அறிமுகம் உயிர்நிழல், இராகவனின் ‘கலாவல்லி முதலான கதைகள்’

This entry is part [part not set] of 40 in the series 20110206_Issue

சு. குணேஸ்வரன்


இரண்டு அறிமுகம்

(1) உயிர்நிழல் 33 வது இதழ் வெளியாகியுள்ளது

லஷ்மி. ந. சுசீந்திரன் ஆகியோரைத் தொகுப்பாசிரியர்களாகக் கொண்டு
பிரான்சிலிருந்து வெளிவரும் புகலிடச் சிற்றிதழாகிய உயிர்நிழலின் ஜனவரி
2011 இதழ் வெளியாகியுள்ளது.
கவிதைகள், கட்டுரைகள், புனைவு, நேர்காணல்கள், எதிர்வினைகள், ஆகியவற்றுடன்
மிகக் கனதியான இதழாக மிளிர்கிறது. உலக சினிமா மற்றும் அரசியல் சார்ந்த
ஆழமான கட்டுரைகள் சிந்தனையைத் தூண்டக் கூடியனவாகவுள்ளன.
றிஸ்மினி, விசா, துவாரகன், பைசால், எம்.றிஷான் ஷெரீப், மருதம் கேதீஸ்,
பாலைநகர் ஜிப்ரி ஹஸன் ஆகியோரின் கவிதைகள் இதழை அலங்கரிக்கின்றன.
சிங்களத்தினூடாக சந்தியா எக்னெலிகொட, ஆங்கிலத்தினூடாக மாயா அஞ்சலோ
ஆகியோருடனான உரையாடல்களுடன்; காலம் இதழில் வெளியாகிய து.
குலசிங்கத்தின் உரையாடலும் திருத்தங்களுடன் மீளவும் இவ்விதழில்
பிரசுரமாகியுள்ளன.
எடுவர்டோ கலேயனோ, ரதன், வி.சிவலிங்கம், கலையரசன், சார்ள்ஸ் சர்வன்,
உபாலி கூரே, எம். ரிஷான் ஷெரீப், பப்ரிஸ் ஹேர்விய வனே, சுல்பிகா, ஜோர்ஜ்
குருஷ்சேவ் ஆகியோரின் கட்டுரைகள் உள்ளன. இவற்றில் அற்றம் எகோயன் ‘உலக
சினிமாவின் தவிர்க்க முடியாத ஆளுமை’ என்ற ரதனின் கட்டுரை மிக விரிவான ஒரு
பதிவாக உள்ளது. அத்தோடு அண்மையில் கொழும்பில் நடைபெற்ற சர்வதேச
எழுத்தாளர் விழாவிலும் காட்சிப்படுத்தப்பட்ட பிரதீபனின் ‘நிசப்தத்தின்
நிழல்’ SHADOW OF SILENCE குறும்படம் பற்றிய ஆழமாக கட்டுரையொன்றினை
சார்ள்ஸ் சரவணன் எழுதியுள்ளார்.
இவை தவிர ச. இராகவனின் புனைவும், நந்தினி சேவியர், த. மலர்ச்செல்வன்
ஆகியோரின் எதிர்வினைகளும் உள்ளடங்கியுள்ளன.


(2) இராகவனின் ‘கலாவல்லி முதலான கதைகள்’ சிறுகதைத் தொகுதி

இராகவனின் ‘கலாவல்லி முதலான கதைகள்’ சிறுகதைத் தொகுதி வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் புது எழுத்து சிற்றிதழ் தனது பத்தாமாண்டு
கொண்டாட்ட வெளியீடாக இத்தொகுப்பை (நவம்பர் 2010) வெளியிட்டுள்ளது.
ஈழத்தில் நவீன எழுத்துமுறையில் புனைவெழுதும் குறிப்பிட்டுக் கூறக்கூடிய
மிகச் சில படைப்பாளிகளில் ஒருவர் இராகவன். அந்த எழுத்துக்களுக்காக பலத்த
விமர்சனங்களையும் எதிர்கொண்டு வருபவர்.
இந்தவகையில் இத்தொகுப்பில் வெளிவந்துள்ள கதைகள் யாவும் வடிவச்
சிதைப்பையும், மரபு முறையான கதைசொல்லலையும் மறுதலிப்பனவாக உள்ளன.
இத்தொகுப்பில் வாமன அவதாரம், கலாவல்லியின் நெடுக்குவெட்டு முகம்,
அணங்கு, கதை எழுதுவோருக்கு ஒரு நற்செய்தி, அகலிகையின் தாகநதி, சதுரம்,
மநுபுத்திரனின் படைப்புகள், எதிர்நோக்கு, புத்தக அறிமுகம்,
வண்ணத்துப்பூச்சிகள் கொண்டு செல்லும் இதிகாச நகரம் ஆகிய பத்துக் கதைகள்
உள்ளன.
பதிவு: சு. குணேஸ்வரன் kuneswaran@gmail.com

Series Navigation

சு. குணேஸ்வரன்

சு. குணேஸ்வரன்