‘’சங்க கால மகளிர் விளையாட்டுக்கள்’’

This entry is part [part not set] of 45 in the series 20110227_Issue

சி.மோகனசுந்தரம் எம்.ஏ.,எம்.ஃபில்., பி.எட்.,


சி.மோகனசுந்தரம் எம்.ஏ.,எம்.ஃபில்., பி.எட்.,
உதவிப் பேராசிரியர், மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.

சங்க காலத்தில் மக்கள் உடல் நலம் பேணுவதற்காகப் பல்வேறு விளையாட்டுக்களை விளையாடி மகிழ்ந்தனர். சங்க காலத்தில் முதியோரும், இளையோரும் தங்களது ஓய்வு நேரத்தை விளையாடிக் கழித்துள்ளனர். விளையாட்டின் வாயிலாக நல்ல உடல் நலமும் மனநலமும் பெற்று மகிழ்வுடன் வாழ்ந்தார்கள் என்பதற்கு சங்க இலக்கியங்களில் பல்வேறு இடங்களில் சான்றுகள் காணப்படுகின்றன. விளையாட்டு என்பது சங்க காலத்தில் மக்ளின் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்திருந்தது. அவர்கள் விளையாடிய விளையாட்டுக்களை ஆடவர் விளையாட்டுக்கள், மகளிர் விளையாட்டுக்கள் என இருவகைப் படுத்தலாம். இவ்விளையாட்டுக்கள் மக்கள் மனதையும் அவர்கள் உடலையும் வளப்படுத்தின எனலாம்.
மகளிர் விளையாட்டுக்கள்
சங்க கால மகளிர் விளையாட்டுக்கள் உடற்திறனை வளர்க்கும் விதமாகவும், உடலகை மெருகுபடுத்தும் விதமாகவும் அமைந்திருந்தது எனலாம். பண்டைக் காலத்தில்,
1. புனல் விளையாட்டு
2. வட்டாடுதல்
3. பந்தாடுதல்
4. கழங்காடுதல்
5. ஊசலாட்டம்
6. ஓரையாடல்
7. வண்டலிழைத்தல்
ஆகிய விளையாட்டுக்கள் மகளிரால் விளையாடப்பட்டன.
1.புனல் விளையாட்டு
இதனை நீர் விளையாட்டு என்றும் கூறுவர். சங்க காலத்தில் ஆடவர் பெண்டீர் என்ற இருவரும் நீர் விளையாட்டில் ஈடுபட்டிருந்தார்கள் என்பதற்குப் பல்வேறு சான்றுகள் காணப்படுகின்றன. இவ்விளையாட்டு அருவியில் நிராடுதல், குளத்தில் நீராடி மகிழ்தல், ஆறுகளில் நீராடுதல் எனப் பல நிலைகளில் காணலாம். இவ்விளையாட்டு இன்று மேம்படுத்தப்பட்டு ‘Water Diving’ என்று வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
அருவியில் நீராடல்
உயர்ந்த மலைச்சிகரங்களில் பொழிந்த மழைநீரானது வெள்ளை ஆடை விரித்தது போல் அருவியாகப் பெருக்கெடுத்து குதித்தோடிப் பாய்ந்து வரும். இப்படி ஓடிவரும் அருவியிலே நீராட வேண்டும் என்ற நீங்க விருப்பமுடைய நாங்களும் அதைத் தவற விட்டுவிடாது வெண்பளிங்கு கரைந்தோடி வருவது போலப் பாய்ந்து வரும் அருவிச் சுனைகளிலே எங்கள ஆசை தீரப் பாடியும், ஆடியும் நீராடினோம். பின்னர் பின்பக்க முதுகிலே தாழ்ந்து விழும் பொன்னி பொதித்த நீல மணி போன்ற கூந்தலின் ஈரம் போகத் துவட்டி உலரவைத்தோம். எங்கள் கண்களெல்லாம் சிவப்பேறிக் கிடந்தன. நீரில் நீண்ட நேரம் நீராடியதால் கண்கள் சிவந்தன என்ற நீரில் விளையாடிய காட்சியை,
“அண்ணல் நெடுங்கோட்டு இழிதரு தென்நீர்
அவிர் துகில் புரையும் அவ்வெள் அருவி
தவிர்வுஇல் வேட்கையேம் தண்டாது ஆடிப்
பளிங்கு சொரிவு அன்ன பாய்சுனை குடைவுழி
நளிபடு சிலம்பில் பாயம்பாடி
பொன்எறி மணியின் சிறுபுறம் தாழ்ந்த எம்
பின்இரும் கூந்தல் பிழிவனம் துவரி
உள்ளகம் சிவந்த கண்ணேம்“ (குறிஞ்சிப்பாட்டு 54-61)
என்ற குறிஞ்சிப் பாட்டு காட்சிப் படுத்துகிறது.

2.வட்டாடுதல்
அக்காலத்தில் சிறந்து விளங்கிய விளையாட்டுக்களில் ஒன்று வட்டாடுதலாகும். இதற்கென்று அரங்கிழைத்துக் காய்களை நகர்த்தி வட்டாடுவர். வேப்பமரத்து நிழலில் கல்லாச் சிறுவர்கள் நெல்லிவட்டாடிய செய்தியை இளங்கீரனாரின்
“பொரியரை வேம்பின் புள்ளிநீழல்
கட்டளை யன்ன வட்டரங்கிழைத்துக்
கல்லாச் சிறாஅர் நெல்லி வட்டாடும்
வில்லேருழவர் வெம்முனைச் சீறூர்“ (நற்றிணை, 3:2-5)
என்ற நற்றிணைப் பாடல் விவரிக்கின்றது.
பழைமையான அழகிய காட்டிலே பளிங்கு போன்று விளங்கும் உயர்ந்த பெரிய பாறைகளின் மேலாக்க் கிடக்கும் நெல்லி மரத்தின் பல காய்கள் கிடக்கும் அதனைச் சிறுமியர்களும், சிறுவர்களும் வட்டாடச் சேர்த்து வைத்துக் கழங்குகளைப் போல விளையாடுவர். இதனை,
“…மூதையலம் காட்டுப்
பளிங்கத் தன்ன பல்காய் நெல்லி
மோட்டிரும் பாறை ஈட்டுவட்டு ஏய்ப்ப“ (அகம்5:7-10)
என பாலை பாடிய பெருங்கடுங்கோ எடுத்துரைக்கின்றார்.
வட்டாடுதல் வல்லாடுதல் என்று வழங்கப்டுவது குறிப்பிடத்தக்கது. வயது முதிர்ந்த பெரியோர்கள் சூதாடு கருவியை இட்டு இட்டுக் குழிந்து போன பாழ்பொதியில் பற்றி,
“கலிகெழு கடவுள் சுந்தம் கைவிடல்
பலிகண் மாறிய பாழ்படு பொதியில்
நரை மூதாளர் நாயிடக் குழிந்த
வல்வின் நல்லகம்“ (புறம்., 52:12-15)
எனப் புறப்பாடல் நவில்கின்றது.
3.பந்தாடுதல்
நூலினால் வரிந்து கட்டப்பட்ட ஒரு வகையான பந்தினைக் கொண்டு ஆடுதல் அன்றைய களிர் வழக்கமாக இருந்த்து. மாடிவீடுகளின் மேல் மாடங்களில் பெண்கள் வரிப்பந்தாடியது பற்றி,
“பீலி மஞ்ஞையின் இயலிக் கால
தமனியப் பொற்சிலம் பொலிப்ப உயர்நிலை
வான் தோய் மாடத்து வரிப்பந்து அசைஇக்“ (பெரும்பாணா., 331-333)
என்று தெளிவுறுத்துகின்றது.
4.கழங்காடுதல்
மகளிர் விளையாட்டுக்களில் கழங்காடுதலும் ஒன்று. கையிலே அணிந்த பொன்வளையல்கள் அசைய மெத் மெத்தென்று மெதுவாக இருக்கும் முத்தைப் போன்ற வெண்மணலில் பொன்னால் செய்த கழற்சிக் காயைக் கொண்டு பெண்கள் கழங்காடி மகிழ்ந்தனர் என்ற செய்தியை,
“கைபுனை குறுந்தொடி தந்தப் பைப்பய
முத்த வார்மணல் பொற்கழங்கு ஆடும்“ (பெரும்., 334-335)
எனப் பெரும்பாணாற்றுப்படை எடுத்துரைக்கின்றது.
வீட்டுத் திண்ணைகளில் பொன்னாலான கழங்கினை வைத்து விளையாடியதாக,
“செறியரிச் சிலம்பின் குறுந்தொடி மகளிர்
பொலஞ்செய் கழங்கிற் தெற்றியாடும்“ (புறம்., 36)
என்ற புறநானூற்று வரிகள் மொழிவது நோக்கத்தக்கது.
5.ஊசலாட்டம்
மரக்கிளைகளில் கயிற்றினை (அல்லது) கொடிகளைக் கட்டி அதிலமர்ந்து ஆடி விளையாடுவது ஊசலட்டமாகும். அச்சமயத்தில் பாடும் பாடல் ஊசல் வரியாகும். இவ்விளையாட்டை ஊஞ்சலாட்டம் என்றும் கூறுவர். மகளிர் விளையாடிய ஊசலாட்டத்தை,
“பெருங்கயிறு நாலும் இரும்பனம் பிணையில்
பூங்கண் ஆயம் ஊக்க ஊக்காள்“ (நற்., 6-7)
என்று நற்றிணை குறிப்பிடுகின்றது.
புலிநக்க் கொண்றையின் உயர்ந்த கிளையிலே கயிற்றிலே கட்டித் தொங்கவிடப் பெற்ற ஊஞ்சலில் அமர்ந்து பெண்கள் விளையாடிய செய்தியினை,
“ஞாழல் ஓங்குசினைத் தொடுத்த கொடுங்கழித்
தாழை வீழ்கயிற்று ஊசல் துங்கிக்
……………….புனத்து அயல்“ (நற்., 5-6)
எனக் குறிப்பிடுவது நோக்கத்தக்கது.
6.ஓரையாடல்
மகளிர் விளையாட்டுக்களில் ஓரையாடுதல் ஒன்று. இது ஆமை, நண்டு ஆகியவற்றை சிறிய கோல் கொண்டு அலைத்து விளையாடுவதாகும்.
“தாதிற் செய்த தண்பனிப் பாவை
காலை வருந்தும் கையா றோம்பென
ஓரையாம்ம் கூறக் கேட்டும்“ (குறுந்., 480
“துரவுக்கடல் பொறாத விரவுமணல் அடைகரை
ஓரை மகளிர் ஓராங்கு ஆட்ட“ (குறுந்., 310)
“ஓரை மகளிர் அஞ்சி யீர்ஞெண்டு
கடலிற் கரிக்கும்“ (குறுந்., 401)
“ஓரை ஆடினும் உயங்கும் நின் ஏறி“ (நற்., 60:10)
விளையாட்டாயமொடு ஓரை யாடாது“ (நற்., 68)
“ஓரை யாயத் தொண்டொடி மகளிர்“ (புறம்., 176)
என சங்க இலக்கிய வரிகள் ஓரையாடல் பற்றி தெளிவாக எடுத்துரைக்கின்றன.
7.வண்டலிழைத்தல்
வண்டல் மணலால் ஒரு பாவை செய்து அதற்குப் பூச்சூட்டி மகிழ்ந்து விளையாடும் விளையாட்டிற்கு வண்டலிழைத்தல் என்று பெயர். பசிய அவலை இடித்த கரிய வயிரம் பொருந்திய உலக்கையினை அழகிய கதிர்களையுடைய நெல்வயல்களின் வரப்பாகிய அணியிலே படுக்க வைத்து ஒள்ளிய தொடியணிந்த பெண்கள் வண்டல் விளையாட்டை விளையாடினர் என்பதை,
“பாசவல் இடித்த கருங்காழ் உலக்கை
ஆய்கதிர் நெல்லின் வரம்பு அணைத்துயிற்றி
ஒண்தொடி மகளிர் வண்டல் அயரும்“(குறுந்., 238)
எனக் குறுந்தொகை நவில்கின்றது.
மேலும், மானின் அடிபோன்ற கவட்டிலையை உடைய அடும்பின் ஒள்ளிய பூவை வண்டற் பாவைக்குச் சூட்டுவர் என்ற செய்தியையும்,
“மானடி யன்ன கவட்டிலை யடும்பின்
தார்மணி யன்ன வொண்பூக் கொழுதி
ஒண்டொடி மகளிர் வண்டல் அயரும்“ (குறுந்., 243)
என்ற குறுந்தொகை வரிகள் தெளிவுறுத்துகின்றன.
தோழியருடன் திரண்ட மணல் மேட்டின் மீது யானும் ஏறினேன். மலர்கள் நிரம்பிய கானற் சோலையிலே வண்டலிழைத்து யாம் விளையாடினோம்.
“………தோழி! தகை மிக
கோதை ஆயாமொடு குவமணல் ஏறி
வீத்தை கானல் வண்டல் அயர“ (அகம்,, 180: 1-3)
என அகநானூறு குறிக்கின்றது.
கழியிலுள்ள பூக்களைப் பறித்துத் தந்தும் கானற் சோலையிலே சேர்ந்திருந்தும் வரிப்பட்ட மணலிடத்தே வண்டல் பாவை சாமத்து விளையாடியதை,
“கழிப்பூக் கற்றுங் கானல் அல்கியும்
வண்டற் பாவை வரிமணல் அயர்ந்தும்“ (அகம்., 3301-2)
என அகநானூறும்,
“வாலிழை மடமங்கையர்
வரிமணல் புனை பாவைக்கும்
குலவுசினைப் பூக்கொய்து“ (புறம்., 11:1-2)
“…….திணிமணல்
செய்வுறு பாவைக்குக் கொய்பூத் தைஇத்
தண்கய மாடும் மகளிரொடு” (புறம்., 213:2-3)
எனப் புறநானூறு எடுத்துரைக்கின்றது.
இதுபோன்று பல்வேறு வகையான விளையாட்டுக்களை சங்க கால மகளிர் விளையாடி மகிழ்ந்துள்ளனர். இவ்விளையாட்டுக்கள் அவர்களிடையே ஒற்றுமையையும், உடலுக்கும் உயிருக்கும் மனஉறுதியையும் நலவாழ்வையும் அளித்து வாழ்க்கையை மேம்படுத்தின என்பது அனைவரும் அறிந்து கொள்ளக் கூடிய செய்தியாக விளங்குகின்றது.

Series Navigation

சி.மோகனசுந்தரம் எம்.ஏ.,எம்.ஃபில்., பி.எட்.,

சி.மோகனசுந்தரம் எம்.ஏ.,எம்.ஃபில்., பி.எட்.,