எந்த செய்தி – யார் பிரசுரித்தது ? தினகரன் – தினத்தந்தி தினமலர்

This entry is part [part not set] of 72 in the series 20040415_Issue

கேள்விபதில் சொதப்பப்பா


படியுங்கள் – பதில்கள் கீழே


1


மதுரையில் டாக்டர் ராமதாசுக்கு கறுப்புக் கொடி காட்டிய ரஜனி ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி

தடியடியில் காயம் அடைந்த ரஜனி மன்ற நிர்வாகி வக்கீல் சிங்கராஜ; படுகாயம் அடைந்து ரத்தம் கொட்டுவதை படத்தில் காணலாம்.

மதுரை, ஏப்.3- மதுரையில் ராமதாசுக்கு கறுப்புக்கொடி காட்டிய ரஜpனி மன்ற வக்கீல்கள், ரசிகர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதில் 2 வக்கீல்கள் உள்பட 5 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

கறுப்புக் கொடி

தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக டாக்டர் ராமதாஸ் நேற்று மதுரை வந்தார். அவருக்கு கறுப்புக்கொடி காட்டுவதற்காக தென்மாவட்ட வழக்கறிஞர்கள் அணி தலைவர் வக்கீல் மணவாளன், செயலாளர் சிங்கராஜ; தலைமையில் 50-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் சிம்மக்கல் அருகில் காத்திருந்தனர்.

சிம்மக்கல் ரவுண்டானா அருகில் ராமதாஸ் கார் வந்தது. அவரது காருக்கு பின்னால் தொண்டர்கள் கார்களில் வந்தனர். அப்போது ரஜpனிமன்ற வக்கீல் அணியினரும், ரஜpனி ரசிகர்களும் போலீஸ் முன் அனுமதியின்றி கறுப்புக் கொடி காட்டினர்.

போலீஸ் தடியடி

அப்போது அங்கு சாலை ஓரம் பாதுகாப்புக்கு நிறுத்தப் பட்டிருந்த போலீசார் ரஜனி மன்றத்தினர் மீதும், வக்கீல்கள் மீதும் சரமாhpயாக தடியடி நடத்தினர். இதனால் ரஜனி ரசிகர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். வேடிக்கை பார்த்தவர்களுக்கும் அடி விழுந்தது. அங்கு செருப்புகளும், கறுப்புக் கொடியும் சிதறி கிடந்தது. அந்தப்பகுதியே போர்க்கோலம் போல் காட்சி அளித்தது.

இந்த தாக்குதலில் வக்கீல்கள் மணவாளன், சிங்கராஜ், ரஜனி மன்ற மாவட்ட பேச்சாளர் ரஜனி வைரம், மேற்கு தொகுதி கொள்கை பரப்பு செயலாளர் முரளி, படையப்பா சந்திரன் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். வக்கீல்கள் மணவாளன், சிங்கராஜ் ஆகியோர் கே.கே.நகரில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். சிங்க ராஜூக்கு தலையில் தையல் போடப்பட்டது.

ரஜினி மன்றத்தை சேர்ந்த ரஜினி வைரம், முரளி ஆகியோர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

பரபரப்பு

இது பற்றி விளக்குத் தூண் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். மக்கள் நடமாட்டம் அதிகம் நிறைந்த பகுதியில் நடந்த இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பும் பதட்டமும் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து விளக்குத்தூண் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர்.


2


39. கருப்புக்கொடி காட்டிய ரஜினி ரசிகர்கள் மீது ராமதாஸ் முன்னிலையில் தாக்குதல்*

10 பேர் காயம்;

மதுரையில் இரவில் வன்முறை மதுரை: மதுரையில் நேற்றிரவு கருப்புக் கொடி காட்டிய ரஜினி ரசிகர்கள் மீது பா.ம.க., தலைவர் ராமதாசுடன் வந்த 30க்கும் மேற்பட்ட அவரது ஆதரவாளர்கள் இரும்புக் கம்பிகள், கட்டைகள் போன்ற ஆயுதங்களால் தாக்குதல் நடத்தினர். இதில் 10 பேர் பலத்த காயமடைந்தனர்.

தேர்தல் பிரசாரத்திற்காக நேற்றிரவு ராமதாஸ் மதுரை வந்தார். அவருக்கு கருப்பு கொடி காட்ட யானைக்கல் அண்ணாத்துரை சிலை அருகே நேற்றிரவு 8.10மணியளவில் தென்மாவட்ட ரஜினிகாந்த் வக்கீல்கள் மன்ற தலைவர் மணவாளன், செயலாளர் சிங்கராஜ் மற்றும் நிர்வாகிகள் குமரேசன், கருப்பையா உள்பட 35பேர் நின்று கொண்டிருந்தனர். கையில் கருப்புக் கொடியுடன் கோஷமிட்டுக் கொண்டிருந்த இவர்கள் அருகே 8.40மணியளவில் போலீஸ் பைலட் வேன் வந்தது. அதற்கு பின்னர் வேனில் ராமதாஸ் வந்தார்.

அவருக்கு பின்னர் ஒரு வேன், 3 கார்கள் வந்தன. கருப்பு கொடி காட்டிய ரசிகர்களை பைலட் வேனில் வந்த போலீசார் விரட்டினர். அதே நேரத்தில் ராமதாஸ் கண் எதிரிலேயே வேன் மற்றும் காரில் இருந்த அவரது ஆதவராளர்கள் கையில் இரும்பு கம்பி, கட்டைகளுடன் கதவை திறந்து கொண்டு ஓடி வந்தனர். அங்கு நின்ற ரஜினி ரசிகர்கள், பத்திரிகையாளர்கள், பொது மக்கள் என அனைவரையும் விரட்டி விரட்டி தாக்கினர். அனைவரும் அலறி அடித்து ஓடினர். இதனால் அந்த பகுதி கலவர பகுதியாக மாறியது. இதில் ரஜினி மன்ற நிர்வாகி சிங்கராசு, வைரம் ஆகியோருக்கு மண்டை உடைந்தது. மேலும் மணவாளன், மணி, சந்திரன், முரளி உள்பட 10க்கும் மேற்பட்டோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. குமுதம் போட்டோகிராபர் சார்லஸ் கை எலும்பு முறிந்தது. ஜெயா டி.வி. காமிராமேன் சுந்தரத்தின் காமிரா நொறுங்கியது. மற்றொரு நாளிதழ் போட்டோகிராபரின் காமிரா உடைந்தது. 5 நிமிடம் நீடித்த இச்சம்பவங்களை காரில் இருந்தவாறு பார்த்த ராமதாஸ் பின்னர் கூட்டம் நடக்குமிடத்திற்கு சென்றார்.

அக்கறையற்ற போலீஸ்

கருப்பு கொடி காட்ட ரஜினி ரசிகர்கள் திரண்ட போது எஸ்.ஐ. இளவரசு மற்றும் ஒரு போலீஸ்காரர் மட்டுமே அந்த இடத்திற்கு வந்தனர். ரசிகர்களின் கோஷங்களை கண்டதும் உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு மொபைலில் தகவல் கொடுத்து கூடுதலாக போலீசை அனுப்ப எஸ். ஐ., கோரினார். 20 நிமிடங்களுக்கு மேலாகியும் எந்த போலீசாரும் அந்த பக்கம் எட்டியே பார்க்கவில்லை.

காயமுற்ற மணவாளன் கூறியதாவது: ரஜினியை விமர்சிக்கும் ராமதாசுக்கு அமைதியான முறையில் கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவிக்க முயன்றோம். ஆனால் ராமதாசுடன் பின்னால் கார் மற்றும் வேனில் வந்த குண்டர்கள் கராத்தேக்கு பயன்படுத்தும் நுன்சாக் மற்றும் உருட்டு கட்டையால் தாக்கினர். போலீசார் முயன்றும் குண்டர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. ரஜினி ரசிகர்கள் மட்டுமில்லாது பொது மக்கள், பத்திரிக்கையாளர்களையும் அவர்கள் தாக்கியது வேதனையாகவுள்ளது என்றார்.

காயமுற்ற ரஜினி ரசிகர்கள் மதுரை அரசு ஆஸ்பத்திரி மற்றும் சிம்மக்கல், கே.கே.நகரிலுள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர்.


3


20. ரஜினி ரசிகர்கள் மீது தாக்குதல் நடத்திய பா.ம.க.,மீது போலீஸ் நடவடிக்கை இல்லாமல் போனது ஏன் ? மதுரை: மதுரையில் கறுப்பு கொடி காட்ட முயன்ற ரஜினி ரசிகர்கள் மீது தாக்குதல் நடத்திய பா.ம.க.,வினர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன் என்று தெரியவில்லை. பத்திரிக்கையாளர்கள் மீது தாக்குதல் நடத்தியது தனக்கு தெரியாது என்று ராமதாஸ் கூறியிருப்பது வேதனையளிப்பதாக பாதிக்கப்பட்ட நிருபர்கள், போட்டோகிராபர்கள் தெரிவித்தனர்.

மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் அருகில் நேற்று முன்தினம் மார்க்சிஸ்ட் வேட்பாளர் மோகனை ஆதரித்து பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அழகர்கோயில் ரோட்டில் உள்ள சங்கம் ஓட்டலில் இருந்து பா.ம.க., ராமதாஸ் காரில் கிளம்பி வந்தார். யானைக்கல் சந்திப்பில் இரவு 8.40 மணியளவில் ரஜினி ரசிகர்களின் வக்கீல்கள் பிரிவை சேர்ந்த 30 பேர் மணவாளன், சிங்கராஜ் தலைமையில் கறுப்பு கொடியுடன் நின்றிருந்தனர்

. ராமதாஸ் வந்த வேனுக்கு முன்பு இரு மோட்டார் சைக்கிள்களில் 4 பேர் நீளமான டார்ச் லைட்டை அடித்த படி வந்தனர். மோட்டார் சைக்கிளுக்கு பின்பு ஒரு போலீஸ் வேன், ராமதாஸ் வேன், அதற்கு அடுத்த படியாக அடியாட்கள் ஒரு வேன் மற்றும் 3 சுமோக்களில் வந்தனர். கறுப்பு கொடி காட்டுபவர்களை பார்த்தவுடன் ராமதாஸ் காரை நிறுத்தினார். உடனே ரஜினி ரசிகர்கள் ‘ராமதாஸே… வெளியேறு…கடவுள் ரஜினி வாழ்க… ‘ என்று கோஷமிட்டபடி அவரை நெருங்கினர். இந்த காட்சியை படம் எடுக்க பத்திரிக்கை நிருபர்கள், டி.வி.,கேமராமேன்கள் முயற்சி செய்தனர்.

அப்போது வேனில் இருந்து 5 போலீசார் இறங்கி வந்து படம் எடுக்க முயன்றவர்களை தடுத்து கேமராவை தட்டி விட்டனர். அந்த நேரத்தில் ராமதாசிற்கு பின்னால் வந்த வேன், சுமோக்களில் இருந்தவர்கள் கையில் உருட்டு கட்டை,இரும்பு கம்பியுடன் இறங்கி ஓடி வந்தனர். இதை பார்த்தவுடன் அங்கிருந்த நிருபர்களும், போட்டோகிராபர்களும், ரஜினி ரசிகர்களும் திசைக்கு ஒருவராக ஓடினர். ஆனால் அவர்களை விடாமல் துரத்தி சென்று பயங்கர ஆயுதங்களால் தாக்கினர். சிலர் அருகில் உள்ள வீடுகளுக்குள் நுழைந்து உயிரை காப்பாற்றிக் கொண்டனர். உயிர்தப்பியவர்களை துரத்திய கும்பல் தாக்கியதில் 6 பேருக்கு மண்டை உடைந்தது. நிருபர்கள், போட்டோகிராபர்களின் மொபைல் போன், கேமரா பறிபோனது. இரு சக்கர வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. சுமார் 7 நிமிடம் வரை இந்த தாக்குதல் தொடர்ந்தது. அப்போது ராமதாஸ் வேனில் இருந்த படியே அனைத்தையும் பார்த்தார். தன்னுடன் வந்தவர்களை தாக்குதல் நடத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளவில்லை. தாக்குதல் நடத்திவிட்டு வேனில் ஏறி சென்றனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து போலீசார் வந்தனர். அவர்களும் அங்கிருந்தவர்களை துரத்தி துரத்தி அடித்தனர். ஏற்கனவே ராமதாசுடன் சபாரி உடையில் வந்தவர்களும் போலீசாரை போல நடந்து கொண்டனர். சில நிருபர்கள் தாங்கள் நிருபர்கள் என்று சொன்ன பிறகும் தாக்கப்பட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து காயமடைந்த ரசிகர்கள், நிருபர்கள், போட்டோகிராபர்கள் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சென்று முதலுதவி பெற்றனர். தற்போது அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிங்கராஜ், மணவாளன் ஆகியோரும், அரசு ஆஸ்பத்திரியில் வைரம் என்பவரும் சிகிச்சை பெற்று வருகிறார். காயமடைந்த மணி, சந்திரன், முரளி ஆகியோர் வெளி நோயாளியாக சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். விளக்குதும்ண் போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக இரு வழக்குகளை பதிவு செய்துள்ளனர். மணவாளன் கொடுத்த புகாரின் பேரில் ராமதாஸ் மற்றும் 25 பேர் மீது சட்டபிரிவு 147, 148, 341, 323, 324, 307, 506 (2) கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். பாலசங்கர் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் அடையாளம் தெரியாத சிலர் தாக்கியதாகவும், அவர்கள் மீது 147, 148, 341, 324, 307 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த சம்பவம் நடந்த சில நிமிடங்களில் சென்னையில் உள்ள உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் ராமதாஸை கைது செய்யும் படியான உத்தரவு மதுரை போலீசாருக்கு கடைசி வரை வரவில்லை. ஆனால் மதுரை போலீசார் ராமதாஸை கைது செய்வதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தனர். ராமதாஸ் உடன் வந்தவர்கள் சங்கம் ஓட்டலில் தான் தங்க வைக்கப்பட்டனர். இவர்களை அடையாளம் காணும் வேலையையோ, அவர்கள் பயன்படுத்திய வேனை பிடிக்கவோ, ஆயுதங்களை கைப்பற்றவோ போலீசார் நேற்று காலை வரை எந்த முயற்சியும் செய்யவில்லை. இதற்கு காரணம் ராமதாஸ் அரசியல்வாதி, அவரை கைது செய்ய வேண்டும் என்றால் சென்னையில் இருந்து உறுதியான உத்தரவு வர வேண்டும், அப்போது தான் கைது செய்யவோ, சோதனை நடத்தவோ முடியும் என்று உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் ஆகியோர் பின்பற்றுவதற்குரிய மாதிரி நன்னடத்தை விதி தொகுப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில் கூட்டங்கள் என்ற தலைப்பில் 4வது பத்தியில் கூறப்பட்டுள்ளதாவது: ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்பவர்கள், கூட்டத்தில் தொல்லை கொடுக்கிற நபர்களை அல்லது வேறு வகையில் அமைதிக்கு பங்கம் விளைவிக்க முயற்சிப்பவர்களை சமாளிக்க எப்போதும் போலீசாரின் உதவியை நாடுதல் வேண்டும். கூட்டத்திற்கு ஏற்பாடு செய்பவர்கள் கூட்டத்திற்கு தொல்லை கொடுக்கிற நபர்கள் மீது தாங்களே நேரடியாக நடவடிக்கை எதுவும் எடுக்க கூடாது. இவ்வாறு நன்னடத்தை விதியில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. ஆனால் கூட்டத்திற்கு வரும் போது நேரடி நடவடிக்கையில் இறங்கிய பா.ம.க.,வினர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஆச்சரியமாக உள்ளது.

இதற்கிடையில் இந்த சம்பவம் தொடர்பாக நிருபர்களிடம் கூறிய ராமதாஸ், ‘ போலீசார் கறுப்பு கொடி காட்டினார்கள். ஆளும் கட்சியின் திட்டமிட்ட சதி. நிருபர்களை தாக்கியது எனக்கு தெரியாது ‘ என்று முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்தார். தினகரன் நிருபர் மட்டும் ‘ஐயா ‘ என பேசியதால் அவர் கேள்விக்கு மட்டும் ராமதாஸ் பதிலளித்தார். தாக்குதல் நடந்த பிறகு கூடலழகர் கோயிலில் பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பேசிய பா.ம.க.,ராமதாஸ், மு.மு.க., சேதுராமன், வேட்பாளர் மோகன் ஆகியோர் தாக்குதல் குறித்து வருத்தம் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அரசியல் திருப்புமுனை மதுரை தான் : தமிழக அரசியலில் எப்போதும் திருப்பு முனையை ஏற்படுத்துவது மதுரை தான். மதுரையில் அரசியல் எழுச்சி எப்படி இருக்கிறதோ, அது தமிழகம் முழுவதும் எதிரொலிக்கும் என்பதால் அரசியல்வாதிகள் மதுரைக்கு முக்கியத்துவம் கொடுப்பதுண்டு. அந்த வகையில் ரஜினி ரசிகர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தி.மு.க., கூட்டணிக்கு எதிராக ரஜினி ரசிகர்களை தீவிரமாக தேர்தல் வேலை செய்ய தும்ண்டி உள்ளது.

பாவம்..இவர்..அடிதான் மிச்சம் : மதுரையில் பா.ம.க.,வினர் எப்படி நடந்து கொண்டார்கள் என்பதற்கு இன்னொரு சாட்சி பாலசங்கர். இவர் நேற்று முன்தினம் பர்மா பஜாரில் புதிதாக கேமரா வாங்கிக் கொண்டு சிம்மக்கல் பழைய சொக்கநாதர் கோயில் அருகில் வந்து கொண்டிருந்தார். அப்போது ராமதாஸின் கார் வரிசையாக வந்தது. இதை பார்த்து உற்சாகமடைந்து கார்கள் அணிவகுப்பை தொழில் முறையில் படம் எடுத்துள்ளார். பிளாஷ் வந்த திசையை பார்த்த கும்பல் காரை நிறுத்தி விட்டு வேகமாக ஓடி வந்து அவரை தாக்கி கேமராவை பிடுங்கி, கம்பியால் அடித்து உதைத்தனர். அவருக்கோ எதுவும் புரியவில்லை…அய்யோ..அம்மா என்று அலறிக் கொண்டே ஓடி உயிர் தப்பினார். ராமதாஸ் உடன் வந்தவர்கள் காருக்குள் ஏராளமான ஆயுதங்களை வைத்திருந்தனர். இந்த ஆயுதங்களை போலீசார் எப்படி அனுமதித்தார்கள் என்று தெரியவில்லை.


4


ராமதாசுக்கு கறுப்பு கொடி காட்ட முயற்சி:

ரஜினி ரசிகர்கள் மீது தாக்குதல்-அரிவாள் வெட்டு

மதுரை,ஏப்.3-

மதுரையில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு ரஜினி ரசிகர்கள் கறுப்பு கொடி காட்ட முயற்சி செய்தனர். இதை அடுத்து ரஜினி ரசிகர்கள் தாக்கப்பட்டனர். அரிவாள் வெட்டும் விழுந்தது.

ராமதாஸ் வருகை

மதுரை தொகுதியில் போட்டியிடும் இ.கம்ஞ்னிஸ்டு வேட்பாளர் மோகனை ஆதரித்து தி.மு.க. கூட்டணி சார்பில் தேர்தல் பிரசார கூட்டம் கூடல் அழகர் பெருமாள் கோவில் அருகே நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இதில் கலந்து கொள்வதற்காக பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்று மாலை மதுரை வந்தார்.

அழகர்கோவில் ரோட்டில் உள்ள சங்கம் ஓட்டலில் அவர் தங்கி இருந்தார்.

கறுப்புக் கொடி

ராமதாஸ் வந்திருக்கும் தகவல் தெரிந்ததும் மதுரை மாவட்ட ரஜினிகாந்த் ரசிகர் மன்ற வக்கீல்கள் அணி தலைவர் மணவாளன் தலைமையில் மதுரை நெல்பேட்டை அருகே உள்ள அண்ணா சிலை முன்பு வக்கீல்களும், ரஜினி மன்றத்தினரும் கூடினார்கள்.

அவர்கள் ராமதாசை கண்டித்து கறுப்புக்கொகாட்ட திட்டமிட்டனர். ராமதாசுக்கு எதிராக கோஷம் போட்டுக் கொண்டிருந்தனர்.

ரஜினி ரசிகர் மன்ற வக்கீல்கள் அணி செயலாளர் சிங்கராஜ், கருப்பையா, குமரேசன், உதயகுமார் உள்பட 50க்கும் மேற்பட்ட ரசிகர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

இரவு 8.30 மணி அளவில் அண்ணா சிலை முன்பகுதியில் ஆல்பர்ட் விக்டர் பாலம் முன்பு ரோட்டின் ஓரமாக நின்றபடி போராட்டம் நடத்திக் கொண்டிருந்தனர். இந்த நேரத்தில் டாக்டர் ராமதாசின் கார் அங்கு வந்தது. உடனே ரஜினி ரசிகர்கள் உரக்க கோஷம் போட்டனர்.

தாக்குதல்

இதை தொடர்ந்து ராமதாசின் கார் அங்கு நிறுத்தப்பட்டது. அவருக்கு பின்னால் வாகனங்களில் வந்தவர்களில் சிலர் வேகமாக இறங்கி ரஜினி ரசிகர்களை நோக்கி ஓடிவந்தனர்.

வந்த வேகத்தில் சுற்றி இருந்த அனைவரையும் தாக்க தொடங்கினார்கள். சிலர் இரும்புத்தடிகளால் ரஜினி ரசிகர்களை கடுமையாக தாக்கினார்கள். ரஜினிவைரம் என்பவரது தலையில் அரிவாள் வெட்டு விழுந்தது. ரத்தம் சொட்ட சொட்ட அவர் மயங்கி விழுந்தார்.

வக்கீல்கள் மணவாளன், சிங்கராஜ் ஆகியோரையும் சிலர் சூழ்ந்து கொண்டு கடுமையாக தாக்கினார்கள்.

பத்திரிகை போட்டோகிராபர்களும் கடுமையாக தாக்கப்பட்டனர். இதில் ஒருவர் கையில் காயம் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பா.ம.க. தொண்டர்களின் ஆவேச தாக்குதலை கண்டதும் ரஜினி ரசிகர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். ஆனால் அவர்களை சிலர் துரத்தி சென்று அடித்தனர்.

இதைத் தொடர்ந்து போலீசார் அண்ணா சிலை பகுதியில் குவிக்கப்பட்டனர்.


5


மதுரை கறுப்புக்கொடி சம்பவம்

பா.ம.க.வினர் மீதான வழக்குகளை வாபஸ் பெறவேண்டும்

கருணாநிதி பேட்டி

சென்னை, ஏப். 6-

மதுரை சம்பவம் தொடர்பாக பா.ம.க.வினர் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறவேண்டும் என்று கருணாநிதி கூறினார்.

பேட்டி

தி.மு.க. தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்துரையாடல் கூட்டம் சென்னை அறிவாலயத்தில் நேற்று நடந்தது.

கூட்டம் முடிந்ததும் தி.மு.க. தலைவர் கருணாநிதி நிருபர் களுக்கு பேட்டி அளித்தார். நிருபர்கள் கேட்ட கேள்விகளும் அதற்கு கருணாநிதி அளித்த பதில்களும் வருமாறு:-

வாபஸ் பெறவேண்டும்

கேள்வி:- மதுரை சம்பவத்தையொட்டி பா.ம.க. தொண்டர்கள் ஏழுபேரை கைது செய்திருக்கிறார்களே ?

பதில்:- மதுரை சம்பவம் அ.தி.மு.க.வின் தூண்டுதலோடும், போலீஸ் ஒத்துழைப்புடனும் நடந்திருக்கிறது என்று தீர்மானத்தில் சொல்லியிருக்கிறோம். அதனால் வழக்குகளைத் திரும்பப் பெறவேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ளோம்.


பதில்கள்

1 – தினகரன்

2- தினமலர் ‘

3 – தினமலர் – 4ஆம் தேதி

4 – தினத்தந்தி

5 – தினத்தந்தி – 4ஆம் தேதி

Series Navigation

கேள்விபதில் சொதப்பப்பா

கேள்விபதில் சொதப்பப்பா