பல நேரங்களில் பல மனிதர்கள்.. எனது பார்வையில்..

This entry is part [part not set] of 44 in the series 20110403_Issue

தேனம்மை லெஷ்மணன்



எஸ். கே. எஸ் மணி சார் என்றாலோ., எழுத்தாளர் க. நா.சு வின் மாப்பிள்ளை என்றாலோ உங்களுக்கு தெரிந்ததை விட.. பாரதி படத்தில் பாரதியாரின் தந்தையாக நடித்த சின்ன சாமி ஐயர் என்றாலும்., பாபாவில் ரஜனியுடனும் ., குருஷேத்திரத்தில் சத்யராஜுடன் நடித்திருக்கிறாரென்பதும் தெரிந்திருக்கலாம்.. அவர்தான் பாரதிமணி. தெரியாத இன்னொரு விபரம் பேரறிஞர் அண்ணா., மற்றும் மக்கள் திலகம் எம் ஜி ஆர் ஆகியோர் இவருடைய நண்பர்கள் என்பது. இரண்டு முதல்வர்களுடன் அவர்கள் முதல்வராகுமுன்னே நெருங்கிப் பழகும் வாய்ப்புப்பெற்றவர்.

அறிஞர் அண்ணாதுரை அவர்களின் எளிமையையும்., டெல்லிக்கு வந்த அவருடன் பார்த்த ஆங்கிலத் திரைப்படங்களையும் மற்றும் எம் ஜி ஆர் அவர்களுடன் ஜெய்ப்பூர் போனதையும் அவரின் ஈகைக் குணத்தையும் தன்னுடைய,” சில நேரங்களில் சில மனிதர்கள் ” என்ற புத்தகத்தில் அற்புதமாக பகிர்ந்திருக்கிறார். இவர். இது உயிர்மையின் வெளியீடு.

புத்தகத்தின் அட்டைப்படம் வரைந்தவர் ஸ்ரீபதி பத்மநாபா.. ஒரு கிராமபோனின் படம் மிக அருமையான குறியீடு இது.. ஏனெனில் மணியின் இந்தப் புத்தகம் கிராமஃபோனில் கேட்கப்படும் மிக அருமையான பாடல்களைப் போல அரிதான கட்டுரைகளின் தொகுப்பு இது .

உயிர்மையின் மிகச் சிறந்த புத்தகங்களுள் ஒன்றாக நான் இதை கருதுகிறேன். ஏனெனில் இது உண்மையான அனுபவங்களின் தொகுப்பு. ஒரு காலகட்டத்தின் பிரதிபலிப்பு. ஒருவர் எத்தனை வயதில் எழுத்தாளராகலாம் என்ற எல்லை கிடையாது என்பதை நிரூபித்த புத்தகம் இது. ஜெயமோகன் தன் முன்னுரையில் எழுத வந்திருக்கும் இளம் எழுத்தாளர் மணியை வரவேற்பதாக சொல்லி கலகலப்பூட்டி இருக்கிறார்.

முன்னுரையாக ஜெயமோகன்., நாஞ்சில் நாடன்.,இந்திரா பார்த்தசாரதி., வெங்கட் சாமிநான்., ஆகியோரும்., பின்னுரையாகவும் நட்புரையாகவும் அ. முத்துலிங்கம்., அம்ஷன் குமார்., வ. ஸ்ரீனிவாசன்., கடுகு., இயக்குனர் சுகா., ச. மனோகர்., பத்மபூஷன் லால்குடி ஜி. ஜெயராமன்., பாவண்ணன்., டெல்லி கணேஷ்., வாசந்தி., அசோகமித்திரன்., வேலு சரவணன்., வெளி ரங்கராஜன்., சத்யராஜ்., பி. லெனின்., கிருஷ்ணன் வெங்கடாசலம்., ந. முத்துசாமி., மு. இராமசாமி., நீல. பத்மனாபன்., பேராசிரியர் எஸ். ராமானுஜம்., க. தியோடர் பாஸ்கரன்., எஸ் ராமகிருஷ்ணன்., ஆ. மாதவன். என கிட்டத்தட்ட 28 பிரபலங்கள் இவரின் நூலுக்கு தம்முடைய கருத்துக்களை வழங்கி இருக்கிறார்கள்..

18 கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு இது.

1991 இல் இவரின் முதல் படம் பி பி சி எடுத்த எலக்ட்ரிக் மூன். முதல் படமே விருது வாங்கியபடம். இதில் கதை வசனம் எழுதியவர் அருந்ததி ராய்.. அதன் பின் இயக்குனர் லெனின்., ஜெயபாரதி., ஞானசேகரன் ஆகியோர் இயக்கிய படங்களில் நடித்திருக்கிறார். . இவர் நடித்த 40 படங்களில் 13 படங்கள் விருது பெற்றவை.. அவற்றில் சில எலக்ட்ரிக் மூன்., பாரதி., ஊருக்கு நூறு பேர்., மொட்டுக்கா., றெக்கை., ஒருத்தி., நண்பா நண்பா., ஆட்டோகிராஃப்., அந்நியன்..

கர்நாடக இசையை சிறுவயதிலேயே கேட்டு வளர்ந்ததினால் கிட்டத்தட்ட 100 ராகங்களுக்கு மேல் கண்டுபிடிக்கத்தெரியும்.இசை விமர்சகர் சுப்புடுவே இவர் திறமையைப் பார்த்து ஆச்சர்யம் அடைவாராம்.

இவருடைய இசை சம்பந்தமான நட்புகளையும் தொடர்புகளையும் ஒரு புத்தகமே எழுதலாம். இங்கே தமிழகத்தில் உள்ள அனைத்து பிரபல சங்கீத வித்வான்களும் டெல்லி வந்தால் இவர் வீட்டில்தான் தங்குவார்களாம்..

இலக்கியத்தில் இ. பா, சுஜாதா ஆகியோருடன் பழகி இருக்கிறார்.. ஜெயகாந்தனின் கதைதான் இவர் நடித்த ஊருக்கு நூறுபேர் என்ற படம்.

தஞ்சாவூர் எழுத்தாளர்களான தி. ஜானகிராமன்., லாசராமாமிர்தம் போன்றவர்களின் எழுத்துக்கள் அந்த மாவட்டத்தின் வளப்பத்தையும்., வசவையும் சிதறிச் செல்வதுபோல இங்கே மணியின் எழுத்துக்கள் நாஞ்சில் நாட்டின் வாழ்க்கையை அவ்வப்போது சிதறிச் செல்கின்றன..

கட்டுரைகளில் சில சுவாரசியமான வார்த்தைகள். :” 40 வயது உலகம் சுற்றும் வாலிபனாய் இருந்தது. ராஜீவ் காந்தியைப் பார்த்தால் தன் பாட்டி சொல்லும் “ரோஸ்ஸாப்பூக்கலர் “ ஞாபகம்வந்தது., லஞ்சம் வாங்கியதாக 11 பார்லிமெண்டர் உறுப்பினர்கள் மட்டும் மாட்டிய போது பாக்கி 523 உறுப்பினர்களும் லஞ்ச அரக்கனை ஒழித்துவிட்டோமென்று ஆனந்தக் கூத்தாடுவது., சுப்புடுவின் சர்ச்சைக்குரிய விமர்சனங்கள்..என கிண்டல்களுக்கு குறைவில்லை..

சர்ச்சைகளுக்கும் இதில் பஞ்சமில்லை.. அருந்ததி ராயும் . பிரதீப் கிருஷ்ணனும் சிலநாள் திருமணமாகாமலே சேர்ந்து வாழ்ந்தது. பின் மணம் புரிந்து கொண்டது. கஸ்டம்ஸில் ஜனதா பிரியடில் வெளிநாட்டிலிருந்து தாயகம் திரும்பிய ராஜிவ் காந்தியை சோதனை என்ற பெயரில் ஏறத்தாழ 3 மணி நேரம் சோதனை செய்தது. தேர்ந்தெடுக்கப்படும் எம் பிக்களின் வீடுகள் சர்வெண்ட் க்வார்ட்டர்ஸ்., கார் காரேஜ் போன்றவை வாடகைக்கு விடப்படுவது., டி. என் ராஜரத்தனம் பிள்ளை ., காருகுறிச்சி பி. அருணாசலம் இவர்களுக்குப் பிறகு அதே சிறப்போடு நாதஸ்வரம் வாசிக்க யாருமில்லை எனவும் ., DNBS சார்பாக நடத்தப்படவேண்டிய நாடகம் ஒத்தி வைக்கப்பட்டது ஆனால் அதற்கு சுப்புடு WELL DONE VAITHI FLOPS ” என விமர்சனம் எழுதியது .,” எனவும் குறிப்பிடுகிறார் மணி.

”வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது ”என்பதற்கு ஆ. மாதவன் கொடுத்த இந்திய வரைபடத்தின் விளக்கமும்., ராமர் பாலம் தொடர்பான செய்திக்குப் பிறகு வானிலை அறிக்கை டி. வி. யில் படிக்கும்போது வாயில் சிகரெட்டோடு நேரு தெரிவதும்., என இவரின் எழுத்தாற்றலுக்கு வேறென்ன சொல்ல.. !!

அன்னை தெரசா., ஷேக் ஹஸீனா., மற்றும் தான் வாழ்ந்த திருவிதாங்கூர் சமஸ்தானம்., டெல்லியின் நிகம்போத் சுடுகாடு., செம்மீன்படம் தேசிய விருதுக்கு சேர்க்கப்பட்ட விபரம்., சுஜாதா., மொரார்ஜி தேசாய் மகன் காந்தி பாய் தேசாய்., ரயில் பயணம்., பங்களாதேஷ் நினைவுகள்., அனைத்தும் அருமை..

கண்ணீர் வரவழைத்த கட்டுரைகளும் உண்டு.. 1984 இல் நடந்த வன்முறையில் சீக்கியர்கள் கொல்லப்பட்டது மேலும் பூர்ணம் விசுவநாதன் பற்றியது.

டெல்லியின் கரோல்பாகில் பலகாலம் இருந்ததால் அங்கே இவர் குறிப்பிடும் ஹோட்டல்கள் ., கையேந்திபவன்கள் பற்றி படிக்கும்போது நேரில்பார்த்ததை எழுத்தில் பார்த்தது போல் இருந்தது. சாப்பாட்டுப் பிரியரான இவர் வெள்ளாயணி மாம்பழத்தையும் ., மோர்க்குழம்பில் சேர்க்கும் அப்பக்கீரையையும் எழுதி இருப்பது பற்றி இதை படித்தால் ரசிக்க முடியும்.

மேலும் டெல்லியல் விடுமுறைக்காக தமிழ்நாடு வருவதற்கு டிக்கெட் புக்கிங்க் செய்யும் முறை பற்றி ( பாய் தலையணையோடு முதல்நாளே சென்று ஸ்டேஷனில் படுத்துக் கொள்வது ., டோக்கன் வைத்துக் கொள்வது ) என்று படித்தபோது சிரிப்பை அடக்க முடியவில்லை.. ஏனெனில் இந்தக் கஷ்டங்களை நாங்களும் அனுபவித்திருக்கிறோம்.

ஆரம்பத்தில் ஒரு பஞ்ச் ., நடுவில் ஒரு பஞ்ச்., பின் முடிவில் ஒரு பஞ்ச் என தன் கிண்டல்களால் கட்டுரைகளுக்கு சுவாரசியம் சேர்க்கிறார் மணி.. தெரியாத தகவல்களை நாம் தெரிந்து கொள்ள செய்யும் பாங்கும் அருமை..:

ஒரு எழுத்தாளனது வெற்றியே படிக்கும் ஒவ்வொரு வாசகனும் அந்த சம்பவத்தை உணரும் படி செய்வது., அந்த அனுபவங்களோடு தன் அனுபவங்ளையும் ஒப்பிட்டு நோக்குவது ., என்பதுதான்.. அந்த வகையில் மணி மாபெரும் வெற்றி அடைந்திருக்கிறார்.

அடுத்து .,”நீரா ராடியாவும் டெல்லியில் நான் செய்யாத திருகுதாளங்களும் ,” என்ற கட்டுரையை உயிர்மையில் படித்தோம்.. இதுபோல இன்னும் நிறைய அனுபவங்கள் பகிரப்படாமல் இருக்கின்றன இவரிடம். ஒன் புக் ஒண்டர் என்று இவர் தன்னை சொல்லிக் கொள்வார். இன்னும் பல புத்தகங்களை உள்ளடக்கிய புத்தகம் இவர்..இன்னும் புத்தகங்கள்., உயிர்மையில் வெளியிட்டு மென்மேலும் புகழடைய வாழ்த்துக்கள்..

Series Navigation

தேனம்மை லெஷ்மணன்

தேனம்மை லெஷ்மணன்