வரலாற்றின் சாட்சியமாய் ஈழத்திரைப்படங்கள்

This entry is part of 35 in the series 20101219_Issue

சுப்ரபாரதிமணியன்


கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக புகலிடத்திரைப்பட முயற்சிகள் பற்றி அக்கறை கொண்டு எழுதி வருபவர் லண்டனில் வாழும் யமுனாராஜேந்திரன். விடுதலை என்பது பற்றி வேறுவேறு விதங்களில் ஒடுக்கப்பட்டவர்கள் புரிந்து கொள்கிறார்கள்.யமுனா ராஜேந்திரன் பொதுவுடமை இயக்கச் சார்பில் விடுதலை நோக்கங்களைப் புரிந்து கொண்டும், அர்த்தப்படுத்தியும் திரைப்பட உருவாக்கங்களைப்பற்றி எடுத்துரைக்கிறார். பன்னாட்டுத் திரைப்படங்கள் குறித்து இருபதிற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். “ புத்தனின் பெயரால் திரைப்பட சாட்சியம் “ என்ற அவரின் சமீபத்திய நூலில் ஈழப்போராட்டம் தீவிரம் பெற்ற பின்பு வெளிவந்த படங்கள் பற்றிய விரிவானப் பார்வை இடம் பெற்றிருக்கிறது. முப்பதாண்டு கால ஈழப்போராட்டத்தின் விளைவாகவும், முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பின்னும் கம்பி வேலிகளுக்குள் அடைபட்டுக் கிடக்கிற மனிதர்களின் உளவியல் சிக்கலை இக்கட்டுரைகள் முன் நிறுத்துகின்றன. முடிந்து போய் விட்ட விடுதலைப்போராட்டத்தின் ஆன்மாவை முன்னிறுத்தும் இந்நூல் புனைவுப்படங்கள், குறும்படங்கள், விவரணப்படங்கள் ஆகியப் பிரிவுகளில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. முப்பதாண்டு கால உக்கிரமான போரில் பாதிக்கப்பட்ட கிராமப்புற சிங்கள் ஆண் பெண்களின் வாழ்வில் ஏற்பட்டுருக்கும் சிக்கல்களைப்பற்றி விரிவாக எடுத்துரைப்பதிலிருந்து மனித அவலத்தை எவ்வித இன் பாகுபாடுமின்றி முன் வைத்திருப்பதில் ராஜேந்திரனின் அக்கறையை நேர்மையாகக் கொள்ளலாம். இலங்கையின் தெற்கிலிருந்து நகரங்களுக்கு இடம் பெயர்ந்த சிங்கள் ஆண்கள், பெண்களைப் பற்றிப் பேசுகிறது. இலங்கை ராணுவத்தில் சேர்வதற்காக இடம் பெயர்கிறார்கள். சுதந்திர வர்த்தக வலையங்களில் பணிபிரிவதற்காக இளம் பெண்கள் நகர்ப்புறத்திற்கு இடம் பெயர்வது போலவே வளைகுடா நாட்டுவீட்டு வேலைகளுக்குச் செல்கிறார்கள். இந்த இடம் பெயர்வில் அவர்கள் எதிகொள்ளும் உளவியல் சிக்கல்களைப் பற்றி சொல்லும் படங்களை ராஜேந்திரன் விரிவாக எடுத்துரைக்கிறார்.
.
விடுதலைபுலிகளுக்கும் இலங்கைப்படையினருக்குமான மோதல் குறித்த படங்களை முன் வைத்து தமிழரது கோரிக்கை நியாயங்களை ஒட்டி விடுதலைப்புலிகளின் மனித உரிமை மீறல்களைப் பற்றிப் பேசும் சிங்கள இயக்குனர்களின் பார்வையும் வெளிப்படுகிறது.
250க்கும் மேற்பட்ட குறும்படங்களை உருவாக்கிய விடுதலைப்புலிகளின் இயக்கம் அவற்றில் சமூக நிலைபற்றிய பிரச்சினைகளை முன் வைத்திருக்கிறது. விடுதlலைப்புலிகளால் தொழில்முறையில் உருவாக்கப்பட்ட முழு நீளப் படங்கள் பெரும்பாலும் ஹாலிவுட் பாணியை மையமாகக் கொண்ட சாகசப்படங்களாக இருந்ததைச் சுட்டிக் காட்டுகிறார். ஹாலிவுட் போர்ப்படங்கள் தமிழ்த்துணைத்தலைப்புகளுடன் போராளிகளுக்கு திரையிட்டுக் காட்டுதலும் தொடர்ந்து நிகழ்ந்திருக்கிறது. ஈழமக்களின் வாழ்க்கை அவலம் குறித்த ’ஆணிவேர் ‘ போன்ற படங்கள் உலகத்திரைப்பட விழாக்களில் பங்கு பெற்று ஈழத்திரைப்படங்களின் பின்னுள்ள அரசியல் செய்தியை அழுத்தமாக முன் வைத்திருக்கிறது. திரைப்படம் குறித்தப் பயிற்சி வகுப்புகளுக்காக புலிகள் தீவிர அக்கறை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் . தமிழக இயக்குனர்களை அழைத்து வந்து பயிற்சி அளித்திருக்கிறார்கள். அவர்களின் ஈழத்திற்கான திரைப்படத்துறை , திரைப்பட கலாச்சார இயக்கத்தை உருவாக்கும் முயற்சிகளை விரிவாக இந்நூல் எடுத்துரைக்கிறது.
ஈழப்போராட்டம் தமிழ்த்திரைப்பட சூழலிலும் தென்னிந்தியத் திரைப்படங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதை பல படங்களை முன்நிறுத்திப் பேசுகிறார். அவற்றில் அரசியல் நீக்கப்பட்ட கட்டாயத்தன்மையின் அவலம் குறித்தும் சொல்கிறார். “ கன்னத்தில் முத்தமிட்டால் “ முதற்கொண்டு ‘ சையனைட் ‘ முதலானவை அதற்கு பலியாகியுள்ளன. ஈழத்தமிழர்களின் நிச்சயமற்ற வாழ்க்கையூடே சிங்கள தேசியம் தன்னை வளர்த்துக் கொண்ட்தையும் ஈழத் தமிழ் மக்களின் கலாச்சார ஒடுக்குமுறை சிக்கலுக்கு மத்தியில் சிங்களவர்களின் உணர்ச்சி குறிப்பிட்த்தக்கது என்கிறார். சிங்கள அரசின் ஒடுக்குமுறை ஈழத்தமிழர்களின் தனித்தப் பண்புடனான ஆதார திரைப்பட உருவாக்கத்தை தடுத்திருக்கிறது என்பதும் இந்நூலில் கவனிக்கத்தக்கதாய் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இன்றுள்ள நிலை பற்றி வருத்தத்துடனே எடுத்துரைக்கிறார். இனி குறும்படங்கள் அங்கிருந்து வராது. தமிழகத்திரைப்பட உலகைச் சார்ந்தவர்கள் விரக்தியிலும், மவுனத்திலும் கையாலாகத்தனத்திலும் மூழ்கிக் கிடக்கிறார்கள். இவர்களிடமிருந்து நம்பிக்கை தரும் ஈழம் பற்றிய படங்கள் வர வாய்ப்பில்லை. இதற்கு விதிவிலக்கான உதாரணமாக நம்பிக்கை விதைகளைக் கொண்டு நார்வே நாட்டு சுபாஷின் சமீபத்திய ‘ வன்னி எலிகள்’ குறும்படம் பற்றிக் குறிப்பிடுகிறார்.
“ ஒரு ஜோடி எலிகள் வன்னி அகதிகள் முகாமான மானிக்பார்மின் கூடாரங்களில் அலைந்து திரிகின்றன. அகதிகளின் கூக்குரல். பசி ஓலத்தில் சிறுவர் சிறுமிகள். இளைஞர்கள் மீதான சித்ரவதை. பாலியல் வல்லுறவால் கதறும் பெண்கள். கைத்துப்பாக்கிகள் எல்லாவற்றுக்கும் நிரந்தரப்புள்ளி வைக்கின்றன. மனிதர்கள் இங்கு எலிகளாகவும், எலிகள் இங்கு மனிதர்களாகவும் ஆகிறார்கள் எலிகளைப் போலவே மனிதர்களும் வேட்டையாடி அழிக்கப்படுகிறார்கள். எலிகள் ஒழிந்த உலகம் என்பது சாத்யமேயில்லை “

” புத்தனின் பெயரால் திரைப்பட சாட்சியம் “ யமுனா ராஜேந்திரன் நூல்
ரூ 140/ உயிர்மை பதிப்பகம், 11/29 சுப்ரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை 18

( subrabharathi@gmail.com )

Series Navigation