தமிழ்க்காப்பியங்களில் வணிகப் பயணம்

This entry is part [part not set] of 39 in the series 20110410_Issue

ச. பாரதிபிரகாஷ்,


முன்னுரை
மனிதகுலம் நாடோடிக் குழுக்களாக வாழ்க்கை நடத்தத் தொடங்கியது முதல் ‘பயணம்’ என்ற கருத்துருவாக்கமும் தோன்றி விட்டது . பல்வேறு மொழி நாடோடிப் பாடல்களிலும் பயணம் பற்றிய பாடல்கள் உள்ளன. ஆயின் இவை அனைத்தும் எந்தக்கால கட்டத்தில் இலக்கியமாக வளர்ந்தன என்பது தெரியவில்லை. இது போலவே காப்பியங்களும் நீண்ட கதை சொல்லும் மரபின் தொடர்ச்சியாகவே பெரும் பாலான மொழி இலக்கிய வரலாறுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது கொண்டு நோக்கும் போது காப்பியங்களும் அவை தோன்றிய காலச் சூழ்நிலையும், சமூகப் பொருளாதாரச் சூழ்நிலையும் ஆய்வுக்கு உரியனவாகின்றன. காப்பியங்களைப் பயணஇலக்கியம் என்ற புது அளவுகோலில் அளவிடும் போது சிற்சில புதிய கருத்துக்கள் மின்னி மறைகின்றன.
பயண இலக்கியம் என்ற துறை தமிழுக்குப் புதியது அல்ல. பயண இலக்கியம் என்ற பொருளில் ஆனால் வேறு பெயர்களில் தமிழ் மொழியில் சில நூல்கள் உள்ளன. ஆற்றுப்படை நூல்களை இவ்வகைப் பாட்டில் அடக்கலாம். பயணம் , சுற்றுலா , செலவு, சேத்ராடனம், பிரயாணம் என்பன பயணம் என்ற பொருளை உள்ளடக்கிய சொற்களே ஆகும்.
பயண இலக்கியம் – வரையறை . பயண இலக்கியம் என்ற சொல்லுக்கு முழுதான வரையறை என்று எதுவும் இல்லை. தமிழ் மொழி அகராதி ‘செலவு’ என்ற சொல்லுக்கு உத்தரவு, செலவிடுதல், பயணம், பெருங்காப்பிய உறுப்புகளுள் ஒன்று, போக்கு, போதல், முடிவு, வழி என்று பொருள் தருகிறது. பயண இலக்கியம் என்பது, பயணம் சென்றவர் தன் சொந்த அனுபவங்களை எழுத்து வடிவில் தருவது என்று தமிழில் பயண இலக்கியம் நூலின் ஆசிரியர் மணிகண்டன் கூறுகிறார். ஆனால் டிராவல் ரைடிஙஸ் இன் இந்தியா என்ற நூலில் ஆசிரியர் ஷோபனா பட்டாச்சார்ஜி , பயண இலக்கியம் என்பது பயணம் தொடர்பான கட்டுரை , கதை, கவிதை, படம் , திரைப்படம் என்று வரையறை செய்கிறார்.
பயணங்கள் மக்களுக்குப் புவியியல் அமைப்பைப் பற்றிய அறிவினைத் தருகின்றன. பயணங்களால் பிற பகுதி மக்களின் பழக்க வழக்கங்கள், நாகரிகம், உணவு முறை, வாழ்க்கை நிலை , தட்ப வெப்ப நிலை, சடங்குகள், விழாக்கள் போன்றவற்றை அதாவது ஒரு பண்பாட்டையே அறிந்து கொள்ள முடிகிறது. பயணங்கள் கூர்ந்து கவனித்தல், நினைவு கொள்ளுதல், தொகைப் படுத்துதல், வகைப் படுத்துதல், வருணித்தல், சுருங்கச் சொல்லுதல் , சுவை படச் சொல்லுதல் முதலிய பண்புடையனவாக இருத்தல் வேண்டும். இவ்வாறு அமையும் பயண இலக்கியங்களே பயண வழி காட்டிகளாக அமைவதோடன்றி, பிறரையும் பயணம் செய்யத் தூண்டுகின்றன.
தொல்காப்பியர் காலத்தில் பயணம் என்ற சொல் பயன்படுத்தப் படவில்லை. தொல் காப்பியத்தில் செலவு என்ற சொல்லே (கிளவியாக்கம் 28) பயணம் என்ற பொருளில் பயன்படுத்தப் பட்டுள்ளது. தமிழ் இலக்கியங்களில் பயணம் பற்றிய குறிப்பு இருந்தாலும் காப்பியங்கள் மட்டுமே பயணத்தைத் தம் உறுப்புகளாகக் கொண்டுள்ளன.
தமிழ்க்காப்பியங்களைத் தொகுத்துப் பார்த்தால் காப்பியத் தலைவன் வணிகம் , தூது, சுற்றுலா, போர் போன்ற காரணங்களுக்காகவே பயணத்தை மேற்கொண்டிருக்கிறான் . சில சமங்களில் அவனுடன் துணைமைப் பாத்திரங்களும் , கிளைப் பாத்திரங்களும் பயணம் செய்கின்றனர். காப்பியத் தலைவனது பயணத்தில் தலைவனின் வாழ்வியல் நன்மையுடன், ஒரு சமூக நன்மையும் ஒளிந்திருக்கிறது. பொருள் தேடும் நோக்கில் மேற்கொள்ளப்படும் காப்பியப் பயணங்களில் சில குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உள்ளன. சான்றாக, பயணம் மேற்கொள்ளும் வழியை அடிப்படையாகக் கொண்டு பார்த்தால் தரைவழிப் பயணம், கடல்வழிப் பயணம், வான்வழிப் பயணம் என்ற மூன்று பகுப்புகள் உள்ளன. காப்பியத் தலைவனின் தனிப்பயணம், காப்பியத்துணை மாந்தர்களின் பயணம் , தலைவன், துணை மாந்தர் அனைவரின் கூட்டுப் பயணம் என்றும் வகைப்பாடுகள் உள்ளன.
சிலப்பதிகாரத்தில் கோவலன் , கண்ணகி, கவுந்தியடிகள் ஆகியோரின் மதுரைப்பயணமும், கண்ணகியின் சேர நாட்டு பயணமும் , முழுமையான பயணஇலக்கியம் என்று எண்ணத்தகுந்ததன. இவற்றுள் கோவலனின் வணிகப் பயணம் குறிப்பிடத் தக்கது. கோவலன் வணிக நோக்கில்தான் மதுரைக்குப் புறப்பட்டுச் சென்றான் என்பதை, சிலம்பு முதலாக‌ச் சென்ற கலனொடு /உலந்த பொருள் ஈட்டுதல் உ ற்றேன், மலந்த சீர் /மாட மதுரையகத்துச் சென்று , என்ற அடிகள் விளக்குகின்றன.
சிலப்பதிகாரத்தில் மட்டுமே கடவுளை வணங்கிப் பின் பயணம் மேற்கொள்ளும் முறை பதிவு செய்யப்பட்டுள்ளது. பிற காப்பிய வணிகப் பயணங்களில் பயணம் மேற்கொள்வோர் புறப்பட்ட இடத்திற்கே வந்து சேருகின்றனர். ஆனால் சிலம்பில் அவ்வாறு நிகழவில்லை. கோவலன், கண்ணகி இருவரின் பயணம் பற்றிக்குறிப்பிடும் போதும் கவுந்தி அடிகளுடனான பயணம்பற்றிக் குறிப்பிடும் போதும் பயணம் மேற்கொள்ளும் பாதையின் இயல்பு பற்றியும் பயணவழியில் ஏற்படும் துன்பம் பற்றியும் விளக்கமான , நுட்பமான வரு ணனைகள் கூறப் பட்டுள்ளன .
வயல்வெளி வழியே செல்லும்போது பிற உயிர்களைக் கொல்லக்கூடாது என்ற அறவியல் கருத்தும் , இவ்வாறு பயணம் மேற்கொள்ளும் போது களைப்பு ஏற்படாமல் இருக்க ஒருநாளைக்கு ஒரு காதம் மட்டுமே பயணம் செல்ல வேண்டும், மீதமுள்ள நேரம் ஓய்வெடுத்துப்பின் பயணத்தைத் தொடங்க வேண்டும் என்ற பயண இலக்கியத்தின் முக்கியக் கருத்தும், உத்தியும் சிலம்பில் பதிவு செய்யப்பட்டுள்ளன . பயணத்தின் போது ஏற்படும் இடையூறுகளுக்கு வம்பப்பரத்தையர் சந்திப்பு சான்றாகச் சுட்டப்படுகிறது. மாங்காட்டு மறையோன் சந்திப்பும் மூன்று வெவ்வேறு பாதைகளின் இயல்பும் மிகச் சிறந்த பயண இலக்கியப் பகுதிகளாக பதிவு செய்யப்பட்டுள்ளன . இது தவிர மதுரை செல்லும் கோவலனின் தனிப்பயணமும், மதுரை யைப் பற்றி கண்ணகி, கவுந்தி அடிகளுடன் உரையாடும் பகுதியும் கோவலனின் பயணத்தைப் பற்றி விவரிக்கின்றன. கோவலன் கவுந்தியடிகளை சந்திக்கும் இடத்தில் , உரையாடு இல்லை உறு தவத்தீர்/ யான் மதுரை மூதூர் வரை/ பொருள் வேட்கையேயான், என்றே கவுந்தியடிகளிடம் குறிப்பிடுகிறான். இதன் மூலம் கோவலன் தெளிவான பயணத்திட்டம் இல்லாமல் பயணத்தை மேற்கொண்டாலும் வணிகம் காரணமாகவே பயணம் மேற் கொண்டான் என்பது புலனாகிறது.
மணிமேகலை காப்பியத்தில் தருமதத்தனின் மதுரைப்பயணம் தரைவழிப்பயணமாக பதிவு செய்யப்படுகிறது. சாதுவன்( ஆதிரையின் கணவன்) தவறான வழிகளில் பொருளை இழந்தாலும் வணிகம் செய்து பொருள் ஈட்ட வேண்டும் என்ற நோக்குடன் வணிகம் செய்ய வங்கம் புறப்படுகிறான் என்பதை , காண மிலியென கிக் கையுதிர் கோடலும்/ வங்கம் போகும் வணிகர் தம்முடன்/ தங்க வேட்கையிற் றானும் செல்வழி என்ற மணிமேகலை, ஆதிரை பிச்சை இட்ட காதை பாடல் அடிகள் 11 -13 விவரிக்கின்றன.
மேலும் சாதுவன் வணிகம் செய்யப் புறப்பட்டு , இடையில் நேர்ந்த இடையூறுகளால் நாகர் மலையை அடைந்து , நாகர்களிடம் பெரும் பரிசு பெற்று சந்திரதத்தன் என்ற வணிகனுடன் மீண்டும் கடல் வழியாகத் தன் வீட்டை அடைந்த பயணத்தை, சந்திர தத்த னெண்ணும் வணிகன்/வாங்கஞ் சேர்ந்ததில் வந்துட னேறி /இந்நகர் புகுந் தீங்கு இவளோடு வாழ்ந்து, என்ற மணிமேகலை ஆதிரை பிச்சை இட்ட காதை பாடல் அடிகள் 124-126 விவரிக்கின்றன.
மணிமேகலை காப்பியத்தில் தருமதத்தன் , விசாகை பற்றிக் கூறும் போது இருவரும் கந்தர்வ மணத்திற்கு உரியர் என்று ஊரார் கூறியதால் விசாகை வருத்தம் அடைகிறாள். கந்திற் பாவையை வேண்டித் தன் குறை தீர்க்கப் பெறுகிறாள். ஆனாலும் மனம் ஆறுதல் அடையாத விசாகை தவம் மேற்கொள்ளச் செல்கிறாள். தருமதத்தனோ ஊரை விட்டு வெளியேறி மதுரை வந்தடைகிறான். வணிகம் மேற்கொண்டு பெரும் செல்வந்தனாகிறான் என்பதை , தருமதத்தனு தந்தையுந் தாயும்/ பெருநகர் தன்னை பிறக்கிட்டேகித் / தாழ்தரும் துன்பம் தலை எடுத்தாயென/————————————/ தக்கென மதுரை தான் சென்றடைந்து , என்ற மணிமேகலை சிறைசெய்காதை பாடல் அடிகள் 101 -106 விளக்குகின்றன.
சீவக சிந்தாமணி காப்பியத்தின் நாயகனான சீவகன் பல்வேறு இடங்களுக்குத் தரை வழியாகவும் , வான் வழியாகவும் சென்று வருகிறான். சீவகசிந்தாமணியில் காந்தருவ தத்தையார் இலம்பகத்தில் கடல் வழியாகச் சென்று வளம் மிகு தீவை அடைந்ததாக ஸ்ரீதத்தனின் கடல் பயணம் மோதுபடு பண்டமுனியாது பெரி தேற்றி / மாடுபடு நோக்கினாவர் வட்கன்வடு வுற்ற/ தாதுபடு தார் கெழிய தங்குவரை மார்பன்/ கோதுபடு லில்லகுறிக் கொண்டெழுந்து போந்தான் என்று விவரிக்கப்படுகிறது . வெள்ளிமலை அரசன் கலுழ வேகன் மாயப்புயல் தோன்றச் செய்து ஸ்ரீதத்தனின் கப்பலைக் கவிழ்க்கிறான். ஸ்ரீதத்தன் அப்போது தரனைச் சந்திக்கிறான். இருவரும் வான் வழியே பயணம் செய்து வெள்ளிமலை அரசன் கலுழவேகனைச் சந்திக் கின்றனர் . இவ்வாறு அடுத்தடுத்து கடல் பயணம், வான் வழிப்பயணம் மீண்டும் கடல் பயணம் என ஸ்ரீதத்தனின் வணிகப்பயணம் விரை செல்ல வெம்பரி மேழக மேற்றிக் / குரை கழன் மைந்தனைக் கொண்டு பறந்தான். என்ற அடிகளின் மூலம் விவரிக்கப்பட்டுள்ளது.
தமிழ்க்காப்பியத்தில் மணிமேகலை , சீவக சிந்தாமணி இரண்டில் மட்டுமே கடல் வழிப் பயணம் பற்றிய குறிப்பு உள்ளது. காப்பிய மாந்தர்கள் வணிகப் பயணம் மேற்கொண்டாலும் அவர்கள் பயன் படுத்திய வாகனம் எவை என்று ஆய்ந்தால் , கடல் பயணம் மேற்கொண்டவர்கள் நாவாய், கலம், தோணி, வங்கம் போன்ற கலங்களைப் பயன் படுத்தியமை தெரிகிறது. வான் வழிப்பயணம் மேற்கொண்டவர்கள் விமானம் மட்டுமே பயன் படுத்தி உள்ளனர். பிற குறிப்பு இல்லை. மயிற்பொறி பற்றிய குறிப்பு சீவக சிந்தாமணியில் உள்ளது. ஆனால் அது வணிகப் பயணமல்ல.
குணாட்டியர் என்பவரால் பிராகிருத மொழியில் எழுதப்பட்ட பிரகத்கதா என்னும் இலக்கியத்தைத் தழுவி ஆக்கப்பட்டதே பெருங்கதை ஆகும். இதை தமிழில் இயற்றியவர் கொங்குவேளிர். இது கௌசாம்பி நாட்டு அரசனான உதயணன்¬¬¬¬¬ கதையை விவரிக்கிறது. உதயணனின் பயணம் கோசம்பியில் துவங்கி குமரியில் முடிகிறது. உதயணனின் பயணம் வணிகப் பயணம் அல்ல, இன்பச் சுற்றுலா அல்லது பொழுது போக்குப் பயணம் என்ற அளவிலேயே காப்பியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தகடூர் யாத்திரை என்ற நூலின் பெயரில் யாத்திரை இருந்தாலும் அந்நூல் பயண இலக்கிய வகைமையைச் சார்ந்ததுதானா என்பது ஐயமாகவே உள்ளது. பெருங்கதை ஆசிரியரே யாத்திரை என்ற சொல்லை முதன் முதலில் பயணம் என்ற பொருளில் பயன் படுத்துகிறார்.
இவை தவிர பெரியபுராணம், மகாபாரதம், கம்பராமாயணம் போன்றவை பல்வேறு பயணக் கூறுகளைத் தன்னகத்தே கொண்டிருப்பினும் அவை வணிக நோக்கிலான பயணம் அல்ல என்பதால் இங்கு விவரிக்கப்படவில்லை. பெரிய புராணத்தில்தான் முதலில் பயணம் என்ற சொல்லை சேக்கிழார் பயன் படுத்துகிறார் .
முடிவுரை
சமூக அமைப்பில் இரண்டாம் படிநிலையில் இருந்த வணிகச் சமூகம் காப்பியங்கள் தோன்றிய காலத்தில் அரசருக்கு இணையான சமூக மதிப்பைப் பெறத்துடித்தது. கலை , இலக்கியம் போன்ற துறைகளில் அரசருக்கு இணையாக தம்மை முன்னிலைப் படுத்த முனைந்தது. இக்காரணங்களால் வணிகசமூகத்தை முன்னிறுத்தியும் இலக்கியங்கள் தோன்றின. எனவே வணிகம், வணிகம் சார்ந்த பயணம் என்பவை இலக்கியத்தின் கருப்பொருளாகத் துவங்கின.
காப்பியங்களில் பயணம் என்பது கதை வளர்வதற்கான ஓர் ஊடக உத்தியாகவே இருந்துள்ளது. காப்பியங்களில் இடம் பெற்றுள்ள வணிகப்பயணம் பெரும்பாலும் காப்பியப் போக்கின் ஒரு பகுதியாகவே விளங்குகின்றன. காப்பியங்களில் கூறப் பட்டுள்ள இரண்டு கடல் வழி வணிகப் பயணங்களும் புயலால் தடைப் பட்டுள்ளன. சாதுவன் , ஸ்ரீ தத்தன் இருவருமே பெரும் பொருள் பெற்று தம் வணிகப் பயணத்தை நிறைவு செய்கின்றனர். வணிகம் செய்து பொருள் ஈட்டுவதாகக் கூறிச் சென்ற கோவலன் மட்டுமே ஊர் திரும்பாமல் கொல்லப் படுகிறான். இக்கதை மாந்தர்களுள் கோவலன் மட்டுமே கதைத்தலைவன் , பிற அனைவருமே துணை கதை மாந்தர்கள் ஆவர்.
புதிய பகுதிகளுக்கு செல்லும் கதை மாந்தர்கள் புதிய மக்களுக்கு அறவுரை புகட்டுவது காப்பிய உத்தியாக உள்ளது. ஆனால் பெரும்பாலான காப்பியங்களில் கடல் கடந்து , வான் கடந்து வணிகம் செய்யச் சென்றாலும் வேற்று நகரில் , வேற்று நாட்டில் வணிகம் செய்ததற்கான குறிப்பு முழுவதும் விவரிக்கப் படவில்லை. இது கொண்டு நோக்கும் போது காப்பியங்களில் இடம் பெற்றுள்ள வணிகப் பயணங்கள் வேளாண்மைச் சமூகத்திலிருந்து வணிகச் சமூகம் உருவான காலச் சூழலையும் அது சார்ந்த பொருளியல் நடவடிக்கைகளையும் மேலும் ஆராயத் தூண்டுகின்றன. —————–

தெரிவு செய்யப்பட்ட துணைநூல்கள் :
தமிழ்
சிலம்பில் பயணம், (2002),மகா லட்சுமி ——-,———–, கோவை .
தமிழ் இலக்கியத்தில் பயணச் செய்திகள், (2003), கிருட்டிணசாமி. வே , மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம் .
தமிழில்பயணஇலக்கியம், (1990), ஞானபுஷ்பம்.இரா, ஐந்திணைப்பதிப்பகம், சென்னை.
பயண இலக்கியம் , (2006) ,மோகனா , மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம் .
பயண நூல்கள் வழிப்பண்பாடு,(1995), வேலுசாமி. ந ,——,——–.
ஆங்கிலம்:

Travel writings in India, (2008), Battacharji, Shobana , Sahitya akademi , Rabindra bhavan, New Delhi 11
ச. பாரதிபிரகாஷ்,
முனைவர் பட்ட ஆய்வாளர்
இந்திய மொழிகள் துறை
ஜவகர்லால்நேருபல்கலைக்கழகம்
புது தில்லி.

மின் அஞ்சல் : bharathiprakaash@gmail.com

Series Navigation

ச. பாரதிபிரகாஷ்,

ச. பாரதிபிரகாஷ்,