தினகப்ஸா – நாதுராம் கோட்ஸே படத்திறப்பு சிறப்பிதழ்

This entry is part [part not set] of 27 in the series 20030413_Issue

சூடான செய்திகளை நடக்காமலேயே வழங்கும் ஒரே நாளிதழ்



நாடாளுமன்றத்தில் நாதுராம் கோட்சே படத் திறப்பு

இன்று நாடாளுமன்றத்தில் நாதுராம் கோட்சேயின் படத் திறப்பு விழா நடைபெற்றது. சோனியா காந்தி மற்றும் பல எதிர்க்கட்சி தலைவர்கள் படத் திறப்பைப் புறக்கணித்தனர். திமுக , தெலுங்கு தேசம் போன்ற கட்சிகள் நடுநிலை வகிப்பதாகவும், புறக்கணிப்பதில்லை ஆனால் பங்கு பெறுவதில்லை என்று வாசலில் நின்று கொண்டு தெரிவித்தனர்.

ஆர் எஸ் எஸ் நாதுராம் கோட்சேக்குத் தபால் தலை வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டது. அதுமட்டுமல்லாமல் இனி வரும் எல்லாத் தபால் தலைகளிலும் நாதுராம் கோட்ஸே படம் மட்டுமே வெளியிடப் படவேண்டும் என்று ஆர் எஸ் எஸ் தெரிவித்தது.

ஜனாதிபதியிடம் இந்தப் படத் திறப்பு விழாவில் கலந்து கொள்ளக் கூடாது என்று வேண்டுகோள் வைக்கப் பட்டது. நாதுராம் கோட்சே துப்பாக்கி உபயோகித்தவர் , ஆதலால் விஞ்ஞானக் கண்ணோட்டம் உள்ளவர் என்று ஜனாதிபதி தெரிவித்தார். காந்தி படத்திற்கு எதிராக இந்தப் படத்தை வைத்ததற்கு ஆர் எஸ் எஸ் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. காந்தி படத்துக்குப் பதிலாக நாதுராம் கோட்சே படத்தை வைக்க வேண்டும் என்பதே தனது கோரிக்கை என்று ஆர் எஸ் எஸ் தெளிவுபடுத்தியது. இதைத் தொடர்ந்து கவலை வேண்டாம், நாம் தனித்து ஆட்சிக்கு வரும்போது எல்லாப் படத்தையும் எடுத்துவிட்டு, ஹெட்கேவார், எஸ் பி முகர்ஜி, கோல்வால்கர் படங்கள் மட்டுமே வைப்போம் என்றும் தான் என்றென்றும் ஆர் எஸ் எஸ் தொண்டனே என்றும் வாஜ்பாய் உறுதி அளித்தார்.

ஜனநாயக முன்னணியைச் சேர்ந்த கட்சிகள் படத் திறப்புப் பற்றி கருத்துக் தெரிவித்தன. ஆந்திரப் பிரதேசத்தின் நலனைக் கருதி, காங்கிரஸை மூக்குடைக்க வேண்டி படத் திறப்பை ஆதரித்தோம் என்று சந்திர பாபு நாயுடு தெளிவு படுத்தினார்.

கருணாநிதி இன்று உடன்பிறப்புக்கு எழுதிய கடித அறிக்கையில் நாதுராம் கோட்சே ஒன்றும் தீண்டத் தகாதவர் அல்ல என்று தெரிவித்தார். ஜெயலலிதா பிப்ரவரி 30-ம் தேதி எழுதிய கடிதத்தில் நாதுராம் கோட்சே படத்துடன் தன் படத்தை மாட்ட வேண்டும் என்று எழுதினார் என்று மேற்கோள் காட்டினார்.

ஜெயலலிதா இதற்குப் பதில் சொல்ல மறுத்தார். இருந்தாலும் கருணாநிதிக்கு பதில் சொல்லாவிடில் எம் ஜி ஆரின் ஆவி தன்னை மன்னிக்காது என்றார். கடித்ததை எழுதியது கருணாநிதியே என்றும் தன் கையெழுத்தையும் கருணாநிதியே போட்டுவிட்டார் என்றும் தெரிவித்தார். முன்னால் டான்சி ஃபைலிலும் தன் கையெழுத்தை கருணாநிதி போட்டு தன்னை மாட்டி விட்டுவிட்டார் என்று தெரிவித்தார். நாதுராம் கோட்சே படத்தை மாட்ட வேண்டும் என்பது பெரும்பான்மை மக்களின் கோரிக்கை என்றால் அதன் படி நடக்க வேண்டும் என்று தெளிவுபடுத்தினார்.


அம்மாவின் படம் நாடாளுமன்றத்தில் மாட்டப் படவேண்டும் : அ தி மு க அமைச்சர் கோரிக்கை

ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சராய் இருக்கும் அனாமதேயத் தம்பிரான் இது பற்றிக் கருத்துச் சொல்ல மறுத்து விட்டார். யார் காந்தி, யார் இந்த நாத்தராம் கோட்சே , நாத்தராம் என்று பேர் வைப்பார்களா என்று தன் அருகில் இருந்த உதவியாளரிடம் கேட்டுக் கொண்டிருந்தார். இதயதெய்வம், புரட்சித் தலைவி, அம்மா ஒருவரின் படம் தான் நாடாளுமன்றத்தில் மாட்டப் படவேண்டும் என்றும் மற்றப் படங்களை கூவத்தில் கடாசிவிட வேண்டும் என்றும் தீர்மானம் கொண்டு வரப் போவதாகத் தெரிவித்தார். அவரிடம் உதவியாளர் சட்டசபை வேறு, நாடாளுமன்றம் வேறு , சட்டசபை உறுப்பினர் நாடாளுமன்றத்தில் தீரமானம் கொண்டு வர முடியாது என்று விளக்கிச் சொன்னார். தமிழ்நாட்டை அம்மா ஆளும் போது ஏன் முடியாது, அம்மா மனது வைத்தால் எதுவும் நடக்கும் , சட்டசபையை நாடாளுமன்றமாய் ஆக்கியே தீர்வேன் என்று அமைச்சர் தமபிரான் சூளுரைத்தார்.


காந்தி கொலை பற்றிய வரலாறு திருத்தி எழுதப்படும் : அருண் செளரி அறிவிப்பு

பா ஜ க அரசின் தேசியப் பாடத் திட்டக் குழு , காந்தியை கோட்சே கொல்லவில்லை, காந்தி தான் கோட்சேயைக் கொன்றார் என்று மாற்றி எழுதுவது பற்றிப் பரிசீலிப்பதாய்த் தெரிகிறது.

ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக ஆசிரியர்களும், இடதுசாரி வரலாற்றாசிரியர்களும் சேர்ந்து செய்த சதியால் காந்தி கொலை பற்றிய வரலாறு சரியாக எழுதப்படவில்லை என்று அருண் செளரி தெரிவித்தார். எப்படி காந்தி ஆங்கிலேயர்களுக்கு வால் பிடித்தார் என்று 1200 பக்கத்தில் ஆதாரங்களுடன் புத்தகம் எழுதப் போவதாகவும் அருண் செளரி தெரிவித்தார். நாதுராம் கோட்சே எப்படி தேசப்பற்றினால் பல காரியங்கள் செய்தார் என்றும் தெரிவித்தார். அரசு நிறுவனங்கள் அனைத்தையும் தனியார்மயமாக்கும் புனிதப் பணியில் ஈடுபட்டிருப்பதால், உடனடியாக இந்தப் பணியை மேற்கொள்ள முடியவில்லை என்று தெரிவித்தார்.

**

மேற்கண்ட அனைத்து விஷயங்களையும் தெரிவித்த நம்பத்தகாத வட்டாரங்களுக்கு அனைத்து நன்றியுடனும்,

இந்த தினகப்ஸாவை வழங்கியவர்

சொதப்பப்பா

***

Series Navigation

சொதப்பப்பா

சொதப்பப்பா