாண்டி கடை எங்கள் வீட்டெதிரில் வந்த முதல் எனக்கு சைக்கிளின் ஹேண்டில்பாரைப் பிடித்து மெட்ராசை (அப்போது சென்னை ஆகவில்லை) ஒரு கை பார்க்க மனது துடித்தது. குரங்கு போன்று முகம் படைத்து விடலையான எனக்குக் குரங்குப் பெடல் மாட்டும் தான் போடத்தெரியும். காலும், மற்ற உறுப்புக்களும் வளரும் விடலைப் பருவம். ஆனால் சூப்பராக விசுக் விசுக் கென்று பெடல் போட்டு ரோட்டில் அனைவரையும் சைக்கிளால் அலர வைப்பேன்.

பாண்டி ! பெயரைக் கேட்டாலே மதுரைக்காரர் போன்று இருந்தது. போய் பேசினால் ‘என்னாமா ? எப்டி கீறே ! ‘ என்று மெட்ராஸ் பாஷையில் கீறினான். ‘என்ன தம்பி, என்ன வேணூஊஊஊஊம் ! ‘ என்று எங்க ஊர்காரர் போன்று

பாசத்தோட இழுப்பார் என்று நினைத்தால் ‘கீசிப்புடுவேன் ‘ என்பது மாதிரி பேசினான் (மதுரையில் பேசினார் !). 1/2 மணிக்கு 30 காசு வச்சிகீறியா ? என்று

அல்பமாகப் பார்த்த பாண்டியிடம் ஒரு முழு புது ஐந்து ரூபாய் நோட்டு காண்பித்தேன். அவன் பார்தது என்னவோ, அழுக்கடைந்த நோட்டுக்களையோ,

அழுக்கு குஷ்டரோகக் பித்தளைக் காசுகள் தாம் ! என்னை ரிசர்வ் கவர்னர் போன்று மரியாதையுடன், எடுத்துக்கப்பா ! என்றான்.

ஒரு நல்ல புது சைக்கிளாக எடுத்துக் கொண்டு, எதிர்வீட்டு பெண் மொட்டை மாடி மீதிருந்து பார்க்க (என்னை எங்கே பார்த்திருப்பாள், இன்னும் குரங்கு பருவத்தை

விட்டு மீளவில்லையே நான் ?) வேகம் கூட்டி விரையிலானேன். மிதிக்க மிதிக்க புது சைக்கிள் நன்கு உய்ந்து திருவல்லிக்கேணி சந்துகளைக் கடக்கலாயிற்று,

சந்துக்களைத் திருவல்லிக்கேணியில் மூத்திரச் சந்து, பீச் சந்து என்று பலவகை ! எல்லாவற்றிலும் அருகே பள்ளி, கோவில்கள் இருந்தாலும், காலைக்

கடன் களைக் கழிக்க குழந்தைகளும், ஆண்களும், பெண்களும் போட்டி போட்டு உட்கார்ந்து விடுவார்கள். ப்ளீச் பவுடர் போட்டிருந்தாலும், அவற்றை மீறி

சைக்கிளை நாற்றம் தாக்கும். அதைத் தாங்காமல் சைக்கிளை விட்டோம் அவ்வளவு தான் ! பொத் தென்று முனைகளில் விழுந்து ‘துடைத்துக் கொண்டு ‘ போக வேண்டியது தான் ! ஆனாலும் சறுக்கி நெளிந்து, வளைந்து சந்துகளில் புகுந்து புறப்படும் எத்தனாக இருந்தேன்.

பெடல் என்னமோ, குரங்காக இருந்தாலும், பள்ளி செல்லும் சிறுமிகள் ( 8 முதல் 18 வரை) அருகே வேகமாகச் செல்லுதல் புத்தகப் பைகளை இடித்தல் போன்ற மனித சேஷ்டைகளைப் புரிந்தேன் என்று சொல்ல வேண்டும். அடிகள் பல் பதிலுக்கு வாங்கியிருந்தேன். திருவல்லிக்கேணியில் பல விட்டுப் பெண்கள் மதியம் 2-3 மணிக்கு நடு ரோட்டில் ‘சுடச் சுட ‘ மாட்டின் கீழ் கறந்த பால் வாங்கி வீடு செல்வர். ஆவின் பாலும் அந்தச் சமயம் வரும். சமயம் பார்த்து எனது சைக்கிள் பால் சொம்பினை இடித்து விடும். மாமிகளுக்கு உதவ எங்கிருந்தோ ‘கோபாலர்கள் ‘ (நம்ம ஊரு மாட்டுக்காரன் தான்) வந்து தங்களது புஜ பராக்கிரமங்களைக் காண்பிப்பார்கள். அப்போது ஆடிய முன் பல்லுக்குப் பொய் பல் 20 வருடம் கழித்து கட்டினேன்.

சைக்கிளை மிதி மிதியென்று மிதித்து, வீட்டுக்கு அம்மாவிற்கு மாட்னி ஷோக்களுக்கு டிக்கெட் எடுத்துக் கொடுப்பேன். அப்ப தான் சைக்கிள் வாடகை, பிஸ்கட் தின்னக் காசு கிடைக்கும். அப்படி ஒரு ரஜினி படத்திற்குப் போய் கால் கடுத்து வியர்வை வழிய வண்டி ஓட்டி, மவுண்ட் ரோடு அலங்கார் தியேட்டரில் போய் நின்றால் ஹவுஸ்புல் போர்டு என்னைப் பார்த்து சிரித்தது. ‘பேக் ‘ போன்று பார்த்துக் கொண்டிருந்ததால் ஒரு சாமார்த்தியமான ஏமாற்று கலைஞன், என்னிடமிருந்து பணம் வாங்கிக் கொண்டு பக்கத்து சந்தில் புகுந்தான். அவன் என்னிடம் ‘பாக் ‘ ஆபிஸ் (Back Office) அங்கிருப்பதாகக் கூறியதால், அலங்கார் சினிமா டிக்கெட் கிடைக்குமென்று நின்று கொண்டிருந்தேன். 1 மணி நேரம் கழித்து அவன் புகுந்த சந்டு வழியே பார்த்தால் மொத்த மவுண்ட் ரோடும், வாகனங்களோடு காட்சியளித்தது. சைக்கிள் வாடகை பணமும் போயிற்று. வீட்டிற்கு அருகே வரும்போது வேண்டுமென்றே காற்றைப் பிடுங்கி விட்டு, பொய்யாக அழுது கொண்டு வீட்டில் சின்னதாகத் திட்டு வாங்கி, தப்பித்தேன். இப்படி எனக்கு நடிக்க கற்று கொடுத்தது அந்த வாடகைச் சைக்கிள்.

பாண்டி கடைச் சைக்கிளில் ஆயில் அதிகமாக இருந்தால் கறுப்பு மை போன்று ஆயில் எல்லா ஓட்டைகளிலும் பொங்கி வழியும். அவற்றின் கரை பட்டு விட்டால், மையினைத் தலையில் தடவிக் கொள்ள வேண்டும் என்று பாண்டி தான் கற்றுக் கொடுத்தான். கலவியின் போது, பெண்கள் மை கையில் பற்றிக் கொண்டால் தலையில் தடவும் பழக்கம் அப்போது வந்தது தான். என் மகள் கூட இப்போதெல்லாம் கையில் மை/மற்றும் இங்க் கிடைத்தால் சுவரில் சின்ன பேய்கள், ஆவிகள் ரூபங்களாக வரைவாள். தன் தலையிலும் தடவிக் கொள்வாள். பாண்டி கற்றுக் கொடுத்தது எங்கு போகிறது என்று பாருங்கள்.

இப்போதெல்லாம் ஸ்டைலாக ஒல்லியாக இருக்கும் BSA சைக்கிள்களை பார்க்கும்போது அட்லாஸ், ஹெர்க்குலிஸின் இரும்பு சைக்கிள்கள் கன்வில் வந்து ஞாபகம் படுத்துகின்றது. இளைஞர்கள் டியூஷன் படிக்கும் பெண்களிடம் சாய்ந்து பேசும் அந்தக் கவிதையினைப் பார்த்தால், உலலகில் அடுத்த நூறு ஆண்டுகளுக்கு மக்கள் தொகை பெருக சைக்கிள்கள் பெரும் பங்களிப்படை உணர முடியும். நானும் கொஞ்சம் வயதிற்கு வந்தவுடன் (நான் கூட), அம்மா வாடகை கொடுத்து கட்டுப் படி ஆகவில்லை என்று சொந்த சைக்கிள் வாங்கிக் கொடுத்தாள். சென்னையில் தம்பு செட்டித் தெருவிலிருந்து (பாரீஸ் கார்னர்) முதன் முறையாக சும்மா ‘சல் ‘ லுன்னு பீச் வழியாகத் திருவல்லிக்கேணி வந்தது பசுமரத்தாணி போல (வர வழியில் பசுமரம் ஒன்றும் இல்லை! நீலக் கடல் இருந்ததாக ஞாபகம் !) மனதில் பதிந்து இருந்தது. இப்போது அமெரிக்காவில் 1 காலன் மூன்று டாலருக்குப் பெட்ரோல் போடும்போது பாழாப் போற சைக்கிள் ஞாபகம் வருகின்றது.

சைக்கிள் வாங்கின புதிதில் நதியா என்ற நடிகை பிடிக்குமாதலால் அதற்கு நதியா என்று பெயர் சூட்டினேன். சைக்கிள் துருப்பிடிப்பதற்குள், நதியா அம்மாவிகிட வேறொரு நடிகருக்கு படத்திலும் அம்மாவாக நடித்தாள். பழசானாலும் என் சைக்கிளுக்கு ஒரு தனி இது தான், மனதில்.

சென்னை எக்மோரில் ரயில் பிடித்து ஊரில் வெளியே தம்பாக்கம் போய் படித்து விட்டு இரவு வீஉ திரும்பும்போது எனக்காக பத்து மணி இரவில் காத்துக்கொண்டிருக்கும் என் சைக்கிளை உதைத்து பாசத்துடன் வீடு பறந்திருக்கின்றேன். காசு செலவில்லாமல் டைனமோ மூலமாக முன் விளக்கெரிய இஅர்வச் சாலைகளில் காற்றோடப் பறப்பேன். அனைத்து சினிமா பட்டுக்களையும் கற்றுக் கொண்டது அப்போது தான். சைக்கிளின் பெல் மணியோசை கேட்டு அம்மா எனக்கு இரவுச் சாப்பாடு எடுத்து வைப்பாள்.

சைனாவில், ஹாலந்து, இந்தியா போன்ற நாடுகளில் பெரும்பாலும் மக்கள் விரும்புவது கோபால் பற்பொடி ….இல்லை சைக்கிள் ! (மாற்றி எழுதி விட்டேன்! மன்னிக்கவும் !). சைக்கிளுக்குத் தனி பாதையாம் சில் நாடுகளில். இங்கு குடிகாரர்களுக்கு சைக்கிளில் ஆடி வரும்போது, கை உதற ஒருத் தனிப் பாதையே ஏற்படுத்திக் கொள்வர். போலீஸ் ‘குடிபோதையில் சைக்கிள் ஓட்டுபவர்களைப் பிடிக்கமாட்டார்கள் என்ற நம்பிக்கை தான். சைக்கிளில் கேரியர் இல்லாவிட்டால் அரிசி மூட்டை, பேப்பர் மூட்டை, பழைய பாத்திரம், துவைக்கும் துணிமூட்டை, பால் கேன்கள், மற்றும் அண்ணாமலை படத்தில் வரும் ‘குஷ்பூ போன்ற ஆண்டி ‘ போன்றவற்றை உட்கார வைக்க முடியாது. திருமணம் ஆன் புதிதில் மனைவியை முன்னால் ஹேண்டில் பாரில் உட்கார முயற்சி செய்து படு தோல்வியடைந்து, அவளைக் கீழே போட்டுத் தள்ளி, மனைவி முதன் முறையாகக் என்னை சொற்களால் காய்ச்சினாள். எதற்கும் லாயக்கில்லையா ? என்று கோபம் தாக்க சைக்கிளை விட்டுத் தள்ளி ஒரு மோட்டார் பைக் வாங்கினேன். ஒரு கேரியர் வாங்கியிருந்தால் விஷயம் முடிந்திருக்கும். தவணை முறையில் மாதம் 999 ரூ செலவில் மோட்டார் பைக் வாங்க நேர்ந்தது. என் இரண்டு கால்களுக்கு தினவு கொடுத்த, என் ஆடு சதைகளுக்குத் தோள் கொடுத்த என் மன்றத் தோழி நதியா கழகக் கண்மணியாய் பதவியில்லாமல், அப்போது சொங்கிப் போய்விட்டிருந்தாள்.

மோட்டார்பைக் ஓட்டி, அது போதாமல் இரண்டு குழந்தைகள், இரண்டு உடம்பு அளவில் ஒரு மனைவிக்காக( நான் சுமார் ஒன்றரை உடம்பாக்கும் !) கார் வாங்கினேன். இப்போது மோட்டார்பைக் என் சைக்கிளருகே மேலும் ஒரு ஒண்டிக் குடித்தனத்தில் விறைத்துக் கொண்டு புழுதியடைய நின்று கொண்டிருந்தது. விறைத்த ஆணாகப் பட்ட அந்த மோட்டார்பைக் அருகே சைக்கிள் நாணத்துடன் தலைத் திருப்பிக் கொண்டிருந்தது. ஒரு காலத்தில் கிரிக்கெட் விளையாடும் போது நண்பர்களுடன் சண்டை போட்டு அருகே இருந்த அனைத்து சைக்கிள்களையும் ஒரே கையால் தள்ளி விட்டிருக்கேனாக்கும். கார்த்த வீர்யார்சுனன் ஒரே கையால் ஓடும் நதியின் நீரைத் தடுத்த மாதிரி இதை நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படித் தள்ளப்பட்ட போது விழாமல் பத்தினியாய் இருந்த சைக்கிள் என் நதியா ! எவ்வளவு உதை கொடுத்திருப்பேன். யில் போடாமல் சைக்கிள் செயினை எப்படியெல்லாம் பாடு படுத்தியிருப்பேன் ?. துணி போட்டுத் துடைக்காமல், பேற்றி பாதுகாக்காமல் உதாசனப்படுத்தியிருக்கின்றேன். தெருப் பெண்களை அவர்கள் வீட்டிற்குத் தெரியாமல் சைக்கிளின் முன்னால் உட்காரவைத்து ஹேண்டில் பாரினைத் துவம்சம் செய்திருக்கின்றேன். எவ்வளவோ தியேட்டர்களின் வாசலில் நூறோட நூற்றியொன்றாக சைக்கிளை நிறுத்தி அவமானப்படுத்தியிருக்கின்றேன். கண்ட இடத்தில் நிறுத்தி சைக்கிளின் கால்களில் நாய்கள் மூத்திரம் பெய்யச் செய்து அவமானப் படுத்தியிருக்கின்றேன். கால் பெடலில் கால் மிதியடி போனாலும், இருக்கும் நீண்டத் தண்டினை மட்டும் “லொட்” “லொட்” டென்று அடித்து, உடைத்து சைக்கிளை துவம்சம் செய்திருக்கிறேன்.

அந்தப் பழையச் சைக்கிளின் பக்கம் திண்ணையில் எங்க தாத்தா உட்கார்ந்து கொண்டு ஷேவ் செய்து கொள்வார். பேப்பர் படிப்பார். பிறகு அதனருகே செத்தும் போனார். ண்டுகள் பல தள்ள சிலந்தி பல கூடு கட்டியது. டயர்கள் பஞ்சராக காற்றிழந்து 45 வயது ஆண் போன்று இருந்தது. நதியா என்றழைத்த அந்தச் சைக்கிளின் சீட் கவர் நைந்து போய் கிழிந்து விட்டது. மெனோபாஸ் கோவத்தில் என்னிடம் பேசாமல் சுவற்றில் ஹேண்டில் பார் மூலமாகக் கோடுகள் போட்டு உயிரை விட்டுக் கொண்டிருந்தது. குழந்தைகள் விளையாடும் போது தொம்மென்று ஒரு தடைவை சைக்கிளை விழச் செய்ய விட்டுப் பிறகு மீண்டும் அதைச் சுவற்றில் வீட்டில் சாய்த்து விடுவர். இப்போதும் என் பேரக் குழந்தைகள் என் மீது விளையாடி விட்டு என்னை “தொம்” மென்று போட்டு விட்டு அப்பா, அம்மாக்களுடன் விமானம் பிடித்து அமெரிக்கா போய்விடுகின்றன. நான் சுவற்றில் கோடுகள் கிழித்துக் என் சைக்கிளைப் போன்றே சுவற்றில் சாய்ந்து கொண்டிருக்கின்றேன் . . .

இப்படியே எல்லாரைப் போன்று முடிந்தால் மண்ணாக வேண்டியது தான். ஜெமினி கணேஷ் கன்வில் வந்து உற்சாகப் படுத்த, சன் டிவியில் சில பாடல்களில் பார்த்து ரசித்த உற்சாகப் பெண் ஞாபகம் வந்தது. புதுசா அசின் என்ற நடிகையாமே ?. பார்த்தால் உற்சாகம் வருகுது. ஒரு ஸ்போர்ட்ஸ் பைக் (சைக்கிள் என்று சொன்னால் ஓல்ட் ஃபேஷன்.) வாங்கிக் கொண்டு அதில் (அசின் என்று பெயர் வைக்கலாமா ?) ஒரு ரவுண்ட் போய் வரணும் !

—-

Series Navigation

வெங்கட்ராம கிருஷ்ணகுமார்

வெங்கட்ராம கிருஷ்ணகுமார்