இட்லியின் அருமை இங்கிலாந்தில் தொியும் -3

This entry is part of 23 in the series 20020317_Issue

கோமதி நடராஜன்.


அன்புள்ள அனைவருக்கும்

திரு சுப்புடு கையில் என் இட்லியா ?அவ்வளவுதான்.பிச்சு உதறிவிடுவார்.கலைத்தோட்டத்தில், காளான்கள் முளைத்து விடாமல், கவனமாகப் பார்த்துக் கொள்ளும், நல்ல தோட்டக்காரர், என்று என் மதிப்பில் உயர்ந்து நிற்பவர் திரு சுப்புடு அவர்கள்.அவருக்கு, என் இட்லியை[made in England],பிளேட் உடைந்து விடாமல், பதமாய் இதமாய், பாிமாறிவிட்டு, எட்டடித் தள்ளி நிற்கிறேன்.

என் சமையலை ருசி பார்க்கச் சொன்னால், என் மாமியார் கூட , பொட்டில் அறைந்த மாதிாி உடனே, சொல்லமாட்டார்.சில நிமிடங்கள் யோசித்து, ‘பரவாயில்லை,இந்த உப்பு, புளி,காரம் மட்டும்தான் கொஞ்சம் குறையுது,மத்தபடி எல்லாம் சாியாத்தான் இருக்கு ‘என்று இதமாகத்தான் சொல்லுவார்.ஆமாம்! ‘மத்தபடிக்கு ‘ நான் எந்த ருசியைப் பாக்கி வைத்திருந்தேன் ?சமையல் சாியில்லை என்று, இதைவிட அழகாக யாராலும் சொல்ல முடியாது என்று நினைக்கிறேன்.

நிற்க!சுப்புடு ஸார் எப்படி இருக்கிறார் என்று பார்க்கலாமா ?

குற்றம் கண்ட இடத்தில்,ஆனானப்பட்டப் பரமசிவனே,நெற்றியில் ஒரே ஒரு கண்ணைத்தான் திறந்தார்,

ஆனால் ,நமது சுப்புடு அவர்கள்,நெற்றி முழுக்கக் கண்ணாகக், கனல் பறக்க, அனல் அடிக்க,முகத்தில், எள்ளும் கொள்ளும் வெடிக்க,வார்த்தையில் கடுகு வெடிக்க நிற்கிறார்.நானோ, மைக்ரோ வேவ் அவனில் மாட்டிக்கொண்டதைப் போல் பதை பதப்பும்,ஃப்ாீசாில் சிக்கிக் கொண்டதைப் போல் வெடவெடப்புமாக நின்று கொண்டிருந்தேன்.சுப்புடு அவர்களின் ஆலாபனை தொடங்கியது,ஏகப் பட்ட சங்கதிகளை உள்ளடக்கி,ஏற்ற இறக்கங்களோடு, கீழ் ஸ்தாயிலும் மேல் ஸ்தாயிலும்,அவர் சஞ்சாரம் பண்ணுவதைக் கொஞ்சம் கேளுங்களேன்.

‘..!….#….*…..இந்த அம்மையார் இனிமேல் சமையலறைப் பக்கமே போகாதிருந்தால்,அதுவே இவர்,இக்கலைக்குச் செய்யும் மாபெரும் சேவையாகும்…. ‘

‘சபாஷ் ‘இது என் கணவாின் நிசப்தமான பாராட்டு.

சுப்புடு ஸார்!சமையலறைப் பக்கமே போகாமல்,எப்படி ஸார் சேவை செய்யமுடியும் ?அதுவும் மாபெரும் சேவை ?கோபத்தில் வார்த்தைகள் தடம் புரண்டு வருகிறதோ ?சேவையைப் பிழிந்து எடுக்க சமையலறைக்குச் செல்ல வேண்டாம்,வெந்து எடுக்க சமையலறைப் பக்கம் போய்த்தானே ஆகவேண்டும் ?

ஒரு மடக்கு சோடா குடித்த பாகவதர் போல,மேலும் தொடர்கிறார்.

‘…!…#…*…கல்லால் இட்லி செய்யும் கலை இவர் ஒருவருக்கே இயலக் கூடிய காாியம்….இவர் ஈரான் ஈராக் யுத்தத்தின் போது, எல்லையில் கடை விாித்திருந்தால், ,ஆயுத சப்ளை அமோகமாய் நடத்தியிருக்கலாம். ‘ ‘ஆஹா!பேஷ்!பேஷ்! ‘அடுத்த அப்ளாஸை, எனக்குத் தொியாமல் சுப்புடுவை நோக்கி வீசினார் என் ஆத்துக்காரர்.

ஒவ்வொரு இட்லியும் ஒரு ‘க்ளஸ்ட்டர் பாம் ‘…இட்லி வார்க்கத்தொியாத இவர்,தன்னை இட்லிக்குப் புகழ் பெற்ற, தாமிரபரணி ஆறு தவழும், திருநெல்வேலியில் பிறந்து வளர்ந்தவர், என்பதை வெளியே சொல்லாதிருப்பது உத்தமம்….. ‘இவரது கணவருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்….. ‘இப்படிய

ன்னையும் என் இட்லியையும், நார் நாராகக் கிழித்தால்தான், அவர் தொண்டையில் முட்டி மோதி,போக்கிடம் இல்லாமல், வயிற்றில் விழுந்த என் இட்லி என்ற வஸ்து, ஜீரணமாகும் என்ற அபிப்பிராயத்தோடு, என்னைக் கிழி கிழியென்றுக் கிழித்துக் கடாசினார்.அதன் பிறகுதான்,அவர் முகத்தில் ஒரு தெளிவு,ஒரு அமைதி எல்லாம் வந்து இறங்கியது.

நெற்றிக்கண் சிவனாய் தொடங்கி, நரசிம்ம அவதாரமாய் நின்ற அவரைப் பார்த்தபோது, சாட்சாத்,சங்கரநாராயணனே சுப்புடு வடிவில் என் முன்னே காட்சி தந்தது போல் புல்லாித்து நின்றேன்.

என் கணவரும் ‘ச்சே!என்ன இது ?சுப்புடு இப்படி சொல்லிவிட்டார் ? ‘…என்றும் ‘

‘ரொம்ப மோசம்! கொஞ்சமாவது நல்லதா சொல்லியிருக்கலாம் ‘என்றும், எனக்காக வருந்துவது போல், வெளியில் சோக முகம் காட்டி,மனதுக்குள்,சுப்புடு அவர்களுக்கு, மலர்ந்த முகத்துடன்,மலர் மாலை அணிவித்து, மணிமகுடம் சூட்டி மகிழ்ந்தார்.

மாியாதையாக இனிமேல்,இட்லி என்று யாாிடமும் வாயைத்திறக்கக் கூடாது.இல்லையென்றால் ‘,பஞ்சு 1/2 கிலோ,மல்லிகைப்பூ 2கிலோ ஊறப்போட்டு மையாக அரைத்துப் பாருங்களேன் ‘என்று பஞ்சாபிக்காாி எவளாவது சொன்னால் அதையும் ,

செய்து பார்த்தாலும் ஆச்சாியமில்லை.bread winner ஆன என் கணவரை,இட்லி வின்னராக்கலாம் என்ற என் நப்பாசைக்கு ஒரு கும்பிடு போட்டு, ரொட்டியோடு ஐக்கியமாகப் பழகி வந்த சமயத்தில்,அமொிக்காவிலிருந்து இந்தியாவுக்குச் செல்லும் வழியில் என் வீட்டில் இறங்கினார்,என் ஓரகத்தியின் மகள் சிவா.அமொிக்காவில், தன் கணவருக்காக ‘ஒரு மாதத்துக்குத் தேவையான இட்லியை வெந்து எடுத்து ஃப்ாிசாில் போட்டு வைத்திருக்கிறேன்,தேவையான போது ,தண்ணீர் தெளித்து மைக்ரோ வேவ் அவனில் 2நிமிடம் ஹீட் பண்ணிக் கொள்வார்,சூப்பர் சாஃப்ட்டாக இருக்கும் ‘[சூப்பர் ஸாஃப்டாகஇருக்குமா ?எது ?மைக்ரோ வேவ் அவனா ?]என்ற போது இட்லி ஆசைக்கே தண்ணீர் தெளித்துவிட்ட நான், ‘என்னே இவரது சாதனை!எனக்கு மட்டும் ஏன் இந்த சோதனை ? ‘என்று ஹைக்கூ பாடினேன்.

இப்படி மனமொடிந்து கிடந்த வேளை,மான்ச்செஸ்ட்டர் வந்து இறங்கிய என் மாமா பெண்,கோதை,என்னிடம் ‘இட்லிக்கு என்னவழி ? ‘என்று கேட்டபோது,எனக்கு அழுவதா சிாிப்பதா,என்று தொியாமல்,இந்த, என் புலம்பலின் ஒரு பிரதியை அவருக்கு அனுப்பிவைத்தேன்.

இந்தியாவை விட்டு,5 மணி நேர வித்தியாச தூரத்தில், இருக்க முடிகிறது,நல்ல தமிழ் கேளாமல் நடமாட முடிகிறது,உறவினர்களை விட்டுப் பிாிந்து நிற்க முடிகிறது,நலம் நாடும் நல்ல நண்பர்களைக் காணாமல் நாளைக் கடத்த முடிகிறது,

இத்தனையும் முடியும் போது,இட்லி இல்லாமல் இருக்க முடியாதா ?கேவலம்!ஒரு அங்குல நாக்கை அடக்க முடியவில்லையென்றால்,அது வெட்கப்பட வேண்டிய விஷயமல்லவா ?

‘இங்கிலாந்து வர விசா கிடைக்காத இட்லியே!உன்னை இந்தியாவுக்கு வந்து கவனித்துக் கொள்கிறேன் ‘.முடிக்கட்டுமா ?

மற்றவை பிறகு

அன்புடன்

கோமதிநடராஜன்[ngomathi@rediffmail.com]

Series Navigation