ஆட்டோகிராஃப் ‘காவேரி ஓரம் கவி சொன்ன காதல் கதை சொல்லி நான் பாடவா ‘

This entry is part [part not set] of 41 in the series 20040729_Issue

சித்ரா ரமேஷ்


நடுவில் கொஞ்ச நாள் கிராமத்து மின்னலாய் இருந்ததைப் பற்றி சொல்லவில்லையே! டிபிகல் தஞ்சாவூர் ஜில்லா கிராமம். பாடல் பெற்ற

ஸ்தலம். அருமையான சிவன் கோவில். திருமறைப் பாடல்களில், திருவிளையாடல் புராணத்தில் இடம் பெற்ற ஊர். வரகுணப் பாண்டியனுக்கு சிவலோகக் காட்சி தந்தது இங்குதான் என்று நினைக்கிறேன். ரொம்ப சின்னப் பெண்ணாக இருந்ததால் விஜயசாரதி போல் நிறைய தகவல்கள் அப்போது தெரியாது. (அதாங்க வாங்க கப்பலைப் பார்ப்போம் என்று இளங்ஜோடிகளைப் பார்ப்பாரே) ஒன்றுக்கு இரண்டு ஆறுகள் காவேரி, வீரசோழன்.சரி! வீரசோழன் கிளை ஆறு. அப்போ இரண்டு ஆறு என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இரண்டு வாய்க்கால்கள். பெரிய வாய்க்கால், சின்ன வாய்க்கால். பண்ணையார் கூட இரண்டு. பெரிய பண்ணை, சின்ன பண்ணை!!! இல்லை பெரிய பட்டாமணியம், சின்ன பட்டாமணியம். நிஜமாகவே காவேரியில் தண்ணீர் சுழித்துக் கொண்டு ஓடும். கடைவீதி, அக்ரஹாரம்,கோலம் சுவாமி புறப்பாடு,தேர், தோட்டம், வயல், தோட்டம், குருவிகள் என்று தி ஜானகிராமன் கதையில் வர்ணிப்பதை விட இன்னும் கூட அழகாக இருக்கும். தி ஜா கதையில் வரும் அழகான மாமிகளைக் கூட பார்க்கலாம். ஆனால் அந்த அளவுக்கு ‘உயர்ந்த மனிதர்களை ‘ சந்தித்ததில்லை. காவேரித் தண்ணீருக்கே உரிய குசும்புத்தனம், நையாண்டித்தனம்,வம்பு,பொல்லாப்பு எல்லாவற்றோடும் கலையுணர்வு! பஜனை மடத்தில் கச்சேரிகள், கொலு வைக்கும் அழகு, சின்ன கோலம் போட்டாக் கூட திருத்தமாய் போடும் லாகவம் தஞ்சாவூர் சமையல் கை மணம் வத்தக் குழம்பு, கருவடாம்,தொகையல் …. இத்தனை இருந்தாலும் எனக்கு பிடித்த இடம் ரயில்வே ஸ்டேஷன்தான். ஆல மரங்கள் நிரைந்த சாலையில் ரொம்ப தூரம் நடந்து போய் ஊர் கோடியில் இருக்கும் ரயிலடிக்குப் போகலாம்.சாயங்காலம் ஆறு மணி பாசஞ்சர் வருவதற்கு காத்துக் கொண்டிருப்பேன். (எந்த ஊருக்குப் போகும் ?). ரயில் ஓடிக் கொண்டிருக்கும் போதே ரயிலிலிருந்து ஒருவர் பிரமாண்ட சைஸ் மரச்சாவி ? மூங்கில்சாவியை தூக்கிப் போட இங்கே ஸ்டேஷனில் நிற்கும் ஒரு தன் கையில் இருக்கும் சாவியை அவர் கையில் மாட்டுவதைப் பார்க்கத்தான்! இதை ஏன் ரயில் நின்ற பிறகு கொடுக்கக் கூடாது ? சில எக்ஸ்பிரஸ் ரயில் நிற்காமல் போகும் போது இந்த சாவி மாறும் விவகாரம் இன்னும் திரில்லிங்கா இருக்கும். ரயில் நின்ற பிறகு எஞ்சினிலிருந்து வரும் புகையை பிரமித்து பார்த்து விட்டு மனிதப் பிறவி எடுத்ததே இந்தக் காட்சியை பார்க்கத்தான் என்ற திருப்தியில் வீட்டுக்குத் திரும்பும் போது தாத்தாவிடம் இதைப் பற்றி பேசியே அவர் கழுத்தில் ரத்தம் வந்து விடும். பெரியவளானதும் ரயில் டிரைவராகி இந்த மாதிரி என்ஜின் கதவோரமா நின்னு சாவியைத் தூக்கி எறிய வேண்டும் என்று தீர்மானித்தேன். அப்புறம் பஸ் கண்டக்டராக வேண்டும் என்ற ஐடியாவில் அம்மாவின் ஹாண்ட்பேக்கை மாட்டிக் கொண்டு ‘டிக்கெட், டிக்கெட் ‘ இன்னும் பெண் பஸ் கண்டக்டர் இல்லை போலிருக்கு! ஆஹா! தமிழ் நாட்டின் முதல் பஸ் கண்டக்டர்! அப்புறம் லைப்ரரியில் லைப்ரேரியனாக, மர்மக் கதை எழுத்தாளராக, சினிமா டைரக்டர், பத்திரிகை ரிப்போர்ட்டர், கவிதாயினி, புரட்சி வீராங்கனை என்று என்னென்னவோ கற்பனை! இப்போது ?….

ஒரு சோழ ராஜாவின் பாழடைந்த வசந்த மாளிகையின் இடிபாடுகளில் தப்பிய ஒரு ஹாலில் ஒன்றாவது, இரண்டாவது வகுப்புகள். மூன்றாவதிலிருந்து ஆறாவது வரை ஒரு பழங்கால வீடை ஸ்கூலாக மாற்றியிருந்தார்கள். அந்த ஹாலில் திருமலை நாயக்கர் மஹால் போல் பெரிய பெரிய தூண்கள். ஒரு வேளை நான் சின்னப் பெண்ணாக இருந்ததால் எல்லாமே பிரமாண்டமாய்த் தெரிந்ததோ ? என் தாத்தா வீட்டு ஹாலை விட பெரியது. ஹாலுக்கு நடுவில் பாசி படிந்த முற்றம். தினமும் ஒரு குழந்தையாவது அங்கே சறுக்கி விழுந்து அடி பட்டுக் கொள்ளும். அதற்காக அந்த பாசி படர்ந்த முற்றத்தை யாரும் மாற்றி விடவில்லை. குழந்தைகள் அவ்வளவு விலையுயர்ந்த ரத்தினங்களாக யாரும் நினைக்கவில்லை. காலையில் கொஞ்சூண்டு பருப்பு சாதம், உருளைக் கிழங்கு கறி(தினமும்)! மத்யானம் தயிர் சாதம் நார்த்தங்காய் ஊறுகாய்(உவ்வே!) அந்த பெரிய அரண்மனை இடிபாடுகளில் நடந்து பின் பக்கம் போனால் ஒரு வாழைக்கொல்லை, மகிழம்பூ மரங்கள் இருக்கும். பக்கத்திலேயே குட்டியாய் குளம். அதன் பக்கத்திலேயே உட்கார்ந்து சாப்பிட்டு விட்டு டிபன் பாக்ஸை அந்த குளத்திலேயே அலம்பி முகமெல்லாம் துடைத்துக் கொண்டு அவசர அவசரமாக

விளையாடுவதற்கு ரெடியாகி விடுவோம். நார்த்தங்காய் வைத்து ஊறிய இடத்தை மட்டும் தயிர் சாதத்தில் சாப்பிட்டு விட்டு உப்பும் ஊறுகாய் சாறும் ஊறி அந்த இடம் மட்டும் செம டேஸ்ட்டா இருக்கும். மிச்ச சாதத்தை ஜீவ காருண்ய நோக்கத்தில் காக்காய், குருவி, நாய் எல்லாவற்றிற்கும் வினியோகம் செய்து விடுவேன். சில குழந்தைகள் வெறும் சாதத்தை சாப்பிடும். தண்ணீர் விட்ட பழையது. அது என்னவென்று புரிந்ததில்லை. அந்த தூக்குச் சட்டியைத் திறந்தாலே புளிச்ச வாடை அடிக்கும். அதற்கு தொட்டுக் கொள்ள பழுப்பாக என்னவோ! பாதிப்பேர் மதிய உணவு சாப்பிட கோவிலுக்குப் போய்விடுவார்கள். காமாராஜரின் மதிய உணவுத் திட்டம் அப்போ இருந்தது என்று நினைக்கிறேன். அடிப்படை சுத்தம், சுகாதாரம்

பற்றியெல்லாம் யாரும் கவலைப்பட்ட மாதிரியே இருக்காது. பெண் குழந்தைகள் தலையில் பேன், சிரங்கு என்று பாதி நேரம் மொட்டைத்தலையாக

இருக்கும். காதில் சீழ் வடியும். கை கால்களில் சொறி, சிரங்கு. ஸ்கூலுக்குத் தினமும் வரவேண்டும் என்று கூட தெரியாது. வாரம் ரெண்டு நாள்என் பக்கதில் உட்கார்ந்திருந்த பெண் வரமாட்டாள். ஏன் ஸ்கூலுக்கு வரவில்லையென்று கேட்டால் ‘எங்கம்மா தோச்சுப் போட்ட பாவாடை காயலை ‘. பாதிப்பேர் அணிந்திருந்த உடைகள் அழுக்காய் முடைநாற்றத்தோடு ஈரப் பசையோடு இருக்கும். தலையில் எக்கச்சக்கமாய் வேப்பெண்ணெய் தடவி அந்த எண்ணெய் வேறு கன்னத்தில் நெற்றியில் படிந்திருக்கும். சுத்தமா இருப்பதற்கு ஒரு சவுக்காரக் கட்டி வாங்க வேண்டாமா ? சில்லறையாகக் கூட பணப் புழக்கம் எல்லோரிடமும் இருக்காது. நிறைய எழ்மையை என் பள்ளிக்கூடத்தில் மட்டுமில்லை அக்ரஹாரத்திலும் உணர முடிந்தது. என் தாத்தா வீட்டுக்குப் பக்கத்து வீடு ஐந்து குடித்தனங்கள் குடியிருந்த நீளமான வீடு. முன் போர்ஷன் ஒரு வாத்தியார் வீடு. அம்மா இல்லாத இரண்டு பெண் குழந்தைகள். அவர் ஏதோ சமைத்து வைத்து விடுவார். இந்த இரண்டு பெண்களும் வயதுக்கு

மீறிய பொறுப்புடன் அப்பாவுக்கு உதவியாய் கறிகாய் நறுக்கி, வீட்டைப் பெருக்கி ஒழித்து எச்சலிட்டு என்னென்னவோ வேலைகள் செய்யும். பாவம் தலை மட்டும் பின்னிக் கொள்ளத்தெரியாது. பின் போர்ஷன் மாமியிடம் போய் நிற்பார்கள். அந்த மாமி ‘நான் மடிடி ‘ என்று நிர்தாட்சண்யமாகசொல்லிவிடுவாள். மனிதர்களை நெருங்க விடாமல் இது என்ன சம்பிரதாயம் ? தொடுவுணர்ச்சி எவ்வளவு அற்புதமான விஷயம்! காதல், காமம்,பாசம், நேசம், வெறுப்பு, வேஷம் இதையெல்லாம் ஆயிரம் வார்த்தைகள் சொல்லி வர்ணிப்பதைவிட ஒரு தொடுகையில் உணர்த்தி விடலாமே!

‘எதுக்குடி இப்படி மேல படற மாதிரி வழியிலே நின்னுண்டு ‘ என்று அங்கே பாதி மனிதர்கள் விலகி விலகிப் போவார்கள். ‘தீக்குள் விரலை வைத்தால்

உன்னைத் தீண்டும் இன்பம் தோன்றுதடா ‘ என்று பாரதி எழுதியது இந்த உணர்ச்சியை உணர்த்தத்தானா ? கொஞ்சம் வளர்ந்து விட்டால் அப்பா கூட பெண் குழந்தைகளை தொடமாட்டார் என்பதும் தமிழர் பண்பாடுதானே! அப்புறம் என்ன ? அவங்க அப்பா கண்டு பிடிச்ச ஒரே தீர்வு மொட்டையடித்து விடுவதுதான்!கடைசி போர்ஷனில் எக்கச்சக்கக் குழந்தைகள் கொண்ட ஒரு ஒல்லிக் குடும்பம்! ஏன் ஒல்லி ? உணவுப் பற்றாக்குறையால்தான்! தயிர்காரி கூடையில் தயிர் எடுத்துக் கொண்டு வாடிக்கையாய் அவர்கள் வீட்டுக்கு வருவாள். ஒரு கொட்டாங்கச்சியைத் தேய்த்து தேய்த்து மழமழவென்று ஆக்கி வைத்திருப்பாள். அது ஒரு அளவு! ஒரு கொட்டாங்கச்சி அளவு தயிர் வாங்கி மேலே கொசுறாக அரை கொட்டாங்கச்சி மோர் வாங்கி அதை இன்னும் ரெண்டு லிட்டர் தண்ணீர் விட்டு கரைத்து மோராக்கி சாதம் சாப்பிடுவார்கள். தொட்டுக் கொள்ள மட்டும் சீசனுக்கு ஏற்றாற் போல் மாங்காய், நெல்லிக்காய், எலுமிச்சங்காய், கிடாரங்காய் எல்லாமே வெறும் உப்பு போட்டது.இதுதான் முக்கால் வாசி நாள் அவர்கள் சாப்பாடு. அந்த தயிர்க்காரி கொடுக்கும் தயிர் ரொம்ப வாசனையாய் இருக்கும். அதனால் அந்த மோர் உபசாரம் எனக்கும் கிடைக்கும். அவர்கள் வீட்டுப் பெண் ஒருத்தி என் வயது. எந்த வறுமையிலும் தங்களை செம்மையாகக் காட்டிக் கொள்வாள். ‘இந்த வாட்டி தீபாவளிக்கு எங்க அப்பா வைர ஊசி பட்டுப் பாவாடை வாங்கித் தரப்போறார். நான் சேப்புக் கலர் கேட்டிருக்கேன் ‘ என்று சொல்லிக் கொள்வாள். உடனே நானும் போய் ‘ராஜிக்கு சேப்பு கலர் வைர ஊசி பாவாடை வாங்கப் போறா. எனக்கும் அதே தான் வேண்டும் ‘ என்று சொல்லிவிடுவேன். பாட்டி அதற்கு சிரிப்பாள்.

ஆனா நிஜமாகவே அங்கு இருந்த மனிதர்கள் என்ன செய்து பணம் சம்பாதித்தார்கள் என்பது புரியவில்லை. எல்லோரும் வீட்டில்தான் இருப்பார்கள். சிலசமயம் காலையிலேயே குழம்பு,ரசம், கூட்டு, தயிர் என்று முழுச்சாப்பாடு சாப்பிட்டு விட்டு வெள்ளை வேட்டி சட்டை போட்டுக் கொண்டு வாயில் வெற்றிலையை குதப்பிக் கொண்டு ‘கும்மாணம் ‘ போய்விட்டு வருவார்கள். கிளம்பும்போதே ‘ராத்திரி பலகாரத்துக்கு வந்துடுவேன் ‘. எல்லாருக்கும் சொந்த வீடு, கொஞ்சம் நிலம் (அதென்ன நீச்சு) இருந்தது என்று நினைக்கிறேன். நான் கும்மாணத்துக்குப் போறது சினிமா பார்க்க மட்டும் தான்! அதனால் எல்லோரும் சினிமா பார்ப்பதற்குத்தான் போகிறார்கள் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். பவர்லைட் பஸ் ஸ்டாப்பில்

இறங்கி ஒரு குளம் வரும் அது வழியாகப் போனால் ஜுபிடர் டாக்கீஸ் வரும். ராஜா, டயமண்ட்,விஜயலட்சுமி/நூர் மஹால் தியேட்டருக்கெல்லாம் தாத்தா போகமாட்டார். இது ஒண்ணுதான் டாசண்ட் தியேட்டர்ன்னு அவருக்கு அபிப்பராயம். இதில் பார்த்த படங்கள்! வேறேன்ன இருக்க முடியும் ? தில்லானா மோகனாம்பாள், சிவந்த மண், எங்க மாமா! இந்த ஆர்டர் சரியில்லையோ! கால வித்தியாசம் இருக்கலாம். தியேட்டரில் கண்டதை வாங்கி சாப்பிடக் கூடாது. வீட்டிலிருந்தே கடலை உருண்டை எடுத்துக் கொண்டு போகவேண்டும். என் அப்பா அம்மா வந்தால் கொஞ்சம் மாற்றம்.பாப்பின்ஸ் மட்டும் வாங்கித் தருவார்கள். அது கை படாமல் ராப்பரில் இருக்குமே அதனால் இதற்கு மட்டும் அனுமதி!

ராத்திரியானா ஊரே இருட்டிப் போய்விடும். நிறைய பேர் வீட்டில் மின்வசதி கிடையாது. மின்வசதி இருந்தவர்கள் வீட்டில் மட்டும் என்ன ? சாயங்காலம் ஐந்து மணிக்குள் டியூப் லைட் போட்டா எரியும். அப்புறம் போட்டா அது சரியான டியூப் லைட்தான்!மெயின் கடைத்தெருவில் மட்டும் தெரு விளக்குகள் இருக்கும். லோ வொல்ட்டேஜ்ஜினால் நூறு வாட்ஸ் பல்ப் கூட பத்து வாட்ஸ் பல்ப் மாதிரி எரிஞ்சு ஊரே அழுது வடியும். இதுக்கெல்லாம் ஈடு கட்டற மாதிரி சுவாமி பெயர் ஜோதி மஹாலிங்கம். நிறைய விளக்குகளோடு பிரகாசமாக மகாலிங்கசுவாமி. சுவாமி சன்னதிக்குப் போய்ட்டு அதே வழியில் திரும்பி வரக்கூடாது. சோழ மன்னனை பிரம்மஹத்தி பிடிக்கத் துரத்திக் கொண்டே வந்தது. சுவாமி தரிசனம் பண்ண

உள்ளேப் போன ராஜா திரும்பி வருவார் என்று வெளியில் காத்துக் கொண்டிருக்க ராஜா நைசா வந்த வழியில் திரும்பி வராமல் குறுக்கு வழியில் அம்மன் சன்னதிக்குப் போய் பிரஹத்சுந்தர குஜாம்பிகையை தரிசனம் செய்து விட்டு ‘எஸ்கேப் ‘ ஆகி விட பிரம்மஹத்தி மட்டும் இன்னும் அங்கேயே காத்துக் கொண்டிருக்கிறது. அப்பாடா! இதுதான் ஸ்தல புராணம். அதனால் சுவாமி தரிசனம் செய்து விட்டு வந்த வழியே திரும்பி வந்தால் பிரம்மஹத்தி பிடித்துக் கொண்டு விடும் என்று அதே ஷார்ட்கட்டில் அம்மன் சன்னதிக்குப் போக வேண்டும். சோழ ராஜ்ஜியத்தில் வரகுணப் பாண்டியர் எங்கே வந்தார் ? நல்லெண்ண நோக்கத்தில் வந்திருப்பார் போல இருக்கு. அப்போது சிவலோகக் காட்சி கிடைத்ததா ? சுவாமி சன்னதிக்குப் போகிற வழியில் ஒரு மூலையில் படிக்கட்டுகள் ஏறிப் பார்த்தால் தலையில் கையை வைத்துக் கொண்டு பிரம்மஹத்தி உட்கார்ந்திருப்பதைப் பார்க்கலாம். வெளிப் பிரகாரத்தில் இருக்கும் ‘சிங்கக் கிணறு ‘. சிங்கத்தின் வாயில் நுழைந்தால் கிணற்றில் இறங்கப் படிக்கட்டுகள். பிரகாரத்தில் இருக்கும் ஒரு சிறு துளையில் காது கொடுத்துக் கேட்டால் ஆஹா! தேவலோகத்துச் சத்தங்களைக் கேட்கலாம். தேவர்கள் வேதம் ஓதும் சத்தம், தேவலோக மங்கையரின் ஜல்ஜல் சலங்கையொலி. உண்மையாகவே எதோ எதிரொலி மாதிரி கேட்கும். அது

தேவலோகத்துச் சத்தமா ? கடைத்தெருவிலிருந்து வந்த சத்தமா ? சுவாமியை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வந்த மூகாம்பாள் ஏற்கெனவே பிரஹத்சுந்தர குஜாம்பிகையைத் திருமணம் செய்து கொண்டு புது மாப்பிள்ளை ஆகி விட்ட மஹாலிங்க சுவாமியை நினைத்து இன்னும் தவம் செய்து கொண்டிருக்கிறாள்.

ஆ! மனிதர்கள் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல! கடவுள் காதல்! இந்த அம்மன் சக்தி வாய்ந்த அம்மன் என்று சேது ஸ்டைலில் கை கால்களில் சங்கிலியோடு

மன நலம் குன்றியவர்கள் அங்கேயே தங்கியிருப்பார்கள். ஒரு தெலுங்குப் பெண் கை கால்களில் சங்கிலியோடு அவள் அம்மா ‘ம் ஜோதி மஹாலிங்கம் செப்பு! ஜோதி மஹாலிங்கம்! ‘ என்று சொல்ல அந்தப் பெண்ணும் அழுது கொண்டே ‘ம்! செப்பு ஜோதி மஹாலிங்கம்! ஜோதி மஹாலிங்கம்! ‘ என்று சொல்லிக் கொண்டே சிரித்தது. இவர்களையெல்லாம் பார்த்துக் கொள்வதற்கு கையில் குச்சியுடன் ஒருவர்.

யாராவது உண்மையாகவே குணமடைந்து திரும்பியிருக்கிறார்களா ? கிளாஸ் எடுக்க வர டாச்சர் கையில் புத்தகம் இல்லாவிட்டாலும் கண்டிப்பாகக் குச்சியுடன்தான் வருவார். இந்த மாதிரி வன்முறையான வைத்தியத்துக்கு முதலில் மருந்து கண்டு பிடிக்க வேண்டும். அந்த பைத்தியங்களைப் பார்த்து ஒரு நாள் கூட பயந்துப் போனதாக ஞாபகம் இல்லை. நார்மல் என்றும் ரொம்ப மேதை என்றும் சொல்லிகொள்ளும் மனிதர்களைப் பார்த்துதான் பயந்து போயிருக்கிறேன். போன வாரம் கதை என்ன ஆச்சு ? நான் ஐன்ஸ்டான், தாமஸ் ஆல்வா எடிசன் ரேன்ஞ்சில் ஏதாவது செய்து பெரிய

ஆள் ஆகியிருந்தால் தோல்விகளைப் பட்டியலிட்டு ‘வாழ்க்கையில் ஆயிரம் தடைக்கல்லப்பா! தடைக்கல்லும் உனக்கொரு படிக்கல்லப்பா ‘ என்று பாடியிருப்பேன். பரவாயில்லை! இன்னும் ரெண்டு வாரம் கழித்து சொல்கிறேன். மர்மக் கதை எழுத்தாளர்தான் இதுவரை ஆகவில்லை. இதிலாவது ஒரு மர்மம் இருக்கட்டுமே! தலைப்பில் காவேரி, காதல், கவிதை என்று எழுதிவிட்டு எங்கே அதையெல்லாம் காணவில்லை!காவேரி வந்தது. கவிதை கூட வந்துடுத்தே! காதல் ? அதுவும் மனிதக்காதல்! நம்ப இளையராஜாவுக்கு முன்னாலேயே ஏஎம் ராஜாவும் ஒரு மியூசிக் ஜீனியஸ்தான்! அவர் இசையமைத்த அருமையான எனக்கு ரொம்ப பிடித்த பாடல்! சரி பரவாயில்லை! அடுத்த வாரம் மனிதக் காதலையும் சொல்லிவிடுகிறேன்.

சித்ரா ரமேஷ்

சிங்கப்பூர்

kjrameesh@pacific.net.sg

Series Navigation

சித்ரா ரமேஷ்

சித்ரா ரமேஷ்