முஹம்மது யூனூஸின் எனது பர்மா குறிப்புகள்-புத்தக மதிப்புரை

This entry is part [part not set] of 44 in the series 20110109_Issue

நரசய்யா


1997ம் வருடத்தில், கொல்கத்தாவின் ஒரு தனியார் நிறுவனம் பர்மிய அரசால், ஆலோசனைக்கு அழைக்கப் பட்டிருந்தது. அந்த நிறுவனத்தின் சார்பாக நான் பிரதம ஆலோசகராக பர்மா சென்றிருந்தேன். இயற்கை எழில் சூழ்ந்த நகரமான யாங்கூன் கண்களுக்கு விருந்தாய் இருந்தது. எனக்குக் கொடுக்கப்பட்டிருந்த பொறுப்பு, அந்தத் துறைமுகத்திலிருந்து செயல்படும் பல கடல் சார் அரசு நிறுவனங்களின் திறமையை மேம்படுத்தும் முயற்சியினைச் சீராக்க ஆலோசனை தரவேண்டியதாகும்.

அப்போது நான் எப்படியாவது ஆங் சான் சூ கி (Aung San Suu Kyi) யை பார்த்து விட விரும்பினேன். அவர் மாலையில் தனது வீட்டின் வாயிற்கதவருகில் வந்து மக்களுக்குக் காட்சி தருவார் எனத் தெரிந்து அங்கு செல்ல முயன்றேன். அப்போது நான் அரசு சேவையில் வந்திருப்பதால், அவ்வாறு செல்லக் கூடாதென்றும், அங்குள்ள கேமராக்கள் வருவோர் போவோரைப் படம் எடுத்துக் கொண்டிருக்கும் விவரத்தையும் கூறினார்கள். அன்று மழை பெய்து கொண்டிருந்ததால், நான் ஒரு பெரிய குடையுடன் சென்று, கேமரா இருக்கும் பக்கத்தில் குடையைக் காட்டிக்கொண்டு நின்று கொண்டு, அம்மாது வந்து பேசுவதைக் கண்டேன். சிறிய உருவம், தலையில் பூ! ஆச்சரியமாக இருந்தது. அப்போதே எனக்கு பர்மாவைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற அவாவும் அதிகமாயிற்று. இந்த நூலைப் படிக்கையில் அந்த ஆசை பூர்த்தியானது போன்ற ஒரு மகிழ்ச்சி!

மிக்க எளிமையாக, ஆரம்பகாலத்து பர்மாவை நமக்கு அறிமுகம் செய்து வைக்கும் யூனூஸ் பாய், நம்மை காலத்தினூடே, பர்மாவின் வளர்ச்சியையும் அதில் பெரும் பங்கு பெற்ற இந்தியர்களையும் காண்பித்துச் செல்கிறார். அதிலிருந்தே அவருக்கு அந்நாட்டின் மீதுள்ள அளவில்லா பற்று தெரிகிறது.

ரங்கூன் கிழக்கு லண்டன் என்றழைக்கப்பட்டது, அதன் பெயர்க் காரணம் என்ற விவரங்களைக் கூறிவிட்டு, சாதி மதம் பாராது இந்தியர்கள் வாழ்ந்ததை விவரிக்கிறார். இந்துக் கோவில்களில் இஸ்லாமியர்களுக்கும் அழைப்பு வருவதும், அவர்கள் அவற்றில் பங்கு கொள்வதும், இப்போது படிக்கையில் இந்தியாவை விட பன்மடங்கு சிறந்த சமூகமாகவே அங்கு இந்தியர்கள் வாழ்ந்தார்கள் என்பது தெளிவாகிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில், 1930ம் வருடத்தில் முதலில் துறைமுகத்துத் தொழிலாளர்கள் இடையில், ஒரு கலகம் மூண்டது. அதற்குக் காரணம், பர்மியர்கள் தாங்களே வளர்த்துக் கொண்ட பொறாமை தான்.

அன்றைய ரங்கூன் துறைமுகத்து கடைநிலைத் தொழிலாளர்கள் எல்லோருமே ஆந்திராவைச் சேர்ந்தவர்கள்; கடின உழைப்பாளிகள். ஆகையால் அவர்களால் முன்னேற முடிந்தது. பர்மியர்கள், தங்களது தொழிலை இந்தியர்கள் பறித்துக் கொள்வதாக நினைத்தார்கள். கடின உழைப்புடன் முன்னேறும் இந்தியர்களை அவர்கள் வெறுக்க ஆரம்பித்தது ‘ஊ சோ’ என்பவர் தலைமையின் கீழ் தான். இக்கலகம் பின்னர், அதாவது 1938ல் பெரிதாகவே வளர்ந்தது. இந்நிகழ்ச்சிகளை எளிய முறையில் யூனூஸ் விளக்குகிறார்.

சில சரித்திர நூல்களில் கூட காணமுடியாத நுண்மையுடன் யூனூஸ் விவரிப்பது ஆச்சரியத்தை அளிக்கிறது. ஏனெனில் அவ்வாறு அப்போது கலகத்தை உண்டாக்கின அதே ஊ சோ தான் பின்னர் நாட்டையும் ஆள ஆரம்பித்தவர். அன்றைய இந்தியர்களின் மனோநிலையை மிகச் சாதாரணமாக யூனூஸ் விவரிப்பது, அவர் முழுமையாக அன்றைய பர்மிய அரசியலைப் புரிந்து கொண்ட விதத்தையும் நமக்குத் தெளிவாக்குகிறது. அவரது இளம் வயதில் அவர் அங்கு கண்டவற்றை, தாம் வயதில் மூப்படைந்து விட்ட போதும், அந்த இளம்வயதின் சுவையுடன் கூறுவது சாதாரணமாக எழுத்தாளர்கள் கடைபிடிக்காத ஒரு பெரிய சாதனை. அதேபோல் அவர் கல்வி கற்ற விதமும் ஆவலுடன் நம்மைப் படிக்கத் தூண்டுகிறது!

ஒரு முக்கியமான அத்தியாயம் கலையைப் பற்றியது. இந்தியாவிலிருந்து அங்கு நாடகம் நடத்திய பல பெரிய கலைஞர்களைப் பார்த்துப் பெருமைப் பட்ட காலத்தினை மிகச் சிறப்பாக வருணிக்கிறார்.

யூனூசின் தகப்பனார் நாடகங்களில் ஈடுபாடு உடையவராக இருந்ததால், எவ்வாறு அவரால் அன்றைய சிறந்த நாடக நட்சத்திரங்களுடன் இயங்கிய டி. பி. ராஜலெட்சுமி, கே. பி. மைதீன் சாகிப் குழுவினரை அழைத்துவர முடிந்தது என்பதையும், மைதீன் முருகனாக மேடையில் வந்தவுடன், பல செட்டியார்கள் எவ்வாறு அங்கேயே எழுந்து நின்று வணங்கினர் என்ற விவரத்தை அவர்கள் கூறியே தெரிந்து கொண்டதையும் தெரிவிக்கையில், அச்சமூகம் எவ்வளவு தெளிவாக, சமய வெறுப்புகளின்றிச் செயல்பட்டதென்பதை தெரிந்து கொள்ள முடிகின்றது. பின்னர் யூனூஸ் தந்தையார் செய்த சேவையைப் பற்றியும் தெரிந்து கொள்ள முடிகிறது.

நாடகங்கள் ஒரு சமூகத்தின் அடிப்படை உரிமை போல அன்று இருந்துள்ளது என்பதும் தெளிவாகிறது. நாடக மூலம் இந்தியர்-பர்மிய கலாசார பரிவர்த்தனை எவ்வாறு நடந்து வந்ததென்பதும் தெளிவாகிறது. தமிழ் நாடகத்தின் அயல் நாட்டுச் சரித்திரத்தை எவரேனும் எழுத முன் வந்தால், இந்த அத்தியாயம் பயனுள்ளதாக இருக்கும்.

ஜப்பானிய ஆக்கிரமிப்பு பற்றிய அத்தியாயம், மற்ற சரித்திர நூல்களில் நாம் படித்ததைவிட அதிக விவரங்களுடன் அமைந்துள்ளது. சரித்திர ஆசிரியர்கள் படித்ததையும், கேட்டததையும் பின்புலமாக வைத்து எழுதுவர். இங்கோ நாம் பார்ப்பது, ஒருவர் நேரில் கண்ட விஷயங்களை! ஆகையால் இப்பகுதி அதிக முக்கியத்துவத்தைப் பெறுகிறது. ஜப்பானியர்கள் விரித்த வலை இந்நூலில் கூறப் பட்டுள்ளது போல வேறெங்கும் படித்தாக எனக்கு நினைவில்லை!

உணர்வு பூர்வமாக எழுதப்பட்டிருக்கும் மற்றொரு பகுதி நேதாஜியைப் பற்றியது. பகதூர் ஷா கல்லறையருகில் நடத்தப்பட்ட கூட்டத்தில் யூனூஸ் பங்கு கொண்டது மெய்சிலிர்க்கவைக்கிறது. தவிரவும், யூனூஸ் இந்திய சுதந்திர லீக்கின் அவ்வூர் காரியதரிசியாக இருந்தார் என்பதால், அவர் மேல் ஒரு தனி மரியாதையும் படிப்பவர்கள் இடையில் ஏற்படும். நேதாஜியின் செயலாளராக இருந்த கண்ணம்பிள்ளியின் உறவும் அவரைப் பின்னர் சந்தித்த விவரமும் நம்மைத் திகைக்க வைக்கின்றன! தவிரவும் யூனூஸ் ஒரு உளவாளியாகவும் பணிபுரிந்திருக்கிறார் ஆகையால், அவரது தகவல்கள் எல்லாம் உண்மையானவை; நம்பத்தகுந்தவை!

மது விலக்கு அமலில் வந்த நிகழ்ச்சியை நினைவு கூர்கையில்,

ஈஸ்வர வருஷம் புரட்டாசியில்
இங்கிலீஷ் 1-10-37-ல்
சாஸ்வதமாக நம்மைப்
பிடித்து ஆட்டிய
கள்ளுக்கடையை மூடிவிட்டார்

என்ற கவிதையை அவர் குறிப்பிடும் போது, நமது தமிழ்நாட்டின் இன்றைய நிலையைக் கண்டு நாமே பரிதாபப் படவேண்டியவர்களாக உள்ளோம்!

சுதந்திரப் போராட்டத்தினைப் பற்றிய அவரது குறிப்பு, போற்றி படிக்க வேண்டியதாகும். அதில் நாடகமேடை கொண்ட பங்கை மிகச் சிறப்பாக வருணிக்கிறார். குடியுரிமைச் சிக்கல்கள், புலம் பெயர்ந்தவர்களின் நிலையை நன்றாகச் சித்தரிக்கிறது. அங்கேயே பல தலைமுறைகளாகத் தங்கி விட்ட போதும், பெரும்பான்மையினரை மட்டும் மனதில் வைத்துக் கொண்டு தயாரிக்கப்பட்டதென்பதை விளக்கும் போது, சமூகத்தின் குறைபாடுகள் நன்றாகவே உணர்ப்படுகின்றன. நாடு கடத்தப்படும் உத்தரவு பெற்ற தமிழ் விவசாயிகள், (அரை நிர்வாணத்தில் உடை) இந்திய பாஸ்போர்ட் கூட இல்லாதவர்கள் பட்ட பாடு கண்ணீரை வரவழைக்கிறது! இந்த விவகாரத்தில் யூனூஸ் பங்கு மிக நல்ல முறையில் அமைந்திருந்ததையும் காணும் போது, இவரது உழைப்பு நன்றாகவே தெரிகிறது.

‘வெளியேற்றம்’ என்ற தலைப்பின் கீழ் எழுதப்பட்டுள்ள பகுதி முக்கியமானது. நான் மியான்மாரில் இருந்த போது, தங்கியிருந்த விடுதியின் மேலாளர் ஒரு வட இந்தியர்; அப்போது, ஆங்க் சேன் சு கிக்கு இந்திய அரசு விருது அளித்தது. இந்த விருது அளித்தமையால், இந்தியர்கள் பாடு இன்னும் திண்டாட்டமாகு என்றார் அவர்! ஏனெனில் மியன்மாரின் ராணுவ அரசு, ஆங்க் சேன் சு கிக்கு இந்திய அரசு கொடுத்த விருதை தனக்கு அவமானமாகத்தான் கருதிற்று. இந்த பின்புலத்தில் தான் நான் இந்த பகுதி முக்கியமானது என்கிறேன். ராணுவ ஆட்சி வந்தவுடன் இந்தியர்கள் வெளியேற ஆரம்பித்தனர். அவ்வாறு வெளியேற முனைந்தவர்கள் பட்ட பாட்டை விவரிக்கிறார் யூனூஸ்.

இந்திய அரசின் மெத்தனத்தால் அவர்கள் பட்ட துன்பம் அதிகமானது. அங்கு விமானப் பழுது காரணத்தால் வர நேரிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், அங்கு காத்துக் கிடந்த இந்தியர்களைக் கண்டு ஆச்சரியப் பட்டனர். அரசு அவர்களிடம் இதைப் பற்றிக் கூறியிருக்கவில்லை.

அந்த நாடளுமன்ற உறுப்பினர்கள் கல்கத்தா சென்றவுடன் பத்திரிக்கையாளர்களுக்கு தெரிவித்தனர். உடனே இந்திய அரசு அப்போதைய வெளிநாட்டு அமைச்சராக இருந்த சுவரண் சிங்கை அனுப்பி விசாரிக்கப் போவதாக அறிவித்தது.

வந்து சென்ற அவரோ, யூனூஸ் நினைத்தபடியே இந்தியர்களுக்கு பாரபட்சம் காட்டப்படவில்லை என்று அறிக்கை தந்து விட்டார்! இது தான் அரசின் போக்கு! அவர்களுக்கு மக்களை விட ராஜதந்திரம் தான் முக்கியம் என்பதை யூனூஸ் அறிந்திருந்தார்!

சாதாரணமாக இந்திய அரசின் அணுகுமுறை இவ்வாறு தான் இருக்கும்! நான் தங்கியிருந்த விடுதியின் மேலாளர் சொன்னதின் கருத்து சரியெனவே படுகிறது!

பின்னர் அவர் ஹாங்காங் வந்ததும், அங்கு அவர் தன்னை நிலை நாட்டிக்கொண்டதும் சாதனையேயாகும். அங்கு அவர் மிகச் சொற்பப் பொருளோடு வந்து, மாணிக்கக் கற்களின் விற்பனையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதும், இப்போது ஒரு நல்ல நிலையில் இருப்பதும் ஒரு புனர்ஜன்மமேயாகும்!

இந்த நூலின் சிறப்பம்சம், சிறந்த வேலைகள் பல செய்து மற்றவர்களுக்கு எவ்வளவோ உதவி செய்திருந்த போதும், தன்னையே அவர் எந்த இடத்திலும் முன்னிறுத்தாதது! நிகழ்வுகளின் கதையாகவே தனது சுயசரிதையைச் சொல்லியிருப்பதாகும். புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய நூல்.

இந்தியத் தமிழர்கள் தங்களது சகோதர சகோதரிகள் மற்ற நாடுகளில் வாழ நேர்கையில் படும் இன்னல்களைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டி, படிக்க வேண்டிய நூல், எளிமையான மொழியில், சாதாரண மக்கள் புரிந்து கொள்ளும் படி எழுதப்பட்டுள்ள நூல்.

எல்லோராலும் வரவேற்கப்பட வேண்டிய முயற்சி; நூலகங்களில் கட்டாயம் வைக்கப்படவேண்டிய நூல்.

நன்றி: யுகமாயினி, ஜூன் 2010
[நூல்: செ. முஹம்மது யூனூஸின் “எனது பர்மா குறிப்புகள்”, தொகுப்பு: மு. இராமனாதன், பிரசுரம்: காலச்சுவடு பதிப்பகம், 669, கே. பி. சாலை, நாகர்கோவில் 629 001, தொலைபேசி: 91-4652-278525, தொலைநகல்: 91-4652-231160, மின்னஞ்சல்: kalachuvadu@sancharnet.in பக்கங்கள்: 220, விலை: ரூ. 165/=]

நூலின் இரண்டாம் பதிப்பு வெளியாகி உள்ளது; 2011 ஜனவரி 4 முதல் 17 வரை நடைபெறவுள்ள சென்னை புத்தகக் கண்காட்சியில் காலச்சுவடு பதிப்பக அரங்கில் கிடைக்கும்.

Series Navigation

நரசய்யா

நரசய்யா