கீழவெண்மணி நிகழ்வும் பதிவும்

This entry is part [part not set] of 46 in the series 20110417_Issue

ப. இரமேஷ்,


மக்களாட்சித் தத்துவத்தை முதன்மையாகக் கொண்ட நாடாக விளங்குகின்ற இந்திய நாட்டில் இன்று, மனிதநேயப் பண்புகள் கொஞ்சம், கொஞ்சமாக மனிதர்களிடமிருந்து நீங்கப்பெற்று, மனித மனங்கள் இன்று வெறுமையாகக் காட்சியளிக்கின்றன என்று கூறலாம். மக்களாட்சிப் போக்குக்கு எதிராக மனிதநேயப் படுகொலைகள் வர்க்கப் போராட்டங்களின் வழியாக ஊடுருவி இச்சமுதாயத்தை அச்சமூட்டும் வகையில் அமைந்துள்ளன என்பதை, கீழவெண்மணி நிகழ்வு உணர்த்துகின்றது.

கீழவெண்மணியும் அன்றையப்போக்கும்

முந்தைய ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்திலும் தற்போதைய நாகை மாவட்டத்திலும் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம் கீழவெண்மணி ஆகும். இக்கிராம் திருவாரூரில் இருந்து இருபத்தைந்து கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. 1968 ஆம் ஆண்டு நடந்த ஒரு நிகழ்வின் காரணமாக உலக மக்கள் பலரின் கவனத்தை ஈர்த்த கிராமமாக இது விளங்குகிறது. இக்கிராமத்தில் குடியானவர்களும், தாழ்த்தப்பட்டவர்களுமாகிய இரண்டு சாதினரும் தனித்தனித் தெருக்களில் தம் வசிப்பிடங்களைக் கொண்டுள்ளனர். இன்றும் அந்த நிலைக் காணப்படுகிறது. வெண்மணியைப் பற்றி, சோலை சுந்தரபெருமாள் தம் நூலில்,
தேவூருக்குத் தெக்கால கீழவெண்மணி நஞ்சையும் புஞ்சையும் முப்பது வேலி மாவட மரவடையோட மவுந்து போயிருக்கிற ஊரு1
என்று குறிப்பிடுகிறார்.
வெண்மணி கிராமத்தில் உள்ள தெருக்களைப் பற்றிக் கூறும்பொழுது.
தெருன்னா அப்படியே ஒழுங்காவா இருக்கு? குடிசைக திக்காலுக்கு திக்கா ஒன்னப் பாத்துக்கிட்டு நிக்குது. தெருவும் சந்தும் பொந்துமா அதுக்கு எடையில நாலஞ்சி புளியமரமும் இருக்கு
என்று தெருக்களின் அமைப்பைக் கிராம மக்களே எடுத்துக் கூறுவதுபோல் நயமாகக் கூறியுள்ளார். இதன் மூலம் கீழவெண்மணி கிராமத்தின் அமைவிடத் தன்மைய அறிந்துகொள்ள முடியும்.
ஏழையென்றும் அடிமையென்றும்
எவனுமில்லை ஜாதியில்
இழிவு கொண்ட மனிதர் என்பர்
இந்தியாவில் இல்லையே
என்ற மகாகவி பாரதி பாடினார். ஆனால், அதற்கு நேர்மாறான சமூக அமைப்பையே இன்றும் நம்மால் காணமுடிகிறது. கீழவெண்மணியிலும் நிலபிரபுக்களின் ஆதிக்கம் மேலோங்கியிருந்ததற்கான சான்றுகள் மிகுதியாக உண்டு. பண்ணையாட்களை அடிமைகளாக நடத்தினர். அவர்கள் கூறுவதைக் கேட்டுக் கொண்டு, கொடுக்கின்ற கஞ்சியையோ கூழையோ குடித்து வாழ்க்கை நடத்தினர். அன்று தஞ்சை மாவட்டம் முழுவதும் பண்ணையடிமை முறை எப்படி இருந்தது என்பதை அருணனின் பின்வரும் கூற்று உணர்த்தும்,
அன்று தஞ்சைத் தரணியில் பண்ணையாள் முறை என்பது இயல்பான மனித வாழ்வு போல நடைமுறையில் இருந்தது. இந்த முறையின்படி ஒரு குடும்பம் முழுமையும் பரம்பரைப் பரம்பரையாக ஒரே நிலப்பிரபுவிடம் வேலைபார்க்கும். குடும்பத்தின் ஆண்மகன் வயல் வேலை பார்ப்பார். அவரது மனையாள் மாட்டுத் தொழுவத்தில் சாணி அள்ளுவர். இவர்களின் ஆண் பிள்ளைகள் மாடுமேய்க்கும் பெண் பிள்ளைகள் புல் அறுத்து வரும். அவர்களுக்கென்று சொந்த வாழ்வு சொந்த எதிர்காலம் ஏதுமில்லை. அவர்கள் அறிந்ததெல்லாம் அவர்களது ஆண்டையே. அவர்கள் கண்ட உலகமெல்லாம் ஆண்டை காட்டியதே. அவர்கள் அண்ணாந்து பார்த்து பெருமூச்சு விட்டதெல்லாம் ஆண்டையின் குடும்பமே. அங்கே தொடங்கி அங்கேயே முடிந்து விடுவது அவர்களது வாழ்வு மட்டுமல்ல, அவர்களது சாதியினரின் வாழ்வும்கூட கிட்டத்தட்ட அடிமைநிலை. சொல்லி வைத்தாற்போல அனைவரும் தாழ்த்தப்பட்ட மக்கள்
என்னும் இக்கூற்றுக்கு கீழவெண்மணி சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கியது.
அப்படிக் கூறுவதால், கீழவெண்மணியில் மட்டும் பண்ணையாள் அடிமை முறை இருந்ததாகக் கருத முடியாது. அக்காலக் கட்டங்களில் பெரும்பாலான கிராமங்களில் இந்தப் பண்ணையாள் அடிமை முறை இருந்துள்ளது. அதை இன்றும் பல கிராமங்களில் காணமுடியும்.

கீழவெண்மணி பிரச்னைக்கான காரணங்கள்

ஒவ்வொரு செயலுக்கும் ஒரு எதிர்வினைகள் உண்டு என்ற அடிப்படையில் சமூகத்தில் ஏதாவது ஒரு விதத்தில் போராட்டங்களும் பிரச்சினைகளும் வெடிக்கின்றன. கீழவெண்மணியில் 1968ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் தேதி, தாழ்த்தப்பட்ட மக்கள் 44 பேர் உயிரோடு எரிக்கப்பட்டனர். இந்த நிகழ்வின் பின்னணி குறித்து அறிய வேண்டியுள்ளது.
பண்ணையாட்கள் மத்தியில் ஏற்பட்ட விழிப்புணர்வினால், பண்ணையாள் அடிமை முறை என்ற நிலை கொஞ்சம் கொஞ்சமாக மாறத் தொடங்கியவுடன், அம் மாற்றத்தையும் வளர்ச்சியையும்கண்டு நிலப்பிரபுக்கள் அஞ்சத் துவங்கினர். இதனால் அவர்களுக்கு மனிதநேயமற்ற முறையில் பல கொடுமைகளைச் செய்தனர். தங்களின் ஆதிக்கம்தான் மேலோங்கி நிற்க வேண்டும் என்ற நிலப்பிரபுக்கள் விரும்பினர். இக்காலக் கட்டத்தில்தான் கீழ்வெண்மணியில் கூலி உயர்வுக் கேட்டுப் போராடினர், இந்தப் பிரச்சினை வர்க்கப் போராட்டமாக உருவெடுத்தது.
கூலி உயர்வும் விளைச்சலில் பங்கும்
தொழிலாளி வர்க்கம் பொருளாதார அடிப்படையில் தங்களை மேம்படுத்திக் கொள்ள விரும்பின. அதனால் இதற்குமுன் ஆண்டாண்டு காலமாக வழங்கப்பட்ட கூலியை விட கூடுதலான கூலியும் விளைச்சலில் பங்கும் கேட்டுப் போராடியது. அவர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்க மறுத்து, வெளியூரில் இருந்து ஆட்களை அழைத்து வந்து வேலை செய்ய வைத்தனர். நிலப்பிரபுக்கள் மனிதநேயம் இல்லாமல் அவர்களைப் பழிவாங்கியதை எந்த விதத்திலும் நியாயமாகக் கருத முடியாது. இதனால் விவசாயிகள் ஒன்றுபட்ட விவசாயிகள் இயக்கத்தையும் நிலவுடைமையாளர்கள் நெல் உற்பத்தியாளர் சங்கத்தையும் தோற்றுவித்தனர்.
விவசாயிகள் இயக்கத்தின் கோரிக்கைகள் இயல்பாகவே விளைச்சலில் கூடுதல் பங்கு. கூடுதல் கூலி, என்பதான பொருளாதாரக் கோரிக்கைகளாக இருந்தபோதிலும் அது பரம்பரை பரம்பரையாக இருந்து வந்த பண்ணை அடிமைத்தனம் என்னும் கோடூரச் சமூக அமைப்பின் அடித்தளத்தை அசைப்பதாக இருந்தது
என்று அருணன் குறிப்பிடுகிறார். இதன் மூலம் விவசாயிகள் இயக்கத்தின் நோக்கம் புலனாகிறது.

கீழவெண்மணி நிகழ்வை முன்வைத்து எழுந்த பதிவுகள்

சமுதாய நிகழ்வுகளை உற்று நோக்கி அதன் தாக்கத்தாலும் அனுபவத்தாலும் ஏற்படுகின்ற உணர்வுகளைச் சமூக அக்கறையோடு அவற்றுக்கு ஏதாவது ஒரு வடிவம் கொடுத்து மக்களுக்கு வெளிப்படுத்துகின்ற பணியைச் செய்து வருகின்றனர் இலக்கியவாதிகள். கீழவெண்மணியில் நடந்த படுகொலையின் பாதிப்பால் எழுத்தாளர்களும் கவிஞர்களும் அன்றைய காலகட்டங்களில் தங்களது எண்ணங்களைக் கவிதைகளாகவும், கட்டுரைகளாகவும், கதைகளாகவும், நாவல்களாகவும் வெளிப்படுத்தினர். அக்காலத்தில் எழுந்த பதிவுகளில் ஒருசில மட்டும் ஈண்டு ஆய்வின்பொருட்டு சீர்தூக்கிப் பார்க்கப்படுகின்றன.
கவிதைகள்
இருபதாம் நூற்றாண்டில் மக்கள் மத்தியில் புதுக்கவிதைகளுக்கு ஒரு முக்கியத்தும் அளிக்கப்ட்டுள்ளது. மக்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வையும் விடுதலை வேட்கையையும் ஏற்படுத்தி நாடு விடுதலை பெறுவதற்கான இலக்கிய ரீதியிலான பங்களிப்புகளில் புதுக்கவிதைக்கும் ஓர் இடம் இருந்துள்ளது. கவிஞனின் மனத்தில் தோன்றுகின்ற உணர்ச்சிகள்தான் கவிதைகளாக வெளிப்படுகின்றன. கவிதையைப் பற்றித் தேசிய விநாயகம் பிள்ளை குறிப்பிடும்பொழுது
நினைத்தவுடன் வருவது கவிதையல்ல
நெஞ்சு கனத்தவுடன் வருவது கவிதை
என்று குறிப்பிடுகிறார். அதுபோல கீழவெண்மணி நிகழ்வு கண்டு நெஞ்சம் கனத்துப்போய் கவிஞர்கள் பலரிடமிருந்து அது பற்றிய பல கவிதைகள் எழுந்தன. அவை வருமாறு.

வெ.நா. மூர்த்தி

மார்க்சிய சிந்தனையுடைய கவிஞர் வெ.நா.மூர்த்தி கீழவெண்மணி நிகழ்வின் பாதிப்பால் “வெண்மணிக் கொடுமை” என்ற தலைப்பில் இவ்வன்செயலை,
வரலாறு காணா ஒரு சோகக் காட்சி – வெண்
மணி தன்னில் நடந்தது பாரம்மா – அந்த
வன் கொடும் செயல்பற்றிக் கேளம்மா
என்று தொடங்கி
கொலை காரப் பண்ணையார்
தமை வேண்டிக் கூலி நெல்
கூட்டியே கேட்டதற்காகக்
கொடுமையிலும் கொடுமையம்மா
குடிசை எல்லாம் எரிந்ததம்மா
உடல் துள்ள உயிர் துள்ள
நாற்பத்து நால்வரை
உயிரோடு எரித்தார்கள் அம்மா
என்று பண்ணையாரின் அதிகாரப் போக்கைக் குறிப்பிட்டுச் சாடுகிறார். வெ.நா.மூர்த்தி. இறுதியாக அந்த நிகழ்வினைக் கண்டு இவ்வுலகமே கண்ணீர் வடித்தது என்றும், மேலும் நீதி என்ற ஒன்று இருந்திருந்தால் அது அன்றே இறந்திருக்கும். நேர்மை என்ற ஒன்று இருந்தால் அது அன்றே ஒழிந்திருக்கும் என்றும் உணர்ச்சிப் பொங்க
குண்டர்கள் செயல் கேட்டு
குவலயம் அழுத தம்மா
நீதியிருந்தால் இறந்திருக்கும்
நேர்மை இருந்தால் அன்றே
ஒழிந்திருக்கும்
என்று சாடுவதைக் காணமுடிகிறது.

நா. காமராசன்

கீழவெண்மணி நிகழ்வைப் பற்றித் கவிதைகளில்
கள்ளமனப் பணக்காரர் ஐந்து பேரும்
கண்மூடித் தூங்குகின்ற வீட்டை எல்லாம்
அள்ளியிட்டார் நெருப்பினிலே வெண்மணிக்கு
அவர் வைத்த நெருப்வரை எரித்த தென்றார்
என்று, ‘கத்தி எடுத்தவன் கத்தியால் சாவான்’ என்பதுபோல அந்த கொலைக்காரர்கள் வைத்த நெருப்பு அவர்களையே அழித்தது என்று தம் மனக் குமுறலை வெளிப்படுத்துகிறார் நா. காமராசன்.

இன்குலாப்

பல சமுதாயப் பிரச்சினைகளைத் தம் கவிதைகள் மூலமாக வெளிப்படுத்தும் இன்குலாப் கீழவெண்மணி நிகழ்வைப் பற்றி,
வெண்மணித் தீப்பந்தம் – உலா வரும்
வீதியிலே எரிகிறது
கண்மணிக் குழந்தைகளோ தோரணைக்
கொடியாய்த் தெரிகிறது
என்று கீழவெண்மணிக் குடிசைகள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது பற்றியும் அதில் குழந்தைகளும் உயிரோடு எரிக்கப்பட்டனர் என்பதையும் மனவேதனையுடன் வெளிப்படுத்துகிறார்.
கீழவெண்மணியில் இழைக்கப்பட்ட கொடுமைக்கு எதிராகப் பாதிக்கப்பட்ட மக்கள் ஒன்றுதிரண்டு போராடினால் வெற்றி பெறமுடியும் என்பதை,
வெண்மணியில் வெந்துவிட்ட கண்மணிக் குழந்தைகளே
வெல்லும் நாள் வெகுதொலைவில்லையே – உம்மை
வென்றுவிட்டதாய் மகிழும் பண்ணை முதலாளிகளைக்
கொன்றொழிக்கும் நாள் வெகுதொலைவில்லையே
என்றும் இன்குலாப் குறிப்பிடுகிறார்.

தணிகைச் செல்வன்

கீழவெண்மணியில் கொல்லப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நீதிக் கிடைக்கவில்லை என்பதைத்தணிகைச் செல்வன்,
வெண்மணியில் மாமிசங்கள் கருகியவாடை – வீசி
விலகுமுன்னே கண்டதென்ன நீதியின் பாதை?
வெண்மணியின் தீயில் செத்தான் நீதிதேவனும் – . எங்கள்
வேதனையில் வளருகிறான் ஜாதி தேவனும்
என்று இச்சமூகத்தின் கண்மூடித்தனமானப் போக்கைச் சாடுகிறார்.

பழனிபாரதி

கீழவெண்மணி மற்றும் விழுப்புரத்தில் நடந்த சாதிக் கொடுமைகளைப் பற்றி ‘நெருப்புப் பார்வைகள்’ என்ற நூலில்,
வெண்மணி, விழுப்புர
வழக்குகளில் நீங்களும்
சம்பந்தப்பட்டிருக்கிறீர்கள்
என்று தீக்குச்சியைக் குறிப்பிடுகிறார் பழனிபாரதி. இதன் மூலம் வெண்மணி நிகழ்வைப் பற்றிய அவரது உணர்வு புலனாகிறது.

பாப்ரியா
இவரும் கீழவெண்மணி மற்றும் 1978ஆம் ஆண்டு விழுப்புரத்தில் ஏற்பட்ட மோதலில் தாழ்த்தப்பட்டோர் மேல்சாதியினரால் தாக்கப்பட்ட நிகழ்வைப் பற்றி,
அன்று
வெண்மணியில் வெந்த
சடலங்களுக்கு
விழிகளால் விளக்கேற்றி
வேதனையுடன் விழித்திருந்தோம்
இன்று
விழுப்புரம் மீண்டும்
வெண்மணியானது
விழுந்த கரிப்புகையால்
தீய்ந்தது
என்று பாப்ரியா குறிப்பிடுகிறார். மேலும், கீழவெண்மணிப் படுகொலையில் பெண்கள் அதிகம் இறந்தார்கள் என்பதை,
நீங்கள் அடுப்பங்கரையில் நின்று
அரிசியை வேக வைப்பீர்கள்
பருப்பை வேக வைப்பீர்கள்
உங்களையே வேக வைப்பதும் உண்டு
ஆம்
வெண்மணியில் வெந்ததில்
பெண்மணிகளே அதிகம்
என்று தமது கவிதைகளில் எடுத்துரைக்கிறார்.

கா. கார்க்கி
கீழவெண்மணி வெங்கொடுமையைப் பற்றிக் கூறும் கார்க்கி,
வெண்மணியில் எரிந்தவர்கள்
மீண்டும் வருகிறோம்
வெங்கொடுமைத் தீயை நெஞ்சில்
ஏந்தி வருகிறோம்
என்று கீழவெண்மணியில் மனிதர்கள் கொளுத்தப்பட்ட அவலத்தைச் சாடுகிறார். இவை போன்று கவிஞர்கள் பலர் அன்றைய காலக்கட்டத்தில் தங்கள் மனத்தில் தோன்றிய உணர்வுகளைக் கவிதைகளாகப் பதிவு செய்தனர்.

ப. இரமேஷ்,
பகுதிநேர முனைவர் பட்ட ஆய்வாளர்,

Series Navigation

ப.இரமேஷ்

ப.இரமேஷ்