இவர்களது எழுத்துமுறை – 39 பி.வி.ஆர் (பி.வி.ராமகிருஷ்ணன்

This entry is part [part not set] of 40 in the series 20110522_Issue

வே.சபாநாயகம்.


1. என்னுடைய எழுத்தில் நான் அதிகமாகக் கையாள்வது மனித உணர்ச்சிகள்
தாம். சமூகம், நாடக மேடையில் ‘காட்சி ஜோடனையாக’ மட்டும் இருந்தால்
போதும். அதுவே நாடகமாக வேண்டாம். இந்தக் கருத்தின் அடிப்படையில்தான்
என்னுடைய எல்லாக் கதைகளும் நாவல்களும் எழுதப் பட்டிருக்கின்றன.
மனிதனுடைய உணர்ச்சிகளுக்கும், அவனுடைய விசித்திரப் போக்குகளுக்கும்
தான் நான் முக்கியத்துவம் கொடுக்கிறேன்.

2. அன்றாடம் சந்திக்கும் பஸ் ரயில் பிரயாணிகள், காரியாலய சிப்பந்திகள்,
டாக்சிக்காரன், பிச்சைக்காரன், பெரிய மனிதன், சிறிய மனிதன் எல்லோரும்
பிரும்மாண்டமான பட்டைக் கண்ணாடியின் பல பட்டைகள். இவர்கள் எல்லாக்
காலத்திலும் இருக்கிறவர்கள். இவர்களைத் தான் என் எழுத்தில் அறிமுகப்
படுத்த ஆசைப்படுகிறேன். முயற்சி செய்கிறேன்.

3. நான் எவ்வளவு தூரத்துக்கு, நான் பார்த்த, சந்தித்த, பழகிய ஆண் பெண்
களின் சிந்தனைகளையோ, உணர்ச்சிகளையோ வெற்றிகரமாக என் எழுத்தில்
கொண்டு வந்திருக்கிறேன் என்று எனக்குத் தெரியாது. ஆனால் ஒன்று மட்டும்
உறுதி. வெற்றியை நாடி நான் உழைக்கிறேன்.

4. வசதியான குடும்பத்தில் பிறந்து, வளர்ந்து, வயிறு வாடாமல் இருக்க ஒரு
நல்ல வேலையிலும் உள்ளவன் நான். குடும்பப் பிரச்சினைகளோ, வறுமை
வாழ்க்கையோ அறியாதவன். இதனால் எனக்கு நிறையப் படிக்கவும்,
சிந்திக்கவும், எழுதவும் நேரம் கிடைக்கிறது. அந்த நேரத்தில் உழைக்கிறேன்.
எழுத்தாளனும் ஒரு தச்சனைப் போல, பொற்கொல்லனைப் போல உழைத்து
உழைத்துத்தான் முன்னுக்கு வர முடியும் என்பது என் சித்தாந்தம். ‘நான் இன்று
மூடில் இல்லை. எழுதக் கதை வரவில்லை’ என்று கூறும் எழுத்தாளன் பிறரையும்
ஏமாற்றி தன்னையும் ஏமாற்றிக் கொள்கிறான் என்று நான் நினைக்கிறேன்.

5. கதைகளைப் படிக்கும் போது, எல்லா வாசகர்களுக்குமே, எழுத வேண்டும்
என்ற ஆவல் பிறக்கும். ஏன் வெறி கூடக் கிளம்பும். என்னைப் பொறுத்த
வரையில், நல்ல வேளையாக கதைகளைப் படிக்கும் போதோ, படித்த பின்போ
எழுத ஆசையோ வெறியொ தோன்றுவதில்லை. என் கதாபாத்திரங்கள், என்
வாழ்க்கையிலேயே, என்னைச் சுற்றிலுமே, பல வீடுகளிலுமே இருப்பதால்
நான் கதை படித்துக் கதை எழுத வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாகவில்லை.

6. என்னுடைய சிறுகதைகளிலும் நாவல்களிலும் சம்பவங்கள் நிறையவோ,
பெரிதாகவோ இருப்பதில்லை. இருக்க வேண்டிய அவசியமும் எனக்குத்
தோன்றவில்லை. நான் முக்கியத்துவம் கொடுப்பது, ஜீவனுள்ள உரையாடல்
களுக்கும் ,மனித உணர்ச்சிகளின் பிரதிபலிப்புகளுக்கும் தான். உரையாடல்
களின் மூலம் பாத்திரங்களின் குணாதிசயங்களைக் கூறுவது தான் சிறந்த
முறை என்று கருதுகிறேன்.

7. ‘கலையைத் தெரியப்படுத்தி கலைஞனை மறைத்துக் கொள்வது தான்
கலையின் விளையாட்டு’ என்றார் ஆஸ்கார் ஒயில்டு. அது நூறுக்கு நூறு
உண்மை. எப்போது எழுத்தாளன் தன் தலையை நீட்டி, கலையம்சத்தை
உள்ளே தள்ளுகிறனோ அப்போதே, அவன் மடியும் முன்பே அவனுடைய
எழுத்து மடிந்து விடுகிறது. என் எழுத்து எனக்கு முன்னால் மடிய நான்
ஆசைப்படவில்லை. 0

Series Navigation

வே.சபாநாயகம்

வே.சபாநாயகம்