இவர்களது எழுத்துமுறை – 27 அசோகமித்திரன்

This entry is part [part not set] of 41 in the series 20110220_Issue

வே.சபாநாயகம்.


1. ‘என் எழுத்து’ என்று சொல்கிறபோது, ‘என்’ என்கிற அகங்காரம் இல்லாத,
வராத எழுத்துதான் நல்ல எழுத்து. என் கதையில் ‘நான்’ வரலாம். ஆனால்
அந்த நான், கதைப்பாத்திரத்தின் நான்தான். எழுதுகிற என்னுடைய ‘நான்’
கதையில் வரக்கூடாது. எழுத்தாளரின் அகங்காரம் தவிர்த்த எழுத்தைத்தான்
நான் ஏற்க முடிகிறது. நான் முயற்சி செய்வதும் அதைத்தான். என்னைப்
பொறுத்தமட்டில் எழுத்தில் – கதை எழுதுவதில் மட்டுமல்ல – வாழ்க்கையில்
தினசரி நடப்பில், ஒரு கடிதம் எழுதுவதில், பேசுவதில், செயலில் எதிலுமே
அகங்காரம் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதுதான் என் கருத்து.

2. எழுத்துக்கென்று விசேஷ முக்கியத்துவம், அந்தஸ்து எதுவும் கிடையாது.
ஒருவன் எழுத்தாளனாக இருப்பதும், இன்னோருத்தன் ஆட்டோ டிரைவராக
இருப்பதும் எல்லாம் ஒன்றுதான். அவரவர்கள் வேலையில் அவர்கள்
உன்னதத்தை அடைகிறார்கள். எனக்குத் தெரிந்தது எழுதுவது.

3. ஒருவன் ஒருமுறை, ஐந்து முறை, பத்துமுறை கூட சாமர்த்தியமாக
அவனுடைய உள்ளுணர்வை மறைத்து எழுதிவிடலாம். ஆனால் சுமார்
நாற்பது ஆண்டுகள் ஒருவன் தொடர்ந்து எழுதி வந்தால் அவன்
உள்ளிருப்பது அனைத்தும் வெளிக்காட்டப்படாமல் இருக்க முடியாது.
என்னை அறிவது யாருக்காவது முக்கியமானால், அவரை என் படைப்புக்
களைப் படிக்கக் கேட்டுக் கொள்கிறேன். என் படைப்பு எதுவுமே முதல்
வாசிப்பில் வெளிப்படுத்திக் கொள்வதில்லை. ஆதலால் அவருக்கு நேரமும்
ஆர்வமும் இருக்குமானால் இரண்டாம் முறை படிக்கக் கேட்டுக்
கொள்கிறேன். என் நம்பிக்கை, அது அவருக்கு ஏமாற்றத்தைத் தராது.

4. ‘என் கதைகளைப் படிக்கிற பலருக்கு அது உண்மையிலேயே நல்ல
எழுத்தா இல்லையா என்றே உணரமுடியாத சிக்கல் இருக்கிறது; இதற்குக்
காரணம் என் நடை எளிமையாக, அலங்காரம் இல்லாததாக இருப்பது;
நிறைய தகவல்கள் தொகுக்கப் படுகின்றன; அதிலிருந்து ஒரு கதை என்று
உய்த்துணர வேண்டி இருக்கிறது’ என்ற உணர்வு பலருக்கு இருப்பதை
அறிந்திருக்கிறேன். உக்தி மட்டுமே இலக்கியமாகிவிடும் என்று நான்
நினைக்கவில்லை. ஒர் உக்தி கையாளப்படுகிறது என்ற நினைப்பே எழச்
செய்யாத உக்திதான் மிகச் சிறந்ததாகக் கருதுகிறேன். சொல்ல
வேண்டியதை நேரிடையாக அடைமொழிகளைப் பயன்படுத்தாமல்,
ஆசிரியர் சார்பு கொள்ளாமல் எழுத முயல்வதே என் பாணி.

ஆசிரியரே தம் பாத்திரங்கள் எவருடனும் ஒன்றிக் கொள்ளாமல்
எழுதுவதால் வாசகர்களுக்கும் பாத்திரத்துடன் ஒன்ற முடியாது. இதனால்
பாத்திரங்கள் எவ்வளவு பழகியவர்கள், தெரிந்தவர்கள் போல இருந்தாலும்,
வாசகர்கள் அவற்றிலிருந்து விலகியே இருப்பார்கள். இப்படி விலகி
இருப்பதில் அதிகத் தகவல்கள் அறிய சாத்தியமுண்டு. தகவல்கள் மூலம்
சூழ்நிலையையும், கதையின் தொனியையும் தெரியவைக்கும் உக்தி
என்னுடையது மட்டுமல்ல. எல்லா உரைநடை எழுத்தாளர்களும் வெவ்வேறு
அளவுக்கு இதை உபயோகப்படுத்தித்தான் இருக்கிறார்கள். குறிப்பாகத்
திரைப்பட வடிவில் இந்த உக்தி நிறையவே பயன்படுத்தப்படுகிறது.

5. எழுத்தாளன் என்பவன் இதுவே இறுதி என்பது போன்ற எண்ணங்கள்
வைத்துக் கொள்ளக்கூடாது என்றே கருதுகிறேன். இரு நபர்கள் இடையே
பிளவு ஏற்படாமல் இருக்கச் செய்யவே என் எழுத்து பயன்பட வேண்டும்
என்று கருதுவதாகச் சொல்லலாம். யாரையும் வித்தியாசப்படுத்தி, பெரியவர்
சிறியவர் என்று கருதாமல் பார்க்கும் நிலையை எழுத்து செய்ய வேண்டும்.
அதுதான் வாழ்க்கையின் உயரிய நிலை. 0

Series Navigation

வே.சபாநாயகம்

வே.சபாநாயகம்