திருக்குறளின் செம்மொழிக் கூறுகள்

This entry is part [part not set] of 45 in the series 20110227_Issue

முனைவர் மு. பழனியப்பன்,


முனைவர் மு. பழனியப்பன்,
உதவிப் பேராசிரியர், மா. மன்னர் கல்லூரி,
புதுக்கோட்டை

தமிழிற்கான செம்மொழித் தகுதி கிடைத்தற்கு முக்கிய காரணமாக அமைந்தன இலக்கியங்கள் ஆகும். பண்பாட்டுச் செழுமையும், தனித்தன்மை மிக்க நாகரீகமும், தேர்ந்த மொழி ஆளுமையும், பழமையும் கொண்ட பல இலக்கியங்கள் தமிழில் இருப்பதனாலேயே அதற்குச் செம்மொழித் தகுதி கிடைத்திருக்கின்றது. செம்மொழித் தகுதி என்பது ஒரு மொழிக்கு அமைந்துள்ள பதினோரு கூறுகளை ஒப்பு நோக்கி அளிக்கப்படுகின்றது. தொன்மை, தனித்தன்மை, பொதுமைப்பண்பு, நடுவுநிலைமை, தாய்மைப் பண்பு,பண்பாட்டு கலையறிவு, பட்டறிவு வெளிப்பாடு, பிறமொழித் தாக்கமில்லாத தன்மை, இலக்கிய வளம், உயர் சிந்தனை, கலை இலக்கியத் தனித்தன்மை, மொழிக் கோட்பாடு என்னும் பதினோரு கூறுகள் செம்மொழிக் கூறுகள் ஆகும். (மணவை முஸ்தபா, செம்மொழி உள்ளும் புறமும் ப. 8) இந்தப் பதினோரு கூறுகளும் தமிழ்மொழி உள்ளது என்று இந்திய மொழிகளின் நடுவண் அரசு நிறுவனம் சான்றளித்தமையாலேயே தமிழுக்குச் செம்மொழித்தகுதி வழங்கப் பெற்றிருக்கிறது.

செம்மொழித்தகுதிகள் முற்றிலும் அமையப் பெற்ற நூல் திருக்குறள் ஆகும். குறிப்பாக செம்மொழிக்கான பதினோரு பண்புகளையும் பெற்று செம்மொழித் தமிழுக்கு அணி சேர்க்கும் தலைமைக்குரிய நூல் திருக்குறள் என்பதில் ஐயமில்லை.

செம்மொழிக்கான பதினோரு கூறுகளைத் திருக்குறள் உள்ளடக்கி நிற்கிறது என்பதை இக்கட்டுரை சுருங்கிய அளவில் மெய்ப்பிக்கின்றது.

தொன்மை என்பது பழமை ஆகும். திருக்குறள் தொன்மை வாய்ந்த நூல் ஆகும். அந்நூல் ஏறக்குறயை ஈராயிரம் ஆண்டு பழமை வாய்ந்த நூல் என்பது அறிஞர்கள் முடிபு. அந்நூல் கொண்டே தமிழர்தம் தமிழாண்டு கணக்கிடப் படுகிறது என்பது கருதியே அதன் தொன்மை வெளிப்பட்டு நிற்கிறது.

வழங்குவதுள் வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி
பண்பின் தலைப்பிரிதல் இன்று (955 )

என்ற குறளில் பழங்குடி பற்றிய குறிப்பு இடம் பெற்றுள்ளது. தமிழர்தம் பழங்குடி என்றே இதனைக் கொள்ளலாம். வழங்குவதற்கு ஒன்றுமில்லாதபோதும் பழமையான குடியின்பால் வந்தவர்கள் நல்ல பண்பில் இருந்து மாறமாட்டார்கள் என்பது வள்ளுவரின் கருத்தாகும். தமிழரின் பழங்குடிப் பண்பு என்ன என்பதும், தமிழர் குடியே பழங்குடி என்பதும் இக்குறளில் இருந்துப் புலனாகின்றது.

திருக்குறளின் தனித்தன்மை என்பது பல நிலைகளில் அமைகின்றது. அறத்தினைப் பாடுபொருளாக்கிய தனித்தன்மை திருக்குறளுக்கு உண்டு. பொருளை அடிப்படையாக வைத்து இயங்கும் உலகியல்பினை முதன் முதலில் வெளிக்காட்டிய நூல் திருக்குறள் என்பதும் அதன் தனித்தன்மைகளுள் ஒன்றாகும். இவை தவிர அறிவு சார்ந்த அனைத்துப் பிரிவனரும் ஏற்கும் தகைமையதாக திருக்குறள் என்றைக்கும் விளங்கிவருகின்றது. தமிழர்களின் விதிக் கோட்பாட்டினை மீறிச் சிந்தித்த நூல் திருக்குறள். தமிழரை மானம் மிக்க குடியாக உயர்த்தி நிற்பது திருக்குறள்.

மானம் என்ற பண்பினைத் தமிழரின் அடையாளமாக தனித்தன்மையாக எடுத்துக் காட்டி நிற்கிறது திருக்குறள். `தமிழர்கள் தன்மானம் மிக்கவர்கள்’ என்ற தொடக்கத்தைத் திருக்குறளே தருகின்றது. “மானமாவது எக்காலத்தினும் தமது நிலைமையில் திரியாமை. இது குடிபிறந்தார்க்கு இன்றியமையாமையின் அதன்பின் கூறப்பட்டது. இது முன்று வகைப்படும். தமது தன்மை குன்றுவன செய்யாமையும்,இகழ்வார் மாட்டுச் செல்லாமையும், இளிவரவு பொறமையும் என”( மணக்குடவர் உரை, மானம்,ப. 570) என்று பொருளுரைப்பார் மணக்குடவர்.

தமிழனின் தனித்த அடையாளமாக இன்றைய நிலையிலும் பேச்சு வழக்கிலும், உணர்வு நிலையிலும் மானம் என்பது விளங்கி வருகின்றது.

இன்றி யமையாச் சிறப்பின ஆயினும்
குன்ற வருப விடல் (961)
என்ற குறள் இன்றியமையாச் சிறப்புகள் கிடைத்தாலும் ஒருவரின் மானத்திற்கு அதில் ஏதேனும் ஒன்று மட்டும் குறைவை உண்டாக்குமானால் சிறப்புக்கள் அனைத்தையும் விட்டுவிடுவது நலம் என்பது இக்குறளின் பொருளாகும்.

எந்நிலையிலும் மானத்தை உயிரெனக் காக்கும் உன்னத நிலையைப் பெற்றவன் தமிழன் என்ற தனித்த அடையாளத்தைத் தமிழனுக்கு ஏற்படுத்திய நூல் திருக்குறள் ஆகும். மானத்தின் விரிவை, வலிமையை அந்தத் தலைப்பில் அமைந்தே அதிகாரம் தாங்கி நிற்கிறது.

திருக்குறளின் பொதுமைப் பண்பு கருதியே அது உலகப் பொதுமறை எனப்படுகின்றது. உலக மொழிகள் பலவற்றிலும் அது மொழி பெயர்க்கப் பெற்றிருப்பதற்கும் காரணம் அதன் பொதுமைத் தன்மையே ஆகும்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்புஒவ்வா
செய்தொழில் வேற்றுமை யான் (972)

என்ற குறள் பிறப்பினால் வேறுபட்டுக் கிடந்த பாரதப் பண்பாட்டின் ஆணிவேற்றைப் பெயர்த்துப் பொதுமைக்கு உரமுட்டிய நல்வாக்கு ஆகும். இக்குறளொன்றே திருக்குறளின் பொதுமைப்பண்பிற்கு நிலைத்த சான்று பயக்கும்.

தன்உயிர் தான்அறப் பெற்றானை ஏனைய
மன்உயிர் எல்லாம் தொழும் (268)

தனக்காக வாழும் வாழ்வை விடுத்துப் பொதுமைக்காக வாழும் நிலை பெற்றவரை உலக உயிர்கள் அனைத்தும் வணங்கி வழிபடும் என்று பொதுமைக் கீதத்தைத் திருக்குறள் இசைக்கின்றது.

நடுவுநிலைமை என்ற பண்பினுக்கும் சிறந்த காட்டாக திருக்குறள் விளங்குகின்றது. ஓர் அதிகாரமே வள்ளுவர் நடுவுநிலைமை குறித்துப் படைத்துள்ளார்.

வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோல் செயின் (120)

என்று வணிகச் சார்புடைய இந்த உலகின் நடுவு நிலைமைக்கு வணிகத்தினைக் கொண்டே அறமுரைக்கிறார் வள்ளுவர். தம்முடைய பொருளுக்கு அளிக்கப் பெறும் அதே மதிப்பை மற்றவர்களின் பொருள்களுக்கும் அளிக்கவேண்டும் என்ற வள்ளுவரின் கருத்து நடுவு நிலைமைக்கான பண்பினைத் தெற்றென வெளிப்படுத்துகின்றது. அளக்கும் கருவிகள் பலவற்றைக் கண்டறிந்த தமிழன், தனக்கான தனித்த அளவை முறைகளைக் கண்டறிந்த தமிழன் அதற்கான வடிவம், அதற்கான பயன்பாடு முதலானவற்றை அறிந்துத் தெளிந்துப் பயன்படுத்தியபோது நடுவுநிலைமையின் இன்றியமையாமையையும் உணர்ந்திருக்கிறான் என்றே கொள்ள வேண்டும்.

தாய்மைப் பண்பு என்பது திருக்குறள் பல்வேறு நிலைக்கலன்களுக்கு தாயாகும் தன்மை குறித்ததாகும். அதாவது பல்வேறு சிந்தனைகளுக்கும், பல்வேறு கட்டமைப்புகளுக்கும் ஊற்றாகும் இலக்கியமாக திருக்குறள் அமைந்திருக்கிறது என்பதே அதன் தாய்மைப்பண்பாகும். புறநானூற்றில் விதையாகிக் கிடந்த அறமுணர்த்தும் மரபை, அறச்சிந்தனையை தனித்த பண்பாக மாற்றி அற இலக்கிய மரபைத் தமிழுக்குத் தந்த தாய்மைத்தன்மை திருக்குறளுக்கு உண்டு.

சாதி, மத, மொழிச் சார்பில்லாமல் இலக்கியத்தைப் படைக்க இயலும் என்ற விதையைத் தமிழில் இட்ட நிலை தாய்மைத் தகுதிக்கு மற்றொரு சான்றாகும். ஊழதிகாரத்தின் விரிவே சிலப்பதிகாரம். பிறனில் விழையாமை அதிகாரத்தின் விரிவே கம்பராமாயணம். துறவதிகாரத்தின் மேன்மையே தமிழகத்தின் துறவறநெறிக்கு முலம். இல்வாழ்க்கை அதிகாரமே தமிழர்களின் இனிய இல்லற மாண்பிற்கு ஊற்றுக்கண். இப்படி அதிகாரம் தோறும் அரிய கருத்துக்களைக் காட்டி அவற்றில் இருந்து பற்பல சிந்தனைகளும், பற்பல கருத்துக்களும், பற்பல காப்பியங்களும் எழ வாய்ப்பினை ஏற்படுத்தித் தரும் ஒப்பற்ற செம்மொழி இலக்கியம் திருக்குறள் ஆகும்.

பட்டறிவின் வெளிப்பாடு என்பதும், பண்பாட்டு கலை அறிவு என்பதும் செம்மொழிக்கான தகுதிகளுள் சிலவாகும். பெருமை, சான்றாண்மை, பண்புடைமை போன்ற திருக்குறளின் அதிகாரங்கள் மேற்கூறியவற்றின் வெளிப்பாடுகளே ஆகும்.

சால்பிற்குக் கட்டளை யாதுஎனின் தோல்வி
துலைஅல்லார் கண்ணும் கொளல் (986)

என்ற குறளில் உள்ள அனுபவ வெளிப்பாடு எண்ணும்போதெல்லாம் வியப்பினைத் தருவதாகும். தோல்வியை ஒருவன் ஒத்துக் கொள்வதில் உள்ள அனுபவ மேன்மையை இக்குறள் எடுத்துரைக்கின்றது.

உறுப்புஒத்தல் மக்கள்ஒப்பு அன்றால் வெறுத்தக்க
பண்புஒத்தல் ஒப்பதுஆம் ஒப்பு (993)
என்ற குறளில் உள்ள பண்பாட்டுக் கலை அறிவு எண்ணத்தக்கது. மனிதர் அனைவருக்கும் உறுப்பு ஒற்றுமை உள்ளது. ஆனால் பண்பு ஒற்றுமை இல்லையே என்பதுதான் வள்ளுவருக்கு இக்குறளுக்குள் ஏற்பட்டிருக்கும் வருத்தம். இதனைத் தேர்ந்த கலை அறிவுடன் வள்ளுவர் வெளிப்படுத்தி நிற்கிறார். அதாவது மக்கள் உறுப்புகளால் ஒன்றுபட்டு நிற்கிறார்கள். அதுவொன்றே போதுமானது என்று எண்ணினால் அது வெறுக்கத்தக்கதாகும். உறுப்புகளுக்கு மேம்பட்டு அவ்வுறுப்புகளால் பெறத்தக்க நல்ல பண்புகளால் மேம்பட்டு இருத்தலே தேவையானதாகும். உறுப்பு ஒத்தலை வெறுத்த வள்ளுவர் பண்பு ஒத்தலை சொற்கள் கொண்டு உயர்த்தாமல் கருத்தைப் பெற வைத்து உயர்த்திய கலைநயம் தெரிந்துணர்வதற்கு உரியதாகும்.

பிறமொழித் தாக்கமில்லாத தன்மைக்கு உயரிய எடுத்துக்காட்டு திருக்குறள் ஆகும். வடசொல் கலப்பினை ஒலி, வரி வடிவ அளவுகளிலும், பொருள் அளவிலும் விடுத்துத் தனித்து எழுந்த நூலாக திருக்குறள் விளங்குகின்றது. கிரந்த எழுத்துக்கள் கூட திருக்குறளில் பயன்படுத்தப்படவில்லை என்பது இன்றைக்கு வியப்பளிக்கும் செய்தியாகும். ஏனெனில் கிரந்த எழுத்துக்கள் இன்றி தமிழ் இயங்க இயலாது என்று கருத்தறிவிக்கும் தமிழர்களுக்கு தமிழமொழியின் தனித்தன்மையை உணர்த்தும் சிறந்த நூல் திருக்குறள் என்பது எடுத்துக்காட்டப்பட வேண்டிய ஒன்றாகும்.

இலக்கிய வளமிக்க நூல் திருக்குறள் என்பதற்கு அந்நூலின் முழுப்பகுதியையும் காட்டவேண்டும். சொற்களை மாற்றமின்றி மனதிற்குள் பதியவைக்க எளிமை, சுருக்கம், விளக்கம், கவித்தன்மை, சொற்கட்டுக்கோப்பு போன்ற பலவற்றை வள்ளுவர் கையாண்டுள்ளார். ஏழு சொற்களுக்குள் முழுமையான இலக்கியத்தன்மையை வெளிப்படுத்திவிடமுடியும் என்று காட்டிய அரிய முயற்சி திருக்குறள்.

கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தின்
செம்பாகம் அன்று பெரிது (1092)

செம்பாகம் என்ற இக்குறளில் இடம்பெற்றுள்ள சொல்லினை வள்ளுவரின் செம்மொழிச் சொல்லாட்சிக்கு உரிய காட்டாகக் கொள்ளலாம். இக்குறளுக்கு செம்பாகம் என்பதனை பாதியளவு என்று உரை கூறுவாரும் உண்டு. ” கண்களவு கொண்டு கடைக்கணித்துப் பார்த்த பார்வை செம்மை அழகு பெற்ற காமக் கூட்டத்திலும் பெரிது என்றவாறு” (பரிதியார் உரை, குறிப்பறிதல், திருக்குறள் உரைக்கொத்து காமத்துப்பால், ப. 20) என்ற பரிதியாரின் கருத்தே சிறப்புடையது. செம்மையான காமத்தின் மகிழ்வு அளவைவிடக் களவுப் பார்வையின் அளவு பெரியது என்ற கருத்தே ஏற்புடையது. `செம்’ என்பதற்குப் பரிதியார் செம்மை என்றுப் பொருள் கொண்டுள்ளார். இந்தச் சொல்லே தற்பொழுது செம்மொழிக்கான அடையாகவும் இருப்பது எண்ணுதற்கு உரியது. இவ்வகையில் ஆழ்ந்த இலக்கிய நயமுடையனவாக அனைத்து குறட்பாக்களும் விளங்குகின்றன என்பது திருக்குறளுக்கும் வலிமை சேர்க்கும். செம்மொழித் தமிழுக்கும் வளமை சேர்க்கும்.

உயர் சிந்தனைகளைச் செம்மொழி இலக்கியங்கள் தரவேண்டும் என்ற மற்றொரு செம்மொழிப் பண்பினுக்கும் முற்றிலுமாக எடுத்துக்காட்டாக அமைவது திருக்குறளாகும்.

மேல்இருந்தும் மேல்அல்லார் மேல்அல்லர், கீழ்இருந்தும்
கீழ்அல்லார் கீழ் அல்லவர் (973)

அல்லார், அல்லர் அல்லார், அல்லவர் என்ற சிறு சிறு சொல் மாற்றங்கள் எவ்வளவு பெரிய பொருள் மாற்றத்தை ஏற்படுத்தி நிற்கின்றன என்பதற்கு இந்தக் குறள் சான்றாகும். மேலே நிற்பவர்கள் எல்லாம் மேலானவர்கள் அல்லர்., கீழே கிடப்பவர்கள் எல்லாரும் கீழானவர்கள் இல்லை என்ற இக்குறள் உணர்த்தும் சிந்தனை உயர்வுக்கும் தாழ்வுக்குமான எல்லைகளை, கருத்துருவாக்கங்கள் மாற்றியமைத்திட்ட குறட்பாவாகும். நிறம், பொருள், பதவி போன்ற புறக்காரணிகளால் மேலானவர்களாகத் தங்களை நினைத்துக் கொண்டு இயங்கிக் கொண்டிருக்கும் மனித இயல்பற்றவர்களை நோக்கி விடுத்த கேள்விக்கணை இக்குறள்.

இவை போன்ற பல உயரிய கருத்துக்கள் மண்டிக் கிடக்கும் நல்ல உயர்வான இலக்கியம் திருக்குறள் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை.

கலை இலக்கியத் தனித்தன்மை பெற்ற இலக்கியமாகவும் திருக்குறள் விளங்குகின்றது. திருக்குறளின் யாப்பு வடிவம் அதற்கான தனித்த உருவ அமைப்பினை ஏற்படுத்தி நிற்கிறது. திருக்குறளை மொழிபெயர்க்கையில் மொழிபெயர்ப்பாளர்கள் அனைவரும் எதிர் கொள்ளும் சிக்கல் வள்ளுவர் பயன்படுத்திய ஏழு சொற்களுக்குள் அவர்களால் மொழிபெயர்ப்பை அமைக்கமுடியாமையே ஆகும். எந்த ஒரு குறயைம் ஏழே சொற்களுக்குள் எந்த மொழி பெயர்ப்பாளராலும் எந்த மொழியிலும் அமைக்க முடியவில்லை என்பதே திருக்குறளின் யாப்புக் கட்டமைப்பிற்குக் கிடைத்த முக்கியமான வெற்றியாகும்.

குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் உரையாளர்கள்கூட ஏழு சொற்களுக்கு மிகுத்து எழுதி வள்ளுவரின் சொல் ஆளுமைக்குத் தோற்றே நிற்கின்றார்கள்.

அகம், புறம் என்ற பாடுபொருளை விடுத்து அறம், பொருள், இன்பம் என்ற பாடுபொருள் பகுப்புகளை வள்ளுவம் கொண்டுவருகிறது. அகப்பொருளை விரித்துப் புதுக்கி, பகுத்து ஆய்ந்த தமிழரின் இயல்பைச் சற்று மாற்றி, மடைமாற்றம் செய்து அழியா அறத்தின்பால் பாடுபொருளை ஓட விட்ட முத்த இலக்கியம் திருக்குறள் என்பதும் அதற்குப் பெருமை சேர்க்கும் ஒன்றாகும்.

`அ’ தொடங்கி `ன்’ என்ற ஈறில் முடிதல், வீட்டினைப் பாடாது விடுத்தல், வீட்டினைப் பாடாவிட்டாலும் பேரிலக்கியமாக உயர்ந்து நிற்றல், அதிகார வைப்பு முறை, அதிகார குறள் வைப்புமுறை, அதிகார எண்ணிக்கை, குறள் எண்ணிக்கை இவற்றில் உள்ள ஒழுங்குமுறை முதலான பலவற்றில் திருக்குறளின் கலை இலக்கியத் தனித்தன்மை வெளிப்பட்டுக் கொண்டே வந்துள்ளது.

மொழிக்கோட்பாடு என்ற நிலையில் வள்ளுவத்தின் நிலையை அறியவேண்டுவதும் செம்மொழித் தகுதியின் பாற்பட்டதாகும். வள்ளுவர் காட்டும் அறிவு சார்ந்து இயங்கும் வல்லமை பெற்ற மொழியாகும். அம்மொழித் தன்மை தமிழிடம் இருக்கிறது என்பதைச சொல்லித் தெரியவைக்க வேண்டியதில்லை.

உணர்வைக் குறைத்து அறிவு சார்ந்து இயங்கும் மொழி நிலையையே வள்ளுவர் விரும்பியுள்ளார். அறிவுடைமை, கல்வி, கேள்வி போன்ற அதிகாரங்கள் வழியாக அவரின் மொழிசார்ந்த கோட்பாடுகளை உணர்ந்து கொள்ள முடிகின்றது.

நுண்ணிய நூல் பல இருந்தாலும் உண்மை அறிவினுக்கே உயரிய இடம் என்பது வள்ளுவ வழி. எதிரதா காக்கும் அறிவு சார்ந்து மொழி இயங்க வேண்டும் என்று வள்ளுவர் வற்புறுத்துகிறார். எண்ணும் எழுத்தும் சேர்ந்து இயங்கும் மொழிநிலையே வள்ளுவர் விரும்பும் மொழிநிலையாகும். தற்போது கணினி மொழியிலும் எண்ணும் எழுத்தும் மட்டுமே இயக்கங்களாக உள்ளன.

இதற்கு மேலாக யாதானும் நாடாக, ஊராக அமையும் பொதுமொழியே வள்ளுவர் விரும்பும் மொழியாகும். இவ்வகையில் பற்பல மொழி பற்றிய சிந்தனைகள் வள்ளுவத்தில் இருந்து இனம் காணப்படவேண்டும். அது தமிழ்மொழிக்கும் வளமை சேர்ப்பதாக அமையும்.

திருக்குறள் என்னும் அரிய நூல் தமிழின் செம்மொழித்தன்மைக்கான இன்றியமையாத நூல் என்பதாலேயே அதனைப் படைத்தளித்த வள்ளுவரின் ஓவிய வடிவத்தையும், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற மொழியையும் செம்மொழி அடையாளங்களாக தமிழர்கள் உயர்த்திப்பிடித்திருக்கிறார்கள் என்பது வள்ளுவத்திற்குக் கிடைத்த தனிப்பெருமையாகும்.

திருக்குறள் செம்மொழி நூல்களின் வரிசையில் தனித்தன்மை வாய்ந்த உலகம் முழுமைக்குமான நூல் என்பதில் தமிழர்கள் பெருமை கொள்ளவேண்டும்.

குறிப்பாக இக்கட்டுரையில் எடுத்தாளப்பெற்ற பெரும்பாலான குறட்பகுதிகள் ஒழிபியல் என்ற பகுப்பில் இருந்தே எடுத்தாளப் பெற்றுள்ளன. இது குறித்து எண்ணுகையில் வள்ளுவத்தின் பொதுமைக்கு இடையீடு வந்துவிடாமல் இருக்க தமிழரின் தனித்த அடையாளங்களாகக் கருதப்படும் தனிப்பண்புகளைத் தரும் அதிகாரங்களைத் தொகுத்து ஒழிபியலாக ஆக்கப் பெற்றுள்ளதோ என்று எண்ண வேண்டியுள்ளது. இது குறித்து ஆய்வுலகம் சிந்திக்க வேண்டும்.

பயன்கொண்ட நூல்கள்
1. அறவாணன்.க.ப. (உ. ஆ) திருக்குறள் சிறப்புரை, தமிழ்க்கோட்டம், சென்னை,2007

2. சிவப்பிரகாசம். அர.(ப. ஆ), திருக்குறள் உரைக்கொத்து, பொருட்பால், காசிமடம், திருப்பனந்தாள்.நான்காம் பதிப்பு, 2002
3. மேலது, காமத்துப்பால், மேலது, ஐந்தாம் பதிப்பு, 2003
4. மலர்க்குழு, உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு சிறப்பு மலர், தமிழ்நாடு அரசு, 2010
5. பழனியப்பன்.மு. தமிழின் செம்மொழித்தகுதிகள் (கட்டுரை), ஆனந்தஜோதி(மாதஇதழ்),புதுக்கோட்டை, ஐனவரி.2011

Series Navigation

முனைவர் மு. பழனியப்பன்

முனைவர் மு. பழனியப்பன்