பறவையின் தடங்கள் மலாய் மொழிக்கவிதைகள்

This entry is part [part not set] of 42 in the series 20110508_Issue

பாவண்ணன்


கோட்டோவியமாக ஒரு கருங்குருவியின் சித்திரம். மழையில் நனைந்ததைப்போன்ற அதன் இறகுகள். தரையில் பட்டுத் தெறிக்கும் மழைத்துளிகள். அருகில் ஒரு வேலித்தடுப்பு. வெளிர்மஞ்சள் நிறப்பின்னணியில் இக்காட்சி. படிப்பதற்கு இத்தொகுப்பை கையில் எடுத்ததுமே இந்தப் படம்தான் முதலில் என்னைக் கவர்ந்தது. தலைப்பும் அதில் இடம்பெற்றிருக்கும் பறவை என்னும் சொல்லும் என்னைக் கவர்ந்த அடுத்தடுத்த அம்சங்கள். பறவை ஒருபோதும் சலிப்பை வெளிப்படுத்தாத உயிரினம். சுறுசுறுப்பும் சுதந்திரமும் அதன் பண்புகள். பறவையை விரும்பாத மனம் உலகிலேயே இருக்காது என்பது என் நம்பிக்கை. பார்க்கும் கண்ந்தோறும் நம் மனத்தில் ஊற்றெடுக்கும் உற்சாகத்துக்கு அளவே இல்லை. பூமிக்கு ஒரு சுழல்வட்டப்பாதை இருப்பதுபோல பறவைக்கும் ஒரு பாதை இருக்கிறது. வட துருவத்திலிருந்து தென்துருவத்தை நோக்கியும், பிறகு தென்துருவத்திலிருந்து வடதுருவத்தை நோக்கியும் மாறிமாறிப் பறந்தபடி உள்ளது பறவையினம். வலசைபோதல் அதன் வாழ்வியல் பண்பு. தொகுப்பின் தலைப்பு பல திசைகளில் சிந்தனையைத் தூண்டிவிடுகிறது.
தொகுப்பில் நாற்பதுக்கும் மேற்பட்ட கவிதைகள் உள்ளன. எல்லாம் மலாய் மொழிக்கவிதைகள். மலேசியாவில் வாழ்கிற பா.அ.சிவம் இக்கவிதைகளைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். ஒரு மொத்த தொகுப்பும் மலாய் மொழிக்கவிதைகளைப் பிரதிநிதித்துவப்படுத்துவதுபோல உள்ளது. இவ்வகையில் சிவம் மேற்கொண்டிருக்கும் முயற்சி ஒரு முதல் படி என்றே குறிப்பிடவேண்டும்.
காற்றும் மழையும் பறவையும் பல கவிதைகளில் மீண்டும் மீண்டும் இடம்பெறுகின்றன. ஒரு காட்சியாக சித்தரிக்கப்படும் கவிதைகள் சில சமயங்களில் மொட்டுவிட்ட கோலத்திலேயே நிற்கின்றன. சில சமயங்களில் விரிவடையும் தன்மைகொண்டவையாக நிற்கின்றன. பலமும் பலவீனமும் சம அளவில் கொண்ட கவிதைகள் இத்தொகுப்பில் உள்ளன.
’மழை’ என்கிற தலைப்பில் உள்ள கவிதை மிகச்சிறிய ஒரு காட்சியைப் படம்பிடித்தாலும் ஆழமான ஒரு மனச்சித்தரிப்பையும் கொண்டிருப்பதைப் பார்க்க முடிகிறது.
சன்னலைத் திறந்தபோது
கிளைகளில் மழை
வழிந்துகொண்டிருந்தது
வறண்ட நிலத்தில்
காதலைக் கசிந்தவாறு…
இதுதான் கவிதை. கேளடி தோழி அல்லது பாருங்கள் அம்மா என்று ஒரு விளியை, கவிதையின் தொடக்கத்தில் இருப்பதாக நினைத்துக்கொண்டால், இதை ஒரு குறுந்தொகைக் கவிதையின் காட்சி என்று தாராளமாகச் சொல்லிவிடலாம். அந்தக் கிளையின் இடத்தில் ஒரு ஆண் அல்லது ஒரு பெண்ணை வைத்துப் பார்க்கும்போது கவிதையின் உலகம் விரிவடைவதை உணரலாம். அப்போது மழை என்பது, மழையல்ல, பொங்கிவரும் கண்ணீர் ஊற்று.
பறவை என்றொரு கவிதையில் இடம்பெறுவதும் ஒரு காட்சி. ஒரு பறவை எங்கிருந்தோ வந்து ஒரு மரக்கிளையில் அமர்ந்து விளையாடுகிறது. ஆட்டத்தின் இடையே அதன் இறகுகள் பூமியில் உதிர்கின்றன. பிறகு அது பறந்து விலகிச் செல்கின்றன. ஒரு வாழ்வனுபவத்தையே இக்கவிதை அமைதியான ஒரு மொழியில் சித்தரிக்கிறது.
’ஒருமுறை எனது கால்களைத் தீண்டிய அலையை மறுமுறை நான் அறியப் போவதில்லை, எப்போதுமே’ என்பது மற்றொரு கவிதையின் வரி. ஒரு தீண்டல். ஒரு சிலிர்ப்பு. ஒரு வாய்ப்பு. ஒரு அனுபவம். அதற்குள் என்ன பெறுகிறோமோ அதுவே நமக்குக் கிட்டும் பேரனுபவம். பிறகு நிகழும் ஒவ்வொரு தீண்டலிலும் அந்த முதல் தீண்டலைப் பொருத்திப்பொருத்திப் பார்த்து, அதுவோ, அதுவோ எனக் கற்பனையில் மூழ்குகிறது மனம். ஆனால் அது அதுவல்ல.
இப்படி சில கவிதைகள் உயர்வான அனுபவத்தை வழங்குவதாக இருந்தாலும் பல கவிதைகள் மேலெழும்ப வலிமையின்றி தரையிலேயே நிற்கின்றன. சிவம் எடுத்துள்ள முயற்சி இன்றைய சூழலில் மிக முக்கியமானது. இடைவிடாது அவர் தொடர்ந்து செயல்படவேண்டும். எதிர்காலத்தில் மலாய் மொழிப்படைப்புகளுக்கு அவர் வழியாக தமிழில் ஓர் இலக்கியமுகம் உருவாகக்கூடும்.

(பின்னர் அப்பறவை மீண்டும் திரும்பியது. மலாய் மொழிக்கவிதைகள். தமிழில் மொழிபெயர்த்தவர்: பா.அ.சிவம். வல்லினம் பதிப்பகம். மலேசியா)

Series Navigation

பாவண்ணன்

பாவண்ணன்