தினகப்ஸா – 18 பெப்ரவரி 2001

This entry is part [part not set] of 17 in the series 20010219_Issue

**


தேர்தல் நிலவரம் சிறப்பிதழ்

**

ராமதாஸ் ஜெயலலிதாவுக்கு பொன்னாடை போர்த்தி பூச்செண்டு கொடுத்து அதிமுக அணியில் இணைந்தார்.

ராமதாஸ் பேசுகையில் புரட்சித்தலைவி சகோதரி ஜெயலலிதா அவர்களது விசிலடிக்கும் ரசிகனாகவே தான் வாழ்நாள் முழுவதும் இருந்துவருவதாக தெரிவித்தார். அரசியலில் ஜெயலலிதாவுக்கு எதிராக இருந்த கருணாநிதியின் அணியிலிருந்து கொண்டு மக்களுக்கு தொண்டாற்ற வேண்டிய துரதிர்ஷ்டம் நேர்ந்தாலும், இனிமேல் அந்தத் தவறுகளைச் செய்யப்போவதில்லை என்று நிருபர்களிடம் உறுதிஅளித்தார்.

எப்போது ஜெயலலிதா அணியில் சேருவதாக முடிவு செய்தீர்கள் என்று கேட்டதற்கு, ராமன் தேடிய சீதை படத்தை சன் டிவி ஒளிபரப்பியது என்றும் அந்தப்படத்தில் ஜெயலலிதாவைத்தேடி எம்ஜியார் போவதைப் பார்த்து தான் உள்ளம் கலங்கியதாகவும், அப்படிப்பட்ட ஜெயலலிதாவை எம்ஜியாரே தேடிச்சென்றார் எனவே தான் ஜெயலலிதாவைத் தேடிவருவதில் தவறில்லை என்றும் உணர்ந்ததாகக் கூறினார்.

ஜெயலலிதா காலில் ஏன் விழவில்லை என்று நிருபர்கள் கேட்டதற்கு, ராமதாஸ் ஜெயலலிதா காலில் விழவில்லை என்று திமுகவினர் பொய்ப்பிரச்சாரம் செய்வது கண்டு மனம் பொங்குவதாகவும் தெரிவித்தார்.

அருகில் மகளிர் அணித்தலைவர் திருமதி ராமதாசும், இளைஞர் அணித்தலைவரான ராமதாஸின் மகனும் இருந்தார்கள். முதியோர் அணித்தலைவரான ஒன்றுவிட்ட தாத்தாவும், முதிய மகளிர் அணித்தலைவரான இரண்டுவிட்ட பாட்டியும் நிருபர்களுக்கு சர்பத் வழங்கினர் என்றும் நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவித்தன.

**

விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவரான திருமாவளவன் ஆவேசம்

அதிமுக அணியில் இருக்கும் திருமாவளவன் பாட்டாளி மக்கள் கட்சித்தலைவர் ராமதாஸ் அதிமுக அணியில் இணைவதை எதிர்த்து போர்க்கொடி உயர்த்தி இருப்பது அனைவருக்கும் தெரிந்ததே.

பாமக இருக்கும் அணியில் தலித்துகள் இருக்கமாட்டார்கள் என்று தீவிரமாகத் தெரிவித்த திருமாவளவன், திமுகவின் தேசீய முன்னணியில் இணைய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தார்.

திமுக அணியில் ஏற்கெனவே ஒரு தலித் கட்சி (கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம்) இருக்கறதே என்று நிருபர்கள் கேட்டதற்கு, விடுதலை சிறுத்தைகளே ஒரிஜினல் தலித் கட்சி என்றும் மற்றவை எல்லாம் தாசில்தாரிடம் ஜாதி சர்டிபிகேட் வாங்கிய டூப்ளிகேட் தலித் கட்சிகள் என்றும் தெரிவித்ததாக வழக்கம்போல நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவித்தன.

**

திமுக தலைவர் கருணாநிதி கண்ணீர்

திமுக தலைவரான கருணாநிதி அடிக்கடி கண்ணீர் விட்டு வருவது அனைவருக்கும் தெரிந்ததே. சமீபத்தில் அவர் வாசித்த பட்ஜெட்டை கிழித்ததற்காக கண்ணீர் வடித்ததும், வீட்டில் திருமதி கருணாநிதி அவர்கள் வெங்காயம் அரிந்ததற்காக கலைஞர் கருணாநிதி அவர்கள் கண்ணீர் விட்டதும் பெரும் செய்திகளாகப் பேசப்பட்டன.

திருமதி கருணாநிதி ஒழிக என்று திமுகவினர் ஆர்ப்பாட்டம் செய்வதற்குள் தலைவர் கருணாநிதி அவ்வாறு போராட்டம் செய்தால் தனக்கு கோழி குழம்பு கிடைக்காது என்று காரணம் சொல்லி அந்த ஆர்ப்பாட்டத்தை தடுத்தி நிறுத்தியிருப்பதாக நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கருணாநிதியை கண்ணீர் வடிக்கவைத்தவர்கள் தேர்தலில் ஜெயிக்கக்கூடாது என்று திமுகவினர் தீர்மானம் பூண்டு இருப்பதாகவும் தெரியவருகிறது. திருமதி கருணாநிதி அவர்கள் தேர்தலில் நிற்கமாட்டார்கள் என்று கலைஞர் குடும்பத்தினர் இந்த திமுகவினரிடம் தெரிவித்திருப்பதால், இந்த திமுகவினர் தேர்தலில் நிற்காத ஆளை தோற்கடிப்பது எப்படி என்று குழம்பியிருப்பதாகவும் நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு நடுவில் ஒரு கண் டாக்டர் மாரியப்பன், கருணாநிதிக்கு கண்ணில் தூசு விழுந்திருக்கலாம் என்று சொல்லியிருப்பதாகவும் நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாண்டிச்சேரி நாடாளுமன்றம் இது காரணமாக இன்று ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.

**

கலைஞர் கவிதை

இன்று பட்டி தொட்டிகளெங்கும் கலைஞரின் கவிதை வாசிப்பு நடக்கிறது.

இரண்டெழுத்து

என் கதைக்கு நான் கண்டுபிடிக்கும் கரு இரண்டெழுத்து

என் பெயரில் இருக்கும் கரு இரண்டெழுத்து

என் அம்மா என்னைக்கூப்பிடும் நிதி இரண்டெழுத்து

என் பெயரில் இருக்கும் நிதி இரண்டெழுத்து

அண்ணாவை அவர் அம்மா அழைக்கும் துரை இரண்டெழுத்து

அந்த அண்ணா நம்பாத ஜெயா இரண்டெழுத்து

வாய்பாயி நம்பும் ராமா இரண்டெழுத்து

வாய்பாயியை கழுத்தறுத்த தாஸ் இரண்டெழுத்து

இவ்வாறு ஒரு ஐந்தரை மணிநேரம் ஓடிய இரண்டெழுத்து கவிதையால் பலர் மனநிலை பாதிக்கப்பட்டு தெருத்தெருவாய் அலைவதாக நம்பத்தகாத வட்டாரங்கள் வழக்கபோல் தெரிவிக்கின்றன. அப்படி அலைகின்றவர்களில் பலர் வாஜ்பாயியை சந்தித்து கலைஞரை காஷ்மீருக்கு கவர்னராக ஆக்க கோரிக்கை விடுத்திருக்கிறார்கள் என்றும் இதே நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அடைந்தால் காஷ்மீர நாடு இல்லையேல் சுடுகாடு என்று இருப்பவர்களை அறம்பாடியே அறுத்துத்தள்ளும் திறமை கலைஞருக்கு மட்டுமே உண்டு என்று பல தமிழர்கள் வாஜ்பாயியிடம் கலைஞரை சிபாரிசு செய்திருப்பதாகவும் நம்பத்தகாத வட்டாரங்கள் ரீல் விடுகின்றன.

**

ஜெயலலிதா ‘கிழிந்த புடவை உடுத்தியிருக்கிறேன். எனக்கு ஓட்டுப் போடுங்கள் ‘ என்று எம்ஜியார் விசுவாசிகளுக்கு உருக்கமான கோரிக்கை

இன்று கண்ணீருடன் கிழிந்த புடவையுடன் தலைவிரி கோலமாக ஜெயலலிதா இன்று பத்திரிக்கையாளர்களுக்கு காட்சி அளித்தார். தமிழ்நாட்டில் எண்ணற்ற சகோதரிகள் இவ்வாறு அலைவதாகவும், தனது பங்களாவுக்கு அருகிலேயே இவ்வாறு சிலரை தான் பார்த்ததாகவும் தெரிவித்தார். இவ்வாறு சகோதரிகளை தெருத்தெருவாக கருணாநிதி அலையவிட்டிருக்கிறார் என்றும் குற்றம் சாட்டினார். இவ்வாறு கஷ்டப்படும் சகோதரிகளுக்காக தானும் இனி இவ்வாறே காட்சி அளிக்கப்போவதாகவும் தெரிவித்தார்.

கூட இருந்த உதவியாளர்கள், இவ்வாறு மேக்கப் செய்ய 100 மேக்கப் நிபுணர்களை அதிமுக நியமித்திருக்கிறது என்றும், அம்மா இதுபோன்ற கிழிந்த புடவைகளை உடுத்துவதற்காக நல்லி சில்க்ஸ் நிறுவனத்தையே அம்மா வாங்கியிருக்கிறார்கள் என்றும் தெரிவித்தார்கள். கிழிந்த புடவையில் காட்சிதரும் அம்மாவுக்கு முன்னைப்போலவே இப்போதும் ஓட்டு போட்டு அதிக ஓட்டு வித்தியாசத்தில் ஜெயிக்கவைக்கவேண்டும் என்றும் அதிமுக தமிழ்மக்களை கேட்டுக்கொள்கிறது என்றும் அதிமுகவின் அறிக்கை கூறுவதாக நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

***

மூப்பனார் மெளன அஞ்சலி

மூப்பனார் மெளன அஞ்சலி செலுத்துகிறார். யாருக்கு என்றுதான் தெரியவில்லை. அவர் எப்போதுமே மெளனமாக இருக்கிறார் என்று நிருபர்கள் தமாக நிர்வாகிகளை கேட்டதற்கு, அதற்குத்தான் ஒரு சேஞ்சுக்கு இப்போது மெளன அஞ்சலி செலுத்துகிறார் என்று பதில் சொன்னார்கள்.

எத்தனை நேரம் மெளன அஞ்சலி என்று நிருபர்கள் கேட்டதற்கு, தேர்தல் முடியும் வரை என்று மூப்பனாரின் உதவியாளரிடமிருந்து பதில் வந்தது.

***

வன்னிய ராஜீவ் காங்கிரஸ் உதயம் ?

தேசீய முன்னணியில் வன்னிய ஜாதி கட்சி ஒன்று வேண்டும் என்று தேசீய முன்னணியினர் விரும்புவதால், வாழப்பாடி ராமமூர்த்தி தன் கட்சியை வன்னிய ராஜீவ் காங்கிரஸ் என்று மாற்றிவிடலாமா என்று தீவிரமாக யோசித்துவருவதாக நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ராஜீவை வன்னியராக்கினால் சோனியா கோபித்துக்கொண்டால் என்ன செய்வது என்றும் வாழப்பாடி ராமமூர்த்தி யோசித்துவருவதாக பலதரப்பட்ட வட்டாரங்கள் கூறுகின்றன.

ராஜீவை வன்னியராக்கினால், வன்னிய குலம் கொதித்தெழும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் தீவிரவாத ஆதரவாளர்கள் தெரிவிப்பதாவும் நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுசம்பந்தமாக கலைஞரை பேட்டிகண்டனர் நிருபர்கள். அதற்கு பதிலாக கலைஞர் ‘ராஜீவ் அன்னியரல்ல அவர் வன்னியருமல்ல அவர் சென்னியர், சீர்பட்ட மண்ணியர், தரம் கெட்ட கண்ணியர், தாரையாய் ஆன திண்ணியர், கூரையாய் ஆன விண்ணியர், பண்பட்ட பண்ணியர், .. ‘ என்று சகட்டுமேனிக்கு கவிதை வாசிக்க ஆரம்பித்தால், நிருபர்கள் மெதுவாக தலைமறைவானார்கள் என்று அதே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

***

நம்பியார் திமுக ஆதரவில் தேர்தலில் நிற்பாரா ?

நம்பியார் தேர்தலில் நின்றால் அவரை தோற்கடிக்க எம்ஜியாரின் விசிலடிச்சான் குஞ்சுகள் தயாராவதாக ஒரு உளவுத்துறை ஸ்தாபனம் தெரிவித்த செய்தியை இன்னொரு உளவுத்துறை ஸ்தாபனம் தீவிரமாக மறுத்திருக்கிறது.

நம்பியாரை தேர்தலில் நிறுத்துவதிலிருந்து கருணாநிதி எவ்வளவு பெரிய எம்ஜியார் விரோதி என்பது உலகத்துக்கு வெட்ட வெளிச்சமாகிறது என்று ஜெயலலிதாவின் கட்சியும் இப்போது அவருக்கு அரசியல் ஆலோசகராக இருக்கும் சோவும் தெரிவித்தார்கள்.

சபரிமலைக்குப் போய் அங்கேயே சாமியாராக தங்கிவிட்ட நம்பியார் இந்த செய்திகள் சம்பந்தமாக பேட்டிகாணச் சென்ற நிருபரிடம், நெற்றியைச் சுருக்கி, புன்முறுவல் பூத்து, எலுமிச்சம்பழத்தை கைக்குள் வைத்து கைகளை தன் நம்பியார் பாணியில் கசக்கி நிருபர் மீது தெளித்து ‘போடா, போய் உன்னையே நீ செருப்பால அடிச்சிகிட்டு வா.. ஹெஹ்ஹெஹ்ஹே ‘ என்றார்.

ஒரு பாட்டிக்குலத்திடம் இந்த செய்தி பற்றி கேட்டதற்கு ‘நான் அப்பவே எம்ஜியாருக்கிட்ட சொன்னேன். நீதான் ராஜாவா ஆகப்போறேன்னு. ஆனா அவரை நம்பியார்கிட்ட மட்டும் ஜாக்கிரதையா இருக்கச்சொன்னேன் ‘ என்று கருத்து தெரிவித்தார். இவர் முன்பு எம்ஜியார் காலத்தில் தாய்க்குலமாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

***

குட்டி எம்ஜியார் சுதாகரன் இன்று குட்டி எம்ஜியார் சுதாகரன் கோவிலுக்கு அடிக்கல் நாட்டினார்.

மதுரை அனுப்பானடியில் எம்ஜியார் கோவில் இருப்பது தெரிந்ததே. திண்டுக்கல்லில் எம்ஜியார் கோவிலுக்கு குட்டி எம்ஜியார் சுதாகரன் அடிக்கல் நாட்டி இருப்பதும் தெரிந்ததே.

இப்போது குட்டி எம்ஜியார் சுதாகரன் ஆதரவாளர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க, சென்னை மெரீனாக் கடற்கரையில் குட்டி எம்ஜியார் சுதாகரனுக்கு ஒரு பிரம்மாண்டமான கோவில் கட்ட சுதாகரன் இன்று அடிக்கல் நாட்டுகிறார்.

இதற்காக பட்டி தொட்டிகளிலிருந்தெல்லாம் கூட்டம் லாரி லாரியாக சென்னை வந்து கொண்டிருக்கிறது. அவருக்கு திருமணம் நடந்த அதே இடத்தில் கோவில் கட்ட வேண்டும் என்று ஆதரவாளர்கள் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

இதற்காக முன்பு போலவே லல்லு பிரசாத் யாதவ், பிலிப்பைன் தேசத்து எஸ்ட்ராடா, இமெல்டா மார்க்கோஸ், சோனியாகாந்தி, தேவே கவுடா போன்றோருக்கும் இன்னும் பல உலகமகா ஊழல் பேர்வழிகளுக்கெல்லாம் அழைப்பிதழ் தங்கத்தட்டில் எழுதப்பட்டு அனுப்பப்பட்டிருக்கிறது என்று நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கோவிலில் கருவரையில் சுதாகரனும், வெளியே அவரை வணங்குவது போல எம்ஜியார் சிலையும் வைக்கப்படும் என்றும் நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சரோஜாதேவி, ஜெயலலிதா, வெண்ணிறஆடை நிர்மலா , கவிதா, லதா, கே ஆர் விஜயா போன்ற எம்ஜியார் கதாநாயகிகளுக்கெல்லாம் சிலைகள் உண்டா என்ற கேள்விக்கு, அது எம்ஜியார் பக்தர்கள் விரும்பினால், நாயனார்கள் போல பிரகாரத்தில் சிலை வைக்கப்படலாம் என்று பெருந்தன்மையாக சுதாகரன் பதிலளித்தார்.

***

மேற்கண்ட நிகழ்ச்சிகள் அனைத்தையும் தெரிவித்தவர்கள் நம்பத்தகாத வட்டாரங்கள்.

Series Navigation

சொதப்பப்பா

சொதப்பப்பா